தொடர்கள்
தொடர்கள்
திறன்பேசி பூதம் - ஆர்னிகா நாசர்

20221116192418170.png

மெஹபூப் அலி ஆசையாய் தனது சிவப்பிநிற திறன்பேசியை தடவிக்
கொடுத்தான்.
அந்த திறன்பேசி 8ஜிபி ராம் 256ஜிபி சேமிப்பு திறன் கொண்டது.
இரட்டை சிம் வசதி. 16.28செமீ டிஸ்பிளே. 48எம்பி, 5எம்பி என இரு
கேமிராக்கள் 5000 நிமிடங்கள் தாக்கு பிடிக்கும் லித்தியம் அயன் வகை
பேட்டரி. திறன்பேசியின் எடை 183கிராம்.
“என் அழகிய திறன்பேசியே… என் மனைவியை விட உன்னிடம்தான்
அதிக நேரம் செலவழிக்கிறேன். என் மனைவிக்கு வாரத்தில் இரண்டொரு
முத்தங்கள் உனக்கோ தினம் நூறு முத்தங்கள்… என்னுடைய சின்ன வீடு நீ.
என்னுடைய உபரிகுட்டி இதயம் நீ. என்னுடைய மூன்றாவது ஐந்து விரல் நீ
என்னுடைய பொழுதுபோக்குக்கு ஆயிரம் ஜன்னல்களை திறநது
வைத்திருக்கும் பரோபகாரி நீ. ட்ரில்லியன் தகவல்களால் என் நெற்றியில்
அறிவுக்கண்ணை திறந்து வைத்தது நீ. நீ இல்லை என்றால் என்னால் ஒரு
நொடி கூட வாழ முடியாது!”
“என்ன திறன்பேசியுடன் பேசிக்கொண்டிருக்கிறாய் நண்பா?”
வினவினான் செந்தூரம் ஜெகதீஷ் . ஜெகதீஷ் ஒரு நுண்ணுரியல் விஞ்ஞானி.
ஜெகதீஷ் திறன்பேசி வைத்துக் கொள்வதில்லை. எப்போதுமே தரைவழி
தொலைபேசிதான் பயன்படுத்துவான். அபூர்வமாக பட்டன்போன்
உபயோகிப்பான். பட்டன் போனை சட்டைபையிலோ பேன்ட் பாக்கட்டிலோ
வைத்திருக்க மாட்டான்.
“உன்னுடன் பேசாமல் திறன்பேசியுடன் பேசுகிறேன் என்கிற
பொறாமையா உனக்கு?”
“நான் திறன்பேசிகளை வெறுக்கிறேன். திறன்பேசி மனிதர்களை
வாழைப்பழ சோம்பேறி ஆக்கிவிட்டது. குடிபோதையை விட
கொடுமையானது திறன்பேசி போதை. இளைஞர்களிடமிருந்து ஒரு மணி

நேரம் கைபேசியை பறித்து பார். ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம்
தற்கொலைகள் நடக்கும்…” பேசியபடி தனது பரிசோதனை கூடத்திற்குள்
நடந்தான் ஜெகதீஷ்.
“நீயும் உள்ளே வா மெஹபூப் அலி!’
மெஹபூப் அலி உள்ளே போனான்.
“விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் போட்டிபோட்டுக் கொண்டு
வளர்வதை பழைமைவாதிகளால் ஏற்றுக் கொள்ளமுடியாது உனக்கு எதாவது
தகவல் தேவை என்றால் அச்சு அகராதியில் தேடுவாய். நாங்கள் கூகுளில்
தேடி நொடியில் கண்டுபிடிப்போம். நாங்கள் மின்இதழ்கள் வாசிப்போம். நீயோ
பழைய புத்தககடைகளிருந்து புத்தகங்களை அரைவிலை கால்விலைக்கு
வாங்கி வாசிப்பாய். நாங்கள் ஒடிடியில் படம் பார்ப்போம். நீயோ ஆளில்லாத
சினிமா தியேட்டரில் பாப்கார்ன் கொறித்தபடி படம் பார்ப்பாய். இப்படி ஆயிரம்
விஷயங்கள் சொல்லிக் கொண்டு போகலாம்.. தொழில்நுட்பத்தோடு சேர்ந்து
வாழாத மனிதன் ஒரு ஆதிவாசி!”
சிரித்தான் ஜெகதீஷ்.
“என்னை ஒரு ஆதிவாசி என்கிறாய். பிழைத்துப்போ…”
“உன்னை சொல்வேனா? பொதுவாக சொன்னேன்…”
“சரி, உன்னை சில கேள்விகள் கேக்கிறேன்… பதில் கூறு…”
“கேள்!’
“‘தினம் எத்தனை முறை பல்துலக்குகிறாய்?”
“காலையில் ஒரு முறை இரவில் தூங்கப்போவதற்கு முன் ஒரு
முறை!”
“குளியல்?”
“குளிர்காலத்தில் ஒருமுறை வெயில்காலத்தில் இருமுறை!”
“கழிவறைக்கு போய் வந்த பின் என்ன செய்வாய்?”
“திரவசோப் போட்டு இடக்கையை சுத்தம் செய்வேன்!”
“வெளியில் போய்விட்டு வீடு திரும்பும் போது என்ன செய்வாய்?”
“முகம் கைகால் கழுவி சுத்தமாவேன்!”
“ஒரு நாளைக்கு உன் திறன்பேசியை எத்தனை
முறைபயன்படுத்துகிறாய்?”

