தொடர்கள்
பொது
இங்கிலாந்தின் பிரதமராக ஒரு இந்தியர்? -தில்லைக்கரசிசம்பத்

20220629173853507.jpg

சென்ற வாரத்தில் இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான போட்டியாளர்களான, ஆளுங்கட்சி கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக்கும் , வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸும் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பில் தங்களின் விவாதத்தில் சூடு பறக்க, பரஸ்பரம் வாதிட்டு கொண்டிருக்க, அந்த நேரம் கேமிரா லிஸ்ஸின் முகத்தை க்ளோஸ் அப்பில் காண்பித்து கொண்டிருந்தது. அந்த வேளையில் தடாலென ஒரு பெரும் சத்தம் அரங்கில் ஒலிக்க லிஸ் பதட்டத்துடன் எதையோ அதிர்ச்சியில் பார்த்து "ஓமைகாட்" என்று நொடியில் உச்சரிக்க, நாடு முழுக்க அத்தொலைகாட்சியின் நேரிடை ஒலிபரப்பு உடனே நிறுத்தப்பட்டது . வேறு ஒன்றுமில்லை ‌‌ தொலைகாட்சி விவாதத்தை நடத்திய நபர் திடீரென மயக்கம் அடைந்து தடாலென கீழே விழுந்த சத்தம் தான் அது என்பதை அந்த நேரலையை பார்த்து கொண்டிருந்த மக்கள் பின்னர் தெரிந்து கொண்டார்கள். விவாதமும் பாதியிலே நின்று போனது. மயக்கம் அடைந்த நபர் சரியாகி விட்டார். இப்போது பிரச்சினை அதுவல்ல‌ . ரிஷிசுனக்கிற்கு எதிராக களத்தில் நிற்கும் லிஸ் "ஓமைகாட்" சொன்னது போல் ரிஷி இங்கிலாந்தின் பிரதமர் ஆகும் போது இந்த உலகமே "ஓமைகாட்" சொல்ல போகிறது . பின் என்ன சும்மாவா ..?! ஒரு காலத்தில் உலகம் முழுவதையும் தனது காலடியில் கிடத்தி காலனி ஆட்சி செய்த இங்கிலாந்து கூடிய விரைவில் ஒரு இந்திய வம்சாவளியில் வந்த இந்தியரை பிரதமராக கொள்ள போகிறது என்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான். பிரதமர் ரேஸில் ஆரம்ப சுற்றுகளில் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பாகிஸ்தானியரும் இருந்தார் என்பது கொசுறு செய்தி. "என்னய்யா அது..? எல்லா நாட்டுக்காரனும் அங்கே தான் வந்து உட்கார்ந்து இருக்கிறார்களா?" என்று கேட்கும் வண்ணம் பலதரப்பட்ட இன, மத,மொழி மனிதர்கள் கலந்து கட்டிய ஒரு காக்டெய்ல் போன்று இங்கிலாந்து ஆகி பல தலைமுறைகள் ஆகிறது.

பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனக்கும், பிரிட்டிஷாரான லிஸ் ட்ரஸும் தங்களுடன் போட்டி போட்ட மொத்தம் எட்டு எம்.பி-க்களையும் ஒவ்வொரு சுற்றிலும் வீழ்த்தி தற்போது இவர்கள் இருவர் மட்டுமே களத்தில் நிற்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இது போன்ற தொடர்ச்சியான விவாதங்கள் இரு பிரதம வேட்பாளர்களுக்கிடையே தற்போது சூடு பிடித்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விவாதங்களில் முக்கிய பொருளாக இருப்பது பிரிட்டனில் நாளும் விஷம் போல் எகிறி வரும் விலைவாசி உயர்வு , நாட்டின் பொருளாதார மந்தநிலையை மீட்பது, ரஷ்ய-உக்ரைன் போரினால் உண்டான நெருக்கடி போன்றவைகள் தாம்

பிரதம வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருக்கும் ரிஷி சுனக் வெற்றிப் பெற்று வந்தால்,தற்போது பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை மீட்பார் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக நிலவுகிறது.

