தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஹாங்காங் !! கும்மிருட்டில்…நடுக் காட்டில்…வழிமாறிய மலைப்பயணம் !-ராம்

20221130131956683.jpeg

ஹாங்காங் தக்கினியூண்டு நகரம். கான்கிரீட் தேசம். இப்படி தான் ஹாங்காங் என்றதும் அனைவருக்கும் நினைவு வரும்.

ஆனால் ஹாங்காங்கில் 60 சதவிகிதம் இயற்கை என்பது பலருக்கு தெரிவதில்லை. இங்கு தான் மலைகள் சூழ்ந்த கடல் சூழந்த பச்சைப் பசேலென்று மரங்கள் சூழந்த நிலப்பரப்பு உள்ளது என்பது ஹாங்காங்கின் வர்த்தக வாசம் ஈர்க்கப்பட்டு வரும் பலரும் உணருவதேயில்லை.

ஆகச் சிறந்த மலையேற்றங்கள் உள்ள நகரம் ஹாங்காங்.

2022113013202653.jpeg

ஹாங்காங்கில் உயரமான மலை தாய் மோ ஷான் என்ற மலை தான். ரொம்ப அதிகமில்லை ஆயிரம் மீட்டருக்கும் கொஞ்சம் குறைவான உயரம் தான்.

20221130132055812.jpeg

உச்சிக்கு மிக அருகே செல்லும் வரை, சாலை வசதி கூட இருக்கிறது. இருந்தாலும் மலையேற்ற மக்களுக்கு உச்சிக்கு செல்ல அருமையான டிரையில் என்று சொல்லப்படும் மலைப்பாதை இருக்கிறது. நம்ம மாடிப்படி போல இருக்காது. இருந்தாலும் ஆபத்தில்லாமல் செல்ல வழி இருக்கிறது.

ஒரு பக்கம் மலையில் ஏறி இன்னொரு பக்கம் இறங்கினால் நான்கு நீர்வீழ்ச்சிகள் பார்க்கலாம்.

வாருங்கள் கொஞ்சம் மெதுவாக மலையேறலாம். தாய் மோ ஷான் உச்சிக்கு செல்ல இம் துங் சாய் என்ற நீர்வீழ்ச்சி பக்கமாகவும் ஏறலாம்.

இந்த மலைக்கு நாங்கள், நாங்கள் என்றால் நான், பேராசிரியர் ராஜன், அவர் மனைவி சங்கீதா, ஆடிட்டர் ரவி கிறிஸ்துமஸ் தினத்தில் காலை எட்டு மணிக்கு புறப்பட்டோம்.

கத்துக்குட்டி மலையேற்ற ஆட்கள் என்று யாரும்நினைத்து விடக் கூடாது என்பதால் இந்த காணொளி. சில வருடங்களாக நாங்கள் சென்ற மலையேற்றங்கள் ஒரு பாடலாக இங்கே….. அதை கடந்து தொடர்ந்து மலையேறுவோம்….

மான் தெக் யூன்

இந்த இடத்தில் ஒரு தாவோயிச கோவில் இருக்கிறது.

இது வரை இம் துங் சாய் நீர்வீழ்ச்சி மலைக்கு ஆறேழு முறை சென்றிருக்கிறோம். ஆனால் இதுவரையில் இந்த கோவில் திறந்து பார்த்தேயில்லை.

உள்ளே நுழைவதற்கு முன் ஒரு ஆசாமி தடுத்து நிறுத்தினார். இந்த பலகையை பாருங்கள் என்றார். என்ன தெரிகிறது என்றார்.

20221130132206731.jpeg

உங்களுக்கு என்ன தெரிகிறது பாருங்கள் ?? ஐந்து குதிரைகள் மூன்று வட்டங்கள் தெரிகிறதா ???

அப்படியே பின்னே போங்கள் என்றார். இன்னும் தள்ளி…இன்னும்… இப்ப என்ன தெரிகிறது என்றார் !!

20221130132230939.jpeg

எங்கள் எல்லோருக்குமே அப்போது ஒரு நட்சத்திரம் தெரிந்தது.

