விகடகவி வெளியாகும் இந்த தினத்தில் 31-ம் தேதி 2022-ம் ஆண்டு ஓய்வுபெறுகிறது.
நாளை முதல் 2023 என்ற எண்ணை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
2022 கொஞ்சம் லேசாக திரும்பிப் பார்ப்போம். இது முழுமையானது அல்ல. ஆங்காங்கே அந்தந்த மாதத்தில் நினைவில் வந்தவை மட்டுமே.... ஒவ்வொருவருக்கும் 2022 அழுத்தமாக ஏதெனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தித் தான் சென்றிருக்கும்.
ஆண்டுகள் என்பது ஞாபகக் கணக்கு தானே.......
ஜனவரி
கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
முதுபெரும் கல்வெட்டு மற்றும் தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி மரணம்.
பிப்ரவரி
வைணவ மத பெரியவர் ராமானுஜரின் 216 அடி உயரம் கொண்ட பஞ்சலோக சிலையை ஐதராபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மரணம் .
19-ம் தேதி: தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் 21 மாநகராட்சி, பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக படுதோல்வி தழுவியது.
மார்ச்
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், சுழல்பந்து வீச்சில் மாயாஜால மன்னன் என புகழப்பட்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே, தனது 52வது வயதில் மரணமடைந்தார்.
10-ம் தேதி: உ.பி, உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பஞ்சாப் மாநிலத்தில் முதன்முறையாக கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
13-ம் தேதி: 133 பயணிகளுடன் சென்ற சீன விமானம் மலைமீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் அனைவரும் உயிரிழந்தனர்.
20-ம் தேதி: இந்தோனேசியாவின் மலாங் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல்
27-ம் தேதி: தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற அப்பர் சுவாமிகள் தேர் திருவிழாவில், தேரின் மேல்பகுதி உயர் அழுத்த மின்கம்பி மீது உரசியதில், தேரில் இருந்த 12 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியாகினர்.
மே
13-ம் தேதி: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபி ஆட்சியருமான ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யாகி, தனது 73-வது வயதில் மரணம் அடைந்தார்.
18-ம் தேதி: இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும் இதே பிரிவை பயன்படுத்தி, ஓரிரு மாதங்களில் நளினி உள்ளிட்ட பலரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஜூன்
8-ம் தேதி: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் சின்ஷோ அபே, தேர்தல் பிரசாரத்தின்போது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
12-ம் தேதி: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. பின்னர், ஓரிரு மாதங்களில் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்று வளர்க்கின்றனர். இப்பிரச்னை பூதாகரமாக வெடித்து, பின்னர் தாமாகவே ஓய்ந்தது.
24-ம் தேதி: தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் மாலனுக்கு அறிவிக்கப்பட்டது.
ஜூலை
11-ம் தேதி: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தின் உச்சகட்டமாக நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளராக முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்தாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்தனர். இதில் ஏற்கெனவே கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
17-ம் தேதி: இந்தியாவில் 200 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.
25-ம் தேதி: இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக, முதன்முறையாக ஒடிசாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு பொறுப்பேற்றார்.
28-ம் தேதி: மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதில் இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்
ஆகஸ்ட்
11-ம் தேதி: இந்தியாவின் 14-வது குடியரசு துணை தலைவராக, குஜராத் மாநில கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவியேற்றார்.
18-ம் தேதி: தமிழ் கடல் என போற்றப்பட்ட பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன், தனது 77-வது வயதில் நெல்லையில் மரணமடைந்தார்.
செப்டம்பர்
7-ம் தேதி: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை எனும் பாரத் ஜோடோ பாதயாத்திரையை துவங்கினார்.
8-ம் தேதி: இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு காரணமாக, தனது 96வது வயதில் மரணமடைந்தார். இவர் இதுவரை தனது வாழ்நாளில் வின்ஸ்டன் சர்ச்சில் முதல் இறுதியாக பதவியேற்ற லிஸ்டிரஸ் வரை 17 பிரதமர்களை பார்த்துள்ளார் எனக் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றார்.
30-ம் தேதி: கல்கியின் சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்', மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது.
