தொடர்கள்
தொடர்கள்
மியாவ் மியாவ் பூனை - எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

20221128180547259.jpg

ஈஸிசேரில் சரிந்து அமர்ந்தபடி அன்றைய தினசரியை வாசித்துக்
கொண்டிருந்தார் சிராஜ் மன்சூர். வயது 65. தமிழ் பேராசிரியராக இருந்து
ஓய்வு பெற்றவர்.
“அஸ்ஸலாமு அலைக்கும் தாதா!” என்றபடி காலடியில் வந்து
அமர்ந்தாள் ஜாயிஷா பானு. வயது 12. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். சிராஜ்
மன்சூரின் மகன் வழி பேத்தி.
“அலைக்கும் ஸலாம் செல்லக்குட்டி!”
கால்களை இதமாக அமுக்கிவிட்டாள். கால்விரல்களில் சொடுக்கு
எடுத்தாள். நெயில் கட்டர் வைத்து நகங்களை கத்தரித்தாள்.
“என்னம்மா.. இன்னைக்கி எலி ஜீன்ஸை மாட்டிக்கிட்டு குறுக்கே
நெடுக்கே ஓடுது?”
சிரித்தாள் ஜாயிஷா பானு. “எலிக்கு பிறந்தநாள் வரப்போகுதாம். எலிக்கு
பிறந்தநாள் பரிசா என்ன வேணும்னு எலியோட தாத்தா இன்னும் கேக்கவே
இல்லையாம். அதுதான் எலி குறுக்கே நெடுக்கே ஓடுது!”
படித்த தினிசரியை மடித்து தனது இடப்பக்க தரையில் வைத்தார் சிராஜ்
மன்சூர்
“பூக்குட்டி! வருகின்ற நவம்பர் 22 உனக்கு பிறந்தநாள்னு நல்லா
தெரியும். உனக்கு இரண்டாயிரம் ரூபாய்ல ஒரு வாட்ச் வாங்கிக்
கொடுக்கலாம்னு உத்தேசித்திருக்கிறேன்!”
“வாட்ச் வேணாம் தாதா!”
“பின்ன?”
“எனக்கு ஒரு வோடபோன் நாய்க்குட்டி வளக்க வேணும்!”
முகம் மாறினார் சிராஜ் மன்சூர். “இஸ்லாமியர்கள் நாய் வளர்க்கக்
கூடாதும்மா. வேட்டையாட ஆட்டுமந்தையையும் வயல்வெளிகளையும்
பாதுகாக்க மட்டுமே நாய் வளர்க்கலாம்!”

“அச்சச்சோ.. என் ஆசை அம்பேல் ஆய்ருச்சா?”
“ரொம்ப வருத்தப்படாதே. நாய் வளர்க்கிறதுக்கு பதிலா பூனை
வளர்றேன்!”
“நாய்க்கும் பூனைக்கும் என்ன பெரிய வித்தியாசம்?”
“நாய் குரைக்கும். பூனை மியாவும். பூனையின் மியாவ் ஒரு சங்கீத
சப்தம். நாய் நம் காலுக்கடியில் கிடக்கும். பூனையோ நம் தலையில் ஏறி
விளையாடும்..”
’பூனையை பத்தி அதிக தகவல்கள் சொல்லுங்க தாதா..”
“பூனையில் பல வகைள் உள்ளன. பெர்ஷியன் பூனை, குட்டை முடி
கொண்ட பிரிட்டீஷ் பூனை, சியாமிஸ், பெங்கால் பூனை, நார்வேஜியன்
நாட்டுப் பூனை, ருஷ்யன் நீல நிற பூனை, சைபீரியன், பர்மீஸ், அமெரிக்கன்
பாப்டெய்ல் பூனைகள் என பலவகை பூனைகள் உள்ளன…”
“ஓஹோ!”
