தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஆளுநர் ரவிர்ர்ர்ர்ர்ர்ர்ர்........! –ஜாசன்

20230012172908113.jpg

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆளுநர் உரையின்போது எதிர்க்கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்வது தான் வாடிக்கை.

ஆளுநர் உரை என்பது ஆளும் மாநில அரசு தயாரித்து ஆளுநருக்கு அனுப்பி அவர் ஒப்புதல் பெற்று ஆளுநர் உரை அச்சுக்கு அனுப்புவது வழக்கம். பெரும்பாலும் ஆளுநர் உரை என்பது ஆளுங்கட்சியின் கொள்கை சாதனைகள் எதிர்காலத்தில் செய்ய இருக்கும் திட்டங்கள் என்று கிட்டத்தட்ட ஆளுங்கட்சியின் பிரச்சார உரையாக தான் அது இருக்கும்.

பெரும்பான்மை ஆளுநர்கள் அவற்றை அப்படியே உள்ளது உள்ள படி வாசிப்பது தான் பழக்கம். ஜெயலலிதாவுக்கும் அப்போது ஆளுநராக இருந்த சென்னா ரெட்டிக்கும் கருத்து மோதல் இருந்த போது கூட அவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருந்ததை அப்படியே படித்தார் அதேபோல் இதுவரை தமிழக ஆளுநர்கள் யாரும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களை கையெழுத்து போடாமல் அப்படியே வைத்திருந்ததெல்லாம் கிடையாது.

இன்றைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிட்டத்தட்ட 18 மசோதாக்களை கையெழுத்து போடாமல் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்திருக்கிறார். கையெழுத்து போடுவதற்கென்று காலக்கெடு எதுவும் இல்லை அவரை கையெழுத்து போடச் சொல்லி வற்புறுத்தவும் சட்டத்தில் இடமில்லை இப்படி தனக்கு சாதகமான சட்டங்களை ஆளுநர் தனக்கு வசதிக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை சம்பந்தப்பட்ட கோப்பில் இதுவரை இருந்த ஆளுநர்கள் எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் ஆளுநர்கள் காலதாமதம் தவறான முன் உதாரணம் என்று சொல்லி ராஜீவ் கொலை குற்றவாளிகளை அதிரடியாக விடுதலை செய்து தீர்ப்பு தந்தது.

சில பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஆளுநர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்றும் சொல்லியிருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக சட்டசபை ஆளுநர் உரையுடன் கூடியது.இதுவரை தமிழக சட்டசபை எதிர்க்கட்சிகள் ஆளுநர் உரையை கண்டித்து வெளிநடப்பு செய்ததை பார்த்திருக்கிறது .முதல் முறையாக வரலாற்று சாதனையாக ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.

தமிழக ஆளுநர் திமுக ஆட்சி சுமூகமான உறவு என்று சொல்ல முடியாது. ஆளுநர் தனது இஷ்டப்படி அரசியல் கருத்துகளை தொடர்ந்து சொல்லி வருகிறார். அது திமுக அரசை சில சமயம் மறைமுகமாகவும் சில சமயம் நேரடியாகவும் சங்கடப்படுத்துகிறது. இதற்கு திமுக பலமுறை ஆளுநருக்கு பதில் சொல்லி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

ஒன்பதாம் தேதி கூடிய சட்டசபையில் ஆளுநர் தனது உரையில் சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இது தமிழக முதல்வர் கவனித்து தனது கண்டனத்தை பதிவு செய்வதற்காக ஆளுநர் தயாரிக்கப்பட்ட உரையை முழுவதும் படிக்காமல் சிலவற்றை தவிர்த்து இருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி தமிழக அரசு தயாரித்து ஆளுநர் ஒப்புதல் தந்து அச்சிடப்பட்ட முழுமையான உரையை படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல மரபு மீறியதாகும் எனவே சட்டப்பேரவை விதி 17 ஐ தளர்த்தி இந்த அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவை தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டும் அவை குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தையும் அதேபோல் இங்கே அச்சிடப்பட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்துப் படித்த பகுதிகள் இடம்பெறாது என்று தீர்மானத்தையும் முன்மொழிகிறேன் என்று முதல்வர் பேசினார்.

