தொடர்கள்
பொது
பரிதாப நிலையில் கோயில் யானைகள்?!-ஆர்.ராஜேஷ் கன்னா

20221115091003782.jpg

கோயில் யானைகள் தமிழ்நாட்டில் சரிவர பராமரிக்கப்படுகிறதா என்பதே யானை ஆர்வலர்களின் பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் தற்போது 30 கோவில் யானைகள் உள்ளது.இந்தியா முழுவதும் 2675 பிடிப்பட்ட யானைகள் வளர்க்கப்படுகிறது என்ற புள்ளிவிவரம் உள்ளது.

கோவில் யானைகள் தெய்வீகமாக பக்தர்களால் வணங்கப்பட்டாலும் , அது சமூக விலங்காக பார்க்கப்படுகிறது.

காடுகளில் மந்தைகளாக சுதந்திரமாக சுற்றி திரியும் யானைகளை பிடித்து வந்து தனிமையில் அடைத்து வைத்து கோயில்களில் பயன்படுத்துகிறார்கள். கோவில் யானைகளை சரிவர பரிமாரிப்பதில்லை.

யானைகள் விரும்பி உண்ணும் நார்சத்து உணவுகளும் , காடுகளில் புல்வெளிகளில் இதமான பகுதிகளில் யானைகள் நடந்து செல்லும் புல்வெளி தளங்கள் இயற்கையான சூழலின்றி வளர்க்கப்படும் யானைகளுக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் தற்போது எழந்துள்ளது.

கோவில் யானை எப்பொழுதும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கவே அதிக நேரம் நிற்கவைக்கப்படுகிறது.கோவில் யானைகள் நிற்கும் நேரத்தை தவிர்த்து தூங்குகிறதா என்ற விவரம் கூட சரியாக தெரியவில்லை.

பல கோவில்களில் யானை பாகன்களுக்கு சரிவர சம்பளம் கொடுப்பதில்லை என்ற குற்றசாட்டும் எழகிறது. இதில் யானைப்பாகன் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்கள் குடும்ப தேவைகள் போக மீதம் இருக்கும் பணத்தில் யானைகளுக்கு உணவு அளிப்பதால் பல கோவில் யானைகள் நோய்வாய்பட்டு இருப்பதாக யானை ஆர்வலர்கள் இடையே பேச்சாக உள்ளது.

கோவில் யானைக்கு நார்சத்து மிக்க உணவுக்கு பதிலாக பக்தர்கள் கொடுக்கும் அரிசி மற்றும் சர்க்கரை உணவுகளால் அவைகள் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு பருமனான (obese) தோற்றம் ஏற்படுகிறது.அத்துடன் யானைக்கு வெளியார் இடமிருந்து மலிவான விலையில் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் கிட்டதட்ட பாதி அழுகிய நிலையில் உள்ளது. யானை பராமரிக்க மற்றும் உணவு வழங்க உரிய நிதி கோவில் தராததால் யானை பாகன்கள் சிலர் இது போன்ற அழுகிய உணவு பொருட்களை யானைகக்கு வழங்குவதாக பரவலான குற்றசாட்டு எழுந்துள்ளது.

யானைக்கு உணவளிக்க அதனை அதிக நேரம் நிற்க வைத்து நன்கொடையும் வசூல் செய்கின்றனர்.

யானை அசைந்து கொண்டே சாப்பிடும் என்ற பழமொழிக்கு ஏற்ப அதன் உணவிற்காக நீண்ட தூரம் கரடு முரடான சாலைகளில் நடக்க வைத்து அதன் கால்களும் பாதிப்புக்குள்ளாகிறது.

சில யானை திருமண விழாவிற்கு கூட நன்கொடை வசூல் செய்து நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது என்ற செய்தியும் உலா வருகிறது.

சமீபத்தில் பாண்டிச்சேரி கோவில் யானை லட்சுமி மரணம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது.யானைகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறதா என்ற கேள்வியை சமூக ஆரவலர்கள் எழப்பி வருகின்றனர்.

ஸ்ரீரங்க கோவில் யானைகள் லட்சுமி மற்றும் ஆண்டாள் பரிதாப நிலையை கண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கினை தாக்கல் செய்தார்.

20221115091158780.jpg

இந்த வழக்கிற்கு பிறகு ….திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் இருக்கும் 45 வயதான வரலட்சுமி என்ற பெண் யானையை சிறப்பு குழவினர் பார்வையிட்டனர்.இந்த யானை தன் 60 வயது வரை கோவிலுக்கு சேவை செய்து அதன் பின் ரிடையர்டு ஆகும் தகவல் வெளியாகியது.

வரலட்சுமி யானை நாள் முழுவதும் இரு கோயில்களில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும். கரடு முரடான பாறைகள் நிறைந்த தரையில் யானை நிற்க வைக்கபடுகிறது.இதனால் யானை உடல் நலம் பாதித்துள்ளது என்ற தகவல் வெளியானது.

