தொடர்கள்
அரசியல்
ராகுல் நடைப்பயணம் ஓட்டாக மாறுமா?-ஒரு அலசல் ரிப்போர்ட்- ஜாசன்

20221130092106549.jpg

கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி கன்னியாகுமரியில் பாரத் ஜோடோஎன்று தேச ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி. கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் கடந்து தற்சமயம் டெல்லியில் நுழைந்திருக்கிறார் ராகுல் காந்தி. சில நாள் ஓய்வுக்குப் பிறகு ஜனவரி 3ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் தனது நடை பயணத்தை தொடங்குகிறார். ஜனவரி 26 அவர் காஷ்மீரில் நுழைவது என்பது ராகுல் காந்தியின் திட்டம்.

ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தை பாஜக ஆரம்பத்தில் ஜஸ்ட் லைக் தட் என்று தான் பார்த்தது. ஆனால், அவர் போகிற மாநிலங்கள் இடங்களில் மெல்ல அவருக்கு மக்கள் ஆதரவு கிடைக்க ஆரம்பித்தது பல இடங்களில் பொதுக் கூட்டங்களில் அவர் பேச ஆரம்பித்தார். .அப்போது சில விஷயங்களை ராகுல் காந்தி தெளிவுபடுத்தினார். இந்த ஒற்றுமை நடைபயணம் அரசியலுக்காகவோ அல்லது வாக்கு வங்கிக்காகவோ கிடையாது தேசத்தின் ஒற்றுமைக்காக நான் இந்த பயணத்தை தொடங்கி இருக்கிறேன் என்றார் ராகுல் காந்தி. அவரது பொதுக்கூட்டங்களில் ஆர் எஸ் எஸ் பாஜக இரண்டும் இந்தியாவில் வெறுப்பு அரசியலை விதைக்க தொடங்கி இருக்கிறார்கள் என்பது அவர் சொன்ன குற்றச்சாட்டு. மதரீதியாக இந்தியாவைப் பிரிக்க முற்படுகிறார்கள் என்று அவர் சாடினார். அப்போதுதான் பாரதிய ஜனதா விழித்துக் கொண்டு ராகுல் காந்திக்கு பதில் சொல்லத் தொடங்கியது. தனது ஐடி விங் மூலம் ராகுல் காந்தியை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ய தொடங்கியது.

20221130092352343.jpg

எதிர்க்கட்சிகள் இதை வேறு மாதிரி பார்க்க ஆரம்பித்தது பாரதி ஜனதாவுக்கான எதிர்ப்பு ராகுல் காந்தி மெல்ல தொடங்கி வைக்கிறார் என்ற எண்ணம் மெல்ல பரவத் தொடங்கியது. அதனால்தான் நிதீஷ் குமார் தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்கள் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் அவருடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள். மகாராஷ்டிராவில் உத்தவ்தாக்கரே மகாராஷ்டிரா எல்லையில் தனது மகன் ஆதித்யா தாக்கரேவை அனுப்பி அவரை வரவேற்றார். இதேபோல் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் அவருடன் நடை பயணத்தில் பங்கேற்றனர். அரியானாவில் கனிமொழி நடை பயணத்தில் பங்கேற்றார்.

20221130092910518.jpg

கமலஹாசன் டெல்லியில் ராகுல் காந்தியுடன் நடை பயணத்தில் பங்கேற்றார் அங்கு நடந்த பொதுக் கூட்டத்திலும் கமல்ஹாசன் பேசினார்.

20221130092416430.jpg

ஆங்கிலப் பத்திரிகைகளும் ராகுல் காந்தி நடைப்பயணத்தை பற்றி விமர்சனமாகவும் அது பாஜகவுக்கு ஒரு சவாலாக இருக்கவும் வாய்ப்பு என்ற ரீதியில் நடுப்பக்க கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. கமலஹாசனும் ராகுல் காந்தி நடைபயணம் பற்றி ஒரு கட்டுரை இந்து ஆங்கில பத்திரிக்கையில் எழுதி இருக்கிறார். அதில் நாம் ஏன் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கான காரணத்தை அவர் குறிப்பிட்டு இருக்கிறார். நம் குடிமக்களின் தேசிய நலனை பாதிக்கும் பல்வேறு நடவடிக்கை நிகழும் காலத்தில் சாட்சிகளாக நாம் இருக்கிறோம். ஜி எஸ் டி டிமானிடைசேஷன் எனும் பெரும் தோல்வி இவற்றோடு மதரீதியான சாதி ரீதியான ஒடுக்கு முறைகள் இந்த நடவடிக்கையில் அடங்கும். பாரத் ஜோடோ யாத்ராவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து பயணிப்பது என்பது அச்சுறுத்தல் என்ற பெயரில் இன்றைய சூழல் மீது ஒரு நடுநிலையோடு வைக்கப்படும் விமர்சனம் என்று கருதப்பட வேண்டும் என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் கமலஹாசன். கூடவே 1975-77களில் மத்தியில் எமர்ஜென்சிக்கு எதிராக இப்படி ஒரு பயணம் நடந்திருந்தால் என் தந்தையார் இந்திராகாந்தி தலைமையிலான முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் என்ற போதிலும் நானும் அந்த பயணத்தில் இணைந்திருப்பேன் என்று எமர்ஜென்சியையும் விமர்சனம் செய்து அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் கமலஹாசன்.