முதல்வர் பேசியது குறித்து தனது செயலாளரிடம் ஆளுநர் விசாரித்து தெரிந்து கொண்டார். இந்த நிலையில் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற பேரவை தலைவர் எழுந்த போது திடீரென பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார்.

ஆளுநருக்கு உள்ளே நுழையும் போது காவல்துறை அணிவகுப்பு மரியாதை என்று அழைத்து வரப்பட்ட ஆளுநர் யாரும் வழி அனுப்பாமல் அவராக போய் காரி ஏறிப் போய்விட்டார். அவையில் முதல்வர் பேரவை தலைவர் அமைச்சர்கள் அப்படியே இருந்தனர். அதிமுகவும் பாரதிய ஜனதாவும் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறியது.

ஆளுநர் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பு வெளியேறியது குற்றம் என்று பேரவைத் தலைவர் அவையில் தனது கருத்தை பதிவு செய்தார்.

திமுக தரப்பு திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்கள் கொள்கை கோட்பாடுகளை பின்பற்றிய திராவிட மாடல் ஆட்சி என்பதை ஆளுநர் படிக்காமல் தவிர்த்து விட்டார் என்று ஆளுநர் மீது குற்றம் சுமத்துகிறது .திமுக சார்பாக நிருபர்களை சந்தித்த தங்கம் தென்னரசு ஆளுநர் ஒப்புதல் தந்த ஆளுநர் உரையில் இவை எல்லாம் இருக்கிறது என்றும் சுட்டி காட்டினார்.

ஆளுநரின் இந்த வெளிநடப்பு நடவடிக்கைக்கு பாஜக அதிமுக தவிர எல்லாக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி சட்டசபைக்குள் ஆன்லைன் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்ற பதாகைகளை ஆளுநர் முன் காட்டியது.

இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் ஆளும் அரசு உறவு சுமுகமாக இல்லை. காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீடை அதிகரித்து சட்டசபையில் ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது சதீஷ்கர் மாநில அரசு அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் இழுத்தடிக்கிறார்.

கேரளாவில் 128 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒரு சந்தேகம் கேட்டு மசோதாக்கள் ஒப்புதல் தராமல் கேரளா ஆளுநர் இழுத்தடிக்கிறார்.

இதனால் வெறுத்துப் போன கேரளா முதல்வர் பல்கலைக்கழகங்களுக்கு இனிமேல் வேந்தர் பதவியில் முதலமைச்சர் இருப்பார். வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கம் என்று ஒரு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு கேரளா அரசு அனுப்பி வைத்தது. தற்போது அந்த மசோதாவுக்கும் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்திருக்கிறார்.

கேரளா ஆளுநர், தமிழ்நாட்டிலும் சில பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக முதல்வர் இருப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்தத் தீர்மானமும் ஒப்புதல் தரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

தெலுங்கானா கேரள மாநிலங்களில் ஆளுநர் உரை இல்லாமலே சட்டசபை தொடர்ந்து நடைபெற்று வருகிறது காரணம் சட்டசபை கூட்டத் தொடரை சபாநாயகர் முடித்து வைக்காமல் ஒத்திவைத்து தொடர்ந்து சட்டசபை கூட்டத்தை நடத்தி வருகிறார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு கூடுதல் பொறுப்பாக புதுவை துணை நிலை ஆளுநர் பணி வழங்கப்பட்டது. ஆனால், தெலுங்கானாவில் அவருக்கும் முதல்வருக்கும் மோதல் காரணமாக அவர் தெலுங்கானா ராஜ்பவன் வாசி என்பதே அவருக்கு இப்போது மறந்து விட்டது. அவர் எப்போதாவது தான் தெலுங்கானா போகிறார் தமிழ்நாட்டில் நிகழ்ச்சியில் பங்கேற்பு புதுவையில் தங்கி அங்கிருந்தபடியே தெலுங்கானா ஆளுநர் வேலையை பார்க்கிறார் இதுதான் இப்போதைய நிலைமை. தமிழிசை சௌந்தர்ராஜன் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்று இழுத்தடிக்கிறார் என்று தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தமிழிசை மீது குற்றம் சுமத்தி வருகிறார்.