இவ்வளவு தான் விஷயம். நீங்கள் குதிரை என்று நினைப்பது குதிரையல்ல. தூரத்திலிருந்து நீங்கள் நட்சத்திரம் என்று நினைப்பது நட்சத்திரமுமல்ல என்றார்.

என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.

முதல் முறை உள்ளே சென்று ஆற அமர கோவிலை சுற்றிப் பார்த்து விட்டு தரிசனம் செய்து விட்டு எந்தக் கடவுளாக இருந்தால் என்ன, உருவங்கள் மாறலாம் இறை மாறுமா என்ன என்று ஒரு கும்பிடு போட்டு விட்டு மலையேற உத்தேசித்தோம்.

2022113013230806.jpeg

இந்த இடத்தில் விலாவாரியாக தாவோயிசம் பற்றி விசாரித்து எழுதலாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் அதை செய்வோம்.

சாமி தரிசனம் முடித்து வெளியே வந்தால் ரவியைக் காணோம்.

பலகை ஆசாமியிடம் சென்று கேட்டோம். எங்களுடன் வந்த இன்னொரு நண்பர் எங்கே தெரியுமா ??

பார்க்கவேயில்லையே என்றார்.

பேராசிரியர், சங்கீதாவுடன் அங்கேயும் இங்கேயும் அலைந்து தேடியது தான் மிச்சம்.

அருகிலுள்ள புதர்களிலெல்லாம் பார்க்க துவங்கி விட்டோம். ரவியைக் காணோம்.

இன்னேரத்திற்கு சங்கீதாவிற்கு மலையேறுவதை நிறுத்தி விடலாம் என்று தோன்றியது.

ஏனெனில் ரவியைத் தேடுவதில் மலையேறும் நேரம் குறைகிறது. ஒரு வழியாக வந்து சேர்ந்த ரவி அதே பலகை ஆளிடம் எங்களைக் கேட்டதாகவும், அவர் நாங்கள் ஏற்கனவே மலை ஏறத் துவங்கி விட்டதாகவும் சொன்னாரம். அடக் கஷ்ட காலமே என்று நொந்து கொண்டு மலையேறத் துவங்கினோம்.

போற வழியில் அள்ளித் தெளித்திருக்கிறது என்று மட்டும் சொன்னால் மஹாபாவம். இயற்கை கொட்டித் தீர்த்திருக்கிறது அழகை.

ஒரு பாறையைப் பார்த்ததும் பேராசிரி தியானத்தில் அமர்ந்தார். எங்களுக்கோ நேரம் போய்க் கொண்டிருக்கிறது.

20221130132505580.jpeg

போலாம்யா மலையேறணும் என்று கத்தியதும் தான் விஸ்வாமித்திரரின் தவம் கலைந்தது.

தாய் மோ ஷான் மலைக்கு சென்றதும் ஓய்வெடுக்க ஒரு கூண்டு கட்டி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் பேராசிரி (செல்லமாக அப்படித்தான் கூப்பிடுவது) தாய் மோ ஷான் மலைக்கு போக வேண்டாம் அருகிலுள்ள சூ ஃபொங் ஷான் மலைக்கு போகலாம் என்று ஏறத் துவங்கி விட்டார்.

சங்கீதாவுக்கு கொஞ்சம் நேரம் ஓய்வெடுக்கலாம் என்று வந்த எண்ணத்தை அடித்துத் துரத்தினார் பேராசிரி. “போலாம் போலாம் போய் சாப்பிடணும்ல…”

20221130132644742.jpeg

சூ ஃபொங் ஷான் உச்சியில் இருந்து 360 டிகிரி பார்வை……

அங்கிருந்து வீட்டுக்கு திரும்ப அதே வழியில் வந்திருந்தால் பிரச்சினையே இல்லை. உலக மக்கள், மலையேறும் பொது ஜனங்கள் போல கட்டின பசு போல போய் விட்டு அப்படியே வந்திருப்போம். ஆனால் பேராசிரியின் அட்ரலீனுக்கு இது போதாது. அவருக்கு இல்லாத வழியில் புதுசாக நடந்து போனால் தான் அன்றாட ஜென்மம் சாபல்யம் ஆகும்.

