தொடர்கள்
கதை
துன்பம் மறந்திடு - பொன் ஐஸ்வர்யா

20221131092616622.jpeg

எண்பதுகளின் இறுதியில் எலக்ட்ரானிக்ஸ் படிப்பு இந்தியாவில் வேகமாய் பிரபலமாகிக் கொண்டிருந்த காலம். பி இ (இசிஇ) படித்தக் கையோடு சிரமம் இல்லாமல், கோயம்புத்தூர் கஜேந்திரனுக்கு ஹைதராபாத்தில் வேலைக் கிடைத்தது. எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் இந்தியா லிமிட்டட் எனும் பொதுத்துறை நிறுவனத்தின் மைக்ரோவேவ் கம்யூனிகேசன் டிவிசனில் இன்ஜினியர் வேலை. முக்கியமான பாயிண்ட் டு பாயிண்ட் தொலைத்தொடர்பு தேவைகளுக்கு மைக்ரோவேவ் யூஎச்எஃப் சிஸ்டங்களை பெரிதாய் நம்பியிருந்த காலகட்டம் அது. இப்போ இருக்கிற ஆப்டிகல் பைஃபரெல்லாம் அப்போது கிடையாது. இசிஐஎல் தயாரித்த மைக்ரோவேவ் கருவிகள் உள்நாட்டில் கனிசமான அளவில் பயன்பாட்டுக்கு வந்திருந்தது.

குறுகிய காலத்திலேயே கஜேந்திரனுக்கு இந்த கருவிகளின் ஸ்தூல சூட்சமங்கள் அத்துப்படியானது. ஆரம்பத்தில் கஜேந்திரனின் திறமையைப் பாராட்டிக் கைதட்டிய கம்பெனி, அப்படியே புதிய புராஜெக்ட்கள் பலவற்றை அவன் தலையில் கட்டியது. அப்படியொரு புராஜெக்ட் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டுதான் ஹைதராபாத்தில் இருந்து நெல்லூர் நோக்கி சார்மினார் எக்ஸ்பிரஸில் பயணித்துக் கொண்டிருக்கின்றான்.

நெல்லூரில் இருந்து கிழக்கே நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் வங்கக் கடற்கரை ஓரமாய் மீனவ கிராமத்தை ஒட்டினாற்போல் “அக்வாகல்ச்சர்” என்னும் இரால் வளர்ப்பு பண்ணை ஒன்று, நூறு ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் எழும்பிக் கொண்டிருந்தது. பாஃர்ம் சைட்டிற்கும் நெல்லூர் ஹெட் ஆபீசுக்கும் இடையில் கம்யூனிகேசன் சிஸ்டத்தை நிறுவிக் கொடுப்பதே கஜேந்திரன் கையில் கொடுக்க்பட்ட புராஜெக்ட்.

நெல்லூரில் இருந்து புராஜெக்ட் சைட் போவது என்பது அவ்வளவு லேசான காரியமாக இல்லை. பெரும்பகுதி தூரம் ஏபிஎஸ்ஆர்டிசி பஸ்ஸில் குலுங்கிக்குலுங்கி சாலைப்பிரயாணம். கடைசி மூன்று கிலோமீட்டர் மண்சாலையில் பாஃர்ம்சைட் ஜீப்புக்காக காத்து நின்று ஒரு வழியாய் வந்து சேர மூன்று மணி நேரம் ஆகி விட்டது. சுற்றுவட்டாரத்தில் கடைத்தெரு என்று எதுவும் கிடையாது. வெட்டவெளியான பொட்டல்காடு. நூறு ஏக்கர் பண்ணையைச் சுற்றிலும் எட்டடி உயரத்தில் வெளிச்சுற்று கம்பிவேலி. வேலிக்கு வெளிப்பக்கம் ஏழெட்டு கூரைக் கொட்டகைகள். அதில் ஒன்று தமிழ்க்கார பெரியம்மாவின் சின்ன மெஸ். வெளியில் இருந்து வருபவர்களுக்கு போஜன அடைக்கலம் இங்குதான்.

இரண்டு மாதம் முன்பு சர்வே பண்ண வந்த போது இங்கே சாப்பிட்ட சுவை இன்னும் நாக்கில் இருக்கிறது. கேட்டிற்க்கு முன்பாகவே ஜீப்பில் இருந்து இறங்கி தமிழ்க்கார பெரியம்மா மெஸ்ஸில் ஆஜர் ஆனான்.