20221130092442350.jpg

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் அவ்வப்போது சோனியா காந்தி பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டு அவரை உற்சாகப்படுத்துகிறார்கள் எல்லா மாநிலங்களிலும் அவர் பயணிக்கும் போது சம்பந்தப்பட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடப்படுகிறது. ராகுல் காந்தியின் நடை பயணத்தில் தேசிய அளவில் கூட்டணி வைக்காமல் அந்தந்த மாநிலங்களில் தங்கள் வசதிக்கு ஏற்ப கூட்டணி வைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொள்ளவில்லை இதுவரை கருத்தும் சொல்லவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று இன்னும் சொல்லப் போனால் கேரளாவில் 17 நாட்கள் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார் அவ்வளவு நாட்கள் அவருக்கு இங்கு என்ன வேலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி கேட்டது.

சிறிய இடைவேளைக்கு பிறகு ஜனவரி 3ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் தனது நடை பயணத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார் ராகுல் காந்தி. அவருடன் இந்த நடை பயணத்தில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் ராஷ்ட்ரிய லோக்தள் போன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டது. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ராகுல் காந்தியின் இந்த நடை பயணத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அதே சமயத்தில் இது பாராளுமன்றத்துக்கான கூட்டணியா என்ற விமர்சனம் வரக்கூடும் என்பதால் நாங்கள் கலந்து கொள்ளமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார். மாயாவதியும் கிட்டத்தட்ட இதே கருத்தை தான் தெரிவித்திருக்கிறார் ராஷ்ட்ரிய லோக்தள்கட்சியும் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. ஏற்கனவே தெலுங்கானா முதல்வர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் ஆகியோர் இந்த நடை பயணத்தை ஆதரிக்கவும் இல்லை விமர்சனம் செய்து கருத்தும் சொல்லவில்லை அதே சமயம் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படு தோல்விக்கு காரணம் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை பங்கு போட்டுக் கொண்டது என்பதுதான் முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

20221130093450326.jpg

ராகுல் காந்தியை பாரதிய ஜனதா பப்பு என்று விமர்சனம் செய்கிறது பப்பு என்றால் இந்தியில் சிறுவன் என்று அர்த்தம் அரசியலில் ராகுல் காந்தி எங்களுக்கு ஒரு சிறுவன் என்றும் இந்த நடை பயணத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டிருந்தாலும் அமித்ஷா போன்ற முக்கிய தலைவர்கள்ராகுல் காந்தியின் நடை பயணத்தை அலட்சியப்படுத்த விரும்பவில்லை. உளவுத்துறையை என்ன ஏது என்று விசாரிக்க சொல்லி இருக்கிறது. இது தவிர ராகுல் காந்தி நடைப்பயணத்தில் கலந்து கொண்ட சில நடிகர் நடிகைகளை உளவுத்துறை உங்களுக்கும் ராகுல் காந்திக்கும் என்ன சம்பந்தம் இந்த நடை பயணத்தில் கலந்து கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி உங்களுக்கு ஏதாவது சன்மானம் தந்ததா என்றெல்லாம் விசாரித்து இருக்கிறார்கள்.

ராகுல் காந்தியை பப்பு என்று அழைப்பது பற்றி இதை நீங்கள் மோசமாக உணர்கிறீர்களா என்று ஒரு யூட்யூப் சேனல் பேட்டியின் போதுகேள்வி கேட்டதுஅதுக்கு ராகுல் காந்திநான் அப்படி உணரவில்லை. இப்படி அவர்கள் என்னை விமர்சனம் செய்வதன் மூலம் அவர்கள் பயப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரிகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் ராகுல் காந்தி.

