மணி சரியாக காலை பத்து. அந்தத் தனியார் வங்கிக்குள் நுழைந்த மேகலாவை மூன்று பேர் ஓடி வந்து வரவேற்றனர். அவளுக்கு 'பிரமாண்டமாய்' நகைக் கடையில் நுழைந்ததைப் போன்ற பிரமை ஏற்பட்டது. அவள் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். ' ஒன்றுமில்லை, உங்கள் வங்கியில் ஒரு கணக்கு துவங்க வேண்டும், அவ்வளவு தான்' என்றாள். ' அதற்கென்ன , உடனே துவங்கி விடலாம்' என கோரஸாக மூவரும் உரைத்தனர். ' எந்த வங்கி காசோலையானாலும் கொடுங்கள். மறு நாளே க்ளியர் ஆகி விடும்' என்று சொன்னார் மூவரில் ஒருவர். ' அதெப்படி அரசு வங்கியில் மூன்று நாட்கள் ஆகிறதே, காசோலையுடன் கூடவே ரிசர்வ் வங்கிக்கு போவீர்களா?' என்று மேகலா நகைச்சுவை இழையோடக் கூறியதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
' மேடம், உங்களுக்கென்ன, நாளையே க்ளியர் ஆகி விடும்' என்று முன்பு சொன்னதை மீண்டும் உறுதிபடக் கூறினார்கள். பின் அவள் தன் ஆதார் கார்டை கொடுத்தவுடன் ஒருவர் தன்னுடைய கைப்பேசியிலேயே புகைப்படம் எடுத்துக் கொண்டார். அடுத்து விண்ணப்பப் படிவம். அறுபது வயதான மேகலா தன் கண்ணாடியைப் போட்டு, படிக்கத் தொடங்க, ' மேடம், சிரம ப்படாதீங்க, கையெழுத்து மட்டும் போடுங்க,' என்று சொல்ல, நிச்சயம் அந்தப் பொடி எழுத்துக்களை ( ஏன் அனைத்து முக்கியப் படிவங்களும் பொடி எழுத்துக்களை கொண்டுள்ளன என்பது அவளின் வெகு நாள் ஐயம்) தன்னால் படிப்பது கடினம் என்று உணர்ந்த மேகலா கையெழுத்திட்டாள்.
' செக் புக் இன்னிக்கு கிடைக்குமா?' என்று மேகலா வினவ, ' ஒய் நாட்?' , என்றார்கள். 'அது எப்படி ? நாளைக்கு தானே செக்கே க்ளியர் ஆகும்?' என்று மேகலா கேட்க, சற்றே அசடு வழிந்தனர்.' ஆமாம், நாளை காலை நானே வீட்டில் வந்து தருகிறேன்' என்று ஒருவர் சொல்ல, அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
' அவசரத் தேவைக்கு ஒரு செக் புக்குக்காக , அரசு வங்கியில் நாயாய், பேயாய் அலைந்தது நினைவுக்கு வர , இங்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஒவ்வொன்றும், அதுவும் அரச மரியாதையுடன், நடப்பதை அறிந்து ஆச்சரியத்துடன் ஒரு கணிசமான தொகையை எழுதிய அரசு வங்கிக் காசோலையை கொடுத்தாள். ' ' காசோலையை வாங்கிப் பார்த்த நபர் , அதிலிருந்த வங்கியின் பெயரைச் சொல்லி ' ' மேடம், நீங்க அந்த வங்கியிலிருந்து இன்னும் கூட எங்கள் வங்கிக்கு ட்ரான்ஸ்பர் செய்யலாம்' என்று கேட்க, மேகலா ' பார்க்கலாம்' என்று முடித்துக் கொண்டாள்.
