தொடர்கள்
தொடர்கள்
பகை அறுத்துக்கொண்ட சோழன் யார்? சென்னை மாதம் - 65-- ஆர் . ரங்கராஜ்,


2022113010595028.jpg

முதலாம் குலோத்துங்கன் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டத்திலுள்ள பேரம்பாக்கத்தில் சிவபெருமானுக்குக் கோயில் கட்டி, அதற்குக் குலோத்துங்கச் சோழீஸ்வர முடையார் எனத் தன் பெயரைச் சூட்டியுள்ளான். மேலும் பேரம்பாக்கம் என்று வழங்கி வந்த இவ்வூரை, 'இரட்டபாடி கொண்ட சோழ நல்லூர்' என்று பெயர் மாற்றி வழங்கினான்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டத்திலுள்ள பேரம்பாக்கம் சோழீஸ்வரர் கோயிலில் முதலாம் குலோத்துங்கனின் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன (ARE 68. 69/1947-48). இதில் இம்மன்னனின் 42ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு, செயங்கொண்ட சோழ மண்டலம், மணவிற் கோட்டம், பாசாலி நாட்டைச் சேர்ந்த பெரும்பாக்கமான இரட்டபாடி கொண்ட சோழ நல்லூரைக் குலோத்துங்க சோழீஸ்வர முடையார்க்கு தேவதானமாகப் பகை அறுத்துக் கொண்ட சோழ வேளைக்காரர் கொடுத்துள்ள செய்தியையும், 44- ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, பகை அறுத்துக்கொண்ட சோழ வேளைக்காரர் கூத்தாடி தக்கரைசன் தெலுங்கராயன் என்பவன் குலோத்துங்கச் சோழீஸ்வரமுடைய மகாதேவர்க்கு விளக்கெரிக்க தானம் கொடுத்த செய்தியையும் தெரிவிக்கின்றன. இக் கல்வெட்டுக்கள் குறிக்கும் பகை அறுத்துக் கொண்ட சோழனும் இரட்டபாடி கொண்ட சோழனும் யார் - என்பது பற்றியும், வேளைக்காரர் கூத்தாடி தக்கரைசன் தெலுங்கராயன் யார் என்பது குறித்தும் திரு. து. துளசிராமன், மேனாள் உதவி இயக்குநர், தொல்லியல் துறை தமிழ்நாடு அரசு, தெரிவிக்கிறார்.

முதலாம் குலோத்துங்கன் மன்னனாக முடி சூட்டிக் கொண்டான்

முதலாம் குலோத்துங்கன் தன் தந்தையின் ஆட்சிக்காலத்தில் வேங்கி நாட்டில் இளவரசுப் பட்டம் சூடி அந்நாட்டு மரபுப்படி விஷ்ணுவர்த்தனன் (ARE 393, 400) என்னும் பட்டப் பெயர் பூண்டிருந்தான். இவனுடைய சிறிய தந்தையாகிய விசயாதித்தன் என்பவன் வேங்கி நாட்டை ஆட்சி புரிய வேண்டும் எனப் பேரவா கொண்டிருந்ததால் தன் தந்தைக்குப் பின் இவனால் ஆட்சிக்கு வர முடியவில்லை. இதனால் இவ்விருவருக்கும் பகைமை இருந்தது என்பது விசயாதித்தன், அவன் மகன் சக்திவர்மன் ஆகியோரது செப்பேடுகளால் அறிய முடிகிறது. ( Ryali Plates of Vijayaditya VII and the Telugu Academy
Plates of Sakti Varman II.)

20221130110010476.jpg

விசயாதித்தனுடன் பகை நீக்கி அன்பு பாராட்டினான்

அதிராஜேந்திரனுக்குப் பின் வாரிசு இல்லாமல் சோழப் பேரரசு அரசனின்றித் தவித்தது. அப்போது கீழைச் சாளுக்கிய அரச மரபைச் சேர்ந்தவனும், முதலாம் இராஜேந்திரனின் மகன் வழிப் பேரனுமாகிய முதலாம் குலோத்தூங்கன் சோழ நாட்டில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையை நீக்கி, அமைச்சர்கள், படைத்தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். அது முதல் குலோத்துங்கன் தனது சிறிய தந்தை யாகிய விசயாதித்தனுடன் பகை நீக்கி அன்பு பாராட்டினான். மேலும் வேங்கி நாட்டைத் தம் பேரரசின் வடஎல்லையாக அமைத்து மேலைச் சாளுக்கியருடன் போரை தவிர்த்தான்.

மேலும் குலோத்துங்கன், துங்கபத்திரை ஆற்றுக்கு வடக்கே சோழப் பேரரசைப் பரப்பும் எண்ணத்தை அடியோடு கைவிட்டான். காரணம் தன் மாமன்மார் துங்கபத்திரை ஆற்றுக்கு வடக்கே உள்ள மேலைச் சாளுக்கிய நாட்டைத் தம் பேரரசோடு இணைப்பதற்கு மேற்கொண்ட படையெடுப்பினால் ஏற்பட்ட துன்பங்களையும், இதில் பல்லாயிரக்கணக்கான சோழ வீரர்கள் உயிர் துறந்ததையும் அவன் அறிவான். மிகவும் தேவையான இன்றியமையாத போர்களில் மட்டும் ஈடுபட்டு, உள்நாட்டில் அமைதி காத்து மக்களுக்கு நலம் புரிவதையே நோக்கமாகக் கொண்டிருந்தான்.