அக்டோபர்
10-ம் தேதி: தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஶ்ரீ விருது பெற்ற பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், சென்னையில் தனது 94வது வயதில் காலமானார்.
# சமாஜ்வாடி கட்சியின் நிறுவன தலைவரும், உ.பி மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ், வயது முதிர்வின் காரணமாக காலமானார்.
23-ம் தேதி: கோவை, உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் எதிரே காரில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி பலியானார். இவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பதால் என்றே விசாரித்து வருகிறது.
25-ம் தேதி: இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த 42 வயதான ரிஷி சுனக் பதவியேற்றார். இவர், இந்தியாவின் பிரபல சாஃப்ட்வேர் நிறுவன அதிபர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மாப்பிள்ளை எனக் குறிப்பிடத்தக்கது.
26-ம் தேதி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பேற்றார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், இந்திரா காந்தி குடும்பத்துக்கு வெளியே தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
30-ம் தேதி: குஜராத் மாநிலம், மோர்பி நகரத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழமை வாய்ந்த தொங்கு பாலம் அதிக பாரம் தாங்காமல் இடிந்து விழுந்ததில் 141 பேர் பரிதாபமாக பலியாகினர்.
நவம்பர்
13-ம் தேதி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக சாம்பியன் பட்டத்துக்கான 7-வது டி-20 கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இந்திய அணி வெளியேறியது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிவாகை சூடி, 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
16-ம் தேதி: ராமேஸ்வரம்-காசிக்கு இடையே உள்ள பழங்கால உறவை புதுப்பிக்கும் வகையில், உ.பி மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்வுகள் துவங்கி நடைபெற்றது. இதன் துவக்க விழாவில் இசைஞானி இளையராஜா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
20-ம் தேதி: பிரபல திரைப்பட கதாசிரியர் ஆரூர்தாஸ், தனது 91-வது வயதில் சென்னையில் மரணமடைந்தார். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, சாவித்திரி உள்பட பழம்பெரும் நடிகர்கள் துவங்கி தற்கால திரைப்படங்கள் வரை வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.
21-ம் தேதி: தமிழறிஞர் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் அவ்வை நடராஜன் மரணமடைந்தார்.
டிசம்பர்
8-ம் தேதி: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ கட்சி வெற்றி பெற்று, 7-வது முறையாக ஆட்சி அமைத்தது. இமாசல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
14-ம் தேதி: தமிழக அமைச்சரவை 2-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும், திமுக இளைஞரணி செயலாளரும் எம்எல்வுமான உதயநிதி ஸ்டாலின், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் அமலாக்க துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
22-ம் தேதி: தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜனவரி 2-ம் தேதி முதல் பொங்கல் பரிசாக ₹1000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
23-ம் தேதி: சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு. உலக நாடுகள் அச்சம்.
25-ம் தேதி: பிரதமர் நரேந்திர மோடி 'மான் கி பாத்' நிகழ்ச்சியில், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, பண்டிகை கொண்டாட்டங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என வலியுறுத்தினார்.
புதுடெல்லியில் பாரத் ஜோடோ பாதயாத்திரையை தற்காலிகமாக நிறைவு செய்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாஜ்பாய் உள்பட பல்வேறு முன்னாள் பிரதமர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். எனினும், அவர் தனது கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மரியாதை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்து, இந்தியாவில் தகுதி தேர்வு எழுதாமல் மருத்துவ பணி செய்து வரும் 73 டாக்டர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
28-ம் தேதி: மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் கார், பஸ், டெம்போ ஓடாததால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
# மேற்குவங்க மாநிலத்துக்கு தனது கணவர் மற்றும் 5 வயது மகளுடன் காரில் சென்ற ஜார்கண்ட் மாநில நடிகை ரியாகுமாரியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
# சென்னை உள்பட தமிழகத்தில் 2023 ஆங்கில புத்தாண்டு பிறப்பு கொண்டாட்டங்களில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு இன்று தமிழக காவல்துறை தடை விதித்தது.
# புதுக்கோட்டையில் தீண்டாமைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர், எஸ்.பி-க்கு தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு தெரிவித்தது.
காலம் தன் பயணத்தை தொடர்கிறது....
2023 நமக்கு நல்ல செய்திகளையே தரட்டும்......
Leave a comment
Upload