தொடர்கள்
ஆன்மீகம்
பாரதத்தின் மலைக் கோவில்கள் ! -9 திருச்செங்கோட்டு மலை, தமிழ்நாடு!! அல்லல் போக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில்!!! - ஆரூர் சுந்தரசேகர்.

பாரதத்தின் மலைக் கோவில்கள் ! -9

அல்லல் போக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில்


தேவாரப் பதிகங்களில் கொடிமாடச் செங்குன்றூர் என்று பாடப்பெற்ற சிவஸ்தலம் தற்போது திருச்செங்கோடு என்று அழைக்கப்படுகின்றது. திருச்செங்கோடு என்பதற்கு “அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை” என்றும், “செங்குத்தான மலை” என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது. கொங்கு நாட்டில் காவிரி நதியின் வடகரையில் அமைந்திருக்கும் தொன்மை மிகு, சிவதலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

அர்த்தம் என்றால் பாதி எனவும், நாரீ என்றால் பெண் எனவும், ஈஸ்வரன் என்றால் சிவன் எனவும் பொருள்படும் (அர்த்த+நாரீ+ஈஸ்வரர்). இறைவன் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் இத்தலத்தில் பெண்ணாகவும், ஆணாகவும் இரண்டற கலந்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.

சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவமில்லை என்பதற்கேற்ப தன் இடபாகத்தை உமையவளுக்குத் தந்து, சிவபெருமானுக்குச் சக்தியாகவும் உலகுக்கே சக்தியாகவும் காட்சியளிக்கின்றார். இம்மலையின் தோற்றம் தூரத்திலிருந்து காண்பவர்களுக்குச் சிவலிங்கத்தின் அமைப்பைப் போன்று காட்சியளிக்கின்றது. கீழ்ப்பகுதி ஒரு பெரும்பாம்பு கீழ்த்திசையில் தனது பெரும்படத்தை அகல விரித்து இரு கூறாக உயர்ந்தும் ஒரு புறத்தில் பாம்பின் உடல் போலச் சிறுத்திருப்பது போலவும் காட்சியளிக்கின்றது.
இம்மலை சிவப்பு மஞ்சள் கலந்த நிறமாகவும் தோன்றுகின்றது. மலை சிவந்த நிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி எனப் பல பெயர்களும் உள்ளது. சுமார் 350 ஏக்கர் நிலப்பரப்பில் கடல் மட்டத்திற்கு மேல் 2000 அடிகளை உடைய இத்திருமலை கோவிலானது கோவில் அடிவாரத்திலிருந்து 650 அடி உயரத்தில் 1206 படிகளை உடையது. மேலும் மலைக் கோயிலுக்கு செல்ல 3 கிலோமீட்டர் கொண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் எனச் செல்லும் வகையில் இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் மூலவர் ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்ற பெயரிலும், அம்பாள் ‘பாகம்பிரியாள்’ என்ற பெயரிலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இத்திருக்கோவில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர் எனப்படும் முருகன், ஆதி கேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சந்நிதிகள், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி பரிவார தெய்வங்கள் என மூன்று தனித்தனி கோவில் அமைப்புடன், ஒரே திருக்கோவிலாய் அமையப் பெற்ற திருத்தலம்.

அல்லல் போக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில்

ஸ்தல புராணம்:
திருச்செங்கோடு மலை உருவான புராணம்:
திருச்செங்கோடு அழகுமிக்க சிவந்த நிறம் வாய்ந்த மலை. இம்மலையின் தோற்றம் குறிப்பாக மலையின் தோற்றத்தைத் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்குச் சிவலிங்கத்தின் அமைப்பைப் போன்று காட்சியளிக்கின்றது. கீழ்ப்பகுதி ஒரு பெரும்பாம்பு கீழ்த்திசையில் தனது பெரும்படத்தை அகல விரித்து இரு கூறாக உயர்ந்தும் ஒரு புறத்தில் பாம்பின் உடல் போலச் சிறுத்திருப்பது போலவும் காட்சியளிக்கின்றது.
ஆதி சேஷனும் வாயு பகவானும் தங்கள் தங்கள் பலத்தைக் காட்ட நேர்ந்த போட்டியில், மேரு மலையின் உச்சியை பலம் கொண்ட மட்டும் ஆதிசேஷன் அழுத்திப் பிடிக்க, வாயுதேவன் அந்தப் பிடியினை தளர்த்திட வேண்டும் என்பதற்கு இருவருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம். இதன்படி வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து இரத்தம் கொட்டி, மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வர். இம்மலைக்கு நாககிரி, வாயுமலை என்றும் பெயர்கள் உண்டு.