யானை பாகன்கள் தங்கள் நினைத்த பணம் வசூலான பின் யானையை அதன் ஓய்வெடுக்கும் பகுதிக்கு அழைத்து செல்வது வழக்கமாக இருக்கிறது.இதனால் அதிக நேரம் நின்றதால் வரலட்சுமி யானை உடல் பருமனான (obese) தோற்றம் ஏற்பட்டு அதன் முன்னாங்கால் பாரம் தாங்காமல் வளைந்து உள்ளது.

யானை ஒய்வு எடுக்கும் போது அதன் கால்கள் கட்டப்பட்டுள்ளது. யானை தங்கவைக்கப்படும் அறையில் போதிய காற்றுவசதியும் இல்லை அத்துடன் அழுகிய கேரட்டுகள் யானை உணவாக தரையில் இரைந்து இருந்தது.யானை தாகம் எடுத்தால் நீர் அருந்த எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை .வரலட்சுமி யானை கடந்த 20 வருடங்களாக தனிமையில் இருக்கிறது என்பது தான் வேதனையின் உச்சம் என சிறப்பு குழவினர் வேதனையடைந்தனர்.

மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் யானை அபயமாள் என்கிற அபயம்பிகை 35 வருடமாக தனிமையில் இருந்து ஒரு சிறிய அறையில் வருகிறது. அபயம்பிகை அறை கடினமான தரை பகுதியை கொண்டதாக உள்ளது.காற்று உள்ளே வர அறையில் போதிய வசதியும் இல்லை.யானை குடிப்பதற்க்கு ஏதுவாக அதன் அறையிலோ அல்லது அதன் அருகே உள்ள பகுதியில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை . அபயமாள் யானை கான்கிரிட் தூணில் கட்டப்பட்டுள்ளது. சிறிய அறையில் அபயம்மாள் இருப்பதால் தனது உடலை வைத்துகொண்டு திரும்ப முடியாமல் அவதி பட்டு வருகிறது.2015 ஆண்டு ,அபயம்மாள் யானையை அதன் பாகன் அடித்து துன்புறுத்தும் வீடியோ பதற வைத்தது.இதனை 2019 ஆண்டு ,சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு யானையை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

அடுத்து , சிவகங்கை சண்முகநாதசுவாமி கோவில் , குன்றக்குடியில் இருக்கும் 55 வயதான சுப்புலட்சுமி என்ற யானை கடந்த ஐம்பது வருடங்களாக இந்த கோவிலில் தனது சேவையை செய்துவருகிறது.யானை வயது மூப்பு காரணமாக அதன் கால் நகங்கள் அனைத்தும் இரண்டாக உடைந்து விட்டது. யானையின் வாலில் முடிகள் உதிர்ந்துவிட்டது.யானையின் உடலில் இருந்த தோல் வறண்டு விட்டது.அத்துடன் யானை ஓரே இடத்தில் இருந்ததால் அதன் உடல் பருமன் (obese) ஆகிவிட்டது. இதனால் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு தலையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தது.யானை பாகனுக்கு பயந்து தனது சேவையை தொடர்ந்து வந்தது. அத்துடன் யானையின் அருகே அங்குசம் யானை பார்வை படும்படி அதன் பாகன் போட்டு வைத்து இருந்தார்.தனிமை ஒரு பக்கம் பராமரிப்பின்றி நோய் வாய்ப்பட்டிருக்கும் யானை உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பு அடைந்திருந்தது என யானை ஆர்வலர்கள் தங்களது கருத்தாக தெரிவிக்கின்றனர்.

20221115091237782.jpg

ஏற்கனவே உயிரியல் பூங்காங்கள், சர்க்கஸ்களில் யானைகள் இருக்ககூடாது என தடை செய்யப்பட்டது போல் யானைகள் வைத்து சாலைகளில் நடந்து சென்று பிச்சை எடுக்க கூடாது என தடை விதிக்க வேண்டும்.

யானைகள் நீண்ட தூரம் கடினமான தார் சாலைகள் மற்றும் பாறைகள் நிறைந்த சாலைகளில் நடப்பதால் அவைகளின் காலில் காயம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது இதனை தடுக்க நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளது.

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் கலந்துகொள்வதற்காக கோயில் யானைகள் சென்றாலும் …கோவில் யானைகள் பராமரிக்கவும் , அதன் உணவிற்காக தனியாக நிதியுதவி அளித்து அதனை அந்த மாவட்ட ஆட்சியர் அல்லது சார் ஆட்சியர் தலைமையில் நேரிடையாக இந்து அறநிலையதுறை பராமரிக்க வேண்டும் என்ற ஓத்த குரல் எழந்துள்ளது.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கோயில் யானைகளுக்கு உணவும் , சுகாதாரமான தங்கும் அறைகளும் , குடிநீர் வசதியும் போர்கால அடிப்படையில் வசதி செய்து தரவேண்டும் என்பதே தமிழக பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.