'மேடம், அப்புறம், எங்கள் வங்கிக் கணக்கில் மினிம ம் பேலன்ஸ் இருபத்தைந்தாயிரம் இருக்க வேண்டும் ' என்றனர். ' ஆறாயிரம் தானே இருந்தது, எப்ப ஏத்தினீங்க?' என்று கேட்க, ' மேடம், கொரோனாவில ஏத்திட்டோம்' என்றனர். ' என்னப்பா, உலகம் முழுவதும் இவ்வேளையில் சலுகை கொடுக்கும் போது நீங்க ஏத்தினது கஸ்டமருக்கு சிரமமில்லையா?' ' என்று வினவிக் கொண்டே ' எனக்கு அந்த பிரச்சினை இல்ல, நான் சீனியர் சிட்டிசன், கணக்கில் 5000 இருந்தால் போதும், படித்து விட்டுத் தான் வந்திருக்கேன்' என்று சொல்ல, இரண்டாம் முறையாக அசடு வழிந்தார்கள். ' மேடம் , உங்களப் பார்த்தா அறுபது வயசுன்னு சொல்ல முடியல, அது தான்' என்று ஒருவர் சமாளிக்க, ஆதார் கார்டை அவள் நீட்டினாள்.
மறுநாள் அவர்கள் சொன்னது போல், செக் க்ளியரான விவரம் கைபேசியில் வர, மேகலா அவர்களுக்காக காத்திருக்காமல் தானே வங்கிக்கு சென்றாள். உடனே செக் புக் கொடுத்தார்கள். ஆனால் அதில் வேறு கிளையின் பெயர் இருந்தது. ' ஐயோ!' என்று அவள் அலற, ' மேடம், நீங்கள் எங்களின் எந்தக் கிளையில் வேண்டுமானாலும், இந்த புக்கை கொடுக்கலாம்' என்றனர். மேகலா ' இல்லை, வங்கி விவரங்களை எங்கள் அலுவலகத்தில் கொடுக்கலாம் என்றிருக்கிறேன், அவர்கள் செக் புக்கில் இருக்கும் கிளைக்கு தான் அனுப்புவார்கள்' என்று அவள் பணி ஓய்வு பெற்ற பொதுத் துறை நிறுவனத்தின் பெயரையும் சொன்னவுடன் அவர்கள் திருதிருவென விழித்தனர். ' மேடம், இந்த கிளையின் புக் மும்பையிலிருந்து வர ஒரு வாரமாகும், அதனால் தான், ' என்று இழுத்தனர்.
சரியென்று சொல்லிவிட்டு, 5000 ஐ மட்டும் சேமிப்பு வங்கியில் வைத்து விட்டு , மீதியை வைப்புக் கணக்கில் போட்டு விட்டு கிளம்பிய போது வங்கி அலுவலர் ' இந்தாருங்கள் மேடம்' என்று ஒரு அட்டையைக் கொடுத்தார். ' என்ன இது?' என்று மேகலா கேட்க, ' இது டெபிட் கார்ட், வாங்க மேடம், இப்போதே மெஷினில் பாஸ்வேர்ட் க்ரியேட் பண்ணிடலாம் என்று கை பிடித்து இழுக்காத குறையாக அழைத்துச் சென்றார் அவர். அசுர கதியில் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும் அதிசயங்களைக் கண்ட மேகலா, ' நான் டெபிட் கார்டு கேட்கவில்லையே!' என்று மறுக்க, ' மேடம், இங்கு எல்லாம் ஆட்டமேட்டிக்' என்று புன்னகைத்தார் அந்த அலுவலர். அவளால் முயன்றும், தான் டெபிட் கார்டு வாங்க அரசு வங்கிக்கு அலைந்த தை நினைக்காமல் இருக்க முடியவில்லை. சற்றே நெகிழ்வுடன் அவர்களை பாராட்டவும் செய்தாள்.
வங்கியிலிருந்து மேகலா, வீட்டிற்கு கிளம்பினாள். ஊபரில் அமர்ந்தவுடன் கைப்பேசியில் அறிவிப்பு ஒலிகள் வந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து அந்த தனியார் வங்கியிலிருந்து அவளின் கைபேசிக்கு வரிசையாக குறுஞ்செய்திகள் வரத் தொடங்கின.
'மொபைல் ஏப்பை உடனே டவுன்லோட் செய்யவும்', 'நெட் பாங்கிக்குக்கு இந்த கோட் ஐ பயன்படுத்தவும்', டைனிங், ஷாப்பிங்குக்கு எங்கள் வங்கி டெபிட் கார்டை யூஸ் செய்யவும்' என்பது போன்று பத்துக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் அவள் கைபேசியின் செய்திப் பெட்டியை நிரப்பின.