சமீபத்தில் நடந்த குஜராத் இமாச்சலப் பிரதேச தேர்தலில் பாஜக குஜராத்தில் அமோகமாக வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அதற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. அதே சமயம் ஆட்சியில் இருந்த பாஜக இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது. இதேபோல் டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் 15 ஆண்டுகளாக மாநகராட்சியை தன் வசம் வைத்திருந்த பாஜக இப்போது எதிர்க்கட்சி ஆகிவிட்டது. ஆம் ஆத்மி மாநகராட்சியை கைப்பற்றி விட்டது. இதையெல்லாம் பாஜக தங்களுக்கு பின்னடைவாக தான் பார்க்கிறது.

அதேசமயம் பாராளுமன்றத் தேர்தலுக்கான எல்லா வேலைகளையும் பாஜக தொடங்கிவிட்டது. இந்த விஷயத்தில் அமித்ஷா மாநிலத் தலைவர்கள் மத்திய அமைச்சர்கள் ஆகியோரை விரட்டி விரட்டி வேலை வாங்குகிறார். தொகுதிகளுக்கு போய் மத்திய அரசின் திட்டங்களை விளக்கி சொல்லுங்கள். பூத் கமிட்டி அமைக்கும் வேலைகளை பாருங்கள் என்றெல்லாம் சொல்லி வருகிறார். அவரும் மாநிலம் வாரியாக தொகுதி நிலவர்களை கண்காணிக்கிறார். சென்ற ஆண்டு 534 தொகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லாத 144 தொகுதிகளை பாஜக அடையாளம் கண்டு அந்த தொகுதிகளில் பாஜகவை பலப்படுத்த என்ன வழி என்று ஆராய்ந்து அதற்கான வேலைகளை செய்து வருகிறது. இந்த 144 தொகுதிகளுக்கு என்று பாஜக பலமுறை நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி ஆய்வு செய்து இருக்கிறது சென்ற வாரம் கூட ஹைதராபாத்தில் ஜேபி நட்டா பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தலைமையில் இந்த 144 தொகுதிகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. பாஜகவின் கவனம் இப்போது தென்னிந்தியா பக்கம் திரும்பி இருக்கிறது. குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா என்று குறிவைத்து தங்கள் வேலைகளை செய்கிறார்கள்.

இதனால்தான் சில தினங்களுக்கு முன்பு திமுகவின் எல்லா அமைப்பு நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டிய திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவிடம் எச்சரிக்கையாக இருங்கள் அவர்கள் தேர்தலுக்காக வெற்றி பெறுவதற்காக எதையும் செய்வார்கள் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சமீப காலமாக திமுக கூட்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக தான் பேசும் பொருளாக இருக்கிறது என்பது உண்மை. தமிழ்நாட்டில் பாஜக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டது.

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை அவர்களின் பலருக்கு பிரதமர் கனவு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மம்தா பானர்ஜி சமீபத்தில் நிதீஷ் குமார் ஆகியோருக்கு ஆனால் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்பதை தெளிவுபடுத்தி விட்டது. இதை ஏற்கனவே திமுக சொல்லிவிட்டது எனவே திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை அவர்கள் நிலைப்பாடு மாநிலத்துக்கு மாநிலம் மாறுகிறது.

கேரளாவில் காங்கிரஸ் எதிர்த்து போட்டி போடுகிறார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி இதே நிலைதான் மேற்கு வங்கத்திலும் ஆனால், மேற்கு வங்கத்தில் இப்போது திருணாமுல் காங்கிரஸ் பிஜேபி இந்த இரண்டு கட்சிக்கு தான் போட்டி காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்தங்கி தான் இருக்கிறது. ராகுல் காந்தி நான் வாக்கு வங்கிக்காக இந்த நடைப்பயணம் தொடங்கவில்லை என்று சொன்னாலும் காங்கிரஸ் கட்சி இதன் மூலம் தங்கள் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று நம்புகிறது.

காங்கிரஸ் கட்சியை இந்த நடை பயணம் எல்லா மாநிலங்களிலும் சுறுசுறுப்பாக்கி எழுந்து நிற்க வைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை அது வாக்கு வங்கியா இல்லையா(?!) என்பது 2024 தேர்தலில் மக்கள் சொல்லிவிடுவார்கள்.

20230001091428500.jpg