“பொதுவாக வயதுக்கு வந்த பூனைகள் ஒரு அடி உயரமும் 5.5 கிலோ
எடையும் இருக்கும். பூனைகள் வெள்ளை, கறுப்பு, நீலம், சாக்லேட், சிவப்பு
நிறங்களில் காணப்படும். பூனைகள் 12லிருந்து 17வருடங்கள் வரை உயிர்
வாழும். பூனைகள் ஆட்டுப்பால், சாலமன் மீன், பூசணி, முட்டை மற்றும்
வாழைப்பழம் சாப்பிடும். வெங்காயம் வெள்ளைப்பூண்டு சமைக்காத முட்டை,
சாக்லேட், திராட்சை பழங்கள் பூனைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்!”
“வாவ்!”
“இங்கிலாந்தில் மூன்றரை கோடி வளர்ப்பு மிருகங்கள் வளர்க்கப்
படுகின்றன. அவற்றில் ஒண்ணே கால் கோடி பூனைகள்!”
“நல்ல தகவல் தாதா!”
“இஸ்லாம் பூனையை ஒரு புனிதமான மிருகமாக அறிவிக்கிறது.
பூனைகள் சுயசுத்தம் பேணுபவை. பூனை குடித்த நீரில் ஒளு செய்யலாம்
தப்பில்லை. நபிகள் நாயகம் ‘மூஸா’ என்கிற பூனையை வளர்த்ததாக ஒரு
செய்தி உண்டு. ஒரு தடவை பாங்கு சப்தம் கேட்டு தொழ கிளம்பி
இருக்கிறார் நபிகள் நாயகம். அவரது அங்கி மீது அவரது வளர்ப்பு பூனை
மூஸா தூங்கிக் கொண்டு இருந்திருக்கிறது. அதனை தொந்திரவு செய்ய
கூடாதென மறுகி பூனை படுத்திருத்த அங்கியை மட்டும் கத்தரித்து விட்டு
மீதியை எடுத்து அணிந்து கொண்டு தொழுகைக்கு கிளம்பினாராம் நபிகள்
நாயகம். நபிகள் நாயகம் பூனை வளர்த்தற்கான ஆதாரங்கள் வலுவாக
இல்லை என பெரும்பாலானோர் கூற்று. ‘பூனைகளின் மீதான பாசம்
இறைநம்பிக்கையில் ஒரு பாதி’ என கூறும் ஒரு நபிமொழி இருக்கிறது!”
“சூப்பர்!”

“நபிதோழர் அபு ஹுரைரா பற்றி கேள்விபட்டிருக்கியா ஜாயிஷா?”
“ஓ! அபு ஹுரைரா கிபி603ல் பிறந்து கிபி 681ல் மரணித்தவர். நபிகள்
நாயகத்தின் தோழர்களில் ஒருவர். 5000நபிமொழிகளை நம்பகத்தன்மை
சான்றுடன் உலகிற்கு அளித்தவர். ஹதீஸ் பற்றி படிக்கும் மாணவர்களுக்கு
இவர் ஒரு அழகிய முன்மாதிரி!”
“சரியாக சொன்னாய் ஜாயிஷா. அபு ஹுரைரா என்றால் பூனைகளின்
தந்தை என அர்த்தம். அவர் ஏராளமான பூனைகளை வளர்த்தார். வெளியில்
செல்லும் போது விருப்பபூனையை ஜிப்பா பாக்கட்டில் போட்டு வருவாராம்!”
“ஊப்!”
“விக்டோரியா மகாராணி மற்றும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பூனை
வளர்த்தனர்!”
“சபாஷ்!”
“நபிகள் நாயகம் வளர்த்தபூனை என்ன வகை தெரியுமா? துருக்கிஷ்
அங்கேரா வகை பூனை..”
முறுவலித்தாள் ஜாயிஷா.
