தொடர்கள்
அனுபவம்
சிறப்பு தரும் சிறுதானியம் -  மரியா சிவானந்தம் 

20230012210153503.jpg

"Old order changeth, yielding to the new" என்ற சொற்றொடர் எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, நம் உணவு வழக்கங்களுக்கு நிச்சயமாக பொருந்துகிறது. தினம் தினம் புதுப்புது உணவு வகைகள் யூடியூப் போன்ற ஊடகங்கள் வழியாக வந்துக் கொண்டே உள்ளன.

எண்ணெய் ,மசாலா, காரம் மிக்க உணவுகள் நம் உணவகங்களில் பெரிய வரவேற்பைப் பெறுகின்றன. அசைவத்தில் பிரியாணி கடைகள் தெருவெங்கும் முளைத்து விட்டன என்றால், அந்தக் கடைகளை பரோட்டா கடைகள் எண்ணிக்கையில் முறியடித்து விட்டன. குழந்தைகள், இளைஞர்கள் மட்டுமல்ல வயது முதிர்ந்தவர்க்ளும் பரோட்டா ,பிரியாணிக்கு அடிமையாக இருக்கிறார்கள் . ஷவர்மா கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. வடை, பஜ்ஜி போட்ட கடைகள் இன்று பீட்சா கார்னர்களாக உருவெடுக்க, பீட்சா, பர்கர் அமோகமாக விற்பனையாகின்றன. பார்பிகியூ , க்ரில் என்று வித விதமான தயாரிப்பு முறைகளில் சிவப்பு வண்ணம் பூசிய சிக்கன்கள் சுழன்று ,சுழன்று வெந்துக் கொண்டு இருக்கிறது .

LPG என்று அழைக்கப்படும் (Liberalisation, Privatisation, Globalisation) உலகமயமாக்கலும் ,தனியார் மயமாக்கலும் திறந்து வைத்த கதவுகளின் வழியே KFC , Mcdonalds போன்ற நிறுவனங்கள் கையை வீசிக் கொண்டு கம்பீரமாக நுழைந்து, நம் சாப்பாட்டு தட்டில் அந்நிய உணவுகளை பரிமாறின. அந்த பாஸ்ட் புட் ருசியில் மயங்கியவர்கள் ,உடல் நலம் கெடும் போதுதான் விழிப்புணர்வு கொள்கிறார்கள் .அதிக உடல் பருமன்,இதய நோய் ,சர்க்கரை வியாதி , புற்று நோய் என்று விதவிதமான வியாதிகள் பெருகும் போது நாம் விழித்துக் கொள்கிறோம் .

எண்பது, தொண்ணூறு வயதைத் தாண்டி, நோய் எதுவும் அண்டாமல் வாழ்ந்த நம் தாத்தா பாட்டியின் நினைவு நமக்கு வருகிறது. அவர்களின் உணவுமுறை ,வாழ்க்கை முறை நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையில் இருந்து மாறுபட்டு இருந்ததை நாம் உணர்கிறோம் .கடந்த பத்தாண்டுகளில் இது குறித்த சிந்தனைகள் மக்கள் மனதில் தோன்ற , மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மீண்டும் நம் பழைய உணவு முறைக்கு மாற வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைக்கிறார்கள் .அவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறை 'சிறு தானியங்கள்' .

நம் மூதாதையர் கம்பங்கூழ் குடித்து விட்டு காலை முதல் மாலை வரை ஏர் பிடித்து உழுததும் , கேப்பைக்களி சாப்பிட்ட பெண்கள் திட காத்திரமாக வயல் வேலை செய்து , நெல்லு குத்தி ,அம்மி அரைத்து கடின வேலைகள் செய்ததும் நம் நினைவுக்கு வருகிறது. கலோரிகளை எண்ணி சாப்பிடும் நமக்கு , கலோரிகளைப் பற்றி கவலை இன்றி நஞ்சில்லாத இயற்கை உணவு உண்டு, உடல் உழைப்புடன் வாழ்ந்தவர்கள் . அவர்களது ஆரோக்கியத்துக்கு காரணமே அவர்கள் உண்ட சிறுதானியங்கள் தாம் .