வேணாம்யா போயிரலாம் என்று கேட்டாலும் அவர் செவி சாய்ப்பதாக இல்லை.

ஏதோ கொஞ்சமே கொஞ்சம் ஒத்தையடிப் பாதை போல இருந்த ஒரு இடத்தை பார்த்து விட்டார் ராஜன். அவருக்கு அது வழியாக கீழே சென்று விடலாம் என்று தோன்றியது. அதிலும் கரடி போன பாதையாம். பாவி. அவ்வளவு தான். விறு விறுவென்று நடக்கத் துவங்கி விட்டார்.

ஹாங்காங் மலையேற்ற பாதைகளில் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். ஆங்காங்கே இது போல பொதுவாக செல்ல முடியாத வழிகளில் ஏற்கனவே சென்று வந்தவர்கள் மரங்களில் கலர் கலராக ரிப்பனை கட்டி வைத்திருப்பார்கள். அப்படி இருந்தால் அங்க ஒரு வழியிருக்கிறது என்று அர்த்தம். எங்கே செல்கிறது என்பது தெரியாது. ஆனால் வழியிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக அது.

வேறு வழியின்றி பேராசிரி பின்னே செல்லத் துவங்கினோம். மதிய உணவு முடித்தாகி விட்டது. இனி நேராக கீழே சென்று சாலையைப் பிடித்து போக வேண்டியது தானே…

இறங்குவதற்கு கடினமான வழி தான். எப்போதோ யாரோ சென்றிருக்க வேண்டும். ரிப்பனெல்லாம் ரொம்ப பழையதாகத் தான் இருந்தது. ஆனால் பேராசிரிக்குள் தான் புது வெள்ளம் போல உற்சாகம்.

இன்னமும் கூட இது சரியான வழிதானா என்று சந்தேகம் இருந்தது. ஆனாலும் இறங்கத் துவங்கிய பின் மீண்டும் எப்படி மேலே ஏறுவது… தொடர்ந்து நடப்பதை தவிர வேறு வழியில்லை.

கடைசியாக தொலைபேசி சிக்னல் இருந்தது இங்கு தான். அதற்குப் பின் என்னுடைய ஸ்மார்ட் வாட்ச், இரண்டு தொலைபேசிகள் எல்லாம் தத்தம் கடமையை அன்றைய தேதிக்கு முடித்துக் கொண்டு பாட்டரி உயிரை விட்டது.

இந்த வரைபடத்தைப் பார்த்தால் தெளிவாக தெரியும்.

20221130133438409.png

ஒரு வழியாக பாதை இறங்கி

இறங்கி

இறங்கி

றங்கி

கீழே ஓடைக்கு வந்து விட்டோம். நாங்கள் நினைத்து இது தான் இம் துங் சாய் ஓடை என்று. ஆனால் அது பனானா நீர் வழி ஓடை என்பது எங்களுக்கு புரியவில்லை.

மணி நேரம் நான்கரை. பனிக்காலம் என்பதால் சீக்கிரம் இருட்டி விடும்.

இரவு நேர மலையேற்றம் இல்லை என்பதால் யாரிடமும் டார்ச் கிடையாது.

குடிக்க தண்ணீரும் இரண்டொரு சொட்டுக்கள் மட்டுமே தேறும். மூன்று பேரின் தொலைபேசி பாட்டரியும் ஏறக்குறைய காலி.

வேறு வழியில்லை என்பதால் மீண்டும் ரிப்பனை துணை கொண்டு செல்ல வேண்டியது தான் என்று முடிவெடுத்தோம். அது போக பாறைகளிலும் சாக்பீசால் அம்புக் குறி போட்டிருக்கிறது.

அது அம்புக் குறியல்ல. வம்புக்குறி. ஒரு பக்கமாக அழைத்துச் செல்லும் அம்புக்குறி ஒரு இடம் வந்ததும் எதிர்திசையை காட்டியது. மீண்டும் திரும்புங்கள் என்பது போல. அதன் பொருள் புரியவில்லை. திரும்பாமல் ஒரே பக்கம் சென்றோம்.

