தொடர்கள்
கதை
அல்வாத்துண்டு சுப்புசாமி! புதுவை ரா. ரஜனி

20221117092258590.jpg

ஓவியம்: மணி ஸ்ரீகாந்தன், இலங்கை

சுப்புசாமிக்கு அல்வா என்பது மிகவும் பிடித்தமான விஷயம். அதற்குச் சில பல காரணங்கள் உண்டு.

1. அல்வாத்துண்டானது நாக்கில் வழுக்கென்று வழுக்கிக்கொண்டு வயிற்றுக்குள் போய் விழும்.

2. மெல்ல மெல்ல ‘மெல்லச்’ சுகம்.

3. மற்ற வஸ்துகள்போல கடாமுடாச் சப்தங்களை அது எழுப்பாததால், கோமுப்பாட்டியின்

சுகர் 144 எழாது.

ன்றும் அப்படித்தான். பக்கத்து வீட்டுக் கிடா மீசை திருநெல்வேலி மிலிட்டிரிக்காரர் உமாநாத், இருட்டுக்கடை அல்வாவை வாங்கிக்கொண்டு வந்தார். பக்கத்து வீட்டில் புதிதாகக் குடி வந்துள்ளவர். இன்னும் சுப்புசாமி - கோமுப்பாட்டி கதைகளை அறியாதவர். காலிங் பெல் அடித்தபோது – திறந்தது சாட்சாத் சுப்புசாமிதான்!

திடீரென்று முரட்டு மீசையைப் பார்த்ததும் திடுக்கிட்டார். பின்னர் சமாளித்து, “வணக்கமுங்கோ...!” என்றார்.

‘ஜெய் ஹிந்த்!” என்று சம்பந்தமில்லாது உளறிய உமாநாத், ”எனக்கு டிசிப்ளின் முக்கியம். எல்லாம் கரெக்ட்டான நேரத்துக்கு நடந்தாகனும். இந்த அல்வாவை மூன்று நாளைக்குள்ளே சாப்பிடணும். ரொம்ப நாள் வெச்சிருந்தா இருட்டுக் கடை அல்வா கும்மிருட்டுக் கடை அல்வாவா ஆயிடும்...!”என்று சொல்லி, கெக்கேபிக்கே என்று சிரித்து, ”அம்மா இல்லீங்களா?” என்று கேட்டார்.

“அம்மா (கிழவிதான்!) பா.மு.க.வுக்குப் (பாட்டிகள் முன்னேற்றக் கழகம்!) போயிருக்கா...” என்றார் சுப்பு அப்பாவியாக.

“சரி, அம்மாட்டே அல்வா கொடுத்ததைச் சொல்லிடுங்கோ. ஜெய் ஹிந்த்...!”

சுப்பு சல்யூட் அடித்து ஒருவழியாய் அனுப்பி வைத்தார்.

சுப்புசாமிக்கு ஒரு நல்ல பழக்கம். எதைப் பார்க்கக்கூடாதோ; எதைச் சுவைக்கக்கூடாதோ...அதை பார்ப்பார், சுவைப்பார்!

இதற்கு மறுபெயர்தான் விதி.

நெய் வாசம் வீசும் பாக்கெட்டைக் காதலாகப் பார்த்து, சீடை அளவு அல்வாத் துண்டைப் பிய்த்து, இழுத்துச் சுவைத்தார். ‘நம்ம சீயான் விக்ரம் சும்மாவா பாடினான்? “திருநெல்வேலி அல்வாடா...”ன்னு?’ என்று சிலாகித்து, தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு, பல வடிவங்களில் அதனைக் ‘கபளீகரம்’செய்தார்.

மூன்று விஷயங்களை அவர் சமாளித்தாக வேண்டியிருந்தது.

1. கோமுக்கிழவியின் பங்கு.

2, உமாநாத்தின் நீதி, நேர்மை.