அவற்றில் ' உங்கள் கோரிக்கையின் படி ஸ்டேட்மெண்ட் பதிவிறக்கிக் கொள்ளலாம், பொருத்தமான கட்டணங்கள் வசூலிக்கப்படும்' என்ற செய்தி மட்டும் அவளைக் குழப்பியது.' நாம் எப்போது அப்படி ஒரு கோரிக்கை கொடுத்தோம்?, ஒருவேளை படிவத்தில் இருந்திருக்குமோ!' என்று யோசித்த வேளையில் வந்து விழுந்த மற்றுமொரு குறுஞ்செய்தி அவளை பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
'உங்கள் கோரிக்கைப் படி ' வங்கி எண் *****ல் மாதம் இரண்டாயிரத்திற்கு ஒரு தொடர் வைப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது, தாங்கள் மாதம் தோறும் தவறாமல் மேற்படி கணக்கிற்கு பணத்தை அனுப்பி விடவும்' என்று வந்த குறுஞ்செய்தியைப் படித்தவுடன் ஆடிப் போனாள், மேகலா.
அதைப் பற்றி விசாரிக்க, வங்கியைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முனைந்தால், ' கஸ்டமர் கேரைத் தொடர்பு கொள்ளவும்' என்று முடித்தார்கள். கஸ்டமர் கேர் எண்ணைத் தொடர்பு கொண்டால், அது டில்லி, மும்பை, கல்கத்தா என எல்லா நகரங்களையும் சுற்றி சுற்றி வந்து நாலைந்து இந்தி வார்த்தைகள் கற்றுக் கொடுத்ததே தவிர, அவள் பிரச்சினை முடிவுறவில்லை. ஒன்றை அழுத்தி, இரண்டை அழுத்தி ,இப்படியே ஒன்பது வரை அழுத்தி விரல்கள் தேய்ந்த து தான் மிச்சம்.
மறு நாள் , வங்கிக்கு நேராகச் சென்றாள். பதட்டத்துடன், ' நான் எந் த தொடர் வைப்புக் கணக்கும் வைக்க சம்மதிக்கவில்லையே, நான் கையெழுத்திட்ட விண்ணப்ப படிவத்தில் நீங்களாக டிக் செய்துள்ளீர்களா?' என வினவ, ' அதெல்லாமில்லை, மேடம், தொடர் வைப்புக் கணக்கை நீங்கள் தொடங்கினால் மட்டுமே சேமிப்புக் கணக்கே தொடங்க முடியும். சிஸ்டம் அப்படி தான் அமைக்கப் பட்டுள்ளது.' என்றனர். (இங்கு சிஸ்டம் என்பது கணிணியைக் குறிக்கும்.)
' என்ன சிஸ்டமோ!' என்று அவள் முணுமுணுத்துக் கொண்டாள். ( இது தனியார் வங்கியின் சிஸ்டம்). ' அதை, நாங்க பாத்துக்கிறோம், உங்களுக்கு இந்த கணக்கு வேண்டாம், அவ்வளவு தானே?' என்று அலுவலர் சொல்ல, ' சரி,க்ளோஷர் பார்ம் கொடுக்க, நான் சைன் பண்றேன்' என்று சொன்னாள், மேகலா. அந்த அலுவலர் புன்னகைத்தார். நாங்களே க்ளோஸ் பண்ணிடுவோம், அதுவும் ஆட்டமாடிக் தான் இங்கு, நீங்க போகலாம், மேடம்' என்றார். அவளுக்கு எப்படி இது சாத்தியம் என்று புரியவில்லை. தனியார் வங்கியில் அனைத்தும் சாத்தியம் போலும். மீண்டும் ஒருமுறை தொடர் வைப்புக் கணக்கை க்ளோஸ் செய்வதை உறுதி செய்து கொண்ட அவள், சற்றே நிம்மதி அடைந்தாள்.
