கொங்கு நாட்டில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில், நாமக்கல் மாவட்டத்தில் சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் புதன் சந்தை என்னும் ஊரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மலை மீது வரதராஜ பெருமாள் குவலயவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். இந்து புராணங்களின்படி, இது பல யுகங்களாக இருந்திருக்கிறது மற்றும் சித்தர்கள், ரிஷிகள் இங்கு தவம் செய்திருக்கிறார்கள். தெலுங்கு மொழி பேசுபவர்கள் அதிகம் வாழ்வதாலும், நாயக்கர் இப்பகுதியை ஆண்டு வந்ததாலும், நைனா என்றால் தந்தை என்று தெலுங்கில் பொருள் படுகிறது, கடவுளை தந்தை என்று கூறும் வழக்கம் இருப்பதால் இம்மலையை நைனா மலை என்று அழைக்கிறார்கள் என்றும், நயன மகரிஷி இங்கு தவம் செய்து பெருமாள் தரிசனம் கண்டதால் இம்மலைக்கு நைனாமலை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகின்றது.
இங்கிருக்கும் பெருமாளை வழிபட்டால், திருப்பதி சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவேதான் இந்தத் தலம் சின்னத் திருப்பதி என்று பெயர் பெற்றுத் திகழ்கிறது.
மற்றும் "சேலத்தின் திருப்பதி" என்றும் அழைக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு சாய்வாகத் தோன்றும் இம்மலையின் உயரம் சுமார் 2600 அடியாகும். மிகவும் செங்குத்தான, குறைந்த அகலமே கொண்ட 3,700 படிகள் உள்ளன. சிறப்பம்சமாக மலையின் முகட்டில், உச்சி முழுவதையும் உள்ளடக்கி, 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இம்மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்தன. தற்போது கடும்பஞ்சத்திலும் என்றென்றும் வற்றாத அமையா தீர்த்தம், அரிவாள் பாழி, பெரிய பாழி என மூன்று தீர்த்தங்கள் மட்டும் உள்ளன.
இந்த கோயிலின் பொருமாளை சூரியன் வழிபட்டு வரம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல இந்திரனும் இங்கு இடி ரூபமாக வந்து இறைவனை வழிபடுவதாகவும் ஐதீகம். இன்றும், இங்குச் சித்தர்கள் வந்து இறைவனை வழிபட்டுச் செல்வதாக நம்பப்படுகிறது.
ஸ்தல புராணம்:
இதிகாச காலத்திற்கு முன்பே குவலயவல்லி தாயார் சமேதராய் வரதராஜப் பெருமாள் எழுந்தருளிய முதன்மை திருத்தலம் இது என்று பிரம்ம புராணத்தின் 16வது அத்தியாயத்தில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக வைணவம் ஆன்மீக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். மற்றும், இந்திர ஜலம், பத்ம ஜலம், யாதவ ஜலம் மற்றும் நைனா ஜலம் உள்ளிட்ட பல பெயர்களின்படி, நான்கு யுகங்களிலும் இந்தக் கோயில் இருந்து வருகிறது, இங்கு சித்தர்கள், ரிஷிகள் தவம் செய்தார்கள். நயன மகரிஷி இங்கு தவம் செய்ததால் இக்கோயில் நைனாசலம் என்று அழைக்கப்படுகிறது.
கோயில் வரலாறு:
இந்தக் கோயில் பல்லவர் மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், கோவிலின் சில பகுதிகள், பதினேழாம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பகுதியை ஆண்ட ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது. கடந்த 1939-ம் ஆண்டில் கோவிலின் சுற்றுப்பிரகாரம் கட்டப்பட்டது.
