மருத்துவமனை!!
கணவன் அவசர அவசரமாக மனைவியை அழைத்தான்.
“டார்லிங், நான் தான். உன்னை கலவரப்படுத்த விரும்பல. ஆஃபீசு விட்டு வரும் போது ஒரு கார் வந்து மோதிடுச்சு. அனிதா தான் என்னை இங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்தா. இங்க எல்லா செக் பண்ணிட்டாங்க. இன்னும் எக்ஸ் ரே எடுக்க வேண்டியது தான் பாக்கி. மண்டைல தான் நல்லா அடிபட்டுருக்கு. நல்ல காலம். இன்டர்னல் இன்ஜுரி எதுவும் இல்லியாம். ஆனா ஒரே ஒரு விஷயம். விலா எலும்பு முறிஞ்சுருச்சாம். இடது கால்லயும் ஃப்ராக்சர் ஆகியிருக்கு. ஒரு விஷயம் சொன்னா பயந்துக்காத. என்னோட வலதுகாலை எடுக்க வேண்டியிருந்தாலும் இருக்கும்னு சொல்றாங்க டாக்டர்."
மூச்சு விடாமல் படபடப்போடு சொல்லி முடித்து, ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
மனைவி மறுமுனையில்...
“யார் அந்த சனியன் அனிதா ஹஹ்ஹ்...?"
மனைவிகள் மாறுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு.
ஆபத்தான சூழ்நிலை...
ஒரு குடிகாரன் மனைவிக்கு போன் பண்ணினான். அதிலும் பதட்டமாக.
இதைப் படிக்கும் போது நீங்களே கொஞ்சம் குளரி குளரி படிக்க வேண்டுகிறேன்.
“நான் ஒரு குதிரை மேல உக்காந்துருக்கேன்.. அது நல்லா வேகமா போவுது. வலது பக்கம் பாத்தா பெரிய பள்ளம். இடது பக்கம் பாத்தா ஒரு யானை... அதே வேகத்தில பக்கத்திலேயே ஓடி வருது. எனக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு குதிரை ஓடுதுடி. ஆனா என்னால அந்த குதிரைய முந்தவே முடியலை. பின்னாடி திரும்பி பாத்தா ஐயையோ. ஒரு சிங்கம் என் பின்னாடியே துரத்திட்டு வருது. அதுவும் என் குதிரை கிட்ட வர முடியலை. இந்த ஆபத்தான சூழ்நிலைல நான் எப்புடுடி. தப்பிச்ஷ்ஷ்சு வர்ரது”
மறு முனையில் மனைவி கத்தினாள்.
“அட குடிகாரப் பயலே பையன கூட்ட்டிட்டு. எக்ஸ்பிஷன் போன இடத்தில உன்னை யாருயா குடை ராட்டினத்தில உட்காரச் சொன்னா...? இறங்கித் தொலை..”
இரயில் விளையாட்டு!
தீபாவளிக்கு மறு நாள். அம்மா சமையல் கட்டில் பிசியாக இருந்தாள்.
சின்ன பையன் வயது நாலு ஐந்து தான் இருக்கும். வீட்டின் வரவேற்பறையில் டிரெயின் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.
அம்மாவிற்கு கேட்டது. பையன் பேசுவது.
“இது கடைசி ஸ்டாப். எல்லா சாவு கிராக்கியும் இறங்குங்க. எக்கேடா கெட்டு தொலஞ்சு போங்க. அதே மாதிரி புதுசா ஏறற சாவு கிராக்கியெல்லாம் ஒழுங்கா டிக்கெட் வாங்குங்க. ஏன்னா இப்ப ரயில் புறப்படப் போவுது. எல்லாரும் மரியாதையா உள்ள வந்து நில்லுங்க..இல்லைன்னா எட்டி பின்னாலயே உதைப்பேன்”
கேட்டுக் கொண்டிருந்த அம்மாவுக்கு பொறுக்கலை. விறுவிறுவென வந்தாள்.
“என்னடா பாஷை இது. நாம வீட்ல இப்படியா பேசறது. மரியாதை வேண்டாம். நிறுத்து விளையாட்டை. போய் உன் ரூமுக்குள்ள இரு. இரண்டு மணி நேரம் எதுவும் பண்ண கூடாது. பேசாம இருக்கணும். இரண்டு மணி நேரம் கழிச்சு வந்து விளையாடு போ” என்று கண்டிப்பு காட்டினாள்.
அவனும் ரூமுக்குள் போய் விட்டு இரண்டு மணி நேரம் கழித்து வந்தான். விளையாட்டு தொடர்ந்தது.
“இந்த இரயிலில் இறங்கும் பிரயாணிகளுக்கு எங்களுடன் வந்தததற்கு மிகவும் நன்றி. மீண்டும் உங்களை விரைவில் சந்திப்போம் என்று நம்புகிறேன்.”
பையன் தொடர்ந்தான்.
“புதிதாக ஏறும் பயணிகள் தயவு செய்து உங்கள் லக்கேஜை சீட்டுக்கு அடியில் வைக்கவும். இந்த டிரெயினில் சிகரெட் பிடிக்கக் கூடாது. உங்கள் பயணம் இனிமையாக இருக்க எங்கள் வாழ்த்துக்கள்.”
அம்மாவுக்கு சந்தோஷம். தனது இரண்டு மணி நேர தண்டனை வேலை செய்கிறது என்று மனதிற்குள் நினைக்கும் போது பையன் தொடர்ந்தான்…
“இந்த இரயில் இரண்டு மணி நேரம் தாமதமானதற்கு வருத்தப்படும் பயணிகளே.. தயவு செய்து அதற்கு நான் காரணம் இல்லை. உள்ளே போய் சமையல் கட்டில் இருக்கும் சாவு கிராக்கியை கேளுங்கள்...”
வலைக்கள்ளன்.
Leave a comment
Upload