ஸ்ரீ காஞ்சி பெரியவரின் குரல் - 07
ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் அவர்களின் சொற்பொழிவுகளை, உபன்யாசங்களை, அறிவுரைகளை, அனுகிரக பாஷியங்களை தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற நூலக வெளிவந்துள்ளது. திரு இரா. கணபதி அவர்கள் மிகவும் அருமையாக தொகுத்து உள்ளார். அதனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்களையும் மற்றும் சில அனுபவ விஷயங்களையும் நாம் வாரம் தோறும் பார்த்து வருகிறோம்.
கண்டத்திற்கும் அகண்டத்திற்கும் ஒரே சூரியன் தான் உள்ளது. தரையில் நீரை தெளித்தால் அனைத்து முத்துக்களிலும் பல சூரியன்கள் தெரிவதுபோல், ஜீவராசிகளான நாம் பலவாறு உள்ளோம். ஆனால் ஜீவன் ஒன்று தான். பல சூரியன்கள் தெறிவதனால், பல சூரியன்கள் இருப்பதாக அர்த்தம் இல்லாதது போல். ஜீவனும் ஒன்று தான். இதையே ஸ்ரீ பகவத்பாதாள் ப்ரம்ம சூத்திரத்தில் சொல்லியிருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கும் ஒரே சக்திதான், அறிவு தான் பிரிந்து பலவிதமாக இருக்கிறது. அனைத்து சக்தியும் ஒன்று தான். அந்த ஒரே வஸ்து தான் வேதத்தில் குறிப்பிடப்படும் ‘தத்’ எனும் தத்துவம். ‘தத்’ என்றால் தூரத்தில் எல்லாவற்றுக்கும் மேல இருக்கிறது என்று அர்த்தம். உண்மையில் அது தூரத்தில் இருந்தாலும், நம் அருகில் இருப்பதும் அதுவே. தூரத்தில் இருப்பதும் கிட்டத்தில் இருப்பதும் அதுவே. அதுவே நீயாகவும் இருக்கிறாய் என்கிறது தத் - த்வம்.
இப்போது நாம் இதை படிக்கும்போது நமக்கு எல்லாம் புரிந்து விடுவது போல் தோன்றும் . நமக்கு ஆனந்தத்தை தருகிறது. ஆனால் நாம் இப்படியே இருந்து விடுவதில்லை. பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு நாம் வேறு சிந்தனையை கொள்கிறோம். நம்முடைய பார்வை மாறுகிறது. நாம் பலவிதமான பொய்களினால் துன்பப்படுகிறோம். பொய்யினால் கிடைக்கும் ஆனந்தம் என்றுமே பொய்யாகிவிடும். எப்போதும் ஆனந்தமாக இருப்பதற்கு நாம் எப்போதும் உண்மையாக இருப்பவனை பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்போதும் உண்மையாக இருப்பவர் கடவுள் மட்டுமே. ஆசாமிகளாக இருக்கிற நாம் அந்த சாமியை பற்றிக்கொள்ள வேண்டும். கண்டம் கண்டமாக இருப்பது எல்லாம் அகண்டத்தில் இணையும்போது, ஆனந்தம் மட்டுமே மிஞ்சும்.
அகண்டமாக இருப்பவன் கடவுள் ஒருவனே. கண்டம் இருப்பது வெறும் நினைவு மட்டுமே. கண்டமாக இருக்கிற பரமாத்மாவை கண்டம் கண்டமாக உருவமும், குணமும் உள்ளவனாக த்யானித்தோமானால் சண்டை, பூசல், சச்சரவுகள், துக்கம், பயம் இருக்கவே இருக்காது. இதனை தான் ஸ்ரீ பகவத்பாதாள் உபநிஷத் என்ற மரத்திலிருந்து நமக்கு அளித்த பழம்.
இந்த பழுத்த நிலையை அடைவதற்கு நமக்கு பொறுமை வேண்டும். மொட்டாகி, பூவாகி, காயாகி பின்பே பழுக்கவேண்டும். மொட்டிலிருந்தே பழுக்க முயற்சித்தோமானால் வெம்பி விழுந்து விடுவோம்.
அப்படி கனிந்த பழமாக ஆக பூஜை, ஜபம், தவம் புரியவேண்டும். வேதத்தில் சொல்லப்படும் அந்த தத்துவம் நமக்கு புரியும் வரையில் தொடர வேண்டும்.
தத்துவம் என்பது நம்மிடத்திலேயே தான் இருக்கிறது. எந்த அறிவு தத்துவத்தை நாம் ஆராய்கிறோமோ அது நம்மிடத்திலேயே தான் இருக்கிறது.
ஓவியம்: TSN
Leave a comment
Upload