தொடர்கள்
தொடர்கள்
மூவர்ணக் காதல் 5 - சித்ரூபன்

20250311072636980.jpeg

20250311072511728.jpg

20250311072535528.jpeg

உணவகத்தில் தனிமைக்காக ஃபேமிலி ரூம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தான் சாரதி. சர்வரிடம் இப்போதைக்குமூன்று தேநீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணிடம் தன்னை ஒரு துப்பறிவாளன் என்றுஅறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“நேரடியா விஷயத்துக்கு வரேன்.. ஹைதராபாத், டார்ஜிலிங், ஹொகனேக்கல்.. இந்த எடங்கள்ல என்னோடமூணு ஃப்ரெண்ட்ஸ் உயிருக்கு போராடின சம்பவங்கள் நடந்திருக்கு.. அதுல ஏதோ ஒண்ணுல நீங்கசம்பந்தப்பட்டிருக்கீங்க.. அதைக் கண்ணால பார்த்தும் அவரைக் காப்பாத்த எந்த முயற்சியும் எடுக்கலை..”

வத்ஸலா “ஏற்கெனவே உங்களுக்கு அறிமுகமான ஒருத்தர் ஆபத்துல சிக்கியிருக்கும் போது ஏன் கண்டும்காணாம அந்த எடத்தை விட்டு நகர்ந்து போயிட்டீங்க..” என்று விறைப்பாகக் கேட்டாள்.

“இதுக்கு விளக்கமா பதில் சொன்னாதான் உங்களுக்கு புரியும்..” என்று அந்த யுவதி தனது முன்கதைச்சுருக்கத்தை விவரிக்க ஆரம்பித்தாள்.

“என்னோட சொந்த ஊர் தர்மபுரி ஜில்லா.. பாப்பிரெட்டிபாளையம் தாலுகாவுல ஒரு பின்தங்கிய கிராமம்..எங்கப்பா ஆஜானுபாகுவா இருப்பாரு.. என்னை பேர் சொல்லி கூப்பிடவே மாட்டாரு…”

சாரதி கைபேசியில் அவளுடைய பேச்சைப் பதிவு செய்தவாறே கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். வத்ஸலா தனது டைரியில் குறிப்புகள் எடுப்பது போல பாவனை செய்தாள். நீண்ட நேரம் தன் சுயசரிதையைச்சொல்லிக் கொண்டே வந்த பெண் ஒரு கட்டத்தில்,

நிறைய ஊர்களுக்கு பயணம் செய்யணும்கற ஆசைகள் அதிகமாச்சு.. ஆனா, மாசத்துல சில நாள் எனக்குள்ளேஒருவிதமான மூர்க்கம் ஏற்பட்டு வெறியா மாறும்.. ஏன்னு புரியல” என்று நிறுத்தி மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள்.

“என் நண்பர்களுக்கு ஏற்பட்ட திகில் அனுபவங்கள் எல்லாமே ஒரு பௌர்ணமி தினத்துல தான் நடந்திருக்கு..உங்க அம்மா அநியாயமா செத்துப் போனதும் ‘ஃபுல் மூன் டே’ன்னு சொல்லியிருக்கீங்க..” என்றான் சாரதி. “அந்தஅதிர்ச்சி உங்களை சின்ன வயசுல ரொம்பவே பாதிச்சிருக்கு.. தாயாரோட துர்மரணம் உங்க ஆழ்மனசுலபதிஞ்சிருக்கும்.. அதனாலதான் ஒவ்வொரு மாசமும் அந்தக் குறிப்பிட்ட நாள்ல உங்க நடவடிக்கைகள் விசித்ரமாஇருக்குன்னு நினைக்கறேன்.. உணர்ச்சியே இல்லாம நீங்க விலகிப் போனதுக்கு அது காரணமா இருக்கலாம்..”

“நீங்க சொல்றதும் உண்மைதான் சார்.. நானும் இந்தக் கோணத்துல யோசிச்சிருக்கேன்..” என்றுஆமோதித்தாள். “பொதுவாவே யாராவது தன்னோட குலத்தைப் பத்தி என்ன பேசினாலும் எனக்குள்ள இறுக்கம்அதிகமாயிடுது..”

“இவர் ஃப்ரெண்டோட சமூகப் பின்னணியும் நீங்க காப்பாத்தாம போனதுக்கு காரணமா மேடம்..”

