பொங்கல் திருநாள் இம்மண்ணின் விழா. தமிழ் மக்களின் உணர்வோடும், உயிரோடும் கலந்த திரு விழா. நெல்வயலில் இறங்கி உழைத்து ,உணவுப்பொருளை விளைவிக்கும் குடியானவன் இறைவனுக்கும் ,இயற்கைக்கும் தன் நன்றியை கூறும் திருவிழா. புத்தரிசி ,வெல்லம் ,கரும்பு, புதுப்பானை , வண்ண வண்ண கோலங்கள் என்று இல்லங்கள் அழகுடன் மிளிரும் .கழுத்து மணி அசைய, வண்ணம் தீட்டிய கொம்புகளும். மலர் அலங்காரங்களுடன் மாடுகள் புதுப்பொலிவு பெறும். கேஸ் அடுப்பில் வைக்கப்படும் குக்கர் பொங்கலைச் சுவைக்கும் நமக்கு கிராமிய பொங்கல் புதுமையானதாக இருக்க கூடும் .
அத்தகைய கிராமிய பொங்கலை ,உறவுகளுடன் கொண்டாடிய அனுபவம் எனக்குண்டு . ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவைக் கொண்டாடும் போது 1995 ஆம் ஆண்டு நாங்கள் சேர்ந்து எங்கள் பூர்விக கிராமத்தில் கொண்டாடிய பொங்கல் விழா நினைவுக்கு வருகிறது. உறவுகள் என்றதும் ஒரு இருபது பேர் என்றோ ஐம்பது பேர் என்றோ நீங்கள் நினைத்தால் ,உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் .நாங்கள் 136 பேர் பெரியவர்களும் ,குழந்தைகளும் ஒரே வீட்டில் ஒன்று கூடி பாரம்பர்ய முறைப்படி பொங்கல் கொண்டாடினோம் .
வேலூர் பக்கத்தில் உள்ள சித்தேரி எனப்படும் சிறிய கிராமம் என் தாத்தாவின் ஊர்.மலைகளும். வயல்களும் சூழ , இயற்கை அழகை அணிந்துக் கொண்ட சின்னஞ் சிறு கிராமம். ஊரின் ஒதுக்குபுறமாக அமைந்துள்ள ஏரி இந்த ஊருக்கு மேலும் வனப்பை சேர்ப்பது. மழை பெருகும் காலங்களில் இந்த ஏரி நிரம்பி , வழிந்து பசுமையை சேர்க்கும். தாத்தாவின் அப்பா ஜாக்கு என்னும் முனியன் என்பவர் வெள்ளையரிடம் பணி புரிந்தவர். இவர் மனைவி சின்னம்மா . அவருக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் .நான்கு மகன்களும் ஒன்றாக வாழும் படி ஒரே வீட்டில் தனித்தனி அறையும், சமையலறைகளும் அமைத்து நூறாண்டுகளுக்கு முன்பே வீட்டை அமைத்தவர் . கூடம் ,நடை என்று பழைய கட்டமைப்புடன் , பெரிய திண்ணை, சின்ன திண்ணை என்று இரண்டு திண்ணைகளுடனும் கட்டப்பட்ட வீடு .
இப்போது ஆறு தலைமுறைகளை காணும் அவ்வீட்டில் ,நான்கு தாத்தாக்களின் குடும்பங்களும் ஒன்றாக வசித்து ,திருமணம் செய்து , குழந்தைகள் பெருகி வாழ்ந்து அவர்களுக்கும் திருமணம் செய்து பேரக்குழந்தைகளை பார்த்து வசித்தனர் .ஊரார் மெச்சும் வண்ணம் ஒற்றுமையுடன், மாறாத பாசத்துடன் வாழ்ந்து வந்தனர். பின்னாட்களில் மாமாக்கள் வேலையின் பொருட்டு வெளியூர்களுக்கு செல்ல , பெரியம்மா சித்திகள் திருமணமாகி செல்ல இறுதியில் என் பாட்டி குடும்பம் மட்டும் 2000 ஆண்டு வரை அங்கு வசித்து வந்தது.
வேலை நிமித்தம் வெளியில் சென்ற மாமாக்கள் ராணுவம் ,வங்கி ,அரசுத்துறை ,ரெயில்வே , இந்திய புலனாய்வுத்துறை என்று பல ஊர்களில் வசிக்கையில் ,எல்லோரும் ஒன்று சேர்ந்து மீண்டும் பொங்கல் விழா கொண்டாட முடிவெடுத்து தம் பிள்ளைகளுடன் 1995 பொங்கலுக்கு சித்தேரி வந்தனர் .