பிருங்கி முனிவர் வழிபட்ட அர்த்தநாரீஸ்வரர்:
ஒரு சமயம் கயிலை மலை மீது பார்வதி தேவியுடன், சிவபெருமான் அமர்ந்திருந்தார். அப்பொழுது சிவனைக் காண வந்த பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்கி பார்வதி தேவியை வணங்காமல் வலம் வந்தார். அதனால் பார்வதி தேவி கோபமடைந்து, பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் இரத்தம் நீங்குமாறு சாபமளித்தார். பிருங்கி முனிவர் சதையும் இரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார். சிவபெருமான் பிருங்கி முனிவர் தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்று, மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார். ஊன்று கோலினை பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து, சிவனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார். இதையறிந்த சிவன், "நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை' எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது. மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது. இருவரும் இணைந்த வடிவம் "அர்த்தநாரீஸ்வரர்' எனப்பட்டது. இந்த வடிவத்துடன் அவர் பூலோகத்திற்கும் வந்து சில ஸ்தலங்களில் குடிகொண்டார். அதில் ஒன்றே திருச்செங்கோடு. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பிருங்கி முனிவருக்கென சிறப்பு வழிபாடு உள்ளது. அர்த்தநாரீஸ்வரர் தொன்மத்துடன் பிருங்கி முனிவருக்குத் தொடர்பு உள்ளதால், இச்சிவாலயத்தில் பிருங்கி முனிவரின் உற்சவர் சிலை வழிபாடு செய்யப்படுகிறது.

கோயில் அமைப்பு:

