விகடகவியில் சினிமா விமர்சனங்கள் பொதுவாக எழுதுவதில்லை.
அவதார் 2 விதிவிலக்கு. ஏனெனில் இது விமர்சனம் அல்ல. ஒரு அற்புதமான, அழகிய அனுபவப் பகிர்வு.
அவதார் முதல் பாகம் பார்த்தவர்களுக்கு அது ரிலீஸ் ஆகி 13 வருடங்கள் ஆகி விட்டது என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் அந்தப் படம் இன்னமும் மனதை விட்டு நீங்காதது தான் காரணம்.
பண்டோராவில் உள்ள நாவி குலம் என்பது ஏதோ பக்கத்து நாட்டில் நம்முடன் வசிப்பது போலவே ஒரு உணர்வை ஏற்படுத்தியது தான் இயக்குனர் ஜேம்ஸ் காம்ரூனின் சிருஷ்டியின் பலம்.
நம்மூரைப் பொறுத்தவரை எப்படி பாஹுபலியில் மகிழ்மதியை உருவாக்கி மனங்களில் தங்க வைத்தாரோ ராஜமெளலி அது போலவே தான் உலகம் முழுவதிற்கும் பண்டோரா உலகம் ஜேம்ஸ் காம்ரூனால் ஆழமாக தங்கி விட்டது. (ஜேம்ஸ் காமரூனின் பட்ஜெட் ராஜமெளலிக்கு கொடுத்ததை விட பல பல மடங்கு அதிகம்)
அவதார் கதை நடப்பது 2148ல்.
அவதார் முதல் பாகம் துவங்கி கதை சுருக்கம் போட வேண்டியதில்லை. காணொளியில் வினோத் அதை செய்திருக்கிறார் இங்கே....
அவதார் 2க் காக அவதார் ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தார்கள் என்பது சாதாரணமான வார்த்தை. அவதார் 2 வரப் போகிறது என்ற கனவுடனே இருந்தோம் என்பது தான் உண்மை.
அவதார் 1 படத்தை பல முறை பார்த்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள்.
அவதார் 2 படம் மூன்று மணி நேரம் 13 நிமிடங்கள். வெளிநாடுகளில் நம்மூர் போல பாப்கார்னும் கோகோ கோலாவும் விற்பதற்காகவும் சுச்சு போவதற்காகவும் இடைவேளை விடுவதில்லை. காரணம் இது போன்ற 3 மணி நேர படங்கள் குறைவு. படம் டைட்டில் கார்டு போட்டு ஆரம்பித்தால் கடைசியில் எண்ட் கார்டு போடும் வரை ஒரே மூச்சில் பார்க்க வேண்டும்.
இது பற்றி ஜேம்ஸ் காம்ரூனின் காமெண்ட் அடிக்கும் போது நடுவில் யாராவது பாத் ரூம் செல்ல வேண்டியிருந்தால் படத்தின் காட்சியை தவற விடுகிறோம் என்று வருந்த வேண்டாம். ஏனென்றால் அடுத்தடுத்த முறை நீங்கள் வரும் போது அதை பார்த்து விடலாம் என்றிருக்கிறார்.
ரிபீட் ஆடியன்ஸ், தன் படைப்பின் மீது அவ்வளவு நம்பிக்கை.
உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவதார் மோஷன் காப்சர் முறையில் நடிகர்களுக்கு ஒரு விதமான ஒயர்களை பொருத்தி உருவாக்கப்பட்ட கேரக்டர்கள் தான் படம். கோச்சடையான் இப்படி எடுக்கப்பட்டது தான். மன்னிக்கவும். அவதாருடன் அதை டெக்னிகலாக ஒப்பிடுவதே தவறு. புரிதலுக்காக மட்டுமே.
மோஷன் காப்சர் செய்வது சாதாரண விஷயம் தான். அது போலவே தான் நீருக்கடியில் படப்பிடிப்பு நடத்துவதும். ஆனால் இரண்டையும் ஒரு சேர செய்வது சாதாரண விஷயமல்ல.