“நிச்சயமா இல்ல இன்ஸ்பெக்டர்.. யாரோ மூணு பேர் எங்கம்மாவுக்கு இழைச்ச கொடுமைக்கு அவர் என்னபண்ணுவார்.. பாவம்..” என்றாள் அவள். “பொதுவாவே ஒவ்வொரு பௌர்ணமி அன்னிக்கும் எனக்கு டென்ஷன்அதிகமாயிடுது.. ரொம்ப பதட்டமா இருக்கும்.. வழக்கத்துக்கு விரோதமான காரியங்கள் செய்வேன்..”

“இப்ப எதுக்கு மெட்ராஸ் வந்தீங்க.. உங்க வீடு இங்க இல்லயே..”

“சமீபத்துல எனக்கு சென்னைக்கு மாற்றல் ஆயிடுச்சி சார்.. லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன்..” என்றாள்யுவதி. “இந்த ஆர்ட் எக்ஸிபிஷன் பத்தி பேப்பர்ல பார்த்தேன்.. எனக்கு எல்லா பெயின்டிங்ஸையும் ரசிக்கப்பிடிக்கும்..”

“மேடம்.. கலியன், வினோத், தாருகேஷ்.. இந்த மூணு பேர்ல யார் உங்ககிட்ட வந்து பேசி அறிமுகமானது..”என்றாள் வத்ஸலா. “இன்னொரு கேள்வி.. மத்த ரெண்டு பொண்ணுங்க உங்க அக்கா தங்கச்சி தானே..அவங்களையும் உடனே வரச்சொல்லுங்க.. விசாரிக்கணும்..”

*** *** ***

வினோத்தின் கைபேசி சிணுங்கியதும் எடுத்து பேசினான். “ஸாரதி காரு.. தாரா ரெட்டி அப்பவே கிளம்பிபோயிட்டாங்க.. ரொம்ப நேரம் அவங்களோட பேச முடியலை.. கூட்டம் அதிகமா இருந்துச்சு.. நீங்க பதினஞ்சுநிமிஷத்துல வரேன்னு சொன்னீங்களே.. எங்க இருக்கீங்க..”

“சொல்றேன்.. கலியனும் தாருகேஷும் எங்கே..”

“பக்கத்துலதான் இருக்காங்க.. ‘லஞ்ச்’சுக்காக வெளியே வந்தோம்..” என்ற வினோத் ஸ்பீக்கரை ஆன்செய்தான் “இன்னொரு ஆச்சர்யம்.. அவங்களோட லவ்வர்ஸும் இந்த எக்ஸிபிஷனுக்கு வந்திருந்தாங்களாம்..என்னவொரு கோஇன்ஸிடென்ஸ் பாருங்க..”

“நானும் வித்யாகிட்ட அதிகமா பேச முடியாம போயிடுத்து..” என்று கலியன் சொல்ல, “எனக்கும் கனிகாவைபார்த்ததுமே என்ன பேசறதுன்னு தெரியலை..” என்று தாருகேஷும் வழிமொழிந்தான்.

“கவலைப்படாதீங்க.. மூணு பேரும் இங்க வாங்களேன்.. உங்க கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கூட எவ்ளோ நேரம்வேணும்னாலும் பேசலாம்..”

“என்ன சொல்றீங்க.. நீங்க எங்க இருக்கீங்க சார்..” என்றனர் மூவரும் ஆர்வத்துடன்.

“என் பார்ட்னரோட, உங்க எக்ஸிபிஷன் நடக்கற எடத்துக்கு எதிரே ஒரு ரெஸ்டாரென்ட்ல இருக்கேன்..சீக்கிரம் வாங்க.. சாப்டுட்டே பேசலாம்..”

*** *** ***

ஓட்டலின் வாசலில் மூன்று நண்பர்களையும் வரவேற்றான் சாரதி. “இது மிஸ். வத்ஸலா.. எங்க‘எஸ்.வி.அசோசியேட்ஸ்’ல இருக்கற ‘வி’ இவங்க தான்..”

அவளுடைய யூனிஃபார்மை பார்த்து “உங்களோட பார்ட்னர் போலீஸ்னு சொல்லவே இல்லையே சார்..”என்றான் கலியன், “எந்த ஸ்டேஷன் மேம்..”

அவள் “உங்க மூணு பேர் லவ்வர்ஸைக் கண்டுபிடிக்க நான் போட்ட அமெச்சூர் வேஷம் இது..” என்று தொப்பிமற்றும் லட்டியை மேசையில் வைத்தாள்.

