தொடர்கள்
பொது
மகா பெரியவா 108 ஓவியங்கள் - புத்தக வெளியீட்டு விழா - வேங்கடகிருஷ்ணன்

20221116223945785.jpg

எந்த ஒரு கலை சம்பந்தமான நிகழ்வு,அல்லது ஆன்மீக நிகழ்வு எங்கு நடந்தாலும் நிச்சயம் அங்கு போக வேண்டும் என்று விரும்புபவன் நான். என்னைப்போலவே விரும்புபவர்களும் நிறைய பேர் சென்னையில் உண்டு. நேற்று நடந்த அந்த நிகழ்வு இந்த இரண்டு ஆசைக்கும் தீனி போட்டது போல் அமைந்தது. மேலும் சூடான சர்க்கரைப் பொங்கலாய் இனித்த அந்த நிகழ்வில், அதன் மேல் வைத்த நெய்யில் வறுத்த திராட்சை போல் இனித்த விஷயம், நமது ஆசிரியர் முக்கிய விருந்தினராய் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது. இதற்கு மேல் வேறென்ன வேண்டும் விழாவில் கலந்து கொள்ள என்று கேட்பது போல் அமைந்த இந்த விழாவில் விகடகவி சார்பாக நானும் சீனிவாஸ் பார்த்த சாரதியும் கலந்து கொண்டோம்.

20221116223229435.jpg

மேடையில் பழைய விகடன் நிறுவனத்தின் முக்கிய தூண்களை மீண்டும் இணைந்து பார்ப்பது போல் அமைந்த ஒரு அற்புதமான காட்சி, நமக்கு மலரும் நினைவுகளை கொண்டு வந்தது. ஏறத்தாழ பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அபூர்வ நிகழ்வாக அமைந்தது. நமது ஆசிரியர் திரு மதன் சார், ஓவியர் மணியம் செல்வன், ஓவியர் கேசவ், உபன்யாசகர் கணேச சர்மா, திரு இளங்கோ குமணன், முன்னாள் இந்திய தூதர் T.S.திருமூர்த்தி மற்றும் விழா நாயகர் T.S.நாராயணசுவாமி மேடையில் ஒரு சேர அமர்ந்திருந்தது கண்கொள்ளாக் காட்சி.

20221116223318925.jpg

விழாவை தொகுத்து வழங்கி, தலைமையை பொறுப்பை ஏற்று நடத்திய திரு இளங்கோ குமணன், அன்றைய ஆனந்த விகடனில் வியெஸ்வி எழுதிய விமர்சனத்தில் ஒரு வரியை சுட்டிக் காட்டினார்"ஒரு விழாவில் முன்னுரை, தலைமையுரை, சிறப்புரை, பின்னுரை, வாழ்த்துரை, தலையணையுறை...இன்னும் இன்னும் பல சவ சவ என் இழுத்துக்கொண்டு செல்லாமல், சுருக், நறுக்கென நடத்தி முடிக்க வேண்டும்" என்பதை மனதில் கொண்டு இந்த விழாவை நடத்திக்கொடுக்க முயற்சி செய்வதாகச் சொல்லி துவங்கினார். "தெய்வத்துள் தெய்வம்" என்ற மகா பெரியவரின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தை 50 முறைகளுக்கும் மேல் மேடை ஏற்றிய அந்த ஒரு தகுதியைத் தவிர மேடையில் இருப்பவர்களை தலைமையேற்று நடத்திச் செல்லும் தகுதி தனக்கு இல்லை என்பதையும், அவர்கள் தலைமையை ஏற்று தான் நடத்திச் செல்வதாக அருமையான ஒரு சொல் விளையாட்டோடு நிகழ்வினை துவங்கினார். முதலில் பேசிய திருமூர்த்தி, நாராயண சுவாமியின் இளமைக் காலத்தையும், பள்ளிப்பருவத்தையும், அவர் முதலில் வரைந்த படத்தை பெரியவா ஆசீர்வாதம் செய்ததையும், மிகவும் சுவாரசியமாகவும், விளக்கமாகவும் கூறினார்.