கேழ்வரகு ,கம்பு, வரகு ,சாமை ,தினை ,குதிரைவாலி ,சோளம், பனிவரகு போன்ற சிறிய விதைகள் கொண்ட தானியங்கள் எல்லாமே சிறுதானியங்கள் (millets ) என்று அழைக்கப்ப்டுகின்றன . நம் நாட்டுக்கே உரிய சூழலில் , செயற்கை உரங்கள் இன்றி விளைவிக்கப்படும் இவை அரிசி ,கோதுமை போன்ற வழக்கமான உணவுகளை விட அதிக நார்ச்சத்தும் ,பிற சத்துக்களும் கொண்டவை. மாவுச் சத்து இவற்றில் குறைவாக இருப்பதால் ,ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை அளவு குறைவாக , (Low glycemic index ) ஒரே சீராக இருக்கிறது. எனவே மாவுச் சத்தைக் குறைத்து ,கலோரிகளை குறைக்க விரும்பும் அனைவரின் முதல் சாய்ஸ். சிறு தானியங்களில் . கால்சியம், பாஸ்பரஸ் , ட்ரிப்டோன் ,இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால். குழந்தைகளுக்கும் இவை மிகச் சிறந்த உணவு .

சிறுதானியங்களுக்கு உலக அளவில் மிகப் பெரிய விற்பனைக் களம் இருக்கிறது . எல்லா நாடுகளிலும் இயற்கை உணவுகள் மற்றும் சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, ஐக்கிய நாட்டு சபை பிறந்திருக்கும் புத்தாண்டை 'சிறுதானியங்கள் ஆண்டாக 'International Year of Millets -IYM 2023 என்று அறிவித்துள்ளது . ரோமில் 6-12-2022 அன்று ஐ நா வின் உணவு நிறுவனம் இந்த சிறுதானிய ஆண்டை அறிவித்துள்ளது.இந்த விழாவில் இந்திய அரசின் சார்பில் விவசயத்துறை இணை அமைச்சர் சுசிரி ஷோபா கலந்துக் கொண்டு சிறப்பித்தார் ,உடன் ஒரு தூது குழுவையும் அழைத்துச் சென்றார் .

20230012210251201.jpg

இந்தியாவில் விளையும் சிறு தானியங்களில் பெரும் அளவு ராஜஸ்தானில் விளைகிறது .41% தானியத்தை விளைவிக்கும் ராஜஸ்தான் இந்த ஆண்டு ,அகில உலக அளவில் magic millets 2023 என்னும் கூடுகையை இந்தியாவில் நடத்த உள்ளது .மக்களிடையே சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்க இது போன்ற முயற்சிகள் உதவும் .

அரிசி ,கோதுமையில் தயாரிக்கப்படும் எல்லா வித உணவுகளும் சிறுதானியங்களில் தயாரிக்க முடியும். கம்பஞ்சோறு , ராகி இட்லி, தினைப் பொங்கல் ,பாயசம், உப்புமா, இடியாப்பம்,தோசை என்று விதவிதமாக சமைக்க முடியும் . மணமும், சுவையும் அரிசி உணவுகளை விட கூடுதலாகவே இருக்கும்.ஊருக்கு ஊர் பெருகி வரும் இயற்கை உணவகங்கள் புதுப்புது உணவுகளை விறகடுப்பில் சமைத்து விற்பனை செய்கின்றன.உணவுத் திருவிழாக்கள் சிறுதானிய உணவுகளை மக்களிடையே பிரபலமாக்கி வருகின்றன.

பாரம்பரிய சிறுதானிய உணவுகளை உண்டு ,நம் மூதாதையர் நெடுநாள் நோயற்ற வாழ்க்கை வாழ்ந்தனர் . இதய நோயும் ,சர்க்கரை நோயும் அறியாத தலைமுறைகள் இம்மண்ணில் வாழ்ந்து மறைந்துள்ளன . உடல் உழைப்பு குறைந்த, நம் தலைமுறை இந்த நோய்களில் இருந்து தம்மையும் ,தம் சந்ததியையும் காக்க வேண்டும் எனில் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரசும் , மக்களும் இதை ஒரு இயக்கமாகவே நடத்தி சிறுதானியங்களை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் .அரசு சுய உதவி குழுக்கள் சிறுதானிய விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதை காண முடிகிறது .சிறுதானியங்களை விளைக்கும் விவசாயிகளுக்கு மானியம் ஊக்கப்பரிசு தந்து உற்சாகப்படுத்த அரசு முன் வர வேண்டும் .

உணவே மருந்தாகும் உன்னதத்தை சிறுதானியங்கள் நிகழ்த்தும். சிறுதானியங்களை பயன்படுத்துவோம் , உடலை உறுதி செய்வோம் .