அல்லல் போக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில்


திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல் செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்றால் பல சிறப்பு அம்சங்கள் கொண்ட அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலை அடிவாரப் பகுதியை அடைந்து விடலாம். மலை அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை 1206 படிகளைக் கொண்டுள்ளது. மேலும் மலைக் கோயிலுக்குப் பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் எனச் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
முதற்படியில் விநாயகப் பெருமானை வணங்கி நாம் படியேறத் தொடங்கலாம். அருகிலேயே ஆறுமுகப் பெருமானது கோவில் அமைந்துள்ளது. படிகளேறிப் போகும்போது, வழியில் இளைப்பாறுவதற்கு மண்டபங்கள் உள்ளன. இவற்றுள் தைலி மண்டபம் அருகில், நந்தி ஒன்று இருக்கிறது. இந்த நந்தி மீது பக்தர்கள் பலர் வெண்ணெய் பூசுகிறார்கள். சற்றுத் தள்ளி, கிட்டத்தட்ட 60 அடி நீளத்தில் ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் மிகப் பிரமாண்டமாய் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் தன்னை ஆபரணமாகச் சுமந்து கொண்டுள்ள சிவனின் ஆவுடையார் உருவினை சுமந்து கொண்டுள்ள ஆதிசேஷனின் நாகர் உருவினை காணலாம். நெடும் பாறையிலேயே வடித்தெடுக்கப்பட்ட இந்நாகர் உருவமே நாகர் மலையின் முதலிடமாகும். இன்றைக்கும் மக்கள் இந்த நாகர் சிலைக்குக் குங்குமம், சிகப்பும் தூவிச் சூடம் ஏற்றி தீபாராதனை செய்தும் சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் வைத்தும் வழிபடுகிறார்கள். வாகன பாதையில் வாகனத்தில் சென்று நாகர் பள்ளம் என்று அழைக்கப்படும் பகுதி வரை சென்று நாக தெய்வத்தை வழிபடலாம். பின் உயரே சென்றால் அறுபதாம்படி என்னும் சத்தியவாக்குப் படிகள் மிகச்சிறப்பு வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதிமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்தது.
இந்தப் படிகளில் நின்று செய்யப்படும் சத்தியத்திற்கு அளவற்ற மதிப்பு என்பது நம்பிக்கை. இந்தப் படிகளின்மேல் நின்று யாரும் பொய்யாகச் சத்தியம் செய்யமுடியாது. பல்வேறு சண்டை சச்சரவுகள், வழக்குகள் இந்தப் படிகளின் மேல் செய்யப்படும் சத்தியத்தினால் முடிவுக்கு வருகின்றன. இந்த சத்தியவாக்குப் படிகளின் முடிவில் வடக்கு வாசல் இராஜகோபுரம் கிட்டத்தட்ட 84.5 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தென்திசைகளிலும் இக்கோயிலுக்கு வாயில்களுண்டு. அவற்றுள் தென் திசை வாயிலுக்கு மட்டும் சிறுகோபுரம் உள்ளது.
அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவப் பெருமாளுக்கு தனித்தனி சந்நிதி இக்கோயிலில் அமைந்துள்ளன. இக்கோயிலின் மூலவர் அர்த்தநாரீஸ்வரர் கருவறை மேற்கு நோக்கியுள்ளது. அர்த்தநாரீஸ்வரர் கருவறையினை அடுத்துள்ள முன்மண்டபத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது. மேலும் இக்கோயிலில் செங்கோட்டு வேலவர் சந்நிதி, அர்த்தநாரீஸ்வரர் சந்நிதிக்குத் தென்புறம் கிழக்கு நோக்கிய நாரி கணபதி சந்நிதி, தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற இலிங்கத்துடன் நாகேசுவரர் சந்நிதி, தென்புறத்தில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி தாயார், பூமா தேவி தாயார் உடனுறை ஆதிகேசவ பெருமாள் சந்நிதி அமைந்துள்ளது.
இக்கோயிலின் மண்டபத்தூண்கள் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவையாகக் காட்சியளிக்கின்றன. நாரி கணபதி சன்னதிக்கு அருகே தாண்டவப்பத்திரை விலாச மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும், ஆலங்காட்டுக் காளியும் எதிர் எதிரே அமையப் பெற்றுள்ளன. இங்கு அமைந்துள்ள நடராஜர் சன்னதிக்கு அருகே தலவிருட்சமான இலுப்பை மரம் உள்ளது. பொதுவாக எல்லா ஆலயங்களிலும் சக்தி நிலைகள், மூலஸ்தான கருவறை, கொடிமரம் என இவற்றிற்கு அடுத்து தலவிருட்சம் மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோவிலில், நடராஜருக்கும், சஹஸ்ர லிங்கத்திற்கும் இடையே இக்கோவில் தல விருட்சமான இலுப்பை மரம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு அமைப்பாகும். பக்தர்கள் தங்களது வாழ்வு வளம் பெற இந்த புனித மரத்தினையும் சுற்றிவந்து வழிபட்டு நலம் பெறுகின்றனர். இந்த இலுப்பை மரத்தை அடுத்து பஞ்ச லிங்கங்கள், விஸ்வநாதர், மல்லிகார்ஜுனர், தென்முகக் கடவுள், கொற்றவை, சூரிய பகவான், நாக ராஜா, பைரவ மூர்த்தி போன்ற பரிவார தெய்வங்களின் சந்நிதிகள் அமையப்பெற்றுள்ளன. ஒரு பகுதியில் 63 நாயன்மார்களின் சிலைகளும் வரிசையாக வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இத்திருக்கோவிலின் கிழக்கு திசையில் சுமார் 350 அடி உயரம் ஏறிச் செல்ல, சிறு குன்றின் உச்சியில் பாண்டீஸ்வரர் திருக்கோவிலை அடையலாம். உச்சி பிள்ளையார் கோயில் எனவும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. வந்தியா பாடன சிகரம் என்றும் வேறொரு பெயர் உண்டு.