“பூனைகளை பராமரிப்பது சாதாரண விஷயமில்லை. தினமும்
பூனையின் ரோமங்களை சீப் வைத்து சீவி விட வேண்டும். கண்களில்
வழியும் கண்ணீரை சுத்தப்படுத்த வேண்டும். பல்துலக்கி விடவேண்டும்.
வருடம் ஒரு முறை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று காட்டி
மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பூனைகள் விளையாட பொம்மைகள்
வாங்கி குவிக்க வேண்டும்!”
“தாதா.. நீங்க சொல்லசொல்ல பூனைகள் மீது எனக்கு விசேஷ ஈர்ப்பு
ஏற்பட்டு விட்டது நான் பூனையை வளர்க்க விரும்புகிறேன். எனக்கு பிறந்த
நாள் பரிசாக ஒரு பூனையை பரிசளியுங்கள் தாதா!”
“ஜாயிஷா! உனக்கு ஒரு பெர்ஷியன் பூனை வாங்கித் தரப்போகிறேன்.
பெர்ஷியன் பூனைகளின் ஆரிஜின் மெஸ்படோமியா எனப்படும் இன்றைய
ஈரான்.. பெர்ஷியன் பூனைகளுக்கு வட்டமுகம் குட்டி குட்டி மீசை
சடைசடையாய் உடல் முழுக்க நீளமுடி!”
“பெர்ஷியன் பூனையையே எனக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிக்
கொடுத்திடுங்க தாதா.. ஐஎம் வெரி ஹாப்பி.. ஐ லவ் யூ தாதா!”
“எனக்கும் உயிர் நீதான் ஜாயிஷா!“
ரபீக் ராஜா இருவருக்கும் குறுக்கே நடந்து வந்தான். “தாதாவும்
பேத்தியும் கொஞ்சோ கொஞ்சுனு கொஞ்சுறீங்க.. நான் சின்னப் பையனா
இருந்தப்ப எனக்கு. எதாவது பிறந்தநாள் பரிசு வாங்கித் தந்திருக்கீங்களா

அத்தா? இது ஓரவஞ்சகம். ஒரு கண்ணுக்கு வெண்ணெய் இன்னொரு
கண்ணுக்கு சுண்ணாம்பா?”
“அத்தாக்களை விட தாதாகளும் நானாக்களும் உன்னதமானவர்கள்.
முதல் இன்னிங்ஸில் செய்யாமல் விட்டதை இரண்டாவது இன்னிங்ஸில்
பத்து மடங்காக செய்வோம் மகனே!”
“நல்லாருங்க.. அல்லாஹ் உங்க அன்பை முழுமையாக்கட்டும்!”
ஸ்கூட்டி பெப்பை ஸ்டாண்டிட்டு நிறுத்தினார். சிராஜ்மன்சூர்.
‘மியாவ் பெட் அனிமல் சென்டர்’ போர்டு வரவேற்றது.
உள்ளே பிரவேசித்தார். ஆனந்தமாய் அதிர்ந்தார்.
கூண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பூனைகள். ரூம் ஸ்ப்ரே நறுமணம்
நாசியை தாக்கியது.
“அஸ்ஸலாமு அலைக்கும் அத்தா!” ஒரு குண்டுப்பெண் வெளிப்
பட்டாள். திரும்பினார். “அலைக்கும் ஸலாம்!”
“என் பெயர் மைமூனா. நான் பெட்அனிமல் கடையின் உரிமையாளினி!
என்னத்தா உங்களுக்கு வேணும்!”
முறுவலித்தார். “மைமூனா! என் பேத்திக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு
பெர்ஷியன் பூனையை கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்!”
“நல்ல ஐடியா எங்ககிட்ட பெர்ஷியன் பூனைக்குட்டிகள் நிறைய
இருக்கு!”
“எங்கே காட்டும்மா..“”
ஓடிப்போய் ஒருகூண்டை தூக்கி வந்தாள். அதில் நீலநிற பூபந்துகளாய்
பெர்ஷியன் பூனைக்குட்டிகள்!