எங்கு தவறு நிகழ்ந்தது என்று புரியவில்லை.

ஒரு குத்து மதிப்பாக ரிப்பனையே தொடர்ந்து சென்றதில் நாங்கள் அறியாமலே மீண்டும் மலையுச்சியை நோக்கி செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தாம்.

ஆறரை மணிக்கு முழுதாக இருட்டி விட்டது. கும்மிருட்டு. ஹலோ ஹலோ ஹெல்ப் என்று கூச்சல் போட்டோம்.

மதியம் சுதா ரவியின் ஊத்தப்பமும் சுவை பரோட்டாவும் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டதில் வயிற்றை வேறு கலக்கியது. யோவ் பேராசிரி வயிறு சரியில்லையா ஏற முடியாது என்றால் இருட்டு தானே அங்க போயிட்டு வா என்கிறார்.

என்ன விளையாடுறீரா ?? என்று வந்ததே கோவம்.

இதற்கிடையில் ஒவ்வொருவரும் வீட்டுக்கு போன் செய்து வழி மாறி விட்டோம். துணைக்கு போலீசை கூப்பிட்டிருக்கிறோம் என்றது மறு முனையில் அழுகுரல் மேலும் பதட்டத்தைக் கூட்டியது.

சுற்றிலும் பார்க்கையில் இப்படித்தான் இருந்தது. இதில் இரண்டு மணி நேரம் பத்து டிகிரி குளிரில் எப்படி உட்கார்ந்திருப்பது ???

20221130133610343.png

இந்த இருட்டில் வேண்டாத ஞாபகங்கள் வேறு.

ஹாங்காங்கில் மொத்தம் 52 வகை பாம்புகள் உள்ளன. அதில் 14 வகை விஷத்தன்மை கொண்டது.

2022113013363562.jpeg

(சீன கட்டுவிரியன் முதல் மூங்கில் வைப்பர் வகை பாம்புகளாம். ஹாங்காங்கில் எந்த இடத்தில் பாம்பு பிடிபட்டாலும் மீண்டும் கொண்டு வந்து அருகாகை கடூரி பண்ணையிலும் இந்த காட்டிலும் தான் விடுவார்களாம். இருட்டில் பேராசிரி சொன்ன துணுக்குச் செய்தி !!)

அதில் எட்டு மிக தீவிர விஷமாம். அதாவது கடித்து உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லையென்றால் உயிருக்கு ஆபத்தானது என்று இணையத்தில் படித்தது.

ஒரே ஆறுதல். ஹாங்காங்கில் பாம்பு கடித்து உயிர் போனது ரிக்கார்டு படி ஒரு 20 வருடங்களுக்க்கு முன்பாம். அப்பாடா…

இருந்தாலும் இன்னொரு தகவல். ஒரு வேளை ஏதேனும் பாம்பு கடித்தால் உடனடியாக அது என்ன நிறம் எப்படி இருந்தது என்று குறித்துக் கொள்ள வேண்டுமாம். முடிந்தால் ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை. யோவ் அர்த்த ராத்திரில கைய காலவே பாக்க முடியல இது கடிச்சு போட்டோ எடுத்துகோன்னா என்னய்யா அர்த்தம் ???

பேராசிரி இதற்கு அவரிடமிருந்து மிச்ச சொச்ச பாட்டரியை வைத்துக் கொண்டு 999 அழைத்து நாங்கள் நாலு பேர் தாய் மோ ஷான் காட்டிற்குள் வழி தெரியாமல் தொலைந்து விட்டோம் எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கொஞ்சமும் பதட்டப்படாமல் நிதானமாக மிக மிக கூலாக போலீசுடன் பேசிக் கொண்டிருந்தார்.

“இல்லை இல்லை எமெர்ஜென்சியெல்லாம் இல்லை. வழி தெரியலை. இருட்டா இருக்கு. தண்ணி இல்ல. போன் இல்லை. அவ்ளோதான். யாருக்கும் காயமெல்லாம் இல்லை. வி ஆர் ஃபைன்”

சங்கீதா தான் காடு முழுவதும் அதிர இறைந்தார். யேய். வீ ஆர் நாட் ஃபைன். எமெர்ஜென்சின்னு சொல்லு. ஒரே இருட்டா இருக்கு. விளையாடாதே என்றார் பீதியுடன்.