அப்படி அவதாருக்காக ஒன்றரை வருடங்கள் நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாம். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு கூட அவர்கள் முச்சை அடக்கி நடிக்க வைக்கும் கடும் பயிற்சிக்குப் பின் தான் அவதார் 2 பிறந்திருக்கிறது. படப்பிடிப்பின் போது ஜேம்ஸுக்கு மூச்சு முட்டி சுவாசிக்க முடியாமல் ஆக்சிஜன் டாங்கில் கோளாறாகி அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கிறார்.
அவதார் 2க்காக மன்ஹாட்டன் பீச் அருகில் 120 அடி நீளம், 60 அடி அகலம் 30 அடி ஆழத்தில் பிரம்ம்மாண்டமான நீர் தொட்டி தயாரிக்கப்பட்டு அதில் தான் உள்ளே படப்பிடிப்பு நடந்திருக்கிறது. உயிரைப் பணயம் வைத்து செய்த சாகசம்.
இன்னொரு உபதகவல் இந்த 13 வருட இடைப்பட்ட காலத்தில் ஜேம்ஸ் காம்ரூனே மாரியானா டிரென்ச் என்று சொல்லப்படும் பசிஃபிக் பெருங்கடலில் உள்ள மிக மிக அதி ஆழமான பகுதிக்கு நீர்மூழ்கி கப்பலில் சென்று அவதார் 2க்காக தயாராகியிருக்கிறார். இப்படி ஒரு அர்ப்பணிப்பு இல்லையென்றால் அவதாரை உருவாக்க முடியாது.
அவதாரைப் பொறுத்தவரை மனித கேரக்டர்கள் இப்படி கம்ப்யூட்டர் கிராஃபிக்சில் உருவாக்கப்பட்ட கேரக்டர்களுடன் நடிப்பது தான் ஹைலைட். ஒன்றாவது பாகத்திலும் சரி, இந்த இரண்டாவது பாகத்திலும் சரி விஷுவல் எஃபெக்ட்ஸ் தான் படத்தின் ஹீரோ.
கதை, திரைக்கதை, வசனம் இதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் என்றாலும், அதற்காக கதை, திரைக்கதை விறுவிறுப்பாக இல்லையென்றால் மூன்று மணி நேரங்கள் காட்டையும், மீன் தொட்டியையும் வெறிக்க வெறிக்க பார்த்து விட்டு வரமுடியுமா என்றும் யோசிக்க வேண்டும்.
அவதார் 2 பொறுத்தவரை என்னுடைய அனுபவம் உள்ளே நுழைந்ததும் எப்படி 3 மணி நேரம் அதிலும் இரவுக் காட்சியில் உட்கார்த்தி வைக்கப் போகிறார்களோ என்று ஒரு சின்ன அச்சம் இருந்தது உண்மை.
எல்லாம் படம் துவங்கும் வரை தான். இந்த வாக்கியம் கொஞ்சம் மிகையாக கூட தோன்றலாம். ஆனால் படம் முடியவே கூடாது என்று தான் தோன்றியது. அந்த பண்டோரா காடு, அங்கிருந்து ஜாக் சல்லி தன் நாவி குல மனைவி நெய்த்ரியுடனும் குழந்தைகளுடனும் தன் குடும்பத்தை கர்னல் குவாட்ரிசிடமிருந்து காப்பாற்ற கடல் உலகிற்கு வருவதும் காண 3 D கண் கொள்ளாக் காட்சி.
இந்த 3 டி என்றதும் முக்கியமான ஒரு விஷயம். நல்ல சீட்டை தேர்ந்தெடுங்கள். அதாவது ஸ்கிரீனுக்கு இரண்டு பக்கமும் உள்ள சுவர் நம் கண்களுக்கு தெரியக் கூடாது அப்படியாப்பட்ட சீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் அந்த முப்பரிமாண எஃபெக்டில் தண்ணீருக்கள் இருப்பது போலவும் ஜாக் சல்லி குடும்பத்துடன் ஒரு மூன்று மணி நேரம் கொஞ்சமும் இடைவிடாமல் பயணித்தது போலவும் ஒரு உணர்வு சத்தியமாக வரும்.
