தொடர்கள்
ஆன்மீகம்
சென்னையில் சதுரங்க விழா ! சிவபெருமான் துவங்கிய ஆட்டம் !! - சுந்தரமைந்தன். ​​

2022063000083974.jpeg

இரவின் நிழல் படத்தில் படம் எப்படி எடுத்தார்கள் என்று முப்பது நிமிடம் சொல்வது போல, இந்த வார கவர் ஸ்டோரி பற்றி சொல்லியாக வேண்டும். ஒவ்வொரு வாரமும் கவர் ஸ்டோரி என்ன செய்யலாம் என்று திங்கட்கிழமையிலிருந்தே ஆசிரியர் குழுவில் வாதிப்பது வழக்கம். சரி சென்னையில் சதுரங்க ஒலிம்பியாட் நடைபெறுவதை ஒட்டி எல்லோரும் செய்வது போல இல்லாமல் இது ஆன்மீக பூமி என்பதை காட்ட சிவபெருமான் விளையாடிய சதுரங்கம் என்று சஸ்பென்ஸாக வைக்கலாம் என்று முடிவு செய்தோம். அதை மேடையில் ஊரறிய நம்ம பிரதமர் போட்டு உடைக்க இந்த கவர் ஸ்டோரி வெளியாகும் நேரத்தில் பல ஊடகங்களில் வந்து விட்டிருப்பது எங்களை மீறிய மோடி எஃபெக்ட். ஆக எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கும் இந்த கட்டுரையில் விகடகவி வாசகர்களுக்காக பிரத்யேகமாக ஏதேனும் செய்ய வேண்டுமல்லவா. கட்டுரைக்குள் நுழையுமுன் சதுரங்க வல்லபநாதர் கோவிலை நன்றாக சுற்றிப் பார்த்து தரிசனம் செய்து விட்டு துவங்குவோம். நீங்கள் கோவிலுக்குள் நுழைந்து ஒவ்வொரு இடமாக பார்த்து விடும் எஃபெக்டை எந்த வித பேச்சுக் குறுக்கீடும் இல்லாமல் இங்கே..........


2022 ஆம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 10 வரை நடைபெறும். இந்தப் போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000 மேலான வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறுவது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கக் கூடியது.


செஸ் போட்டி இந்தியாவில் தோன்றி, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பிரபலமானதாகக் கூறப்படுகிறது.
சதுரங்க விளையாட்டு இந்தியாவில் இருந்துதான் வெளிநாடுகளுக்குப் பரவியது என "ஜேம்ஸ் ருத்வனமுர்ரே" என்பவர் 1913-இல் எழுதிய செஸ் விளையாட்டின் வரலாறு" என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

சதுரங்கம் ஆடிய திருப்பூவனூர் சதுரங்க வல்லபநாதர்!!


இன்றைய செஸ் விளையாட்டு ஆறாம் நூற்றாண்டிற்கு (சுமார் 1500 ஆண்டுகள்) முன்னரே பாரதத்தில் விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்ற விளையாட்டிலிருந்துதான் வளர்ச்சியடைந்திருக்கின்றது என்பது தெரிகிறது. ஆரம்பத்தில் இது அரச குடும்பத்தினரால் மட்டும் ஆடப்பட்டதாம். இதில் 64 கட்டங்கள் இருந்தன. இதனை அஷ்டபாத - சதுரங்கா என அழைத்துள்ளனர். இதில் 32 காய்கள் பயன்படுத்தப்பட்டது. அவை அரசன் - அரசி- கோட்டை- மந்திரி, குதிரை- படை வீரன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டதாகத் தெரிகின்றது.

