(வலை தளம் முழுவதும் கழுவி கழுவி ஊற்றியது ஏர் இந்தியாவை)
முக நூலில் அடிக்கடி இன்னொரு விமானக் கதை என்று எழுதுவது எனக்கு பிடித்தமான விஷயம்.
ஏனெனில் கொரோனாவுக்கு முன்பு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை எங்கேனும் விமானத்தில் பறந்து கொண்டுரிப்பது என் வாடிக்கை.
இந்த வாரம் சன் டிவியில் திகில் வாரம் போல விமான வாரம் போல.... திரும்பிய பக்கமெல்லாம் விமானச் செய்திகள். நல்ல வேளையாக துயர செய்திகள் இல்லை.
உச்சா போனதற்காக ஒரு மனிதனுக்கு வேலை போகுமா ?? போயிடுச்சே.....
வெல்ஸ் அண்ட் ஃபார்கோ என்ற நல்ல அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆசாமி. ஷங்கர் மிஷ்ரா.
குடி. பாழாப் போன குடி. நன்றாக குடித்து விட்டு ஏர் இந்தியா பிஸினஸ் கிளாசில் அமர்ந்திருந்த பெண்மணியின் மீது மிச்ச சொச்சமில்லாமல் மூச்சா போயிருக்கிறார் ஷங்கர் மிஷ்ரா. வேண்டுமென்று போகவில்லை. அது தான் பாத் ரூம் என்று நினைத்து போயிருப்பார்.
ஒரு படத்தில் ஏண்டா உங்க நிலக்கோட்ட நாராயணன் ஆம்பள கக்கூசுக்கே போக மாட்டானா என்று முறைத்துக் கொண்டு ஒரு பெண்மணி வருவார். அவரைப் போல சொட்ட சொட்ட நனைந்து கொண்டு நின்றிருக்கிறார் அந்தப் பெண்மணி.
குபுக்கென்று சிரிப்பு வந்தாலும் நம் வீட்டுப் பெண்களுக்கு இது நடந்திருந்தால் எப்படி வயிறெரியும் ?? அயோக்கியத் தனம் இல்லையா இது ?? அப்படி என்ன குடி ??
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார் ஷங்கர். ஒரு உச்சா போய் வேலை போய் மானம் போனதும் குடி நோயினால்......
எனக்கு இந்த செய்தியைப் பார்க்கும் போது அங்களாம்பிகா மாமி நினைவுக்கு வந்தது. பெரியம்மா வீடு மொட்டை மாடியில் ஒரு ஓரத்தில் இருந்தது. இரவு நாலைந்து பேர் வானம் பார்க்க படுத்திருந்தோம். மார்கழி போல. அதிகாலை எங்கள் ஐந்து பேரில் யார் என்று தெரியவில்லை மொட்டை மாடியில் சுவரருகே போய் உச்சா போய் விட்டு வந்து சத்தமில்லாமல் படுத்து விட்டான் ஒருவன். (நானில்லை). அது பைப்பில் நேரடியாக கீழே கொட்டி அங்கு கைபம்பில் தண்ணீர் அடித்து கொண்டிருந்த அங்களாம்பிகா மாமியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தலையில் விழுந்தது. முதலில் பாவம் மழை தான் போலிருக்கு என்று நிமிர்ந்து பார்த்தவருக்கு புரிந்து விட்டது.
தன்னுடைய வாட்ட சாட்டமான இரண்டு மகன்களுடன் ஓவென்று கத்திக் கொண்டே மாடிக்கு வந்த மாமி யார் இந்த வேலை செய்தது என்று கூச்சல் போட ஐந்து பேரும் ஐடிண்டிஃபிகேஷன் பரேடுக்கு தயாரே இல்லை என்பது போல கண்களை இறுக்கி மூடி தூங்குவது போல நடிக்க வேண்டியிருந்தது.
அங்கு வயதில் ரொம்ப சின்னவனான என் மாமா பையன் ஒருவனும் இருந்தான். அவன் அந்த வேலையை சத்தியமாக செய்யவில்லை. ஆனாலும் பெரியம்மா பாவம் குழந்தை தெரியாம பண்ணிட்டான் என்று அவன் மீது பழியை போட ஒரு வழியாக சரி குழந்தை உச்சாதானே என்று சமாதானமாக அந்த பெண்மணி அன்று நகர்ந்தார். இன்று வரை அந்த ஐந்து பேரில் யார் என்ற இரகசியம் வெளியாகவில்லை.