வென்ற நாடுகளை திருப்பி அளித்தான்

மேலும் இவன், முதலாம் இராஜேந்திரனைப் போல் செயல்படாமல், வென்ற நாடுகளைத் தன் பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சி செய்யாமல், அவற்றை உரிய அரசர்களுக்கே கொடுத்து (பாண்டிய + சேரர்களை வென்று அந்நாடுகளை அவர்களுக்கே திருப்பி அளித்து ஆட்சி புரியுமாறு கூறியது, இவன் தன்னிடம் தோல்வி எய்திய அரசர்களிடமும் பகை அறுத்து அன்பு பாராட்டினான்.

மேலும் இம் மன்னன், சீன நாட்டுக்கு 72 பேர்களடங்கிய தூதுக்குழுவை அனுப்பினான் (K.A.N. Sastri - The Colas P. 316). கடாரம், காம்போசம், கன்னோசி போன்ற நாடுகளுடன் நட்புறவு கொண்டிருந்தான். தான் மேற்கொண்ட அனைத்துச் செயல்களிலும் இவன் அமைதியையே விரும்பினான். எனவே. இம்மன்னன் பகை அறுத்துக்கொண்ட சோழன் என அழைக்கப்பட்டான் என்று கூறலாம்.

குலோத்துங்கச் சோழீஸ்வர முடையார் கோயில்

இம்மன்னன் பேரம்பாக்கத்தில் சிவபெருமானுக்குக் கோயில் கட்டி, அதற்குக் குலோத்துங்கச் சோழீஸ்வர முடையார் எனத் தன் பெயரைச் சூட்டியுள்ளான். மேலும் பேரம்பாக்கம் என்று வழங்கி வந்த இவ்வூரை, 'இரட்டபாடி கொண்ட சோழ நல்லூர்' என்று பெயர் மாற்றினான்.

இவன் இளைஞனாக இருந்தபோது தன் தாய் மாமனாகிய வீர ராஜேந்திரனுடன் சாளுக்கிய மன்னன் ஆதவ மல்லனுக்கு எதிராக நடைபெற்ற போர்களில் கலந்து கொண்டுள்ளான்.

'இரட்டபாடி கொண்ட சோழ நல்லூர்'

இப்போரில் இரட்டபாடி நாட்டில் தேவநாதன், சித்தி, கேசி என்னும் சாளுக்கியத் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இதில் முதலாம் குலோத்துங்கனுக்கும் பெரும் பங்கு இருந்திருக்க வேண்டும். எனவே இரட்டபாடிக் கொண்ட சோழன் என அழைக்கப்பட்டான்.

"ஆக, அபயன், சயதரன், சயதுங்கன், விருதராச பயங்கரன் கரிகாலன், இராசநாராயணன், உலகுய்யவந்தான், திருநீற்றுச் சோழன், மனுகுலதீபன், உபய குலோத்துங்கன் போன்ற சிறப்புப் பெயர்களோடு -- பகை அறுத்துக்கொண்ட சோழன், இரட்டபாடி கொண்ட சொழன் என்னும் சிறப்புப் பெயர்களையும் முதலாம் குலோத்துங்கன் பெற்றிருந்தான் என்னும் புதியசெய்தி இதனால் தெரிகிறது," என்று கூறுகிறார் திரு. து. துளசிராமன்.

வேளைக்காரர்

"மன்னனுடன் எப்பொழுதும் உடனிருந்து அவன் உயிருக்கு ஆபத்து நேருங்கால் தம் உயிரையும் கொடுத்து காக்கும் வீரர்கள் வேளைக்காரர் எனப்படுவர். இவர்கள் பெரும்பாலும் அரச மரபைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். சுந்தரசோழன் காலத்தில் பழுவேட்டரையர்கள் வேளைக்காரர்களாக இருந்துள்ளனர்.மேற்குறித்த பேரம்பாக்கம் கல்வெட்டு ஒன்றில் கூத்தாடி தக்கரைசன் தெலுங்கராயன் என்பவன் வேளைக்காரர் எனக் குறிக்கப்படுகிறான். கூத்தாடி என்பது ஆடவல்லானைக் குறிக்கும். சோழப் பேரரசின் படைத்தலைவர்களும், குறுநில மன்னர்கள் சிலரும் தம் பெயருக்கு முன் கூத்தாடி என்பதனைச் சேர்த்து வழங்கியுள்ளனர்."

"உதாரணமாக, இரண்டாம் இராஜேந்திரன் காலத்தில் அரசியல் அதிகாரிகளில் ஒருவனாக விளங்கிய வேளாளக் கூத்தன் ஆகிய செம்பியன் மூவேந்தவேளாளன் என்பவனையும், எருக்கட்டாஞ் சேரியிலிருந்து அரசு புரிந்த குறுநில மன்னனான உதயதிவாகரன் கூத்தாடியாரான வீரராஜேந்திர மழவராயன் என்பவனையும் கூறலாம். பிற்காலத்தில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலிருந்து சோழர்களுக்கு அடங்கிய குறுநில மன்னர்களாக விக்கிரமசிங்கபுரம் எனப்படும் நெல்லூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த தெலுங்குச் சோழர்கள் அனைவரும் திக்கரையன், திக்கநிருபதி, அல்லுந்திக் கரைசன் என்னும் பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தனர்."

எனவே தொலுங்குச்சோழ மரபைச் சேர்ந்த கூத்தாடி தக்கரைசன் தெலுங்கராயன் என்பவன். முதலாம் குலோத்துங்கனின் வேளைக்காரருள் ஒருவனாக இருந்துள்ளான் என்று தெரிகிறது.

(தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)