எதிர்க்கட்சிகளின் மாநிலங்களில் பெரும்பாலான ஆளுநரின் நிலைப்பாடு மாநில ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கிறது என்றாலும் சில சமயம் ஆளுநர்கள் ஆளுங்கட்சியின் ஜால்ராவாக செயல்பட்ட காலங்களும் உண்டு. திமுகவுக்கு சில ஆளுநர்கள் சாதகமாக இருந்திருக்கிறார்கள்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது அப்போது ஆளுநராக இந்த கே.கே.ஷா கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார் அப்போது கே.கே.ஷாவை கருணாநிதி ஷா என்று விமர்சனம் எல்லாம் செய்திருக்கிறார்கள்.

ஜனவரி 31, காந்தி நினைவு நாள் அன்று நடந்த அஞ்சலி கூட்டத்தில் கே.கே.ஷா கருணாநிதி காந்திஜியின் கொள்கைகளைப் பின்பற்றி ஆட்சி நடத்துகிறார் என்று பாராட்டினார். அன்று மாலையே கருணாநிதி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை ஊழல் ஆட்சி என்று மத்திய அரசுக்கு அறிக்கையை அனுப்பி காலை அவர் பாராட்டிய அதே ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய சிபாரிசு செய்தார் கே.கே.ஷா காரணம் அப்படி ஒரு அறிக்கையை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

1989-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சுர்ஜித் சிங் பர்னாலா ஆளுநராக இருந்தார் இவரும் கருணாநிதிக்கு நெருக்கமானவர். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் எப்போதும் ஆளும் அரசு சிபாரிசு செய்பவர்களை வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நியமிப்பது வழக்கம்.

ஒருமுறை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆளுநர் மகன் ஒருவர் பெயரை சிபாரிசு செய்ய அவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சுர்ஜித் சிங் பர்னாலா நியமித்து விட்டார். அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி நாம் பரிந்துரை செய்த ஒருவரை துணைவேந்தராக்காமல் வேறு ஒருவரை ஆளுநர் துணை வேந்தர் ஆக்கிவிட்டார் என்று கருணாநிதியிடம் புகார் செய்தார். அப்போது கருணாநிதி ஆளுநர் நமது நண்பர் பரவாயில்லை விட்டுவிடுங்கள் என்று சொல்லி பிரச்சனையை முடித்து விட்டார்.

திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய சுர்ஜித் சிங் பர்னாலாவை அறிக்கை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், பர்னாலா அறிக்கை அனுப்ப மறுத்துவிட்டார். அவர் அறிக்கை இல்லாமல் திமுக ஆட்சி மத்திய அரசு அப்போது டிஸ்மிஸ் செய்தது.

எடப்பாடி ஆட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுங்கட்சி பரிந்துரையை கண்டுகொள்ளாமல் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக நியமித்தார் எடப்பாடி கண்டும் கண்டு கொள்ளாமல் தான் இருந்தார்.

இந்தி திணிப்பை கண்டித்து பாஜக அரசுக்கு எதிராக அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் போராட்டம் நடத்திய போது பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினை அழைத்து மத்திய அரசு இந்தி திணிப்பு எதுவும் செய்யவில்லை இதை என்னிடம் அமித்ஷா தெளிவாக சொல்லிவிட்டார் என்று சொன்னதும் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

20230012172938985.jpg

ஸ்டாலின் ஆளுநரைப் பொருத்தவரை அவர்கள் மத்திய அரசின் ஏஜென்ட் ரப்பர் ஸ்டாம்ப் அவ்வளவு தான்.

இப்போதைய ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு செயல்பாடு எல்லாம் மத்திய அரசின் முக்கிய தலைவர் சொல்லி இவர் செயல்படுகிறார் அவ்வளவுதான் இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியும் அதனால்தான் திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக ஆளுநரை விமர்சித்து யாரும் எதுவும் பேசாதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்.