ஸ்தல சிறப்பு :
இந்த கோயிலில் உள்ள வரதராஜப் பெருமாளுக்கு மாயவர் என்றும் பெயர் உண்டு. இங்குள்ள பெருமாளை சூரியன் வழிபட்டு வரம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அதற்கேற்ப வருடத்தில் தமிழ் மாதமான ஆனி முதல் தேதியில் இருந்து ஆடி மாதம் 30-ந் தேதி முடிய இரண்டு மாதங்களும் சூரியன் உதிக்கும் போது சூரியனின் கதிர்கள் பெருமாளின் மீது நேரே விழுந்து பிரகாசிப்பது அங்குள்ள ஒரு சிறப்பு அம்சமாகும். எனவே ஆடி மாதங்களில் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல இந்திரனும் இங்கு இடி ரூபமாக வந்து பெருமாளை வழிபடுவதாகவும் ஐதீகம். ஒவ்வொரு 12 வருடங்களுக்கும், இந்திரன் வந்து இடி வடிவில் பெருமாளை வழிபடுவதை இங்குள்ள தூண் ஒன்றில் செதுக்கப்பட்ட சிற்பம் மூலம் அறியலாம். இந்த கோயிலில் பிரம்மா கோயிலில் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் உள்ள திருமஞ்சன தீபம் மிகவும் பிரசித்தி பெற்றது.
கோயில் அமைப்பு:
இந்த மலையின் உயரம் சுமார் 2600 அடியாகும். இதன் உச்சியில் சுமார் 120 அடி உயரமுள்ள ஒரே பாறையின் மேல் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்து உள்ளது.
இக்கோவிலுக்கு அடிவாரத்தில் ஆஞ்சநேயர் கோயிலை தரிசித்துவிட்டு 3,700 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். மேலே ஏற 2 முதல் 3 மணி நேரம் மற்றும் கீழே வர 11/2 மணி நேரம் ஆகும். மலை ஏறும்போது ஒரு கல் மண்டபம், அதை தொடர்ந்து ஒரு தீர்த்தக்குளம். இந்த மண்டபத்தூணில் படுக்கை ஜடா முடி சித்தர், பிராண தீபிகை சித்தர், குரு லிங்க சித்தர் உருவங்கள் உள்ளன. இங்கு சித்தர்கள் இன்றும் வசிப்பதை, தவம் செய்வதை இந்த சித்தர் உருவசிலைகளைக் கொண்டு அறியலாம். கல் மண்டபத்தை கடந்து மலை முடியும் இடத்துக்குப் பத்துப் படிகள் முன்பாக ஏகாந்த சிரஞ்ஜீவி அனுமன் காட்சி தருகிறார். அவரை வணங்கிய பின்பு சில படிகள் ஏறினாலே வரதராஜ பெருமாள் சந்நிதி. பெருமாளின் சந்நிதிக்கு எதிரே கொடிமரத்துக்கு அருகில் கருடாழ்வார் பெருமாளைக் கைகூப்பியவாறு காட்சி அளிக்கின்றார். கர்ப்பக்கிரகத்திற்கு உள்ளே ஶ்ரீ வரதராஜப் பெருமாள் பூதேவி, ஶ்ரீதேவியரோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அடுத்த மகாமண்டபத்தில் இராமர், சீதை, லட்சுமணர் சமேதராகவும், நவநீதகிருஷ்ணரும், ராதா, ருக்மணி சமேதராகக் காட்சி கொடுக்கும் ஶ்ரீ வேணுகோபாலரும் தனித் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். சந்நிதிக்கு வெளியே உள்ள மண்டபத்தில் உள்ள தூணில் நயன மகரிஷி தவம் செய்வது போன்ற சிற்பம் ஒன்றும் உள்ளது. பெருமாளை தரிசித்து வெளியே வர கிழக்கு நோக்கியவாறு குவலயவல்லி தாயார் சந்நிதியில் கருணையே திருவுருவமாக அமர்ந்து அருள் வழங்குகின்றார். இங்கு ஆண்டாளுக்கும் இங்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது. ஸ்தல விருட்சமான நெல்லி மரம், பலயுகங்கள் கடந்ததாக தெரிகின்றது. இந்தத் தலத்தில் ஒரு காலத்தில் 120 தீர்த்தங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இன்று அவை அனைத்தும் வற்றி `அமையா தீர்த்தம்', `அரிவாள் பாழி', `பெரிய பாழி' ஆகிய மூன்றே மூன்று தீர்த்தங்கள் மட்டுமே காணப்படுகின்றன.