சதுரங்கம் விளையாட்டுக்குப் பூர்விகம் தமிழகம் என்கிறது நமது ஆன்மிகம். அதற்கு ஆதாரமாகத் திகழ்கிறது பூவனூர் திருத்தலம். இத்தலம் சிவபெருமான் சதுரங்க விளையாட்டை தமது திருவிளையாட்டாய் பார்வதிதேவியுடன் ஆடித்திருவருளைப் பொழிந்த தலம். இதனால் இங்குள்ள சிவபெருமானை ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் என்று அழைக்கின்றனர். சதுரங்கத்தில் உள்ள அறுபத்து நான்கு சதுர கட்டங்களானது இறைவனின் அறுபத்து நான்கு வடிவங்களையும், அறுபத்து நான்கு நாட்டிய நிலைகளையும் குறிப்பதாக இத்தலத்தின் மூலமாகத் தெரிகின்றது. அறுபத்து நான்கு விதமான கனிகள், காய்கள், பூக்கள், தான்ய திரவியங்கள், மூலிகை சமித்துக்கள் கொண்டு பஞ்ச சக்திகளால் மகரிஷிகள் ஒவ்வொரு மாத நவராத்திரி உற்சவத்தைக் கொண்டாடிய தலமாக இக்கோயில் இருந்திருக்கின்றது.

20220630000533191.jpeg
தமிழகத்தில் சதுரங்க விளையாட்டிற்குப் பெருமை சேர்க்கக் கூடிய இந்த திருக்கோயிலில் சதுரங்க விளையாட்டையே சிவபெருமான் தனது திருவிளையாடலை நடத்தியுள்ளதாக ஸ்தல வரலாறு கூறுகின்றது.
திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் வழியில் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 103ஆவது சிவதலமாகும். நறுமணம் வீசும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் வனமாக இந்த ஊர் இருந்ததால் இதற்கு ‘புஷ்பவனம்’ என்ற பெயர் ஏற்பட்டு பிற்காலத்தில் அது பூவனூர் ஆனது.

20220630000032233.jpeg

தென்பாண்டிய நாட்டு மன்னன் வசுசேனன், மிகுந்த சிவபக்தி கொண்டவர். இவரின் மனைவி காந்திமதி. இவர்களுக்கு வெகு காலமாகக் குழந்தை இல்லை. இவர்கள் இருவரும் குழந்தை பாக்கியம் வேண்டி சிவாலயங்கள் தோறும் சென்று வழிபாடு செய்தனர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்று இருவரும் மனமுருக வேண்டினர். இவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவனார் பார்வதியை அவர்களுக்குக் குழந்தையாகப் பிறக்கும்படியும், பராசக்தியின் அம்சமாகிய சாமுண்டியைக் குழந்தைக்குச் செவிலித்தாயாக இருக்கும்படியும் அருள்புரிந்தார். அதன்படி, மன்னன் தன் மனைவியுடன் தாமிரபரணி நதியில் நீராடும் போது பார்வதி தேவி அங்கிருந்த தாமரையில் சங்கு வடிவில் தோன்றினார். மன்னன் அந்த சங்கைக் கையில் எடுத்த போது, அந்தச் சங்கு பெண் குழந்தையாக உருவெடுத்தது. இதனால் மன்னனும் ராணியும் மகிழ்ந்து குழந்தைக்கு “ராஜராஜேஸ்வரி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். சிவபெருமானின் அருளின்படி, சப்தமாதர்களில் ஒருவரான சாமுண்டி தேவியானவள், ராஜேஸ்வரிக்குச் செவிலித்தாயாக இருந்து அரவணைத்து வளர்த்து வந்தாள். சகல கலைகளையும் கற்றுக் கொடுத்தார். ராஜராஜேஸ்வரி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றாள். குறிப்பாகச் சதுரங்க விளையாட்டில் மிகவும் புகழ் பெற்று எல்லோரையும் வென்று விளங்கினாள். சதுரங்கத்தில் ராஜராஜேஸ்வரி வெல்லவே முடியாதவள் என்று போற்றப்பட்டாள். ராஜேஸ்வரிக்குத் திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் மன்னர். மகளைப் போலவே, சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்குபவரையே திருமணம் செய்துவைக்கத் தீர்மானித்தார். தன் மகளைச் சதுரங்க விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கே மணமுடிக்கப்படும் என அறிவித்தார். பல அரசகுமாரர்கள் வந்தனர். இவளைச் சதுரங்கத்தில் யாரும் ஜெயிக்கவில்லை. மகளுக்கு ஏற்ற ஒரு வரனும் அமையவில்லையே என்பதுதான் பெருங்கவலையாக இருந்தது.


சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு தன் மகள், செவிலித்தாய் சாமுண்டி, ராணி மற்றும் பரிவாரங்களுடன் மன்னர் தல யாத்திரை மேற்கொண்ட போது, திருப்பூவனூர் திருத்தலத்துக்கும் வந்தார். புஷ்பவனநாதரைத் தரிசித்தார். மனமுருக வேண்டினார். மறுநாள் காலை ஒரு முதியவர் வந்து, மன்னனிடம் தான் சதுரங்க ஆட்டத்தில் வல்லவன் என்று தெரிவித்தார். ராஜராஜேஸ்வரியைப் பார்த்து என்னுடன் சதுரங்கம் ஆடி உன்னால் என்னை வெல்ல முடியுமா என்று கேட்டார். மன்னனும், மகளும் சம்மதிக்கச் சதுரங்க ஆட்டம் துவங்கியது. சதுரங்க விளையாட்டில் முதியவர் வென்றார். மன்னர் வேதனை அடைந்தார். கொடுத்த வாக்குறுதிப்படி, மகளைத் திருமணம் செய்துவைக்க வேண்டுமே... அதுவும் இந்த முதியவருக்குத் திருமணம் செய்துவைப்பது என்று கண்ணீருடன் சிவபெருமானை வேண்டினார். அப்போது, அங்குள்ள முதியவர் மறைந்து, சிவபெருமான் உண்மையான வடிவுடன் அனைவருக்கும் காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னன் தன் மகளைச் சிவபெருமானுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். சதுரங்கத்தில் ராஜராஜேஸ்வரியை வென்றதால், புஷ்பவனநாதருக்கு சதுரங்க வல்லபநாதர் என்றும் மன்னருக்கு மகளாகப் பிறந்த பார்வதிதேவிக்கு, தலத்தின் கற்பகவல்லியுடன் ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் திருநாமமும் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம். சிவபெருமான் சதுரங்கம் ஆடிய சிற்பமும் கோயிலில் இன்றளவும் காணப்படுகிறது.

20220630000729911.jpeg


செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காகத் தமிழகமெங்கும் விழாக்கோலம் பூண்டிருக்கும் இந்த நேரத்தில் சகலத்திலும் சிவனே முதல்வன் என்கிறபோது சதுரங்கத்திற்கும் அவனே முதல்வன் என்பதை விளக்கும் சிவபெருமான் சதுரங்கம் விளையாடிய வல்லபநாதர் ஆலயத்தைப் புனரமைத்து, ஸ்தல வரலாற்றை வருங்கால சந்ததியினர் அறியும்படி செய்ய வேண்டும். சதுரங்கம் விளையாட்டு நம் நாட்டில் வேரூன்றிப் பிறந்த விளையாட்டு மட்டுமின்றி பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையானது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். சதுரங்க விளையாட்டில் (செஸ்) ஈடுபாடுள்ளோர் மட்டுமல்லாது அனைத்து விளையாட்டுக்களிலும் ஈடுபடுவோர் வணங்கி வரவேண்டிய தலம்.

சதுரங்கம் ஆடிய திருப்பூவனூர் சதுரங்க வல்லபநாதர்!!

கோயிலுக்குப் போகும் வழி எப்படி ??


தமிழ் நாடு திருவாரூர், நீடாமங்கலம் - மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறிப் பூவனூர் நிறுத்தத்தில் இறங்கி, பாமணி ஆற்றுப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றால் கோயிலைச் சென்றடையலாம். மன்னார்குடி - அம்மாபேட்டை; வலங்கைமான் - மன்னார்குடி நகரப் பேருந்துகள் பூவனூர் வழியாகச் செல்கின்றன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:
அருள்மிகு சதுரங்க வல்லப நாதர் திருக்கோயில்,
பூவனூர்-612 803
நீடாமங்கலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.

* இந்தக் கோவிலை அனைத்து பத்திரிகைகளும் அட்டைப்படம் போட்டிருந்தால் கூட இப்படி ஒரு வெளிச்சம் கிடைத்திருக்காது. பிரதமர் பிரயத்தனப்பட்டு சதுரங்க வல்லப நாதர் நாமத்தை உச்சரித்து இந்தக் கோவிலுக்கு ஒரு முக்கியத்துவம் தன்னையறியாமல் கொடுத்து விட்டுச் சென்று விட்டார் ! *

** விகடகவிக்காக பிரத்யேகமாக படங்கள் மற்றும் வீடியோ - "Time & Space Fotografia"