இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் இயற்கை மற்றும் பூமித் தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் உழவர் மற்றும் அறுவடை திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நம் நாட்டைத் தவிர இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், லாவோஸ், சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மொரீஷியஸ் போன்ற நாடுகளிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தாய்லாந்து நாட்டில் ‘சொங்க்ரான்’ என்ற பெயரிலும், லாவோஸில் ‘பிம லாவ’ என்றும் , மியான்மரில் ‘திங்க்யான்’ என்ற பெயரிலும், நேபாளத்தில் ‘மாகே சங்கராந்தி’ என்றும், இலங்கையில் புத்தாண்டாகவும் பொங்கல் பண்டிகையை அந்தந்த நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மக்கள் 4 நாட்களுக்கு கொண்டாடி மகிழ்கின்றனர். முதல் நாள் போகியன்று வீட்டிலுள்ள பழைய கழிவுப்பொருட்களை நெருப்பில் போட்டு எரிப்பது வழக்கம். இரண்டாம் நாள் பொங்கல் தினத்தில் புத்தாடை அணிந்தும், புதுப் பானையில் சர்க்கரை பொங்கல் சமைத்து, அனைவரும் சூரிய பகவானை வழிபடுவர்.மூன்றாம் நாள், மாட்டுப் பொங்கலன்று உழவு மற்றும் பால் உற்பத்தி பணிகளுக்கு பயன்படும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி அலங்கரித்து வழிபடுவர். பின்னர், ஊர் முழுவதும் மாடுகளும் ஊர்வலமாக வலம்வருவர். இன்றைய தினத்தில் மதுரை உள்பட பல்வேறு தென்மாவட்டங்களில் 'ஜல்லிக்கட்டு' போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். இதில் ஏராளமான காளைகளும் மாடு பிடி வீரர்களுடன் திருவிழாவாகவே காணப்படும்.
நான்காம் நாளான காணும் பொங்கலன்று குடும்பத்தினருடன் ஒன்றுகூடி உணவருந்தி மகிழ்தல், உற்றார்-உறவினர்களை நேரில் சந்தித்து அளவளாவுதல், குடும்ப பெரியவர்களை சந்தித்து ஆசி பெறுதல், கடற்கரை மற்றும் சுற்றுலா இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று ரசித்தால் என பொழுதுபோக்குவர். தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம்!
ஆந்திரா, தெலுங்கானாஃ கர்நாடகா:
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பொங்கல் பண்டிகையை 'மகர சங்கராந்தி'யாகக் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் 4 நாட்கள் கொண்டாடும்போது, இங்கு போகி, மகர சங்கராந்தி மற்றும் 'கன்னுமா' என 3 நாட்களுக்கு கொண்டாடுகின்றனர். கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். முதல் 2 நாள் மட்டும் அரசு விடுமுறை என்றாலும், கிராமங்களில் 'கன்னுமா' மிகவும் விசேஷ நாளாகும். இந்நாளில் மாடுகளின் ரேக்ளா ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுகளும் நடைபெறுவது வழக்கம்.கர்நாடகாவிலும் மகர சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் பண்டிகை ஒரே ஒரு நாள் கொண்டாடப்படுகிறது.
அஸ்ஸாம்:
அஸ்ஸாம் மாநிலத்தில் அறுவடை திருநாளை 'போஹாலி பிஹூ' என்ற பெயரில், அசாமிய காலண்டரின் ‘மாக்’ மாதத்தின் முதல் நாளாக ஜனவரி 15-ல் கொண்டாடுகின்றனர். போஹாலி பிஹூவுக்கு முந்தைய நாளில் அஸ்ஸாம் மக்கள் உறவினர்களுடன் ஒன்றுகூடி, ஒரே இடத்தில் இரவு அசைவ உணவு விருந்தை சாப்பிட்டு மகிழ்வர். இரண்டாவது நாளில், மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு ‘மேஜி’ என பிரமிடு வடிவில் செய்வார்கள். இதை அறுவடை செய்த நிலங்களில் அமைத்து பூஜை செய்து, நாம் போகியில் எரிப்பதுபோல் எரித்துவிடுவர்.அன்றைய தினம், அவலில் தயிர் கலந்து ஒரு உணவுப்பண்டம் மற்றும் எள்ளில் வெல்லம் கலந்து ஒரு இனிப்பு செய்து சாப்பிடுவார்கள். இதற்காக அஸ்ஸாம் மாநில அரசு 2 நாள் விடுமுறை அளிக்கிறது.