ஒரு பூனைக்குட்டியை எடுத்து சிராஜ் மன்சூரிடம் தந்தாள் மைமூனா.
பூனை மெத்மெத்தென்று இருந்தது. தடவிக் கொடுத்தார்.
பச்சைக்கண்களால் பார்த்து மியாவ் என்றது.
“க்யூட் க்யூட்!’‘
“பூனைகள் எப்பவுமே கொள்ளை அழகு!”
“இந்த பூனைக்குட்டி என்ன விலை?”
“எட்டாயிரம் ரூபாய். நீங்க பாக்க எங்கத்தா மாதிரி இருக்கீங்க. அதனால
கடைசி விலை 6000 ரூபாய்க்கு இறங்கி வரேன்.. பூனை விக்றதோட நாங்க
நிக்றதில்லை ஆறுமாதத்துக்கு பூனையின் ஆரோக்கியத்தை பராமரிக்க
உதவுவோம்.. எங்கக்கா ஒரு வெட்னரி டாக்டர் கூப்பிடுரப்ப வந்து பூனையை
பாப்பார்!”

“உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்.. அய்யாயிரம் ரூபாய்க்கு
கொடு!’‘
மூச்சு விட சிறுசிறு துவாரங்களுடன் பூனையை கிப்ட் பேக் பண்ணி
கொடுத்தாள் மைமூனா.
பிறந்த நாள்.
கேக் வெட்டி குதூகலித்தாள் ஜாயிஷா பானு.
எல்லோரும் ஆங்கிலத்தில் பிறந்தநாள் வாழ்த்து பாடினர்.
கேக் எடுத்து தாதாவுக்கு ஜாயிஷா ஊட்ட ஜாயிஷாவுக்கு தாதா
ஊட்டினர்.
கிப்ட் பேக்கை நீட்டினார் சிராஜ் மன்சூர்.
திறந்து பார்த்து குதூகலித்தாள் ஜாயிஷா பானு. பூனைக்குட்டியின்
முகத்தில் முத்தமிட்டாள்.
ஒரு மாதம் கழித்து..
ஜாயிஷா பானு பதைபதைப்பாய் ஓடிவந்து தாதாவை எழுப்பினாள்.
“தாதா! தாதா!”
“என்ன பூக்குட்டி?”
“ஒரு கனவு கண்டேன் தாதா. கனவில் அரேபிய உடைஅணிந்த
வெண்தாடி பெரியவர் வந்தார். சலாம் சொன்னார். பதில் சலாம் சொன்னேன்.
“என் பெயர் அபு ஹுரைரா..” என்றார். அவரை சுற்றி நூற்றுக்கணக்கான
பூனைகள் விளையாடிக் கொண்டிருந்தன.
“நீ ஒரு பூனை வளர்ப்பதாக கேள்விப்பட்டேன். உன் பூனை பெயர்
என்ன?”
“ஓரியோ!”
“பூனையை கட்டி பட்டினிபோட்டு கொன்ற பெண் ஒருத்தி நரகம்
புகுந்தாள் என நபிகள் நாயகம் கூறியிருக்கிறார். பூனையை அன்பாய் பராமரி.
உனக்கும் உன் பூனை ஓரியோவுக்கும் பூனைகளின் தந்தையின் வாழ்த்துகள்!”
ஒரியோவை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார்.
கையாட்டியபடியே காற்றில் மறைந்து போனார்!” என்றாள் ஜாயிஷா
பானு.
ஓரியோவுக்கு ‘கிட்டி யும்ஸ்’ தின்பண்டத்தை கொடுத்தாள் ஜாயிஷா
பானு. விரும்பி தின்னும் ஓரியோவின் தலையை தாத்தாவும் பாட்டியும்
வாக்சல்யமாய் கோதி விட்டனர்.