3. உடனடியாக வேறு அல்வா பாக்கெட் (நைச்சியமாகப் பேசி, ராணுவ வீரர் மனைவியிடம் வாங்கிவிட வேண்டியது. ஏனெனில், புது அல்வாவுக்கு தி.வேலி உடனடியாகப் போக முடியாது. சென்னை மாநகரத்தின் டூப்ளிகேட் அல்வாவை கிழவியின் சி.பி.ஐ. மூக்கு கண்டுபிடித்துவிடும்).

ராணுவ வீரர் இல்லையென தப்பாக ஊர்ஜிதம் செய்துகொண்டு சரேலென பக்கத்து வீட்டு வரவேற்பறைவரை சுப்பு போய்விட்டார்.

உமாநாத், அந்நாளைய தனது வேட்டைத் துப்பாக்கி மூளியாகக் காட்சியளிக்கிறதே என்று விளக்கெண்ணெய் போட்டுத் துடைத்து, பின்னர் துருப்பிடித்த குண்டையும் துடைத்து, ஆத்திர அவசரத்திற்காக லோட் செய்த நேரம் அது.

துப்பாக்கியைப் பார்த்த சுப்பு அரண்டுபோய், “நான் வரேன்கோ...!” என்று நழுவப் பார்த்தார்.

“கமான், கமான் மேன். சிட் டவுன்...ப்ளீஸ் உட்காருங்க. எனக்கு சீனியர் சிட்டிசன்கள்மேலே ரொம்ப மரியாதை உண்டு. ஆனா, அதே சமயம் எந்த வயசுக்காரனாயிருந்தாலும் தப்புசெஞ்சா சுட்டுத் தள்ளிடுவேன்...!” – உமாநாத் எதேச்சையாகச் சொன்னதாக சுப்பு நினைக்காததால், அவரது கால்கள் வேட்டிக்குள் உதறத் தொடங்கின.

“பட், நான் பார்த்த சீனியர்லே நீங்க ரியலி க்ரேட்...!” என்றவர், துப்பாக்கி துடைத்த களைப்பைப் போக்க, ஷோ கேசிலிருந்த ரம் பாட்டிலை எடுத்து, அப்படியே கவிழ்த்துக் கொண்டார். “ஹி...ஹி...உங்களுக்குப் பழக்கம் இருக்காது. நாங்க ராணுவம். ஆனா, கேண்டீன்லே இப்போ ரேஷன் சிஸ்டம். அதான் அவசரத்துக்கு டாஸ்மாக்கில் வாங்கி வெச்சிருக்கேன்...!” என்று தன் ரம்மின் உலக மகா வரலாற்றையும் சொல்லி முடித்தார். சரக்கு ‘ராவாக’ இருந்ததால், மூளையின் கட்டளை வேறுமாதிரி இருந்தது. அவருக்கு தன் செத்துப்போன அப்பா சத்யேந்திர நாத் நினைவு வந்து விட்டது. “அப்பா..அப்பா...” என்று சுப்புசாமியைக் காதலாகிக் கசிந்துருகிப் பார்த்தார்.

“அப்பா, அல்வா சாப்பிட்டீங்களா அப்பா...?”

‘நல்லா சாப்பிட்டேன்’ என்று மனதுக்குள் சொல்லிய சுப்பு, ‘இந்த தண்ணிவண்டி நிதானத்தில் இல்லாதபோது அவனது மனைவியிடம் அல்வா பொட்டலத்தை வாங்கிவிட வேண்டியதுதான்’ என்று நேரிடையாக விஷயத்திற்கு வந்தார்.

“உங்க மனைவி எங்கே...?” என்று அன்பொழுகக் கேட்டார்.

‘அப்பா, தன் மகளைப் பார்க்க உரிமையோடு கேட்கிறார்’ என்று சந்தோஷப்பட்ட உமாநாத், அவள் மொட்டைமாடியில் துணி உலர்த்திக் கொண்டிருப்பதை உளறலோடு சொல்லி முடித்தார்.

