இன்று வேஷ்டிகளும் புடவைகளும் சரசரக்க பல இளைஞர்கள் கால்கள் பின்ன நடந்து போவதை பார்க்கமுடிகிறது, அரை டிரவுசர்கள் பெருகி விட்ட இந்த யுகத்தில் பாரம்பரிய உடைகளை அணிவதுபொங்கலுக்கு மட்டுமே என்றாகிவிட்டது. தாவணிகளும் வேஷ்டிகளும் இயல்பாய் இருந்த காலத்தில்பொங்கல் மட்டுமே மனதிற்கு நெருக்கமான விழாவாக இருந்தது. மார்கழியின் வண்ணக் கோலங்கள்பொங்கல் பானையும் கரும்பும் வரைந்த பிறகு தான் நிறைவடையும். பொங்கல் அன்று வாசலில் என்னகோலம் போடலாம் அதற்கு என்னென்ன வண்ணங்கள் தீட்டலாம் என்பது போன்ற அதிமுக்கியமானமுடிவுகளை எல்லாம் எடுக்க ஒரு வாரம் ஆலோசனை கூட்டங்கள் எல்லாம் நடத்துவோம். சில வீடுகளில்காளைகளை வரைகிறேன் என்று சில சோதனைகளையும் செய்து வைத்திருப்பார்கள், அந்த விஷப்பரிட்சை எல்லாம் நான் செய்ததில்லை.
தொடர் பட்டாசு இரைச்சலால் வாசலுக்கே போக முடியாமல் காதடைத்து கொண்டு வீட்டில் பதுங்கிஇருப்பதால் தீபாவளி எனக்கு பயத்தோடே கழியும், அதென்னமோ அப்பா அணுகுண்டு வெடிக்கும் போதுதான் அம்மா எதிர்வீட்டில் இருந்து பஜ்ஜி கட்டையை கேட்பாள், வெடிச்சிராதீங்க என்று வெள்ளைகோடியை காட்டி வெடியை நிறுத்திவிட்டு போய்வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். வெள்ளைஅடித்தல், மாக்கோலம், மருதாணிச் சிகப்பு என்று பொங்கல் எப்போதுமே மனதிற்கு நெருக்கமானபண்டிகை தான். டிசம்பர் மாதத்தின் கடைசி அல்லது ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் வீடு வெள்ளைஅடிப்பதில் இருந்து தொடங்கும் பொங்கலுக்கான முன் தயாரிப்புகள். திருநெல்வேலி வட்டாரங்களில்இந்த வெள்ளை அடிப்பு இல்லாமல் பொங்கலே கிடையாது என்று சொல்லலாம். கைக்குட்டையில்இருந்து கம்பளி வரை அனைத்தும் ஒன்று விடாமல் துவைத்து காய போடப்படும். அடுப்பாங்கரையில்பருப்பு டப்பாவில் இருந்து பல் குத்தும் குச்சி வரை அனைத்துமே கழுவப்பட்டு வெயிலில் காயவைத்துஎடுத்து வைக்கப்படும். இதில் எனக்கு இடப்படும் பணி சற்றே கடினமான வளைந்த மாடி படியில் ஏறிகூடை கூடையாய் சாமான்களை கொண்டு போய் மொட்டை மாடி வெயிலில் காய வைப்பது தான். எத்தனை முறை ஏறி இறங்கி இருப்பேன் என்று நினைவில்லை எனினும் சலிப்பே ஏற்பட்டதில்லை.