“கணக்கு வழக்கே இல்லை!”
“தோராயமாக கூறு!”
“குறைந்தபட்சம் ஐம்பது தடவை அதிகபட்சம் நூறுதடவை….”
“உன் திறன்பேசியை பிறரிடம் தருவது உண்டா?”
“மனைவி மகன் மகளிடம் நண்பர்களிடம் தருவது உண்டு!”
“ஒவ்வொரு முறை திறன்பேசியை பயன்படுத்தி விட்டு சுத்தம்
செய்கிறாயா?”
“இல்லை. அப்படி யார் செய்கிறார்கள்?”
“உலகில் கிருமிகள் அதிகம் உள்ள இடங்கள் எவை?”
“கழிவறை மற்றும் சாப்பாட்டு பாத்திரங்களை கழுவும் தொட்டி!”
“இல்லை!”
“நமது வாயா அதிகம் கிருமிகள் உள்ள இடம்?”
“இல்லை… அதனை விட மோசமான கிருமிகள் தோப்பு உள்ள
இடத்தை நான் கூறுகிறேன்…”
“சொல்!”
“நாம் அன்றாடம் உபயோகிக்கும் திறன்பேசியில் 1012வகை கிருமிகள்
உள்ளன. முக்கியமாக ஸ்ட்ரப்டோகாக்கஸ், ஸ்டபைலோகாக்கஸ்,
கோர்னிபேக்டீரியம் கிருமிகள் திறன்பேசியில் புழுத்து வழிகின்றன.”
“பயமுறுத்துகிறாயா ஜெகதீஷ்?”
“கடந்த ஐந்து வருடங்களாக திறன்பேசியில் காணப்படும் கிருமிகள்
பற்றி தான் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறேன். பல பெயரிடப்படாத
கிருமிகளையும் திறன்பேசியில் காண்கிறேன். அந்த கிருமிகளின்
குணாதிசயங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன”
“ஒவ்வொரு தடவையும் திறன்பேசியை பயன்படுத்தியவுடன் சுடுநீரில்
போட்டு கிருமி நீக்கம் பண்ணவா?” நக்கல் செய்தான் மெஹபூப் அலி.
“பீ சீரியஸ். உன்னுடைய திறன்பேசியை யாரிடமும் தராதே.
திறன்பேசியை பயன்படுத்திய பிறகு கிருமிநாசினி. தடவிய டிஸ்யூபேப்பர்
வைத்து திறன்பேசியை முழுவதும் துடை. வாயை மவுத் வாஷ் வைத்து
கொப்பளி. திறன்பேசியை ஒரு நாளைக்கு பத்து தடவைக்கு மேல்
உபயோகிக்காதே. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறன்பேசியின்

வெளிக்கவரினை மாற்று. மஞ்சள் தூளால் செய்யப்பட்ட டர்ம்ஜெல்
மிட்டாயை தினம் இருமுறை சூப்பி சாப்பிடு!”
“சரிங்க முன்ஜாக்கிரதை முத்தண்ணா!”
ஜெகதீஷ் கைகளில் உபயோகித்து எறியும் கையுறை அணிந்து
கொண்டான்.
“ஒரு நிமிஷம் உன் திறன்பேசியை கொடு!”
வாங்கினான் ஜெகதீஷ். காட்டன் சுற்றிய ஸ்வாப்பை எடுத்தான்.
திறன்பேசியின் மேற்புறத்தை ஒற்றி சுருட்டினான். ஒற்றி சுருட்டியதை ஒரு
ஸ்லைடில் பதித்தான்.
ஸ்லைடை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்பின் அடியில் வைத்தான்.
கண்களை பதித்து நோட்டமிட்டான்.
பல நூறு வடிவங்களில் கிருமிகள் மிதந்தன. ஒரு கிருமிக்கு வாய்
முளைத்தது. மைக்ராஸ்கோப்பில் பார்த்துக்கொண்டிருக்கும் ஜெகதீஷை
டெஸிபல் இல்லாமல் ‘போடா’ என்றது.
பதைபதைத்தான் ஜெகதீஷ்.
அந்த அதிகபிரசங்கி கிருமி மற்ற கிருமிகளை விழுங்கி கபளீகரம்
செய்தது.
இப்போது அந்த கிருமிக்கு வட்டமாய் ஒரு முகம் பிதுங்கியது.
பம்ஜிக் பம்ஜிக் பம்பம்.
“அந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறேனே..”
பத்து நொடி யோசிப்பில் சூரியனித்தான்.
“ஓவ்!”
“என்னடா கத்துற ஜெகதீஷா?”
“உன் திறன்பேசியில் உள்ள கிருமிகளில் ஒன்றுக்கு உன்னை போல
முகம்!”
“விளையாடாதே ஜெகதீஷா!”
“நிஜம்தான்… இப்ப உன் திறன்பேசியை எடுத்து செல்லாதே. என்
ஆராயச்சி கூடத்திலேயே இருக்கட்டும். என் குருநாதர் விஞ்ஞானியை
வரவழைத்து நிபுணர் அபிப்ராயம் கேட்கிறேன்…”