வழக்கமாக எல்லா சினிமாக்களும் 24 fps என்று சொல்வார்கள் அந்த பிரேம் ரேட்டில் தான் எடுக்கப்பட்டு திரையிடப்படும். அதாவது ஒரு விநாடிக்கு 24 பிரேம்கள். ஆனால் அவதார் 2 ல் ஜேம்ஸ் காம்ரூன் அதை 48 fps என்று வைத்திருக்கிறார். சாதாரணமாக நாம் இதை கவனிப்பது மிக மிக சிரமம். ஆனால் சண்டைக்காட்சிகளிலும் துரத்தும் காட்சிகளிலும் இந்த பிரேம் ரேட் அதிகரிக்க வைத்தது காட்சிகளை ஜெர்க் இல்லாமல் படத்தில் இழையோடுவதற்காக செய்திருக்கிறார். அதை மற்ற காட்சிகளையும் 24 பிரேம்களில் எடுத்து அதை இரட்டிப்பாக்கி ஏதோ ஒரு கண்கட்டு வித்தை செய்திருக்கிறார் ஜேம்ஸ். விளைவு துரத்தும் காட்சிகள் கூட கண்ணை சிரமப்படுத்தாமல் காட்சிகளூடே பயணிக்க முடிகிறது.
படத்தின் பட்ஜெட் நம்மூர் காசுக்கு சுமார் 4000 கோடி. அவதார் முதல் பாகத்திற்கு 2500 கோடி. வசூலித்தது பத்து மடங்கு. அவதார் 2 அதை மிஞ்சும் என்கிறார்கள்.
உலகிலேயே 52,000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆவது அவதார் 2 வின் சாதனை.
(ஜேம்ஸ் காம்ரூனின் திரைப் பயணம்)
ஜேம்ஸ் காம்ரூனின் மிக மிக முக்கியமான திரைப்படம் டைட்டானிக். இதை எழுதி இயக்கியவர் ஜேம்ஸ். அவரை இந்த ஒரு படத்திற்காகவே பல நூற்றாண்டுகள் சினிமா துறை அவரை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
அவதார் 2வில் டைட்டானிக்கின் பாதிப்பு கொஞ்சம் இருப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது.
மேலும் அவதாரில் ஒரு சிலரின் கேள்வி ஒரு குடும்பத்தை காப்பாற்ற இன்னொரு குலத்தையே வம்பில் மாட்டி விட வேண்டுமா ? அதற்கு, ஒரு தகப்பனின் முதல் கடமை அவன் குடும்பத்தை காப்பாற்றுவது தானே என்றும் பதில் சொல்கிறது ஒரு கூட்டம்.
மற்றபடி சென்ற பாகத்தில் இறந்து போன வில்லன் தான் இந்த பாகத்தில் மீண்டும் ரிட்டர்ன். அவருக்கு ஒரு மகன் செண்டிமெண்டை வைத்து படத்தை அடுத்த 3, 4 பாகங்களுக்கு எதிர்பார்க்க வைத்து சஸ்பென்ஸ் கிளப்பியிருப்பது அவதார் ரசிகர்களை பரவசப்படுத்துகிறது.
ஏனெனில் பண்டோரா என்ற அற்புதமான, மயக்கும் காட்டுக்குள் இருந்து, தண்ணீர் உலகை சிருஷ்டித்த, புதிய கற்பனை உலகத்தில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அதிசய மிருகங்களையும், செடி கொடி மலர்களையும், மனிதர்களையும், பறவைகளையும், இடத்தையும் பார்க்க வைத்த ஜேம்ஸ் அடுத்ததாக எங்கெங்கு அழைத்து செல்வாரோ என்ன உருவாக்குவாரோ என்ற எதிர்ப்பார்ப்பு இப்போதே எகிறிப் போயிருக்கிறது.
மற்றுமொரு அழகியல் தண்ணீருக்கு அடியில் ஒரு வேளை பேசுவது போல எதும் சேஷ்டை செய்யாமல், ஒரு சைகை பாஷையில் பேசிக் கொள்ளும் அழகு. அந்த சைகை பாஷையில் அவர்களிடம் அந்தப் பெரிய சுறாவும் புரிந்து கொள்வது படு யதார்த்தம்.