வெள்ளை அடிப்பு நாட்களை என் சின்ன வயதில் நான் மிகவும் விரும்பி இருக்கிறேன். சுண்ணாம்பைதண்ணீரோடு கலக்கும் போது அது தளக் தளக் என்று சத்தமெழுப்பிய படியே கொதிக்கும், அதை நன்றாககலக்கி பதமான திரவமாக்கி சுவற்றில் அடிப்பது ஒரு தனி கலை தான், கொத்தனார் கோவிந்தன் அதில்கைதேர்ந்தவர். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அவரை கையில் பிடிக்க முடியாது. சுவற்றில் சாய்ந்துபடிக்கும் போது தலையில் இருந்து சுவருக்கு இடம் மாறிய எண்ணெய் கரை, பென்சிலால் எழுதி பார்த்தபாடங்கள், பேனாவை நிரப்பி விட்டு தெளித்து பார்த்த இன்ங்கின் சுவடுகள் என்று அழுக்காகி இருந்தசுவர் புதிதாய் மாறி விடும். புத்தம் புதிதாய் வெள்ளை அடித்த சுவற்றின் வாசம் அலாதியானது, எந்தபெயின்ட்டும் அதன் முன் நிற்க இயலாது. அந்த நாட்களில் வீட்டில் வெள்ளை அடித்தால் உஜாலாவுக்குமாறிட்டோம் என்று பெருமையாய் சொல்லிக் கொள்வோம்.
இந்த வெள்ளை அடித்தலில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் வீட்டிலுள்ள அனைத்து அலமாரிகள்மற்றும் நிலைகளில் உள்ள பொருட்கள் எல்லாம் கீழே எடுத்து வைப்பார்கள். அதை குடைந்தால்அபூர்வமான பொருட்கள் எல்லாம் கையில் கிடைக்கும். ஒருமுறை இப்படி எடுத்து போட்டிருந்த குப்பையில் தான் அப்பாவின் சேகரிப்பில் அழகழகான வண்ணங்களில் இருக்கும் விதவிதமான பால்பாயிண்ட் பேனாக்களை கண்டெடுத்தேன். ஒரு புதையலை போல என்றோ தொலைத்த பொருட்கள்எல்லாம் அன்று கிடைக்கும். விளையாட போன இடத்தில் கண்டெடுத்த சின்ன ஆஞ்சநேயர் டாலர் தொலைந்து போன போது மாலை மாலையாய் கண்ணீர் சிந்தியது பெருங்கதை, பல வருடங்கள் கழித்து ஒரு வெள்ளையடிப்பில் அந்த டாலர் கிடைத்த போது இதற்கா அப்படி அழுதோம் என்று சிரித்துக்கொண்டேன்.
சுவற்றுக்கு அருகில் நின்று வெள்ளை அடிக்க சுற்றிலும் கொஞ்சம் இடத்தை விட்டுவிட்டு அனைத்துபொருட்களையும் அறையின் நடுவில் நகர்த்தி வைத்திருப்பார்கள். வீட்டில் கால் வைக்கவேஇடமிருக்காது. இந்த ரணகளத்தில் கூட அம்மா காலையிலேயே உஷாராய் தயார் செய்து வைத்த எலுமிச்சை மற்றும் தயிர் சோறும், தேங்காய் துவையலும் அதுவரை நாங்கள் அமர்ந்து உண்டிராதசமையலறையில் சின்ன வட்டமாய் அமர்ந்து உண்டு முடிக்கையில் தேவாமிர்தமாய் சுவைக்கும். அப்பாவிற்கு பீரோலை நகர்த்துவது, கட்டிலை பிரித்து சேர்ப்பது, சேர்களை கழுவுவது, சுவாமிபடங்களை துடைத்து சட்டங்களுக்கு எண்ணெய் இடுவது முதலான வேலைகள் இருக்கும். வாசல்சுவருக்கு ஏனோ அப்பா பச்சை வண்ண டிஸ்டம்பர் தான் அடிக்க வேண்டும் என்பார், ஆனால்சோகத்திற்கு அடித்து முடித்த மறுநாளே அதில் பொங்கல் ரிலீஸ் படங்களுக்கான போஸ்டர்களைவொட்டி இருப்பார்கள். அதை பார்க்கும் போது கொதிப்படைந்த போதும் கிழித்து போடுவதை தவிரஒன்றும் செய்ய முடியாது, பின்னாளில் கீழே விளம்பரம் செய்யாதீர் என்று சிகப்பு பெயிண்டில் எழுதிவைத்துவிட்டார் அதனால் போஸ்டர் பிரச்சனையில் இருந்து தப்பித்தோம்.
