தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 18 - காவிரி மைந்தன்

2022906211040755.jpg

2022906211111256.jpg

குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல எண்ணம்.


பன்னெடுங்காலமாய் நம் சமுதாய வாழ்க்கை மேடுபள்ளங்களாகவே காட்சியளிக்கிறது. இதில் வறுமை ஒரு பக்கம் வாட்டி எடுப்பதும்.. வளமை ஓர் பக்கம் லூட்டி அடிப்பதும் நாம் காணும் அன்றாடக் காட்சிகளே! இங்கே நடுத்தரக்குடும்பங்கள் என்பவை நீரிலும் வாழ முடியாமல்.. நிலத்திலும் வாழ முடியாமல் தத்தளிக்கும் ஜீவன்களாய்.. இவர்தம் பிரச்சினைகளை மையப்படுத்தி இயக்குனர் விசுவும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும் இணைந்து வழங்கிய படம் குடும்பம் ஒரு கதம்பம்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்தில் இடம்பெறும் இப்பாடலை கவியரசு கண்ணதாசன் வரைந்திருக்கிறார்... கதையை முழுமையாய்ச் சுமந்து வருகின்ற வரிகளை மெல்லிசை மன்னரே பாடியிருப்பது காட்சிகளின் பின்னணியில் அக்குரல் ஒலிப்பது சிறப்பு.
மனிதர்கள் யாராக இருந்தாலும் அவரவர்க்கு ஒரு எண்ணம்.. எல்லோராலும் எண்ணங்களில் இணைந்திருக்க முடிவதில்லை. இதில் எங்கே யார்.. எப்படி விட்டுக்கொடுக்கிறோம்.. அல்லது நமக்காக யார் விட்டுக்கொடுக்கிறார்கள் என்பதிலே குடும்ப உறவுகளின் மகிழ்ச்சி ரகசிய முடிச்சாக அமைந்திருக்கிறது. இதற்கிடையே பொருளாதாரத் தேவைகள் முன்னிறுத்தப்பட அவற்றை நோக்கிய பயணம் .. அனேகமாக இது எல்லா வீடுகளிலும் நடக்கிற சமாச்சாரம் என்பதால்தான் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது!
பொருளாதாரத்திலே பொருள்தானே தாரமென்று
இருவர் உழைத்தால்தான் இந்நாளில் பசி தீரும்..

என்று எத்தனை எளிமையாய் இந்தப் பிரச்சினையைத் தொட்டுக்காட்டியிருக்கிறார் கண்ணதாசன். பல்லவி முதல் சரணங்கள்வரை எழுதப்பட்டிருப்பவை வாழ்க்கை சாசனம் என்றே நான் சத்தியம் செய்வேன். இத்தனைக்கும் முத்திரை வைக்கும் கண்ணதாசன்

மனிதன் நினைக்கின்றான் இறைவன் அதை மாற்றுகின்றான்
இஎன்று இறைவனையும் இணைத்துள்ளார்.
இப்பாடல் உருவானபோது நடந்தது என்ன என்பதை இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமேற்று கதையை முன்னெடுத்துச் செல்லும் திரு.விசுவின் வார்த்தைகளிலேயே அறிவோம்.
தமிழக திரையுலக வரலாற்றில், கண்ணதாசன் மிகச் சிறந்த கவிஞராக மதிக்கப்படுகிறார். நினைத்தவுடன் பாட்டெழுதும் அவருடைய திறமையை மெச்சாதவர்களே கிடையாது.
50-களில் தொடங்கி தான் மறையும் வரை, மிகச் சிறந்த பாடல்களை அளித்தவர் கவிஞர் கண்ணதாசன். தத்துவம், காதல், சோகம், சந்தோஷம் என பலதரப்பட்ட விஷயங்களில் எழுதியவர் கண்ணதாசன்.
ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து அம்சங்களையும் அவரது பாடலில் தொட்டிருக்கிறார். நினைத்த மாத்திரத்தில் பாட்டெழுதக் கூடியவர் என்கிற பெருமை பெற்றவர் கண்ணதாசன்.
கண்ணதாசனுடனான தனது அனுபவத்தை நடிகரும், இயக்குநருமான விசு, ஒரு தடவை பிரமிப்புடன் கூறியுள்ளார். தனது முதல் படமான குடும்பம் ஒரு கதம்பம் படத்திற்காக பாட்டெழுத கண்ணதாசனை சென்று பார்த்தேன்.


