தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் - 67 -.  - ஆர் . ரங்கராஜ்

20230014081004362.jpg

திருநின்றவூரில் 'இருதயாலீஸ்வரர்' கோயிலை எழுப்பிப் பூசலார் கனவை நனவாக்கிய இராஜசிம்ம பல்லவன் மன்னர்

சென்ற வாரம்: (அமைச்சர் ஊர் மக்களிடம் புதிதாக கட்டப்பட்டுள்ள கோயில் எங்குள்ளது என்று கேட்டார். பூசலார் கோயில் கட்டியுள்ளாரா? அவர் ஓர் ஏழைப் பிராமணர், சிவப்பித்தர், ஆகாரமின்றி ஒரு இலுப்பை மரத்தடியில் கிடப்பார் என்று கூறினார்கள். இராஜசிம்ம பல்லவன் மன்னரும் மற்றவர்களும் பூசலார் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தனர். "பணக்கோயில் எழுப்பிய வேந்தனும், மனக்கோயில் எழுப்பிய வேதியரும் ஒருவரையொருவர் கண்டனர். நீங்கள் யார் என்று கேட்பது போல் உணர்ந்த அரசர், அரனார் ஆலய குட முழுக்கைத் தரிசிக்க வந்துள்ளோம் என்று மெல்ல புலப்படுத்தினார்.")

இதோ, என் இதயத்தைப் பாருங்கள்

உடனே பூசலார், நல்ல நேரத்தில் இறைவர் அனுப்பியுள்ளார், இதோ, என் இதயத்தைப் பாருங்கள் என்று கூறிக் கண்மூடிவிட்டார்.

அரசனும், அரசியும், அமைச்சரும், பிரதானியரும் கோயிலைக் கண்டனர்.

"கேள்வியும் வேதமும் ஒருபுறம், தெள்ளுத் தமிழ்த் தேவாரம் - ஒருபுறம், நாதஸ்வர முழக்கம் ஒருபுறம். அவரது இதயத்திலேயே - இறைவனின் காட்சியைத் தரிசித்தனர்.


மன்னர் மணிமுடி மண்ணில் பட விழுந்து பணிந்தார்," என்று அந்தக்காட்சியை அழகாக விவரிக்கிறார், திரு. ம. அன்பழகன், வரலாற்றுத்துறை, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி , செய்யாறு.

பூசலார் நாயனாரின் பூரண ஆசியைப் பெற்றான். இருத ஆலயமாக அமைந்ததை எண்ணி ஈஸ்வர மூர்த்திக்கு இருதயாலீஸ்வரர் என்று பெயரிட்டான். ஐப்பசி மாதம் நோன்பு கழிந்து, அநுஷ நட்சத்திரத்தில் பூசலார் இறைவனின் திருவடி சேர்ந்தார்.

காஞ்சி திரும்ப மனமின்றி இங்கேயே சில மாதங்கள் தங்கி இருதயாலீஸ்வரர் கோயிலை எழுப்பிப் பூசலார் கனவை நனவாக்கிய பின்பு காஞ்சி சென்று தான் முன்பே கட்டிய கற்றளிக்கும் குடமுழுக்கு செய்து மகிழ்ந்தான்.

முடிவுரை:

"தென்னிந்தியாவில் உள்ள ஆலயங்களின் வரலாறு பலவேறு கோணங்களில் காணப்படுகிறது. இவ்வாறு வரலாறு சிறப்பு மிக்க ஆலயங்களில் அறியும்போது நமது இதயம் சிலிர்க்கின்றது. சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர். இருதயாலீஸ்வரரைத் தாங்கள் தரிசித்தால் அனைத்துப் பணிகளும் செவ்வனே நன்கு முடியும் எனப் பல்லவர் காலத்து வரலாறு தெரிவிக்கின்றது," என்று கூறுகிறார் திரு. ம. அன்பழகன்.

(தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)