கடும் வேலைகளுக்கு நடுவில் இரவு உணவை அப்பா ஹோட்டலில் இருந்து வாங்கி வருவார், அந்தநாட்களில் ஹோட்டல் சாப்பாடெல்லாம் லேசில் வாங்கி தர மாட்டார்கள்...இது போன்ற எதாவது அபூர்வதருணங்களில் மட்டுமே வாய்க்கும். அப்போதும் நமக்கு ரவா தோசையை தவிர வேறென்ன கேட்கதெரியம் ! போகி அன்று பெரும்பாலும் அம்மா எனக்கு ஜன்னல் கம்பிகளை துடைக்கும் வேலையை தான்தருவாள். அருகில் எங்கேயோ டீக்கடைகளில் இசைக்கும் ராஜாவின் பாடல்களை காற்று அழைத்துவரும்... 'மார்கழி தான் ஓடி போச்சு போகியாச்சு' என்ற தளபதி பட பாடலை அன்று அவசியம் கேட்டுவிடுவேன், அந்த பாடலின் நடுவில் வரும் கொட்டு சத்தம் போகியை ஏதோ ஒரு வகையில் முழுமையடையசெய்துவிடும் என்று தோன்றும். அம்மா பொங்கல் பானை வைக்க பயன்படுத்தும் ஐந்து கற்களை பரணில்இருந்து எடுத்து அதில் தானே வெள்ளை அடித்து அதன் மேல் காவி பூசி அழகாக்கி வைத்து விடுவாள். பொங்கல் வைக்க பனை ஓலைகளை வாங்கி சின்ன சின்ன நறுக்குகளாய் வெட்டி அதை கட்டுகளாக்கிவைக்க ஐயாமணியை வேறு தேடி போக வேண்டும், அவரை லேசில் எங்கும் பார்க்க முடியாது. ஓலையைஅவர் வெட்டும் லாவகம் நாளெல்லாம் பார்த்து கொண்டே நிற்கலாம்.
வீடு முழுவதும் சுவற்றோடு தரை சேரும் இடங்களில் காவியை பூச வேண்டியது என் வேலை. செங்கல்தரையில் அழகான மாக்கோலங்களை அம்மா போட்டுமுடிக்க நள்ளிரவு ஆகிவிடும். மருதாணி கோன்கள்எல்லாம் அப்போதே பரபலம் தான் என்ற போதும் தீபாவளி பொங்கலுக்கெல்லாம் இப்படி இலைகளைஅரைத்து குப்பிகளாய் விரல்களில் வைப்பது தான் எனக்கு பிடிக்கும். மிக்சிகள் வராத காலகட்டத்தில்பாக்கையும் மருதாணியையும் அம்மியில் வைத்து அரைக்கிறேன் என்று விரல்களை நசுக்கி கொண்டநாட்கள் பல. கோலம் காயும் வரை காக்க நினைத்து கையில் மருதாணியுடன் ஒரு ஓரமாய் ஒடுங்கி படுத்தநாட்கள் அழகானவை. மறுநாள் காலையில் எழுந்து கைகளின் சிகப்பை பார்க்கும் போது உள்ளம்குதூகலிக்கும். அம்மா எப்போது படுப்பாள், எப்போது எழுவாள் என்றே தெரியாது.
