கற்க... கற்க.... கற்க...
கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்றாள் அவ்வை பாட்டி. ராம்குமார் சார் இதை என்னிடம் வேறு விதத்தில் சொன்னார். “சார் நீங்க வாழற கடைசி நொடி வரை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. பாடப்புத்தகம் மட்டுமல்ல... அறிஞர்கள் எழுதிய நூல்கள் மட்டுமல்ல... மனிதர்கள், குழந்தைகள், விலங்குகள் கூட உங்களுக்கு பலவற்றை சொல்லித்தரும்”என்றார்.
ராம்குமார், எனக்கு 21 வயதில் ரயிலில் அறிமுகமானார். நானும் அவரும் ஒரே ரயிலில் பயணிப்போம். முதலில் அவர்தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் ஒரு கம்பெனியின் விற்பனை நிர்வாகி. எளிமையான ஆங்கிலம், பல பொது விஷயங்கள், ஆன்மீகம் என்று அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலத்தில் பேச, அவரிடம்தான் நான் கற்றுக்கொண்டேன். வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்கள் அவருக்கு அத்துப்படி. அவருடைய தத்துவங்களை சுட்டிக்காட்டி நிறைய சொல்வார். விவேகானந்தர், ராமகிருஷ்ணர் எழுதிய நூல்களை எல்லாம் அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் ஆலோசனையின் பேரில் தான், நான் ராமகிருஷ்ண விஜயத்திற்கு ஆயுள் சந்தாதாரர் ஆனேன். அவர் வேலை பார்த்த கம்பெனியின் வெற்றியாளர் அவர். இத்தனைக்கும் அவருக்கு மேலே உயர் பதவியில் இருந்த அவரது உறவினரே அவரது வளர்ச்சியை விரும்பவில்லை. ஆனால், கம்பெனிகள் எப்போதும் வெற்றியாளரை தாங்கிப் பிடிக்கும், அவரது கம்பெனியும் அதைத்தான் செய்தது. அவர் சொல்வதற்கு அவரது கம்பெனி நிர்வாகம் மறுபேச்சு பேசாது. ஆனால், வெற்றியை அவர் என்றுமே தலைக்கு மேல் ஏற்றிக்கொண்டதில்லை. இது தான் என் வேலை, இதற்குத்தான் ஊதியம் என சுருக்கமாக சொல்லி விடுவார். அவர் அனுபவம் எனக்கு நிறைய கற்றுத் தந்தது. அவர் உறவினர் அவர் வளர்ச்சிக்கு தடைக்கல்லாய் இருந்ததை அவர் வெற்றி படிக்கட்டாக மாற்றிக்கொண்டார். இதற்காக அந்த உறவினரிடம் தனது மனக்கசப்பை என்றுமே வெளியிட்டதில்லை அல்லது கம்பெனி நிர்வாகத்திடம் அந்த உறவினர் மேல் புகாரெல்லாம் சொல்லவில்லை. அவர் உழைப்பை நம்பினார், அதை உளப்பூர்வமாக செய்தார். நேரம் தவறாமை அவரது பழக்க வழக்கம். அவர் சொன்னது உண்மை. இந்த உலகம் நிறைய சொல்லித்தரும், எது உனக்கு சாத்தியமோ, அதை எடுத்துக் கொள் என்பார்.
கொரான காலத்தில் என் பேரனுக்கு பள்ளிக்கூடம் இல்லை. விளையாட எக்கச்சக்க நேரம் என்பதால் அவன் அதற்கு தோதாக என்னைத்தான் பிடிப்பான். எங்கள் வீட்டுக்கு அருகே ரயில்வேயில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் தங்கியிருந்தார்கள். அவர்கள் முயல் வளர்த்து வந்தார்கள். அவன் நேரத்தை திசை திருப்ப அந்த இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றேன். முயல் குட்டிகளை தூக்கி விளையாடுவான், கொஞ்சுவான். அதற்கு புரிகிறதோ இல்லையோ ஆனால் பேசுவான். “அண்ணா இருக்கேன்ல பார்த்துக்கிறேன்” என்பான். இதையெல்லாம் நான் ரசிப்பேன். முயல்களுக்கு, வீட்டிலிருந்து கேரட், கோஸ், பீன்ஸ் எல்லாவற்றையும் அவனே பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து வருவான். ஒரு கட்டத்தில் அந்த முயல்கள் அவனுடன் தோழமையாக பழகியது. இவனைப் பார்த்ததும் ஓடிவந்து இவன் காலை சுற்றிக் கொண்டது. இவனும் “உங்களுக்கு நிறைய சாப்பிட எடுத்து வந்திருக்கிறேன்” என்று சொல்லி அந்த முயல்களுக்கு அந்த காய்களை தருவான், அந்த முயலும் ஆசையாய் சாப்பிடும்.