தன்னைப் பற்றி, கண்ணதாசனிடம் இயக்குநர் பாலசந்தர் சொல்லி அனுப்பியதன் அடிப்படையில் கண்ணதாசனைச் சென்று ஒரு அறையில் சப்பனமிட்டு அமர்ந்திருக்க, அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த பஞ்சு அருணாச்சலத்திடம் கண்ணதாசன் கேலியாக பேசிக் கொண்டிருந்தார்.

நான் போய் அமர்ந்தவுடன், நீதான் குடும்பம் ஒரு கதம்பம் படத்தை இயக்குகிறாயா? என்று கேட்ட கண்ணதாசன், எந்தவகையான பாடல் வேண்டும் என்று கேட்டார்.


படத்திற்குரிய டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி பாடல் ஒன்று வேண்டும். அதில் அந்த படத்தில் உள்ள கதையின் முக்கிய அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று கூறினேன்.


கதையைச் சொல்லும்படி கண்ணதாசன் கூறினார். படத்தின் கதையை விவரிக்க தொடங்கினேன். ஆனால், கண்ணதாசன் கதையை காது கொடுத்து கேட்காமல் பக்கத்தில் உள்ள பஞ்சு அருணாச்சலத்தை சீண்டி விளையாடிக் கொண்டிருந்தார்.


கதையை நான் சொல்லச் சொல்ல, அவர் அதைக் கேட்காமல் பக்கத்தில் பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க நான் கதை சொல்வதை நிறுத்தினேன்.


நீயேம்பா... நிறுத்தி விட்டாய்... நீபாட்டுக்கு சொல்லிட்டே இரு... என்று கண்ணதாசன் கூறினார். உள்ளுக்குள் வெறுப்பாக இருந்தாலும் பெரிய கவிஞர் என்பதால் வேறு வழியில்லாமல் கதையைச் சொல்லி முடித்தேன். இவ்வளவுதான் கதையா என்று சொல்லிவிட்டு, சரி எழுதிக்கோ என்று சொல்லி,


"குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை
தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை..."


என்ற பாடல் வரிகளை கடகடவென்று கூறினார். அந்த பாடலில் நான் சொன்ன திரைக்கதையின் அத்தனை விஷயங்களையும் அடக்கியதோடு அல்லாமல், நான் விட்டுவிட்ட ஒரு விஷயத்தையும் பாடலில் சேர்த்திருந்தார். இதுபற்றி நான் கேட்டபோது அவர்
விளக்கி கூறியது, எந்த அளவிற்கு நான் சொன்ன திரைக்கதையை அவர் ஊன்றிக் கவனித்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தியது.


அவர் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார், எங்கே கவனிக்கப் போகிறார் என்று நான் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை பின்னர் உணர்ந்தேன். அவர் எழுதிய அந்த பாடல், குடும்பம் ஒரு கதம்பம் படத்துக்கே முதுகெலும்புபோல் அமைந்து, படத்தை வெற்றிபெற வைத்தது. பாடலை விரைவாக கொடுத்த அவரின் வேகம் என்னை பிரமிக்க வைத்தது என்று இயக்குநர் விசு தெரிவித்துள்ளார்.


"குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை
தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை..." (குடும்பம்)

மனையாள் பணிசெய்தால் மணவாளன் வாழலாம்
அதிலே வருமானம் ஆனாலும் அவமானம்
வீடுகள் தோறும் இதுதானே கேள்வியென்று
விடிந்தால் ஒரு எண்ணம் எல்லோர்க்கும் தனிஉள்ளம்

கணவன் பெரிதென்று மணந்தார்கள் மங்கையர்கள்
உழைப்பாள் அவளென்று மணந்தார்கள் நாயகர்கள்
பொருளாதாரத்திலே பொருள்தானே தாரமின்று
இருவர் உழைத்தால்தான் இந்நாளில் பசிதீரும்!

இரண்டு குதிரையிலே ஒரு மனிதன் போவதென்ன
இரண்டு நினைவுகளிலே சில மனிதர் வாழ்வதென்ன
காலங்கள்தோறும் அவர் சிந்தனையில் மாற்றமென்ன
மனிதன் நினைக்கின்றான் இறைவன் அதை மாற்றுகின்றான்

தொடர்ந்து பயணிப்போம்...