20221116221748907.jpg

ஒரு குளத்தின் படி ஒன்றில் பெரியவா இருக்கும் படமே அது. அதைப் பார்த்த பெரியவா "படி, படி" என்று இருமுறை சொன்னாராம், இவரோ " ஆமாம் பெரியவா படி தான் வரைந்திருக்கிறேன்", என்று சொல்ல, பெரியவா புன்முறுவல் பூத்தபடி சென்று விட்டாராம்.உடனிருந்த இவரது மாமாவும் ஆனந்தவிகடனின் அப்போதைய ஆசிரியருமான பரணிதரன், அவர் "படி, படி" என்று உன்னைப் படிக்க சொல்லி இருக்கிறார். இந்த ஓவியத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு சி.ஏ.,படித்து முடிக்கும் வழியைப் பார் என்றாராம். அடுத்து வந்த தனது ஓவிய உரையில் நாராயணசாமி அதனை விஸ்தாரமாக அந்தப் படத்தை திரையில் காண்பித்து உரையாற்றினார். எப்படி மாணவப் பருவத்தில் இருந்து படித்து பின் மீண்டும் ஓவியம் வரைய துவங்கி, கோவிட் லாக் டவுன் நேரத்தில் ஓவியம் வரைய பயன்படுத்திக் கொண்டு, நிறைய பெரியவா படங்களை வரைந்ததைப் பற்றி விளக்கமாகச் சொன்னார். அதில் 108 னைத் தேர்வு செய்து இந்த புத்தகத்தை வெளிக்கொண்டு வந்திருப்பதாகவும் விளக்கினார். ஆனந்த விகடன் பத்திரிகை உடனான தொடர்பு, பரணிதரன், வி யெஸ் வி ஆகிய ஆனந்த விகடன் மூத்தோர்கள் உறவு, அவரது தொழில் முறை வாழ்க்கை, என பலவற்றையும் அந்த ஓவிய உரையில் தொட்டுக்காட்டி பேசிய அவர், மதன் சாரை எப்படி தனது மானசீக குருவாகக் கொண்டு, அதே சமயம் நேரிலும் அவருடன் வேலை செய்யும் பாக்கியத்தை பெற்றதையும் மிகவும் நெகிழ்ந்து குறிப்பிட்டார்.

20221116222029568.jpg20221116222226259.jpg
அடுத்து பேசிய ஓவியர் கேசவ் எப்படி பெரியவா படங்களில் உயிர்ப்பு இருக்கிறது. அது நம் கையில் இல்லை அவராகவே ஆசீர்வாதம் செய்து நடந்தால் தான் முடியும் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டார். அதே போல படம் வரைவதற்கு என்று சிலர் உண்டு மகாத்மா காந்தி, பெரியவா,ஐன்ஸ்டீன் போன்றவர்கள் அந்த முக அமைப்பினை பெற்றவர்கள் என்பதையும் விளக்கினார்.

20221116222409386.jpg

ஓவியர் மணியம் செல்வன் பேசுகையில் அவருடைய பெரியவா பிணைப்பு பற்றியும் பரணிதரன் அவர்கள் எழுதிய 'அன்பே அருளே' புத்தகத்திற்கு அவர் படம் வரைந்து, அதன் மூலம் பெரியவரை நேரில் காணும் வாய்ப்பு பெற்றதையும், இந்த படங்களில் ஒவ்வொன்றிலும் பெரியவாளின் உயிர்ப்பு தன்மை தத்ரூபமாக இருப்பதையும் ரசித்து பாராட்டினார்.ஐ-பேடில் படம் வரைவது எவ்வளவு ஒரு கஷ்டமான காரியம் என்பதையும் அவர் விளக்கிச் சொன்னார்.