“வணக்கம்மா.. ஞாபகம் இருக்கா..”

“இருக்கு தம்பி .. சாப்பிட்டீங்களா..”

“காலையில சாப்பிட்டேன்.. மத்யானம் வர்ரேன்ம்மா..

நாலு நாள் இங்கதான் வேலை.. சாப்பாடு இங்கதான்..”

“சரிப்பா.. வாங்க..”

லட்சுமிகடாட்க்ஷமான பளிச்சிடும் முகம். மஞ்சள்குளித்த முகத்தில் வட்டவடிவில் கும்குமப்பொட்டு. சற்று தேய்ந்த தேகம். உள்ளுக்குள் மெல்லிதாய் இழையோடும் சோகம். சின்ன கட்டங்கள் போட்ட காட்டன் புடவையை அணிந்திருந்த நேர்த்தியும், கண்களில் தெரியும் தீர்க்கமான நம்பிக்கையும் இவர் ஓரளவு படித்தவராய் இருக்க வேண்டுமென்று பார்த்ததும் எளிதாய்யூகிக்க வைக்கும்.

பத்துக்கு பதினைந்து அடி கீற்றுக் கொட்டகையில் ரெண்டு நீளடேபிள், நாலு பேர் உட்கார்ந்து சாப்பிட ரெண்டு பென்ச், முன்பக்கம் டிராயர் வைத்த சின்ன டேபிள், அதற்குப் பின்னால் கையில்லாத ஒரு பழைய சேர், சேரில் ரெண்டு பட்டனும் ஒரு ஊக்கும் போட்ட பழுப்பு நிற அரைக்கை சட்டையனிந்தப் பெரியவர். முகம் நிறைய ஒழுங்கில்லாமல் வளர்ந்திருந்த தாடி. சர்வசதா காலமும் கூறையில் குத்திட்டு நிற்க்கும் கண்கள். பெரியம்மாவின் வீட்டுக்காரராக இருக்க வேண்டும். ஒரு வார்த்தைப்பேசிப் பார்த்ததில்லை. என்னப் பிரச்சனையோ பாவம். சித்தபிரம்மைப் போல் தெரிந்தாலும் சாப்பிட்டவர்களிடம் கரெக்டாய் கணக்குப் பார்த்து, குண்டுகுண்டாய் எழுதிக் கூட்டிப்பார்த்து காசு வாங்கி கல்லாவில் போட்டு விடுவார். பெரியவருக்கு கஜெந்திரனை அடையாளம் தெரியவில்லை.

பாஃர்ம் சைட்டுக்கு ஹைதராபாத்தலிருந்து உபகரணங்கள் போன வாரமே வந்து இறங்கி விட்டது. பிசிகல் இன்ஸ்டலேஷன் செய்ய கம்பனி ஆட்கள் இரண்டு பேர் முன்னதாகவே வந்திருந்தார்கள். வந்தவர்கள் மளமளவென்று வேலையில் முழுமூச்சாய் இறங்கி, பெட்டிகளைப் பிரித்து “பேரபாலிக்” ஆண்டெனாவை முப்பதடி மாஸ்டில் ஏற்றியிருந்தார்கள். வேவ்கைட் டிரம்மை உருட்டிப் பிரித்து ஹோயிஸ்ட் பண்ண தயாராகிக் கொண்டிருந்தது.

“யப்பா .. நெளிவு விழாமல் ஜாக்கிரதையா ஏத்துங்கப்பா.. வேவ்கைடுல டெண்ட் விழுந்தா சிக்னல் வராது.. நாய்ஸ்தான் வரும்..”

தமிழில் அவன் சொன்னதை புரிந்து கொண்டு “அவணண்டி” என்று தெலுங்கில் ஆமோதித்தார்கள்.

சைட் ஆபீஸ் மொத்தமும் ஒரு பெரிய ஸ்டீல் பேப்ரிகேட்டட் ஷெட்டில் அமைந்து இருந்தது. முன்பகுதியில் சைட் மேனேஜர் கேபினுக்கு பக்கத்தில் ஒயர்லெஸ் உபகரணங்களுக்காக ஒதுக்கப்பட்ட கேபின். எக்குப்மெண்ட் இன்ஸ்டலேசன் நடந்து கொண்டிருந்தது.

தன் கேபினிலிருந்து சைட் மேனேஜர் சங்கரன் எட்டிப் பார்த்தார். ஏற்கனவே வந்த போது அறிமுகமானவர்.