பணி ஓய்வால் கிடைத்த ஓரிரண்டு கணிசமான பண வரவுகள் , அவளின் வங்கிக் கணக்குக்கு வந்தன. அவை வரும் போதும், அவற்றை அவள் எடுக்கும் போதெல்லாம் கணக்கிலிருந்து பொருத்தமில்லாத கட்டணங்கள் பிடிக்கப்பட்டன. அது குறித்து விசாரித்த போது ' மேடம், இங்கு வரவுக்கும், அதை பெறுவதற்கும் கட்டணம் உண்டு' என்றனர். வங்கி பரிவர்த்தனையில் இவையிரண்டும் தானே முக்கியமாக நடைபெறும் என்று நினைத்தவளாய், வங்கியிலிருந்து கிளம்பினாள்.
பின், ஒரு வருட முடிவில் வைப்புக் கணக்கை முடித்துக் கொண்டு மினிமம் பேலன்ஸ் ரூ5000ஐ மட்டும் சேமிப்புக் கணக்கில் வைத்து விட்டு வந்தாள். ஓரிரு மாதங்கள் கழித்து தற்செயலாக பார்த்த போது ஸ்டேட்மெண்டில் ரூ 1500 பிடித்தம் செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. மினிமம் பேலன்ஸ் குறைந்து விடுமே என்று அலறி அடித்துக் கொண்டு வங்கிக்கு ஓடினாள் மேகலா. ' எதற்காக பிடித்திருக்கிறீர்கள்?, இதனால் பேலன்ஸ் குறைந்து விடுமே' என்று பதட்டத்துடன் மேகலா கேட்க, ' அதற்குத் தான், மேடம்' என்றனர். ' புரியும்படி சொல்லுங்க! ' என்று அவள் வினவ, ' எங்கள் வங்கியில் இப்போது சீனியர் சிட்டிசன் கணக்குகளுக்கு மினிம ம் பேலன்ஸை 6000 ஆக உயர்த்தி விட்டோம். அது உங்கள் கணக்கில் இல்லாத தால் கட்டணமாக ரூ1500 பிடித்துள்ளோம்' என்றனர். ' காரணம்?, மீண்டும் கொரோனாவா? ' என்று அவள் வினவ , ' ஆமாம், இரண்டாம் அலை' என்றனர். அவள், ' பிறந்த நாளுக்கும், திருமண நாளுக்கும் வாழ த்து செய்திகளாக அனுப்பும் நீங்கள் இதனை ஏன் தெரிவிக்கவில்லை?' என்று குரலில் கோபத்தை வரவழைத்துக் கொண்டு அவள் கேட்ட கேள்விக்கு அவர்கள் பதிலளிக்காவிட்டாலும், அவளுக்கு புரிந்தது. அப்போது தானே ரூ 1500 கணக்கிலிருந்து எடுக்க முடியும்? ஒரு கணக்கிற்கு 1500 என்றால், அவளுக்கு சந்தேகமறப் புரிந்தது.
' ஒரு க்ளோஷர் பார்ம் கொடுங்கள்' என்றாள். தானே நிதானமாகப் படித்து பூர்த்தி செய்து கொடுத்து , முடிவடைந்த கணக்கிலிருந்த ரூ 3500 ஐ எடுத்துக் கொண்டு திரும்பினாள். மறு நாள் தன் வழக்கமான அரசு வங்கியில் நுழைந்து கவுன்டரில் இருந்த பெண்ணிடம் ' மேடம், ஒரு வித்ட்ராயல்' என்று சொல்ல புன்னகை மறந்த அவள் 'இந்தாங்க, டோக்கன் முப்பத்தைந்து, அங்க போய் உட்காருங்க ' என்று தலை நிமிராமல் ஒரு டோக்கனைக் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டு அமர்ந்தாலும், காரியங்கள் கச்சிதமாக நிறைவேற எந்த மன உளைச்சலும் இல்லாமல் மன நிறைவுடன் வீடு வந்து சேர்ந்தாள்.
தொலைக் காட்சியை தற்செயலாக நோக்க , அதில் அப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த முதன்மை அமைச்சரின் நல்லெண்ண உரையில் ' நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தனியார் துறைகளை அவமதிக்கும் போக்கை நான் இனியும் அனுமதிக்க மாட்டேன்' என்னும் வரிகளைக் கேட்டு மேகலா புன்முறுவல் பூத்தாள்.
--------
'
Leave a comment
Upload