செங்கோட்டுவேலவர் சந்நிதி:
இது சிவன் கோயில் என்றாலும் இங்குச் செங்கோட்டு வேலவருக்கு அதாவது முருகருக்குச் சிறப்பு அதிகம்.
செங்கோட்டுவேலவர் அழகான நின்ற திருவுருவம். கிழக்கு நோக்கிய சந்நிதி. வலக்கையில் வேலை ஊன்றி இடக்கையை இடுப்பில் ஊன்றியவாறு நின்றநிலையில் காட்சியளிக்கின்றார்.
வெள்ளைப் பாஷணத்தில் ஆன சுயம்பு மூர்த்தி. உளிபடாதது விடங்கம் - அடியில் சதுரபீடம். சுவாமியின் நெற்றில் பள்ளம் - சந்தனத்தை அப்பியுள்ளார்கள் திலகமாக, தலையில் ஜடாமகுடம் இடக்கையில் சேவற்கொடி, செங்கோட்டுவேலவர் உற்சவமூர்த்தி கிருத்திகை நாள்களில் தங்கக் கவசம் சார்த்தி, தங்கமயிலேறித் தங்கக்காவடியுடன் புறப்பாடு நடைபெறுகின்றது.

அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி:
அர்த்தநாரீஸ்வரர் மூலவர், நின்ற திருமேனி - (இலிங்க வடிவமில்லை) மேற்கு நோக்கிய சந்நிதி, சுமார் 6 அடி உயரத்தில், உளி படாத சுயம்புத் திருமேனியாகப் பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள். முழுவடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
மூலவரின் காலடியில் குளிர்ந்த நீர் சுரக்கின்றது. இது தேவ தீர்த்தம் எனப்படுகிறது. இது எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரைத் தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. மூலவர் முன்னால் மரகதலிங்கமும், பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது.
அர்த்தநாரீஸ்வரர் உற்சவமூர்த்தி மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்பக்கத்தில் (வலம்) கையில் தண்டாயுதம், பெண்பக்கத்தில் (இடம்) கை இடுப்பில் வைத்த அமைப்பு, மார்பில் பெண் பக்கத்தில் கொங்கை, திருவடிகளில் ஒன்றில், சிலம்பு மற்றொன்றில் கழல், கண்களில் கூட ஆண், பெண் பாக வேறுபாடு ஒரு மயிரிழையில் அகலமாகவும் குறுகலாகவும் காட்டப்பட்டுள்ளன. வைகாசி விசாகத்தன்று இவருக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி:
சிவன் கோயிலில் பெருமாள் இருப்பது விசேஷம். ஆதிகேசவப் பெருமாள் கிழக்கு நோக்கிய சந்நிதி. ஸ்ரீ தேவி, பூதேவியுடன் உற்சவத் திருமேனியும் உள்ளது. இச்சந்நிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.

ஸ்தல சிறப்பு:

அல்லல் போக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில்


மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என மூன்றும் சிறப்புடன் அமையப்பெற்ற திருத்தலம். சிவனும் சக்தியும், அம்மையும் அப்பனும் இணைந்து கலந்த நிலையில், அம்மையப்பன் எனும் தோற்றத்தில் இறைவன் எழுந்தருளி உள்ளது இத்திருக்கோவிலின் பெருஞ்சிறப்பு. செம்மலை, மேருமலை, சிவமலை, நாகாசலம், பனிமலை, கோதைமலை, அரவகிரி, பிரம்மகிரி, வாயுமலை, கொங்குமலை, நாககிரி, வந்திமலை, சித்தர்மலை, சோணகிரி, தந்தகிரிமுதலான பல சிறப்புப் பெயர்களையும் உடையதாக இத்தெய்வத் திருமலை அழைக்கப்படுகிறது.
அர்த்தநாரீஸ்வரர் சதயம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக இருப்பதால், இந்நாளில் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இவரை வணங்கி வரலாம்.
அன்னை பார்வதி தேவி புரட்டாசி மாத வளர்பிறை தசமியில் தொடங்கி ஐப்பசி கிருஷ்ண பட்ச சதுர்த்தசி நாள் வரை மரகதலிங்கத்தைக் கேதார கௌரி என்னும் திருநாமத்துடன் வழிபட, நோன்பின் விளைவாக, சிவனிடமிருந்து பிரிக்கப்பட முடியாத வகையில், வாமபாகத்தைப் பெற்று பாகம்பிரியாள் என்று பெயர் இங்கு தான் பெற்றார்.
தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் என பல்வேறு தெய்வீக நூல்களில் இத்திருக்கோவில் போற்றி பாடப்பட்டுள்ளது. இங்குச் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 274 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்களில் இது 208 வது தேவாரத்தலம் ஆகும். இறைவன் அர்த்தநாரீஸ்வரரைத் திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107வது திருப்பதிகத்திலும், திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல் மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்றது இத்தலம்.