“ஹாய் .. கஜேந்திரன் ஹவ் ஆர் யூ.. இப்பதான் வந்தீங்களா ?”

“ஆமா சார்.. “

“இந்த வாரம் வேலை எல்லாம் முடிச்சு லைன் த்ரூ பண்ணிடுவீங்களா..

சேர்மென் கேட்க சொன்னார்..”

“மோஸ்ட்லி முடிச்சிடலாம்..”

“ரெண்டு மாசத்துல புராஜெக்ட் வேலைகள நிறைய புராக்ரஸ் ஆகிருக்கு.. அடுத்த மாசம் முதல் வாரத்திலேர்ந்து எக்ஸ்போர்ட் ஆரம்பிக்னும்னு டார்கெட்..”

“ஓ.. அப்படியா..நைஸ்..”

“பின் பக்கம் ப்ராஸஸிங், பேக்கிங் யூனிட்டெல்லாம் ரெடியா இருக்கு பாருங்க..”

“வீ வில் ட்ரை சார்..”

மத்தியானம் இரண்டு மணி உச்சி வெயில். பசி கிள்ளியது. தமிழ்க்கார பெரியம்மா மெஸ்ஸில் ரெண்டு பேர் இலையை போட்டு சாதத்திற்காகக் காத்திருந்தார்கள். கஜேந்திரன் மூன்றாவதாக சேர்ந்து உட்கார்ந்தான். கூட்டு பொரியல் சகிதம் சுடச்சுட சாதம் கொண்டு வந்து பொறுமையாக பெரியம்மா பரிமாறினார். ஆந்திரா பப்புபொடி நல்லெண்ணைய் சாம்பார் ரசம் மோரென வரிசையாய் கட்டிவிட்டு இலையை எடுத்து வெளியே போட போகும் போது (சாப்பிட்டவர்கள் தாங்களே இலையை எடுக்க வேண்டும்) அங்கே பெரியவரைக் காணவில்லை. இருந்திருந்தால் ரசம் ஒழுக இலை எடுப்பதைப் பார்த்து முறைத்திருப்பார். கையை அலம்பி விட்டு காசு கொடுக்க கல்லா பக்கம் வந்து,

“அம்மா.. எங்க பெரியவரைக் காணும்?” என்றான்

பதட்டத்தோடு பெரியம்மா வெளியே ஓடி அங்கும் இங்கும் பார்த்துவிட்டு கையை பிசைந்தபடி உள்ளே வந்தாள்.

“வேலு... ஐய்யாவ காணும் .. எங்கண்ணு ஓடிப்பாரு..” என்றாள்.

அங்கிருந்த எல்லோருமே வெளியே ஓடி தேட, கொஞ்ச நேரத்தில் வேலு பெரியவரை கையைப் பிடித்து மெதுவாய் அழைத்து வந்தான்.

“அம்மா.. திரும்பவும் கிணறு பக்கம் போயிட்டாரு.. ஓடிப் போய் பின் பக்கமா பிடிச்சிட்டேன்..”

அவிழ்ந்த வேட்டியைப் பிடித்துக் கொண்டு மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றார் பெரியவர். பெரியம்மா எதுவும் பேச வில்லை.. கையைப் பிடித்து கல்லாவில் உட்கார வைத்து, “காச வாங்கிப் போடுங்க” என்று சொல்லி விட்டு சமையலை கவனிக்க உள்ளே போய் விட்டாள்.

கஜெந்திரனுக்கு எதுவும் புரியவில்லை. வெளியே வந்த போது வேலு தென்பட்டான். என்ன நடந்தது என்று கண்ணால் கேட்டான்.

விறகு உடைப்பதற்கும் தண்ணீர் கொண்டுவருவதற்கும் தான்தான் பெரியம்மாவுக்கு ஒத்தாசை என்ற அறிமுகத்தோடு வேலு ஆரம்பித்தான்.