20221116222606472.jpg20221116222656559.jpg

சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்த ஆசிரியர் பேச மைக்கை நோக்கி சென்றதுமே கூட்டத்தில் கலகலப்பு ம் உற்சாகம் சேர்ந்து கொண்டது. அதற்கேற்றார் போல் மதன் சாரும் முதலில் நாராயண சுவாமியின் விகடன் பிரவேசம், பிறகு பரணிதரன் அவர்கள் மாமாவாக இருந்தாலும் அவர் அறையில் அதிக நேரம் செலவழிக்காமல், தன்னுடைய ரூமிலேயே உட்கார்ந்து படம் வரைவது பற்றியும் விகடனில் நகைச்சுவை படங்களும் சில கார்ட்டூன் படங்களும் அவர் வரைந்தது பற்றியும் குறிப்பிட்டார்.

அதே போல இந்த பெரியவா படங்களை பற்றி குறிப்பிடும் போது நிமிடத்திற்கு ஒரு விதமாக மாறும் அற்புத ஆற்றல் பெரியவரிடம் உண்டு. அவரை நீங்கள் புகைப்படத்தில் பார்க்கும்போதே உங்களால் அந்த அழகினை ரசிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு ஈர்ப்பு உள்ளவர் மஹா பெரியவா. அந்த விதமான ஈர்ப்புகள் இந்த படங்களிலும் இருக்கின்றன. மேலும் அவை தத்ரூபமாக அவரின் உருவத்தை வெளிப்படுத்தும் அதிசயத்தை செய்கின்றன.

20221116222847700.jpg

சில பேர் போல படம் வரைந்து கீழே இவர் தான் பெரியவா என்று எழுதி வைக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று அவர் சொன்ன போது அரங்கம் சிரிப்பலையால் அதிர்ந்தது. அவர் 108 படங்களோடு நிறுத்தி விடாமல் 1008 படங்கள் கூட செய்து, அடுத்த ஒரு புகைப்பட கண்காட்சி நடத்தினால் தான் நிச்சயம் வந்து அதில் கலந்து கொள்வேன் என்று அவர் சொன்ன போது அரங்கமே அந்த வாழ்த்தினை தங்கள் கைதட்டாக விழா நாயகருக்கு வழங்கியது.

நாராயண சுவாமி பேசும்போது நமது ஆசிரியரைத் தன்னுடைய குருவாக குறிப்பிட்டது மட்டும் அல்லாமல் அவருடைய கல்லூரி பருவத்தில் அவர் நடத்திய 'மாணவர் இளம் புயல்' என்ற பத்திரிகையின் 'லோகோ'வை வடிவமைத்தது மதன் சார் தான் என்ற கூடுதல் தகவலையும் சொல்லி கைதட்டல்களை அள்ளிக் கொண்டு போனார். இந்த புத்தகத்தின் விற்பனையின் மூலம் வரும் தொகை ஓரிக்கை மகா பெரியவா மணிமண்டபம் டிரஸ்ட்க்கு வழங்கப்படுகிறது என்பதையும் தெரிவித்தார். நாராயணசாமி அவர்களின் நன்றி உரையோடு விழா இனிதே முடிந்தது.

20221116223036816.jpg

(ஜாம்பவான்கள்)

பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ? என்ற வார்த்தை உண்மையானது அங்கே!! விழாவுக்கு வந்திருந்த நாராயண சுவாமி அவர்களின் உறவினரான வியெஸ்வி ... தனது ஆனந்த விகடன் தோழர்களை கண்டு மகிழ்ச்சியோடு, அளவளாவிய காட்சி நம் நெஞ்சை நிறைக்க அந்த சந்தோஷத்தோடு பெரியவா ஓவியங்களின் கண்காட்சியை தரிசித்துக் கொண்டு நாம் மிகுந்த மன நிறைவோடு வீடு திரும்பினோம்.