கல்வெட்டு:
பரகேசரி வர்மனான முதலாம் இராஜராஜன், மதுரை கொண்ட முதற் பரகேசரிவர்மன், சுந்தரபாண்டிய தேவன், சொக்கப்பநாயக்கன், சொக்கலிங்க நாயக்கன், மைசூர் கிருஷ்ணராஜ உடையார் முதலிய அரசர்களின் கல்வெட்டுக்கள் இங்குக் காணப்படுகின்றன.

சிற்பக்கலை:
இக்கோயிலின் தூண்கள், மண்டபச் சுவர்களென அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளி மீது வீரர்களைத் தாங்கிய ஒற்றைக் கல்தூண்கள் சிற்ப வேலைப்பாடு மிக்கவை. செங்கோட்டு வேலவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு அந்தத் தேரினை ஆமை எடுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லிலான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தில் கூரைப் பகுதியில் கல்லிலான தாமரை மலர்கள், மலை, கிளிகள், கற்சங்கிலிகள் பறவைகள், முனிவர்கள் போன்ற ஒவ்வொரு சிற்பங்களின் காணப்படும் கற்பனை வளத்தினையும் நுண்ணிய அழகிய வேலைப் பாட்டினையும் காணமுடிகின்றது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிற்பங்கள் முன்னோர் நமக்கு விட்டுச் சென்றுள்ள கலைச்செல்வங்கள் ஆகும்.

அல்லல் போக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில்

திருவிழாக்கள்:
மகாசிவராத்திரி, சித்திரைப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகப் பெருந்திருவிழா, புரட்டாசி கேதார கௌரி அம்மன் விரதம், கார்த்திகை தீபம், மாசி மகம் விழா, பங்குனி உத்திரம் ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன.
வைகாசி விசாகத்தேர்த் திருவிழா ஆண்டுதோறும் தமிழ் மாதமான வைகாசியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.
அன்று அர்த்தநாரீஸ்வரர் உற்சவமூர்த்தி நகருக்குத் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
வாகனங்கள் மலையேற, மாலை 5.30 வரை மட்டுமே அனுமதி.

பிரார்த்தனை:
கணவன் மனைவி மன ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், இராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். சந்தான பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் குழந்தை பிறக்கும் என்று சொல்லப்படுகிறது.

நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறியவுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கோயிலுக்குப் போவது எப்படி:
இக்கோயில் நாமக்கல்லில் இருந்து 37 கி.மீ தொலைவிலும், ராசிபுரத்தில் இருந்து 36 கி.மீ தொலைவிலும், சேலத்தில் இருந்து 48 கி.மீ தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 22 கி.மீ தொலைவிலும், கரூரில் இருந்து 61 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து 130 கி.மீ தூரத்திலும் அமையப்பெற்றுள்ளது.
விமானம் மூலம்: சேலம் விமான நிலையம் 50 கி.மீ தொலைவில் உள்ளது. கோயம்புத்தூா் சர்வதேச விமான நிலையம் 130 கி.மீ தொலைவில் உள்ளது
இரயில் மூலம்: ஈரோடு இரயில் நிலையம் 25 கி.மீ தொலைவில் உள்ளது நாமக்கல் ரயில் நிலையம் 30 கி.மீ தொலைவில் உள்ளது
சாலை வழியாக: நாமக்கல்,சேலம்,ஈரோடு பகுதிகளில் இருந்து செல்லலாம்

முகவரி:
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு,- 637211, நாமக்கல் மாவட்டம்.

அல்லல் போக்கும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு அருள் பெறுவோம்!!