சீக்கிரம் வந்த வேலையை இந்தப் பைத்தியக்காரனிடமே முடித்துக்கொண்டு, இடத்தைக் காலிசெய்ய முடிவு செய்தார் சுப்பு. இவனிடமே இன்னொரு பொட்டலம் கேட்டால் கொடுத்துவிட்டுப் போகிறான். மெல்ல...குழைவாகக் கேட்டார்: “ஹி...ஹி...கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்கப்படாது. இந்த வயசிலே இது கூடாததுதான். இருந்தாலும் மனசு அடிச்சுக்குதே. ஆசை யாரை விட்டது...?”

உமாநாத்க்கு சுப்புசாமியின் பீடிகை சரிவரப் பிடிபடவில்லை. ‘என்ன இந்தக் கிழம் போட்டிருக்கா...இல்ல நான் போட்டிருக்கேனா? வீட்டுக்குள்ளே மீனலோசனியைத் (மிசஸ் உமாநாத்) தேடுது. இப்போ...ஏதேதோ கேக்குது...வழியுது...’ என்று விபரீதமாகக் கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார். அவரது முப்பத்தெட்டு வருட தாம்பத்திய வாழ்க்கையில் முப்பதேழரை வருடங்கள் மனைவியை சந்தேகத்தோடு பார்த்துப் பழகியவர். இப்போது துப்பாக்கியை எந்த டைரக்ஷனில் பாய்ந்து எடுக்கலாம் என்று திட்டமிட்டதை சுப்புசாமியின் அபலை மூளை கிரகிக்கவில்லை. உமாநாத்தின் கைகளை உரிமையோடு பிடித்து இழுத்து கேட்டார்: “நீங்க ஓர் இராணுவ ஆசாமி. உங்க வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்தான். நீங்கோ பார்க்காத அசிங்கமா, வெட்கமா...? பல தேசத்து விஷயங்களை கேட்டிருப்பீங்க; அனுபவிச்சிருப்பீங்க. அதிலே பாருங்கோ...”

கொஞ்சம் குரலைக் குறைத்துக்கொண்டு, “வயசு ஏற ஏறத்தான் பொண்டாட்டியோட பயம் அதிகமா ஆவுது. மானம், ரோஷம், வெட்கம், சூடு, சுரணை இதெல்லாம் வாலிப வயசுக்கு மட்டுமா சொந்தம்? இந்த வயசிலேயும் உண்டு. அது உங்களுக்கே நீங்க கிழமா ஆகும்போது தெரியும். டாக்டர்கூட அட்வைஸ் பண்ணினார். இனிமே இதெல்லாம் கூடாதுன்னு. ஆனா, என் மனைவி கோமுவுக்கு எதிலும் ஒழுக்கம் இருக்கணும். ஹி... அதான் உங்க தயவை நாடி வந்திருக்கேன். எனக்கு ஏற்பாடு செஞ்சுதர முடியுமா...”

“இன்னொரு அல்வா பாக்கெட்டை... ?”என்று முடிப்பதற்குள் உமாநாத் அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, கோபப்பட்டு கட்டைத் துப்பாக்கியை அவசரத்தில் தூக்க, சுப்பு பதறிப்போய், அதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். ராணுவ வீரர், முரண்டு பிடித்து, போர் முனையில் எதிரியைக் காண்பதுபோல் சுப்புவை எண்ணிக் கொண்டார். தனது ’தாய் நாட்டின் போர்க் கருவியை மீட்க வேண்டும்’ என்ற பொறுப்புணர்வில் துப்பாக்கியை எசகு பிசகாக இழுத்து, தவறுதலாக டிரிக்கரையும் அழுத்தி விட்டார்.

‘டமார்...!’ என்று லாரி டியூப் வெடித்த ஓசை!