ஒரு நாள் என் கூட நடந்து வந்தவன், திடீரென ஓடி கீழே தடுக்கி விழுந்தான். சில நிமிடம் அழுதான், அதன் பிறகு சமாதானம் ஆனான். அப்போது நான், “சாரி. நான் உன்னை கையை பிடித்து அழைத்துச் சென்றிருக்க வேண்டும், தப்பு செய்துவிட்டேன்” என்றேன். “இல்ல தாத்தா... நான் தான் சாரி சொல்லணும். நான் தப்பு பண்ணிட்டேன், உன் கையைப் பிடித்து வராமல் நான் ஓடி வந்தது என் தப்பு தானே” என்றவன்... அடுத்து அவன் சொன்னதுதான் ,என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது... “நம்ம ஏன் சாரி சொல்றோம் தெரியுமா?” என்று கேட்டான். நான் “தப்பு பண்ணா மன்னிப்பு கேட்க சாரி சொல்றோம்” என்றேன். உடனே அவன் “அது இல்ல... சாரின்னா, நம்ம இனிமே அந்தத் தப்பை மறுபடியும் பண்ண மாட்டேன்னு சொல்றதுக்கு தான் சாரி சொல்றோம்” என்றான். இதை அவன் சாதாரணமாக சொல்லிவிட்டு, முயலுடன் விளையாட போய்விட்டான். அவன் எல்கேஜி தான் படித்தான். யுகேஜி துவங்கும் போதுதான் கொரானா வந்து பள்ளிக்கூடத்திற்கு போகவில்லை. இது யார் சொல்லித் தந்தது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், சாரி என்பதற்கு இதுதான் அர்த்தம் என்று அவன் சொன்ன விளக்கம் எனக்கு புதியது. வாழ்க்கையில் ஸாரி என்ற வார்த்தை, தினந்தோறும் சொல்லாமல் நம்முடைய அன்றைய தினம் பெரும்பாலும் முடிவதில்லை. ஆனால், ஸாரி சொன்னபிறகும் அந்த தவறை பலமுறை செய்துவிட்டு, மீண்டும் ஸாரி சொல்லி இருக்கிறோம். என் பேரனின் ஸாரி, சாரி விளக்கம் என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது.
கே.ஏ.கிருஷ்ணசுவாமி அதிமுக அமைச்சர். நாகரிகமான அரசியல்வாதி. ராம்குமார் சொன்ன கற்றுக்கொள்வதை அவரும் சொன்னார் வேறு விதமாக.
அதிகாலை மெரினா பீச்சில் நடைபயணம் செய்பவர்களைப் பற்றி கட்டுரை எழுத அதிகாலை மெரினா பீச் போனபோது, நடை பயிற்சி முடித்து காந்தி சிலை அருகே உட்கார்ந்திருந்தார் கே.ஏ.கிருஷ்ணசுவாமி. அவர் எனக்கு பழக்கம் ஆனதால், அவரிடம் நடைபயிற்சி பற்றி பேசினேன். இங்கு எனக்கு நிறைய நண்பர்கள். அரசியலுக்கு அப்பால். மாணவர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், இல்லத்தரசிகள் என்று பலருடன் நான் இங்கு பேசுவேன், அவர்களைப் பற்றி விசாரிப்பேன். இதோ அங்கு ஒரு இளைஞர் உட்கார்ந்திருக்கிறார், அவர் மூன்று நான்கு நாட்களாக நடைப்பயிற்சிக்கு வந்துகொண்டிருக்கிறார். இருவரும் பரஸ்பரம் இன்று வணக்கம் சொல்லிக் கொண்டோம். இன்னும் சில நாட்களில் நான் அவரிடம் நெருங்கிப் பழகுவேன், பேசுவேன். அவர் யார் என்ன செய்கிறார், என்றெல்லாம் கேட்பேன், தெரிந்து கொள்வேன் என்றார். மெரினா எனக்கு நிறைய விஷயங்களை சொல்லித் தருகிறது என்றார் அந்த அமைச்சர்.
ஒரு முறை தேர்தலின்போது, தொகுதி நிலவரம் பற்றி எழுத கே.ஏ. கிருஷ்ணசாமியுடன் அவர் வீடு வீடாக வாக்கு சேகரிக்க சேகரிக்க சென்றபோது, அவருடன் நானும் சென்றேன். ஒரு வீட்டு வாசலில் அன்றுதான் வத்தல் காய போட்டிருந்தார்கள், அதை அவர் கவனிக்கவில்லை.. அதன்மேல் அவர் கால் வைக்க... அந்த கூழ் அவரை வழுக்கி அடித்தது. “அடடா.. கீழே விழுந்து விட்டீர்களே” என்றேன். அவர் பதட்டப்படாமல்... “it is not fall it's only slip”.. என்றார் ஆங்கிலத்தில். அமைச்சரிடம் அன்று கற்றுக்கொண்டது இது.
Leave a comment
Upload