சரி அந்த பிஸினஸ் கிளாஸ் வகுப்பில் இதை தடுத்து யாருமே நிறுத்தவில்லையா ?? அது தான் மேட்டுக் குடிக்கும் எகானமி வகுப்புக்கும் வித்தியாசம். எகானமியில் இது நடந்திருந்தால் நாலு பேர் கொத்தாக பிடித்து கும்மியிருப்பார்கள். பிசினஸ் கிளாசில் எனக்கு நடக்கவில்லை நான் ஏன் ரியாக்ட் செய்ய வேண்டும்...வகை ஆசாமிகள் தான் அனேகம்.
தற்போதைய செய்தி அவர் உச்சாவே போகவில்லை என்றும் அந்தப் பெண்மணியே போய் விட்டு தன் மீது பழி வைத்து விட்டார் என்றும் தன் வக்கீலின் மூலம் சொல்லியிருக்கிறார் ஷங்கர்.
சரிதான். விளங்கிரும்.
இன்னொரு விமான செய்தி அமெரிக்காவில். திடீரென அனைத்து விமானங்களும் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டு அத்தனை பயணிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
காரணம் கம்ப்யூட்டர் மக்கர் செய்தது தான் ஆனால் சைபர் அட்டாக்கெல்லாம் இல்லை என்கிறார்கள். சுமார் 8000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு அத்தனை பயணிகளும் பல மணி நேரங்கள் விமான நிலயத்தில் காக்க வைக்கப்பட்டனர்.
9/11 க்கு பிறகு இது தான் முதல் முறையாக இத்தனை விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
வருத்தமான செய்தி. காரணம் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல அமெரிக்க விமான நிலயங்கள் அத்தனை சொகுசெல்லாம். இல்லை. பிஸினஸ் வகுப்பு லவுஞ்சுக்கள் வேண்டுமானால் சிறப்பாக இருக்கலாம். ஆனால் மற்றபடி வைஃபை வசதி கூட பல விமான நிலயங்களில் சுலபமாக கிடைப்பதில்லை. ஏன், விமான நிலய கழிவறைகள் கூட ஏனோ தானோ என்று தான் இருக்கும். இது அனுபவ பூர்வமாக கண்ட உண்மை. பேரு பெத்த பேரு..தான் அமெரிக்க விமான நிலயங்கள்.
ஆக பயணிகளுக்கு அது நரகமாக இருந்திருக்கும். பாவம்.
இன்னொரு தமாஷ்.
கோஃபர்ஸ்ட் விமானம்.
பல விமான நிலயங்களில் ஏரோ பிரிட்ஜ் என்று சொல்லப்படும் பயணிகள் நேரடியாக விமானத்திற்குள் செல்லும் வழி இருக்காது. அவர்கள் பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு விமானத்தில் படிகள் மூலம் ஏற வேண்டும்.
(கோவை விமான நிலயத்தில் இன்னொரு தமாஷ். நம் வீட்டு வாசலில் இருந்து பின்னாடி செல்லும் தூரத்தில் தான் விமானம் நின்று கொண்டிருக்கும். அதற்கு பஸ் விடுகிறார்கள். கோயம்புத்தூர் குசும்பு என்று இதை தாராளமாக சொல்லலாம்.)
கோஃபர்ஸ்ட் கதைக்கு வருவோம்.
55 பயணிகள் டெல்லிக்கு செல்ல பஸ்ஸில் விமானத்தை நோக்கி செல்ல, விமானம் அவர்களை விட்டு விட்டு பறந்தே விட்டது.
இது லட்சத்தில் ஒரு முறை நடக்கும் விஷயம் எப்படி நடந்தது என்று புரியவே இல்லை.
நிச்சயம் ஒன்றிரண்டு பேருக்கு வேலை போயிருக்கும். எனக்கு அந்த பயணிகளின் பரிதவிப்பு புரிகிறது.
ஒவ்வொருவரும் என்னென உடல்மொழியில் கத்தியிருப்பார்கள், கதறியிருப்பார்கள் என்று கற்பனை செய்ய முடிகிறது.
அத்தனை செக் லிஸ்ட் சிஸ்டம் இருந்தும் இப்படி ஆனதுக்கு காரணம் சூப்பர் ஸ்டார் சொல்வது போல சிஸ்டம் சரியில்லை.
வேறு என்ன சொல்ல.....
Leave a comment
Upload