விடியலில் அப்பாவும் அம்மாவும் குளித்து பொங்கல் பானையை உலையில் ஏற்றும் தருணத்தில் நான்வாசலில் கோலம் போட்டு கொண்டிருப்பேன். இருவரும் சேர்ந்து பொங்கலை செய்வதை பார்ப்பதேஅலாதியானதொரு உணர்வை தரும். பளபளப்பான பொங்கல் பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கைசுற்றி இருப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் போது அம்மா விடும் குலவை சத்தத்தை எவ்வளவுமுயன்றும் என்னால் அதே போல செய்ய முடியவில்லை. பொங்கல் தயாரான உடன், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், ஒரு துண்டு தேங்காய், ஒரு துண்டு வாழைப் பழம் எல்லாம் வைத்து பூஜை செய்துகாக்கைக்கு வைப்பார்கள். வாழையிலையில் நெய் மணக்க சர்க்கரை பொங்கலுடன் தேங்காயும் பழமும்வைத்து சாப்பிடுவது அலாதியானதொரு சுவையாக இருக்கும், காக்காய் சாப்பிடுகிறதோ இல்லையோநான் நன்றக சாப்பிடுவேன்.
படையலுக்கு போட்டிருந்த காய்கள் அனைத்தையும் வைத்து ஒரு அவியலும் சாம்பாரும் செய்வார்கள். சிறு கிழங்கு, வள்ளி கிழங்கு, பிடி கிழங்கு எல்லாம் பொங்கல் சம்யங்களில் மட்டுமே கிடைக்கும். அதிலும்சிறு கிழங்கின் சுவை அற்புதமானது ஆனால் அதன் தோலை உரிப்பது தான் கொஞ்சம் சிரமம், சாக்கில்போட்டு அடித்து பின்பு கத்தி வைத்து சுரண்டிவிட்டு செய்து முடிப்பதற்குள் கடினமாக தான் இருக்கும்அதன் சுவை இந்த கஷ்டங்களை மறக்க செய்து விடும். இரவானால் அவியல் சாம்பார் எல்லாம் கலந்துசுடவைத்து லேசான காரத்தை தூவி சுண்டகரி செய்வார்கள். இதற்கு பெரிய போட்டா போட்டியாகஇருக்கும், சம்பா பச்சரிசி சோற்றில் தயிர் விட்டு பிசைந்து சுண்டகரி வைத்து சாப்பிட்டால் தான்பொங்கல் நிறைவு கொள்ளும்.
கரும்பு, பணங்கிழங்கு என்று பொங்கலின் மகிழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.இதுஇல்லாமல் பொங்கல் படி என்று பெரியவர்கள் ஆசிர்வதித்து கையில் காசு தருவார்கள், பொங்கல் படிஎன்பது அவசியம் தர வேண்டிய ஒன்று என்பதால் நல்ல வசூல் கிடைக்கும். பொங்கல் படியை வாங்கதெருக்களை பெருக்குபவர்கள், சாக்கடை அள்ளுபவர்கள், என்று யாராவது வந்த வண்ணம்இருப்பார்கள். பொங்கல் அன்று வெளியாகும் சினிமாவை பார்த்து விட வேண்டும் என்று வெகு நாட்கள்ஆசை பட்டதுண்டு, ஆனால் அன்று ஆண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று வீட்டில் பெரியவர்கள்வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். ஒரு பொங்கலுக்கு வெளியான பிதாமகனை மிகவும் ரசித்துபார்த்தேன் அதிலும் படத்தில் லைலா சூர்யா காட்சிகள் எல்லாம் பார்த்து சிரித்து சிரித்து வயிறு வலித்துபிறகு படத்தின் முடிவை பார்த்து வழக்கம் போல கண்ணீருடன் வீடு திரும்பியது தனி கதை. இப்படிஇனிக்க இனிக்க கொண்டாடிய பொங்கல் இன்று நகரத்தின் கேஸ் அடுப்புகளுக்குள் முடங்கிபோன வருத்தம் ஒருபுறமிருக்க நினைவுகளில் அந்த சர்க்கரை பொங்கலின் தித்திப்பு இன்னும் மிச்சம்இருக்க தான் செய்கிறது....
Leave a comment
Upload