“என் திறன்பேசியை எல்லாம் கொடுக்க முடியாது. என்னுடைய
திறன்பேசியிலிருந்து ஒற்றி கொஞ்சம் எடுத்தாயே… அதனை வைத்து
ஆராய்ச்சியை தொடர்…”
ஜெகதீஷ் கையிலிருந்து திறன்பேசியை பறித்தான் மெஹபூப் அலி.
“சொன்னா கேளுடா மெஹபூப்… எதோ ஒரு ஆபத்து உன் முதுகுக்கு
பின் நின்று கெக்கலிக்கிறது. உஷாராகி தப்பி!”
“சும்மா பயமுறுத்தாதே!”
மெஹபூப் அலி திறன்பேசியுடன் புறப்பட்டான்.
இரவு மணி பத்து.
மனைவியும் குழந்தைகளும் முதல் இரு படுக்கையறைகளில்
படுத்திருக்க மெஹபூப் அலி மூன்றாவது படுக்கையறையில் படுத்திருந்தான்.
திறன்பேசியில் மியா கலிபா நடித்த நீலப்படத்தை பார்க்க ஆரம்பித்தான்
மெஹபூப் அலி.
திறன்பேசியில் இருந்த நானோ துணுக்கு வீங்கியது. வீங்கியது எட்டு
சென்டிமீட்டர் உயரத்துக்கு நீண்டது. தலைப்பகுதி தனியாக உடல்பகுதி
தனியாக இரு கைகள் இரு கால்கள் தனியாக கிளைத்தன.
இப்போது 8செமீ உயரமுள்ள நகல் மெஹபூப் அலி தோன்றினான்.
மினியேச்சர் மெஹபூப் அலி ஒரிஜினல் மெஹபூப் அலி குரலில்
பேசியது.
போன்ஸாய் மெஹபூப் அலி பேச பேச உயரம் வளர்ந்தது.
இப்போது அச்சுஅசலாய் மெஹபூப் அலி உயரத்துக்கு வந்து நின்றது.
பதறிசிதறிப் போனான் மெஹபூப் அலி.
“யா… யா… யார் நீ?”
“கடந்த பனிரெண்டு வருடங்களில் நீ பேசிய பத்துலட்சம்
வார்த்தைகளின் திரட்சி நான்…” நகல் விரலை நீட்டியது. விரல் மெஹபூப்
அலியின் நெற்றி பொட்டை துளைத்தது. மெஹபூப்அலியின்
நினைவுத்திறளை முழுவதும் உறிஞ்சியது.
“இப்போது நான் உன்னின் கண்ணாடி பிம்பம்.. ஒரே விருப்பு வெறுப்பு
ரசனையுடன் இருவர் எதற்கு?” பலமிக்கவன் நான் வாழ்ந்து கொள்கிறேன். நீ
தொலைந்து போ!”’

நகல் மெஹபூப் அலி ஒரிஜினல் மெஹபூப் அலியை உறிஞ்சி
விழுங்கியது. நகல் மெஹபூப் அலி ஒரிஜினல் மெஹபூப் அலியின்
மனைவியை இரை எடுக்க அவளது படுக்கையறைக்குள் புகுந்தது.
ராட்சசதனமான தாம்பத்யத்தால் ஒரிஜினல் மெஹபூப் அலியின் மனைவியை
அதிரடித்தது நகல் மெஹபூப் அலி.
லட்சம் விபரீதங்களுடன் திறன்பேசி பூதம் தகரத்தில் ஆணி கீறிய
டெஸிபல்லில் சிரித்தது!