1. தமிழக மன்னர்களை பற்றி "மறந்து போன மன்னர்கள்" என்று தொடர் எழுதலாமே மதன் சார்?
அவர்கள் கோயில்களுக்கு செய்த திருப்பணிகளை தவிர வேறு எந்த விவரமும் கிடையாது. ராஜராஜ சோழன் கருப்பா சிவப்பா? உயரமா குள்ளமா?தனிப்பட்ட முறையில் பழக எப்படிப்பட்டவர்? பெரிய கோயில் கட்டும்போது, எப்படி அதை ஓகே செய்தார்? மற்ற டிசைன்கள் இருந்ததா? என்ன சாப்பிடுவார்? போர்க்களத்தில் எப்படி இயங்கினார்? காதலித்தாரா? சின்ன வீடுகள் எத்தனை... இப்படி எதுவுமே அவரைப் பற்றி தகவல்கள் கிடையாது. எப்படி தொடர் எழுத முடியும்?! முகலாயர்கள்,காலை டிபன் என்ன சாப்பிட்டார்கள் ,என்கிற தகவலைக் கூட எழுதி வைத்தார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!
2. பொன்னியின் செல்வன் பார்த்த பிறகுமா உங்களுக்கு குதிரை சவாரி செய்யும் ஆசை வரவில்லை??
பொன்னியின் செல்வன் படித்த போதே, அதாவது 16 வயதினிலேயே அந்த ஆசை வந்தது. அதற்கு பதிலாக தஞ்சாவூரில் வாடகை சைக்கிள் ஒன்று எடுத்துக்கொண்டு மூலைமுடுக்கெல்லாம் சுற்றினேன்,மனதில் வந்தியத்தேவன் என்கிற நினைப்போடு. ஜாலியாகத்தான் இருந்தது அந்த ட்ரிப்!
3.இந்தியாவின் மதசார்பற்ற தன்மை வரும் காலங்களில் பாதுகாக்கப்படுமா?
இந்தியாவுக்கு வேறு வழி கிடையாது என்பதை புரிந்து கொள்க! நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இந்தியாவை வெள்ளைக்காரர்களும் முஸ்லிம் மற்றும் மொகலாயர்களும் ஆண்டார்கள். இந்தியா முஸ்லிம் நாடாகவோ கிறிஸ்துவ நாடாகவோ மாறியதா?! இந்தியா ஒரு இந்து நாடாக வேண்டும் என்று சிலர் விருப்பப்படலாம்.அது ரொம்ப செயற்கையாக இருக்கும் என்பது என் கருத்து. காரணம் உலகில் இரண்டாவது பெரிய முஸ்லிம் ஜனத்தொகை இந்தியாவில் தான் இருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து. இரும்புக்கரம் கொண்டு இந்து ராஷ்டிரத்தை உருவாக்கினால் தான் உண்டு. அவசியமா??
4. உயர்ந்த லட்சியத்திற்காக உயிரையும் கொடுக்கலாம் என்றால், உயிர் போன பிறகு என்ன லட்சியம் வெங்காயம்??
பிறருக்காக வாழ்வது என்று ஒன்று உண்டு! மேன்மையான முடிவு அது. மனிதன் தெய்வமாக ஒரே வழி அது தான். பகத்சிங் உயர்ந்த லட்சியத்திற்காக தான் தூக்கு மேடை மீது புன்னகையோடு ஏறினார்.எப்பேர்ப்பட்ட லட்சிய வாழ்க்கை அது.! காந்தியும், லிங்கனும் அரசியலுக்கு வராமல் மட்டுமிருந்திருந்தால் கொலை செய்யப்பட்டிருப்பார்களா? லட்சியம் - வெங்காயம் அல்ல!
5. ஒரு பிக் பாக்கெட் திருந்தி வாழலாம். ஒரு கொலைகாரன் கூட திருந்தி வாழ முடியும். ஒரு விபச்சாரியால் மட்டும் முடிவதில்லையே?? யார் தவறு?
ஒப்பிடுவதே தவறு. ஒரு விபச்சாரியால் யாருக்கும் பாதகம் இல்லை. அது ஒரு வியாபாரம். பணம் கொடுத்தால் பொருள் கிடைப்பது போல. யாரும் விரும்பி விபச்சாரியாவதில்லை. வயிற்று பிழைப்பு. ஆனால், ஒரு விபச்சாரியை திருமணம் செய்து கொள்வது என்பது மிக மிக அரிதான விஷயமாகத்தான் இருக்கிறது பார்த்தீர்களா?! சோகம்!
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in
Leave a comment
Upload