நாங்கள் நின்றிருந்தது ஏறக்குறைய மலையில் பாதி உயரத்தில்.

போலீசிடமிருந்தும், தீயணைப்புத் துறையிடமிருந்தும் மீண்டும் மீண்டும் ஒரு ஆறு பேராவது அழைத்துக் கொண்டேயிருந்தார்கள்.

பேராசிரி அவர்களிடம் கெஞ்சாது குறையாக பாட்டரி ரொம்ப கம்மியா இருக்கு. இதுக்கு மேல கால் பண்ண முடியாது என்று இறைஞ்சினார்.

போலீஸை பொறுத்தவரை எத்தனை பேர், என்ன வயது, என்ன சாப்பிட்டீர்கள் கையில் சாப்பிட என்ன இருக்கிறது எவ்வளவு நேரம் தாங்கும் என்பது போல கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

காரணம் அவர்கள் எங்களை வந்தடைவதற்கு இரண்டு மணி நேரம் வரை ஆகும் என்பதால் தான். அன்றைய தினம் ஏகப்பட்ட கேஸ்களாம். ஒரு வேளை எமெர்ஜென்சி என்று சொல்லியிருந்தால் துரிதப்படுத்தியிருப்பார்கள். ஆனால் அது தவறு. துஷ்பிரயோகம் என்பது பேராசிரியின் கருத்து.

அவர்கள் எங்களை அதே இடத்தில் இருக்கச் சொன்னார்கள். ஆனால் எனக்குத் தான் அதில் உடன்பாடு இல்லை.

எப்படி இரண்டு முறை நான் கெஞ்சி பேராசிரி வழியைக் கேட்கவில்லையோ இந்த முறை அழுத்தமாக சொன்னேன்.

சங்கீதா போனில் 30 சதவிகிதம் பாட்டரி இருக்கிறது. அந்த வெளிச்சத்தில் நால்வரும் மெதுவாக மலையுச்சிக்கு நடந்து சென்று விடலாம். அங்கு ஏதேனும் வழி இருக்கும்.

மெதுவாக மிக மெதுவாக நடக்கத் துவங்கினோம். எங்கு கால் வைக்கிறோம் என்பது அந்த இருளுக்குத் தான் வெளிச்சம்.

பாம்பு ஒரு பக்கம் பயம் என்றால் சாதாரணமாக வழி இருக்கும் மலைப்பகுதியிலேயே சில இடங்களில் தவறி கால் வைத்தால் அதளபாதாளமாக இருக்கும். இந்த இருட்டில் அப்படி ஏதேனும் இடம் இருந்தால் என்ன செய்வது ?? வேறு உபாயம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

மலையேறி நடந்தே ஆக வேண்டும். இருக்கும் ஒரேயொரு செல்ஃபோன் வெளிச்சம் தான் ஆதாரம்.

அடிஅடியாக நடந்து மலையுச்சிக்கு செல்வதற்குள் ஒன்றரை மணிநேரங்கள் ஆகி விட்டது. சுமார் எட்டு மணிக்கு மலையுச்சிக்கு செல்லும் போது தூரத்தில் எங்களுக்காக ஒரு தீயணைப்புத் துறை வண்டியும் ஆம்புலன்ஸும் காத்திருந்தது தெரிந்தது.

மலையுச்சியிலிருந்து கீழே செல்ல வழி ???

தீயணைப்புத் துறையினர் கீழேயிருந்து அழைத்தார்கள். அங்கேயே காத்திருங்கள். ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்திருக்கிறோம் உங்களை அழைத்துச் செல்ல.

பேராசிரிக்கும் சரி எங்களுக்கும் சரி மனசு கேட்கவில்லை. வேண்டாம் அந்தளவு யாருக்கும் தேவையில்லை. வெளிச்சம் மட்டும் காட்டுங்கள் இந்த மலையிலிருந்து எப்படியாவது வழி கண்டு பிடித்து கூட்டிச் செல்லுங்கள் போதும் என்றோம்.

