தொடர்கள்
ஆன்மீகம்
சங்க கால இலக்கியங்களில் தை பொங்கல் திருவிழா!! - சுந்தரமைந்தன்.

சங்க கால இலக்கியங்களில் தை பொங்கல் திருவிழா!!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.” - திருக்குறள்-1031

பல தொழில்கள் செய்து உலகம் இயங்கி வந்தாலும், உழவுத் தொழிலின் பின்னாலேயே அது நிற்கின்றது. ஆகையால், எவ்வளவு துன்பம் ஏற்பட்டாலும் உழவுத் தொழிலே தலை சிறந்தது.
இன்றைய காலத்தில் தமிழர் கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் திருவிழா பன்னூறு ஆண்டுகளாகத் தமிழர் வாழ்வோடு நிலைத்து நிகழ்கின்ற விழாவாகச் சிறப்புற்றிருக்கின்றது. கதிரவனுக்கு நன்றியறிவித்து, உழவுத்தொழிலைச் சிறப்பிக்கும் விழாவாக மட்டுமன்றி, ஓரினத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் மரபுகளையும் மானுட விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இதன் வரலாறு மிகப் பழமையானது, தொன்மையானது. சங்க இலக்கியங்களில் தை பொங்கல் திருவிழா குறித்துப் பல குறிப்புகள் உள்ளதால், இது சங்ககாலம் முதல் தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

சங்க இலக்கியங்களில் இந்த தைப்பொங்கல்
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை

எனப் பலவாறாக தைத்திருநாளின் சிறப்பியல்புகளைப் பழந்தமிழர் இலக்கியங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றது. கி.பி 9ஆம் நூற்றாண்டுகளில் எழுதிய சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றி குறிப்பிடும் போது...‘மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’

எனப் பொங்கலினை குறிப்பிடுகின்றது.
சோழர்காலத்தில் 'புதியேடு' பண்டிகை என்ற என்ற பெயரில் புதிய அரிசியிட்டுப் பொங்கும் விழா நடைபெற்றதாகத் திருவொற்றியூரில் கிடைத்த செப்பேடுகள் அறிவிக்கின்றன..
'உத்தராயண சங்கராந்தி" எனும் தொடரும், 'பொங்கல் சோறு" எனும் தொடரும் 'பொங்கல் விழா" கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு மற்றுமொரு கல்வெட்டு சான்றாகிறது.

சங்க கால இலக்கியங்களில் தை பொங்கல் திருவிழா!!


பொங்கல் பண்டிகையின் வரலாற்றைப் பார்க்கையில் இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்பாக கடைப்பிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
தை உண் என்றும் தை நீராடல் என்றும் சங்க காலத்தில் இப்பண்டிகை பற்றிய குறிப்புகள் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். சங்க காலத்தில் பொங்கல் நாளை அறுவடை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடியிருக்கின்றனர் என்பதனை சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் இருபத்திரண்டாம் பாடல் விளக்குகிறது.
‘அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல….’ என்று குறந்தோழியூர் கிழார் எனும் புலவர் அறுவடை விழாவைச் சாறு கண்ட களம் என வருணிக்கின்றார்.
“மணிமேகலை” காப்பியத்தில், இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்ட அக்காலத்தில், காவிரி பூம்பட்டினத்தில், மன்னர்கள், மக்களுக்கு முரசறைந்து, பொங்கல் விழா வரவிருப்பதை அறிவிப்பார்கள். அக்காலத்தில் பொங்கல் விழா இருபத்தெட்டு நாட்கள் வரை நடந்திருக்கிறது.
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்ற பாரதியின் வாக்கிற்கு வடிவம் தரும் நாள், பொங்கல் திருநாள். சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் பொங்கல் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய கால்நடை போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.
இதுவே நாளடைவில் நான்கு தினங்கள் கொண்டாடப்படும். கொண்டாட்டமாக மாறியது. மேலும் இந்தியா, ஈழம் ஆகிய நாடுகளை அடிமைப்படுத்தியிருந்த போர்த்துக்கீசியர்கள் பொங்கலின் சிறப்பினை கூறியுள்ளார்கள். அதாவது கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த அப்போடூபாய் எனும் போர்த்துகீசிய அறிஞர், தான் எழுதிய ‘இந்துக்களின் பழக்க வழக்கங்களும், வாழ்க்கை முறைகளும்’ எனும் நூலிலே பொங்கல் உழவர்களுடைய அறுவடைத் திருநாளாகவும் சங்கராந்திப் பண்டிகையாகவும் ஊர்கள் தோறும் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
பொங்கல் விழா தொடங்குவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே அதற்குரிய ஏற்பாடுகள் ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் மக்கள் செய்ததாகவும் வீடுகளைப் பழுது பார்த்தல் குடிசைகளில் புதிய கூரை வேய்தல், வெள்ளையடித்தல், வண்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பொங்கல் நாளன்று சூரியனுக்குச் செய்யப்படும் வழிபாட்டையும், பொங்கல் படையலையும் அவர் பாராட்டியுள்ளார். மறுநாள் மாடுகளுக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களையும், ஊர்ப் பொது இடத்தை மக்கள் கூடி, அவற்றிற்கு வழிபாடு செய்ததையும் கூடக் குறிப்பிட்டிருக்கின்றார். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள் காளையாட்டுப் போட்டிகளிலும் 'மஞ்சு விரட்டு" போன்ற வீர விளையாட்டுகளிலும் பேரார்வத்தோடு ஈடுபட்டதை அவர் பதிவு செய்துள்ளார். இதிலிருந்து தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரலாற்றுக் காலம் முதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதைக் காணலாம்.
இம்மாதத்தில் தான் சூரியன் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வடதிசையில் சஞ்சரிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது. ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன. பொங்கல் திருவிழா என்பது நமது மரபில் பண்பாட்டு அடையாளமாக, வாழ்க்கைமுறையில் ஆழ வேரூன்றிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

சங்க கால இலக்கியங்களில் தை பொங்கல் திருவிழா!!


"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற கருத்துக்கு ஏற்ப தமிழர் பண்டிகையான உயர்ந்த சிந்தனை, வழிபாடு, போன்ற பாரம்பரியமிக்க பொங்கல் திருநாளைக் கொண்டாடி இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நாம் நன்றியைச் செலுத்துவோம்!!

20230014005231200.jpeg