இத்தனை பேர் தங்க என்று கல்யாண மண்டபம் ஏற்பாடு செய்யவில்லை. அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் தங்கி கொணடாடினோம். சமையலுக்கு மட்டும் ஆள் ஏற்பாடு செய்து இருந்தாலும் மாமிகள் , பெரியம்மா ,சித்திகள் , என பெரிய பெண்கள் குழுவே சமையலுக்கு உதவியது .
. இன்னும் ஒரு முக்கிய நோக்கமாக , நம் சொந்தங்கள் யார் யார் ,அவர் என்ன உறவு வேண்டும் என்று இளைய தலைமுறைக்கு தெரிவிப்பதும் வரும் காலங்களில் உறவுச் சங்கிலிகள் அறுபடாமல் காப்பதும் என்று நினைத்து விழாவை ஏற்பாடு செய்தனர் .
முதல் நாள் இரவு அனைவரும் வந்து சேர்ந்ததும் ,ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்வதும் ,பழங்கதைகளை கண்ணீரும் ,மகிழ்சசியுமாக பகிர்ந்துக் கொள்வதுமாக இருந்தது .மறுநாள் காலை பொங்கல் தினத்தன்று ஊரில் உள்ள கோவில்களுக்கு மொத்தக் குடும்பமும் ஒன்றாக சென்று வழிபாடு செய்தனர் .அன்று பெரும் பொங்கல் ஆதலால் ,வீட்டுக் கூடத்தில் மூடி வைக்கப்பட்டு ,பொங்கல் அன்று மட்டும் திறக்கப்படும் கோட்டை அடுப்பு திறக்கப்பட்டு பெரிய பானைகளில் பொங்கலும் ,மேலும் ஒரு பெரிய பானையில் காய்கறி குழம்பும் செய்து படைத்தனர் . என் பாட்டியும் ,சின்ன பாட்டியும் அந்த பொங்கலை வைத்தனர் .
அன்று முழுவதும் ஆட்டம்,பாட்டம் ,கலை நிகழ்ச்சிகள் என்று களை கட்டியது, மாலையில் அனைவரும் கூடத்தில் குழுமி இருக்க , குடும்பத்தில் இறந்து போன பெரியவர்களுக்கு படையல் இடப்பட்டது .அப்போது அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் ,அவர்களின் குணநலன்கள் ,தனித்துவம் பற்றியும் மாமாக்கள் விவரமாக எடுத்துக் கூறினார்கள் .பின்னர் விழாவுக்கு வந்துள்ள ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டது .இந்த பெரிய குடும்பத்தில் நிலவிய அன்பும், பாசமும் ,பெரியவர்கள் செய்த தியாகங்களும் விவரிக்கப்பட்டு, ஒரு பொருள் நிறைந்த பொங்கலாக விழாவை நிறைவு செய்தனர் .
இந்த பொங்கல் விழா நடத்தி 28 ஆண்டுகள் முடிந்து விட்டது. இடைப்பட்ட காலத்தில் பெரிய மாறுதல்கள் குடும்பத்தில் நடந்துள்ளது . அன்று குழந்தைகளாக இருந்தவர்கள் இன்று படித்து, பணியில் அமர்ந்து ,திருமணம் முடித்து பிள்ளைகளை பெற்று உயர்ந்துள்ளனர் . பெரியவர்களில் பலர் இன்றில்லை .பாட்டிகள், அப்பாக்கள் ,மாமாக்கள் ,மாமிகள் .பெரியம்மா ,சித்திகள் பலர் இவ்வுலக வாழ்க்கையில் இருந்து விடுபட்டு வானகம் சென்றுள்ளனர் .
அன்று அத்தனை ஆனந்தமாக விழா கொண்டாடிய நினைவுகள் மட்டும் இப்போது இருப்பவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது .ஒவ்வொரு பொங்கலும் அந்த நினைவுகளை மீண்டும் மனதில் எழுப்புகையில் ,கண்ணில் நீர் துளிர்க்கிறது.
நினைவுகளே வாழ்வின் நிறைவு , அதை அசை போடுவது அலுப்பதே இல்லை , என்றும் ,என்றென்றும் !!
Leave a comment
Upload