சுமார் எட்டு தீயணைப்புத் துறை வீரர்கள் மலையில் பாதை ஏற்படுத்திக் கொண்டு வந்தனர்.

வந்து ஊன்றிக் கொள்ள கம்பு கொடுத்து, கடுங்குளிரில் உறைந்து போயிருந்த சங்கீதாவுக்கு போர்த்திக் கொள்ள உடை கொடுத்து கையுறை கொடுத்து மெதுவாக அழைத்துச் சென்றனர்.

மலையுச்சியிலிருந்து தூரத்தில் திமிரெடுத்து தொலைந்து போன எங்கள் நால்வருக்காகவும் கடுங்குளிரில் இரவில் கிறிஸ்துமஸ் தின விடுமுறை மறந்து பத்து பதினாறு பேர் சிரமமேற்கொண்டு தேட வந்ததை நினைத்து எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.

ஒரு பக்கம் எங்களுக்கு குற்ற உணர்ச்சி வேறு இத்தனை பேரின் நேரத்தை வீண்டித்து விட்டோமே. கொஞ்சம் சமயோசிதமாக பாட்டரி பேக் வைத்திருந்தால், ஒரு டார்ச் வைத்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காதே என்று.

ஆனால் அவர்கள் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. எங்கள் உணர்ச்சி வசப்பட்ட நன்றிகளுக்கும், அதீத உணர்வுகளுக்கும் இட்ஸ் ஓகே இட்ஸ் ஓகே என்று சொல்லி விட்டு ஆம்புலன்ஸில் எங்களை ஏற்றிக் கொண்டு மலையடிவாரத்தில் மீண்டும் வந்து இறக்கி விட்டார்கள்.

அங்கே தயாதாக இருந்தது போலீஸ் கார். அதிலிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் இறங்கி எங்கள் அடையாள அட்டையையெல்லாம் சரி பார்த்து விட்டு மருத்துவமனை செல்ல வேண்டுமா என்று கேட்டனர். வேண்டாம் என்றதும் அதையும் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்த சுவடு தெரியாமல் மறைந்தனர்.

இத்தனை மீட்புப் பணிக்கும், முயற்சிக்கும் கட்டணம் ?? பூஜ்யம். பத்து பைசா கூட கிடையாது.

ஹாங்காங் அரசின் அப்பழுக்கற்ற மக்களுக்கான சேவை இது. அடுத்ததாக தொலைந்து போய் உதவி கேட்பவர்களுக்காக விரைந்தது மீட்பு ப்படை.

அடுத்த நாள் செய்தித் தாள்களில் அதே நாளில் தன் மகனுடன் மலையேற்றத்திற்கு சென்ற 61 வயது தந்தை இறந்து போன செய்தி படித்தது மனதை கனக்கச் செய்தது.

தொலைந்த வழித்தடம் இங்கே… இதை கண்டுபிடிக்க அடுத்த நாள் ஒரு மணி நேர ஆராய்ச்சி தேவைப்பட்டது……

எங்கு தொலைந்தோமோ எப்படித் தொலைந்தோமோ என்று பார்க்க வேண்டாமா என்று மீண்டும் அதே கோவிலுக்கு சென்றோம் இரண்டு நாள் கழித்து.

அதே ஐந்து குதிரைகள் மூன்று வட்டங்கள். நட்சத்திரங்கள்.

இப்போது அதன் அர்த்தம் புரிந்தது. நாங்கள் திரும்ப வேண்டிய வழி எங்களுக்கு மிக அருகே தான் இருந்திருக்கிறது. புரிந்து கொள்ளும் அல்லது தெரிந்து கொள்ளும் மனநிலையில் தான் நாங்கள் இருக்கவில்லையென்று.

இனி வார இறுதிகளில் மலையேற்றத்தின் போது பேராசிரியின் பேச்சுக்கு நேர் எதிர் பாதையில் செல்வது தான் உத்தமம்.

20230001091633251.jpg