அவதாரில் கர்ப்பிணியாக மெட்கைனா என்ற குலத்தின் தலைவியாக வரும் ரோனல் என்ற பெண்ணை கவனிக்க தவறாதீர்கள். அது வேறு யாருமல்ல. டைட்டானிக்கில் ஜாக்கின் காதலியாக வந்த நம்ம ரோஸ் தான். கேட் வின்ஸ்லட் தான் அந்த கேரக்டராக நடித்தது. ஒரு கர்ப்பிணியை இப்படி ஹாலிவுட்டில் நடிக்க வைத்திருப்பது இது தான் முதல் முறையாம்.
(ரோனல் மெட்கைனா குலத்தின் தலைவியாக நம்ம கேட் வின்ஸ்லட் )
(ஜாக் சல்லியாக சாம் வொர்த்திங்டன், நெய்திரி யாக ஜோ சல்தானா. )
(ஸ்பைடராக ஜாக் சாம்பியன். இந்த கதாபாத்திரம் தான் மூன்றாவது நான்கவது அவதாருக்கு முக்கியமாகப் போகிறது என்று சொல்லப்படுகிறது)
இந்த வாரம் வெளியான அவதார் 2 கீழேயுள்ள சாதனையை முறியடிக்குமா ?? இது வரை அவதார் 1 தான் உலகிலேயே அதிகமாக வசூலித்த படம்.
சும்மா ஒரு ஒப்பீடுக்கு நம் இந்திய திரைப்படங்களின் வசூல் விவரம். (முதல் பத்து இடங்கள் மட்டும்) (ஹாலிவுட்டையும் இந்திய சினிமாவையும் ஓப்பிடலாமா என்று கேட்பவர்களுக்கு, நம்ம ராஜமெளலிக்கு ஒரு ஹாலிவுட் கம்பெனி இத்தனை பட்ஜெட்டைக் கொடுத்தால் அவரால் மேலே உள்ள பட்டியலில் முதல் இடத்திற்கு வர முடியும் என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும். அவதாருக்காவது மெனக்கெட வேண்டும். ராஜமெளலியிடம் நம்ம இந்திய இதிஹாசங்களே போதும். உலக சினிமாவை உலுக்க. தேவை அவருக்கு பட்ஜெட் மட்டும் தான்)
அவதாரின் இரண்டு புள்ளி ஒன்பது பில்லியன் டாலர்களை அவதார் 2 தாண்டுமா என்றால், இன்றைக்கிருக்கும் நிலையில் எளிதாக தாண்டும் என்றே தோன்றுகிறது.
வசூலை விடுங்கள், அவதார் தொட்ட விஷயம் தான் அதை உச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறது. இயற்கைக்கும் மனித சுயநலத்திற்குமான போராட்டம்.
இயற்கைக்கு எதிராக மனிதனின் கொலை வெறித்தாண்டவத்தை அவதாரில் பார்க்கும் போது குலை நடுங்குகிறது. அதிலும் அத்தாம் பெரிய மீனை கொடூரமாக சித்ரவதை செய்வது, மனித குலம் இந்த பூமி தனக்கானது மட்டுமே என்று எண்ணிக் கொண்டு செயல்படும் கிராதகத்தனத்தை தோலுரிக்கிறது.
எப்படியோ அவதார் 2 ஒரு முறையல்ல பல முறை நீங்கள் பார்க்கப் போகும் படம்.
சரி ஐமேக்ஸ் இல்லாமல் 3டி இல்லாமல் இந்த படம் எப்படி இருக்கும் என்று யோசித்தால், அதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
இப்போதைக்கு.....எதிர்மறையான விமர்சனங்களை புறந்தள்ளி விட்டு....
அவதார் 2 அனுபவத்திற்கு குடும்பத்துடன் ஐமேக்ஸ் அல்லது 3டியில் பார்க்க தயாராகுங்கள். !!
ஒரு புதிய உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.
Leave a comment
Upload