ரிஷிக்கு கிடைத்த ஆதரவாளர்களில் அதிமுக்கிய பெரும்புள்ளி மார்கரெட் தாட்சரின் நிதி மற்றும் கணக்குகளை பராமரிக்கும் பொருளாளர் லார்ட் லமாண்ட் ஆவார். (நீங்கள் லார்ட் லபக்கு தாஸ் என்று படித்து விடாதீர்கள்.)

ரிஷிக்கு இவர் ஆதரவு கிடைத்தது வரம் என்று கூட சொல்லலாம். தாட்சரின் வழியில் செயல்படும் தாட்சரைட்களின் ஆதரவு ரிஷி சுனக்கிற்கு ஏராளமாக உண்டு. அவர்களில் பெருந்தலை தான் இந்த லார்ட் லமாண்ட். ரிஷி சுனக்கின் திட்டமான "விரிவிதிப்புகளை குறைப்பதற்கு முன் நாட்டின் பணவீக்கத்தை குறைக்க வேண்டும்" என்பதை தாட்சரைட்டுகள் ஆதரிக்கின்றனர். ரிஷிக்கான ஆதரவின்

அடுத்த முக்கிய புள்ளி துணை பிரதமரான டாமினிக் ராப். துணை பிரதமரே ரிஷிக்கு ஆதரவு அளிக்கிறார் என்பது ரிஷிக்கு மிக பெரிய பூஸ்ட்‌,அத்தோடு

முன்னாள் சுகாதார செயலாளர் ஜெரிமி ஹன்ட்,போக்குவரத்து துறை செயலாளர் ஷாப்ஸ், முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் ஆலிவர் டவ்டன், கில்லிங்ஹாம்

எம்பியான ரஹ்மான் ச்சிஸ்டி ஆகிய முக்கியஸ்தர்கள் ரிஷிக்கு ஆதரவளிப்பது அவருக்கு பெரும் பலமாக பார்க்க படுகிறது.

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் கில்லிங்ஹாம் எம்பியான ரஹ்மான் பற்றியது தான். இவர் பாகிஸ்தானின் முசாஃபராபாத்தில் பிறந்தவர். பாகிஸ்தான் நாட்டுடன் இன்றும் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் ரஹ்மான் அவ்வப்போது பாக் ஆக்ரமிப்பு காஷ்மீருக்கு வந்து செல்பவர். ஒருமுறை இங்கிலாந்தின் 6

கன்சர்வேடிவ் கட்சி எம்பிக்களுடன் அங்கே வருகை தந்து தனது பாக் நாட்டுக்கான ஆதரவை காண்பித்து சென்றார். காஷ்மீர் விவகாரத்தில் பாக்கின் பக்கம் நிற்கும் இவர் "ஐ.நா, காஷ்மீர் தொடர்பாக ஒரு சுதந்திர சர்வதேச ஆணையத்தை அமைக்க வேண்டும்.." என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். இருந்தாலும் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்தியவம்சாவளியில் வந்த ரிஷிக்கு இவர் ஆதரவு அளிப்பது ஒரு ட்விஸ்ட் தான். ஏனென்றால் இதை ரஹ்மானின் பாகிஸ்தான் நண்பர்களே விரும்ப மாட்டார்கள்.