மலை மீது ஆண்டுதோறும், லட்சக்கணக்கில் பக்தர்கள் வரும் நைனாமலை உச்சிக்கு வாகனங்கள் சென்றுவர, சாலை அமைக்கும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் மண்டபத்தில் இருந்து துவங்கும் இச்சாலை, மலைக்கோவில் பக்கவாட்டில் சென்று முடியும். அங்கிருந்து, 150 படிக்கட்டுகள் மட்டும் கடந்தால், கோவிலுக்குச் சென்று விடலாம். அதனால், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் எளிதாக செல்ல முடியும்.
திருவிழாக்கள்:
பிரம்மோத்ஸவம் (மாசி மாதம் 13 நாட்கள் பிரம்மோற்சவ விழா, விமரிசையாக நடக்கும்)
புரட்டாசி உற்சவ விழா
சனிக்கிழமைகளில் விசேஷ ஆராதனை, அஷ்டலட்சுமி ஹோமம், 180 திருவிளக்கு பூஜைகள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இது போன்ற நாட்களில் கோயில்களில் திருமஞ்சன தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதும் தென்படும்.
புரட்டாசி உற்சவ விழா:
இக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவ திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாப்படுவது வழக்கம். அந்த மாதத்தில், ஒவ்வொரு சனிக்கிழமையும், லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று பெருமாளை தரிசனம் செய்வார்கள். அதில், மூன்றாவது வாரம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை, பலமடங்கு அதிகரிக்கும். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் இங்கு வந்து வழிபட்டால் பலன்கள் மேலும் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை. இங்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கொங்கு நாட்டில் உள்ள ஏராளமானோர் வந்து கலந்து கொள்வர். அப்போது வழிபாடுகளும், அலங்காரங்களும் களைகட்டுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து சனிக்கிழமை மலையேறி பெருமாளை தரிசித்து வீட்டிற்கு சென்று காய்கறி படையல் செய்து வழிபடும் முறை காலம் காலமாக பின்பற்ற பட்டு வருகிறது. இந்த நேரத்தில் பக்தர்களின் வசதிக்காக நாமக்கல், சேலம் மற்றும் சேந்தமங்கலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் கோவிலின் அடிவார பகுதிக்கு இயக்கப்படும்.
கோயில் திறக்கும் நேரம்:
மாதத்தின் எல்லா சனி மற்றும் புதன்கிழமைகளில் கோவில் திறக்கப்பட்டிருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் லட்சகணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்வார்கள். ஒவ்வொரு வாரமும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் கோயில் நடை திறந்திருக்கும். சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடை மூடப்படும். அன்று காலை 9 மணியளவில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறும்.
பிரார்த்தனை:
திருப்பதி வெங்கடாஜலபதியை போல் நைனாமலையிலும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் வரதராஜப்பெருமாள். எனவே, இங்கு வந்து பெருமாளை பிரார்த்தனை செய்தால் திருப்பதிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
கோயிலுக்குப் போவது எப்படி:
இந்த கோயில் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தையில் இருந்து பிரிந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலும், சேந்தமங்கலத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
நாமக்கல்லில் இருந்து: 10 கி.மீ
ராசிபுரத்திலிருந்து 20 கிமீ
சேலத்திலிருந்து: 53 கி.மீ
பெங்களூரிலிருந்து: 249 கிமீ
திருச்சியிலிருந்து: 103 கிமீ
தொலைவிலும் அமைந்துள்ளது.
அருகிலுள்ள இரயில் நிலையம் ராசிபுரம், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது.
முகவரி:
அருள்மிகு நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில், நைனாமலை மலைக் கோயில் சாலை, சேந்தமங்கலம், நைனாமலை அடிவாரம், தமிழ்நாடு 637409, இந்தியா
நல்வாழ்வும் அருளும் வரதராஜப் பெருமாளை
வழிபட்டு அருள் பெறுவோம்!!
Leave a comment
Upload