மகாராஷ்டிரா:
மகாராஷ்டிராவின் மிகப்பெரிய பண்டிகை மகர சங்கராந்தி. 3 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையின்போது, கருப்பு எள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். குளிர்காலத்தில் அறுவடை செய்யப்படும் கரும்பிலிருந்து எடுக்கப்படும் புதிய வெல்லத்தைப் பயன்படுத்தி, பல்வேறு இனிப்புகள் செய்து கொண்டாடுவர். இங்கு முதல் நாள் போகி, இரண்டாம் நாள் சங்க்ரந்த், மூன்றாம் நாள் கிங்க்ராண்ட் என அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை பல்வேறு நிறங்களில், விதவிதமான பட்டங்களை பறக்கவிட்டு விளையாடுவது அம்மாநில மக்களின் வழக்கம்.
குஜராத்:
குஜராத் மாநிலத்தில் பொங்கல் பண்டிகைக்கு பெயர் 'உத்ராயண்'. அதை 'பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை' என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு, ஒவ்வொரு வீட்டிலும் நபருக்கு ஒரு பட்டம் என காலை முதல் மாலை வரை பறக்க விட்டபடியே உள்ளனர். அன்றைய தினம் உலகளவில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டிகளை அகமதாபாத், ராஜ்கோட், பரோடா, சூரத் நகரங்களில் அரசே ஏற்று நடத்தி வருகிறது. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் பெருந்திரளாக கலந்து கொள்கின்றனர்.
மேலும் குளிர்கால காய்கறிகள், எள்ளு விதைகள், வேர்க்கடலை மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு சமைக்கப்படும் ‘உண்டியா’ எனும் பதார்த்தத்தை பூரியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள்.
பஞ்சாப், டெல்லி, இமாசலப் பிரதேசம் மற்றும் ஹரியானா:
பஞ்சாப், ஹரியானா, இமாசலப் பிரதேச மாநிலங்களில் அறுவடை திருநாளை 'லொஹரி' என்றும், ஹரியானாவில் 'மாகி' என்றும் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். பெயர்கள் வேறாக இருந்தாலும், கொண்டாடும் முறை ஒன்றுதான். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 13-ம் நாள் ‘லொஹரி’ கொண்டாடப்படும்.
பஞ்சாப் மாநிலத்தில் அன்றைய தினம் நள்ளிரவு 12 மணியளவில் குடும்பத்தார் அனைவரும் வந்து தீயை மூட்டி, அதைச் சுற்றிலும் அமர்ந்து கொள்வது அம்மாநில மக்களின் வழக்கம். அப்போது பாரம்பரிய பாடல்களுடன் நடனமாடி மகிழ்கின்றனர். அதேபோல் எள், வெல்லம் மற்றும் பால் கலந்த இனிப்புகள் அதிகம் செய்து சாப்பிடுவர்.
ஒடிசா மற்றும் சட்டீஸ்கர்:
ஒடிசா, சட்டீஸ்கர் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மட்டும் அறுவடை திருநாளை ஆட்டம், பாட்டம் என ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகின்றனர். இங்கு பெரும்பாலான மக்கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபத்தின் சந்தோஷத்தைக் கொண்டாட ஆண்-பெண் இருபாலருமே மது அருந்தி, மயங்கி இருப்பதும் பண்டிகையின் ஒரு அங்கமாகக் கருதுகின்றனர். இந்நாளுக்காக ஒடிசாவின் பூரி ஜெகநாத் கோயிலில் இரண்டு முறை சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெறும். அதேபோல், சட்டீஸ்கர் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
உத்தர பிரதேசம்:
உத்தரப் பிரதேசத்தில் பொங்கல் ‘கிச்சேரி’ என்று அழைக்கப்படுகிறது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்துக்கு ஏராளமான மக்கள் சென்று நீராடி வருவது வழக்கம்.
கேரளா:
தமிழக எல்லையில் உள்ள ஒரு சில கேரள மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பிற இடங்களில் உள்ள கோயில்களில் அன்றைய தினம் சிறப்பு ஆரத்திகள் எடுக்கப்படும். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றங்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் விசேஷத்தில் மட்டுமே லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பொங்கல் வைக்கின்றனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பொங்கல் பண்டிகை விதவிதமான பெயர்களிலும், சடங்கு முறையிலும் மக்கள் கொண்டாடினாலும், ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் அறுவடை திருநாளாக தலைநிமிர்ந்து நிற்கிறது .
Leave a comment
Upload