சுப்புசாமிக்கு முன், உமாநாத் மயங்கி விழுந்தார். பல துப்பாக்கிகள் ஏந்திய அவரது வலது தோள்பட்டையிலிருந்து கொடகொடவென ரத்தம் சொட்ட, சுப்பு வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்திருந்தாலும் இப்போது அவர் செய்தது டபிள் இமாலயத் தவறு, அவசரத்தில் ராணுவ வீரரைத் தூக்குவதற்குப்பதிலாக கட்டைத் துப்பாக்கியை கையிலெடுத்துக்கொண்டதுதான் அந்தத் தவறு! அந்த நேரம் பார்த்து கீழே வந்த மிசஸ் உமாநாத், யானையைப் போலிருந்தவள், பூனையைப்போல வீலென்று அலறினாள். ‘பக்கத்து வீட்டு பயித்தியக்காரக்கிழம் என் புருஷனைத் துப்பாக்கியால்...’ முழுவதும் யோசிக்காமல், “என்னோட பூவையும் பொட்டையும் பறிச்சுட்டியா...?” என்று அப்படியே சுப்புசாமியின்மேல் முழுபலத்தோடு பாய்ந்தாள், ஓட்டைச் சைக்கிள்மீது புல்டோசர் ஏறியமாதிரி!

ந்து நட்சத்திர விடுதி போன்று தோற்றமளிக்கும் சூப்பர் ஸ்பெஷல் மருத்துவமனை. எலும்பு முறிவு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் நல்லசிவம் தான் மட்டும் வாழ்க்கையில் ‘உடைபடாமல்’ மற்றவர்களின் எலும்பு டேமேஜ்களோடு மேலும் பல டேமேஜ்களைச் சேர்ப்பது வழக்கம்., சைனா களிமண், ஜெர்மன சில்வர் பிளேட், கெய்ரோ பிரமிட் ஸ்பெஷல் ஒட்டு மருந்து என்று நோயாளிகளைப் பயமுறுத்தி, பல லகரங்களைப் பார்த்துவிடுவதில் சாமர்த்தியசாலி.

அவர் தனது பிரத்யேக மேற்பார்வையில் சுப்புசாமியின் கண்களைத் தவிர அனைத்து பாகங்களிலும் கட்டுகளைப் போட்டிருந்தார். வாய்ப்பகுதி - உதடுகள், பற்கள் இத்யாதிகளோடு பாதிக்கப்பட்டிருக்க பேசமுடியவில்லை. ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் மூக்குப் பகுதி கட்டு சரியாகப் போடப்பட்டுள்ளதா என்று குனிந்து பார்த்து நிமிர்ந்தபோது, கோமுப்பாட்டி வந்திருந்தாள்.

“ஓ, மேடம், நீங்களா! வாங்க...டோண்ட் வொர்ரி. ஹி வில் பி ஆல்ரைட் வெரி சூன்...!”

“வெரி கைன்ட் அஃப் யூ டாக்டர். ஐ டோண்ட் நோ... வெதர் இட் ஈஸ் கரெக்ட் ஆர் நாட்...ஆனா, காலையிலேர்ந்தே ஏதோ ஆகப்போகிறது என்று மை மைன்ட் வாஸ் மர்மரிங்...!”

“ஹானரரி மாஜிஸ்திரேட்டாய் இருந்தவர் நீங்கள்! மனசாட்சியோடு பல தீர்ப்புகள் வழங்கியவர். உங்களுக்கு எதுவும் முன்னேற்பாடாகத் தோன்றுவதில் வியப்பொன்றுமில்லை...!” டாக்டர் பவ்யமாக, மரியாதையோடு கைகட்டி நின்றதைப் பார்க்க சுப்புசாமியால் தாங்கமுடியவில்லை.

“என்னதான் பிரச்சினை சாருக்கு...?”

“ஐ கான்ட் இமேஜின் டாக்டர். பக்கத்து வீட்டுக்குப் போனார். சம் க்வாரல்ஸ் ஹேப்பண்ட். உடம்பு சரியாகி, பேச்சு வந்ததும்தான் இவர்கிட்டே விசாரிக்கணும்...!”என்று கூறிய கோமுப்பாட்டியின் உஷ்ணப்பார்வையை ஆயிரம் சீன டிராகன்களின் நெருப்பு உஷ்ணத்திற்கு சுப்பு ஒப்பிட்டு, மயக்கம் வர கண்களை மூடிக்கொண்டார்.

**********

20221117092410341.jpeg

புதுவை ரா.ரஜனி.