ரிஷிக்கு சாதகமான பல விஷயங்கள் இருந்தாலும் பாதகமாக சிலவற்றை பார்க்கிறார்கள். இங்கிலாந்தின் எம்பியாக நீண்ட காலம் இருந்தபோதிலும் அமெரிக்காவில் தனக்கு கிடைத்த நிரந்தர குடியுரிமைக்கான க்ரீன்கார்ட்டை ரிஷி தொடர்ந்து கைவசம் வைத்திருந்தது ஏன் என்று எதிர்கட்சிகள் கேட்கிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் தான் தனது க்ரீன் கார்டை திரும்ப அமெரிக்காவிடம் ரிஷி ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. அவர் மனைவி அக்ஷதா மூர்த்தி இன்னும் க்ரீன் கார்ட் உடமையாளர்தான். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதாமூர்த்தி அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமைக்கான க்ரீன் கார்ட் வைத்திருப்பதால், வெளிநாட்டில் செயல்படும் தனது நிறுவனங்களின் மூலம் வரும் வருமானத்திற்கு இங்கிலாந்தில் வரி செலுத்த தேவையில்லை. இதன் மூலம் இங்கிலாந்து நாட்டிற்கு வருடந்தோறும் செலுத்த வேண்டிய வரிப்பணம் சுமார் 2 மில்லியன் பவுண்டுகள் அக்ஷதாவிற்கு மிச்சம் ஆகிறது . ஆனால் இது மிகப் பெரிய ஏமாற்று வேலை என ரிஷி தம்பதியினரின் மேல் குற்றம் சாட்டப்பட்டு, மிக பெரிய சச்சரவாகியது. இங்கிலாந்து ராணியை விட சுனக்கின் மனைவி அதிக சொத்துக்களை கொண்டிருக்கிறார். ரஷ்ய-உக்ரைன் போரின் போது "ரஷ்யாவில் இங்கிலாந்தில் உள்ள செல்வந்தர்களின் நிறுவனங்கள் செயல்படகூடாது . அது புதினுக்கு ஆதரவானது" என்று ரிஷி சுனக் அறிக்கை விட இங்கிலாந்து பத்திரிக்கையாளர்கள் அவரிடம் " உங்கள் மனைவி பங்குதாரராக இருக்கும் இன்ஃபோசிஸ் ரஷ்யாவில் இயங்குகிறதே? இதற்கு என்ன பதில் ?" என்று கொக்கி போட்டனர்.தடுமாறி போன ரிஷி " எனக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பங்குகள் கிடையாது" என்று சமாளித்தார்.

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் ரஷ்யாவில் இயங்குகிறது.ரிஷியின் மனைவிக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 490 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்கரெட் தாட்சர் வழியில் செயல்படுவதாக கூறும் ரிஷி.., தான் பிரதமரானால் வரி விதிப்புகளை விதிக்கும் முறைகளில் பொறுப்புடன் செயல்படுவேன் என்று உறுதி கூறியிருக்கிறார். மேலும் இங்கிலாந்தில் செயல்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு கொண்ட, மாண்டரின் மொழியை கற்று தருகிற, கன்ஃபூசியஸ் கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளை முழுவதும் இழுத்து மூடப்போவதாக தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டிருக்கிறார். இங்கிலாந்தில் தஞ்சமடையும்

அகதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அதற்கு வரம்பு விதிக்கும் திட்டத்தை அறிமுக படுத்துவதாகவும், நாட்டில் நடைபெறும் குற்றங்களை தடுக்க புதிய வலுவான குற்றவியல் சட்டங்களை உருவாக்க போவதாக ரிஷி வாக்குறுதிகள் அளித்திருக்கிறார்.

ரிஷி " என்னிடம் குவிந்து கிடக்கும் சொத்துகளை கணக்கில் கொள்ளாதீர்கள். எனது வங்கி கணக்கு முக்கியமில்லை.மக்கள் பிரதிநிதியாக நிற்கும் எனது செயல்பாடுகளை வைத்து என்னை எடைபோடுங்கள்" என்று பிரச்சாரத்தின் போது மக்களிடம் உரையாடி வருகிறார். "கடின உழைப்பு, குடும்பம் மற்றும் நேர்மையை நம்பும் நான் தாட்சரின் வழியில் செயல்படும் ஒரு தாட்சரைட், நான் ஒரு தாட்சரைட் ஆக இயங்குகிறேன், நான் ஒரு தாட்சரையனாக ஆட்சி செய்வேன்" என்று நம்பிக்கையுடன் பிரசாரம் செய்து வருகிறார் ரிஷி சுனக். வரும் 2022 செப்டம்பர் மாதம் 5 ந்தேதி இங்கிலாந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். ரிஷி இங்கிலாந்தின் பிரதமரானால் நிச்சயமாக இந்தியர்களான நமக்கு பெருமையே. ஒரு காலத்தில் நம்மை அடிமை படுத்தி, ஆண்ட பிரிட்டன் இன்று ஒரு இந்தியனின் தலைமையின் கீழ் இயங்க போகிறது என்பது "ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்.. வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.. " என்ற வேடிக்கையான பழமொழியை உறுதி செய்கிறது.