“வீடு வாசல்னு நல்லா ஓகோன்னு வசதியா வாழ்ந்தவங்கதான் சார்... ஏதோ போராத காலம் ஆக்ஸிடெண்ட் ஆகிடிச்சாம். பெரியவருக்கு தலையில அடிபட்டு மூளை பெரிய அளவில பாதிச்சிடிச்சு. வீடு வாசல் உறவுகாரங்க யாரையும் அடையாளம் தெரியாம கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டார். அஞ்சாறு வருசம் ஒத்தையில பெரியவரை காப்பாத்த போராடியிருக்காங்க இந்தம்மா. பெரியவர் கொஞ்சம் மீண்டு எழுந்து நடமாட ஆரம்பிக்கிறதுக்குள்ள வைத்திய செலவுக்கே மொத்த சொத்துபத்தெல்லாம் கரைஞ்சு போயிடிச்சாம்... சொத்து போனதும் இப்போ உறவுகாரங்களுக்கு இவங்கள அடையாளம் தெரியாம போயிடுச்சு.. வேற வழியில்லாம இந்தம்மா பெரியவரை இழுத்துகிட்டு இரண்டு வருஷம் முன்னடி இந்த பக்கம் வந்துடிச்சு. வைராக்யமா சொந்தபந்தம் கண்ணுல படாம இந்த மெஸ்ஸ நடத்தி கிடைக்கிற காசை வச்சு பெரியவரை பார்த்துகிறாங்க..” என்று சொல்லி முடித்தான்.

விரைந்து வேலைகளை முடித்து அடுத்த நாளே இரண்டு முனைகளில் பவர் ஆன் செய்தாயிற்று. மதியம் சாப்பிட போன போது நீங்க “ஹைதராபாத் இன்ஜினீயரா.. உங்களுக்கு “பிசிஓ”வில் கால் வந்தது. இந்த நம்பரில் பேசச் சொன்னார்கள்” என்று மெஸ்க்கு ஒட்டிய பெட்டிக்கடைகாரர் ஒரு துண்டுச் சீட்டை நீட்டினார்.

“வில்லேஜ் வில் போன் வேலை செய்யுதா..?” - கஜேந்திரன்

“இன்னிக்கு காலையிலதான் சார் ரொம்ப நாள் கழிச்சு மணியடிச்சுது..”

அவனது டீம் ஹெட் டிஜிஎம் நம்பர் .. எப்படி கூப்பிடுவது என்று யோசிக்கும் போதே மீண்டும் மணியடித்தது. உங்களுக்குதான் என்று நீட்டினார்கள்

“ஹலோ.. “

“கஜேந்திரன்.. நான் டிஜிஎம் பேசுறேன்.. வேலை எவ்வளவு முடிஞ்சுருக்கு.. அந்த பாஃர்ம் ஃபாக்டரி சேர்மன் நம்ம சேர்மனை பார்க்க இங்க வந்திருக்கார். மினிஸ்ட்டர் அப்பாயிண்மென்ட் கிடைச்சிருச்சாம்.. உடனே வேலையை முடிங்க.. வர்ர திங்கட்கிழமை இனாகரேஷன் வைக்கணும்ணு சொல்றார்..”

“இப்பதான் லோகல் டெஸ்ட் முடிஞ்சுது சார்..

த்ரூ டேஸ்ட் எடுக்கணும்.. நாளைக்கு ஸ்டேடஸ் சொல்றேன்..”

“ஓகே.. சரி சரி.. ஃபாஸ்ட்டா முடிப்பா..”

உரத்த தொலைபேசி உரையாடல் கூடியிருந்த அனைவருக்கும் கேட்டது.

“சார் ஆச்சர்யமா இருக்கு.. ஹைதராபாத்லேர்ந்து இந்த பொட்டலுக்கு போன் கால் வருதா..?”- பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டவர் கேட்டார்..

கஜேந்திரன் வெறுமனே தலையாட்டினான்.. தலைக்குள் பிரஷர் கூடியது.

அன்று மாலையே ஆண்டனா ஓரியண்டேசன் முடித்து த்ரூ டேஸ்ட் பார்த்தால் சிக்னலைக் காணோம். இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. என்ன பிரச்சனையாக இருக்கும். ஓரியென்டேசன் கோளாறா, லைன் ஆப் சைட் கிளியரா இல்லையா .. வேவ்கைட் விரிசலா .. என்ன பிரச்சனை எங்கே பிரச்சனை.. என்று மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்தது.

விடிந்ததும் விடியாததுமாய் நெல்லூருக்கு ஆளை அனுப்பி மீண்டும் ஓரியண்டேசன் மீண்டும் டெஸ்ட் எடுத்ததில் ரிசீவ் லெவல் நாற்பது டிபி குறைவாய் காட்டியது. இது வேலைக்காகாது. சரியாக ஒரு மணிக்கு டிஜிஎம் பிசிஓவில் வந்தார். விபரத்தைச் விளக்கிச் சொன்னதும் பதட்டமானார். சர்வே ரிப்போர்ட்டை சரிபார்த்து விட்டு மீண்டும் அழைப்பதாய் சொன்னார்.

சாப்பிட உட்கார்ந்த போது மணமணக்கும் சாம்பார் மீது நாட்டம் போகவில்லை. கஜெந்திரனின் பதட்டம் அங்கிருந்த எல்லோரிக்கும் தெரிந்தது. எல்லோரும் அமைதியாய் வேடிக்கைப் பார்த்தார்கள்.

சாப்பிட்டு நூறு ரூபாயை நீட்டியதும் கோபப்படாமல் பெரியவர் பாக்கி ரூபாய் தாள்களை நிதானமாய் எண்ணிக் கையில் கொடுத்தார். அதை அப்படியே வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வெளியே வந்த போது , டிஜிஎம் பிசிஓ போனில் காத்து இருந்தார். “சர்வே ரிப்போர்டெல்லாம் சரியாத்தான் இருக்கிறது கஜேந்திரன், வேறு என்ன பிரச்சனைன்னு பாருப்பா.. யாராவது உதவிக்கு அனுப்பட்டுமா? இரண்டு நாள்ல சிஸ்டம் வேணும்ணு கிளையன்ட் அர்ஜென்ட் பண்றாங்க” என்றார்.

மீண்டும் பொறுமையாய் பாரக்க வேண்டும். தலையை வலித்தது. ஒரு குட்டி தூக்கம் தேவைப்பட்டது. தூங்கி விட்டான். தூங்கியெழுந்து முகம் கழுவி வந்த போது துண்டு காகிதம் ஒன்று கீழே கிடந்தது. அதில் “ஆண்டெனா டைப்போல் பொஸிஷன் போஃகல் பாயிண்டில் இருக்கிறதா பார்..” என்று எழுதியிருந்தது.

ஐயோ.. இதை கவனிக்கவில்லையே. பவர் ஆஃப் பண்ணிட்டு உதவியாளர் ஒருவரை மாஸ்ட் மேல் ஏறி பார்க்கச் சொன்னான்..

“ஆமா சார் தப்பாதான் இருக்கு” - மேலிருந்து குரல் வந்தது.

ஐந்து நிமிடத்தில் அலன்கீ எடுத்து போய் சரி செய்து கீழிரங்கி பவர் ஆன் பண்ணியதும் சிக்னல் லெவல் பட்டென்று உயர்ந்தது. அன்று மாலையே லின்க் த்ரூ ஆகி சிஸ்டம் ஜோராய் வேலை செய்ய ஆரம்பித்தது. டிஜிஎம்மை தொடர்புகொண்டு செய்தியை சொன்ன போது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

“இதை எப்படி கண்டுபிடித்தாய்” என்றார்..

“நீங்க அனுப்பிய மெசேஜ்ல சொலூஷன் வந்ததா நினைத்தேன்..”

“நான் எதுவும் அனுப்பலையே..”

அப்போ யார் எழுதிக் கொடுத்தது.. மீண்டும் அந்த துண்டுக் காகிதத்தை தேடி எடுத்துப் பார்ததான்.. நம்ப முடியாத ஆச்சர்யமாக இருந்தது.

மதியம் சாப்பிட போன போது தமிழ்க்காரப் பெரியம்மாவிடம் காகிதத்தைக் காட்டினான். பெரியம்மா கண்டும் காணாததாய் சாப்பாடு எடுத்துக் கொண்டிருந்தாள்..

“குண்டு குண்டாய் பெரியவர் கையெழுத்துதானே.. நேற்று சில்லரையோடு சேர்த்து இந்த காகிதத்தை என் கையில் திணித்திருக்கின்றார்.. உண்மையைச் சொல்லுங்கள்.. பெரியவர் யார்” என்றான்.

கையெடுத்து கும்பிட்டாள்.. கண் கலங்கியது..

“வேண்டாம் தம்பி .. பழச மறந்தாச்சு..”

“இல்லை பெரியம்மா.. இவர் ஒரு ஜீனியஸ்..”

“அவர் சீனியர் மேனேஜரா ஹைதராபாத்ல இருந்தப்போ ஆக்ஸிடெண்ட் ஆகி...”

“ஆங்.. போதும்.. புரிந்து விட்டது..”

கல்லா மேஜையில் பெரியவரைப் பார்த்தான்.

“பிதாமகனே நன்றி ஐயா” - கஜேந்திரன் கைகூப்பினான்.

பெரியவர் பதிலேதும் பேசவில்லை.. வழக்கம் போல் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.