“என்ன சொல்றீங்க..” குழப்பத்துடன் கேட்டான் தாருகேஷ். வினோத்துக்கும் புரியவில்லை.

“அந்த ஃபேமிலி ரூமுக்குள்ள போனீங்கன்னா உங்க காதலிகளைச் சந்திக்கலாம்..” என்றான் சாரதி, ஒவ்வொருவரையும் பார்த்து.

மூவரும் ஆனந்தப் பரவசத்துடன் அவ்வறையை நோக்கிச் சென்றனர்.

*** *** ***

வெளியே, தன் மொபைலில் சற்று முன்னர் ஒலிப்பதிவு செய்திருந்த அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைஆங்காங்கே நிறுத்தி, வத்ஸலாவுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சாரதி.

“தாருகேஷை கொல்கொத்தால சந்திக்கறதுக்கு முந்தின நாள் ஃபிலிம் பெஸ்டிவல்ல பழைய மிருணாள் ஸென்படம் பார்த்தேன்.. கனிகா மொஜும்தார்னு ஒரு பெங்காலி நடிகை பிரமாதமா நடிச்சிருந்தாங்க.. அதோடதாக்கத்துலருந்து வெளியில வர முடியலை.. அவர் கேட்டதும் சட்டுன்னு அவங்க பேரைச் சொல்லிட்டேன்”

“திருநகரி போன சமயத்துல ஒரு தமிழ் நாவல் படிச்சிட்டிருந்தேன்.. ஐம்பதுகள்ல நடக்கற கதை.. அதுலநாயகியோட பேரு வித்யா.. அந்தப் பாத்திரமும், பிராமண பாஷையும் என்னை ரொம்பவே பாதிச்சுது..கோவில்ல கலியன் கேட்டவுடனே அந்தப் பேரு என்னை அறியாம வாயில வந்துடுத்து”

“செகந்திராபாத்ல எங்க தியேட்டர் க்ரூப் சார்பா ஒரு நாடகம் போட்டோம்.. என்னோட கேரக்டர் பேரு தாராரெட்டி.. அதுல நடிச்சதிலிருந்து பல நாள் அந்தப் பொண்ணாவே மாறிட்டேன்.. அன்னிக்கி மியூசியம் கேலரியிலவினோத் கேட்கவும் சட்டுனு அந்தப் பேரைச் சொல்லும்படி ஆயிடுச்சி”

வத்ஸலா “எனக்கும் இந்த மாதிரி அனுபவம் உண்டு..” என்றாள். “பொன்னியின் செல்வன் வாசிக்கும் போதுவீட்டுல நானும் செந்தமிழ்ல பேசிட்டிருந்தேன்.. நந்தினி கேரக்டரோட அநியாயத்துக்கு ஒன்றிப்போயிட்டேன்..அந்தப் பேரைச் சொல்லி யாரையாவது கூப்பிட்டா நான் திரும்பிப் பார்க்க ஆரம்பிச்சேன்..”

“எனக்கும் சுஜாதாவோட துப்பறியும் கதைகளைப் படிச்ச பிறகு தான் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஆரம்பிக்கணும்னுதோணிச்சி.. ஒரு கட்டத்துல என் பேரைக் கூட கணேஷ், அல்லது, வஸந்த்ன்னு மாத்திக்கலாமான்னுயோசிச்சேன்..” என்றான் சாரதி. “அது போகட்டும்.. இந்தக் கேஸைப் பத்தி என்ன நினைக்கறீங்க பார்ட்னர்..”

“தாரா ரெட்டி மொபைல் நம்பரை ட்ராக் பண்ணி.. போன வருஷம் அதோட வெவ்வேற லொகேஷன்ஸைக்கண்டுபிடிச்சதா நீங்க சொன்னதும் ஓரளவுக்கு புரிஞ்சுது ஜி..”

“நாளைக்கு கிருஷ்ணகிரிக்கு போயி அந்தப் பொண்ணை நேர்ல பார்த்து எல்லா விவரங்களையும் கேட்டுதெரிஞ்சுக்கலாம்னு இருந்தேன்.. கும்பிடப் போன தெய்வம் மாதிரி அவங்களே இந்த எக்ஸிபிஷனுக்குவந்துட்டாங்க..”

“என்னதான் தற்செயலா இருந்தாலும்.. இந்த ஃப்ரெண்ட்ஸ் விஷயத்துல அடுத்தடுத்து இப்படி சந்திப்புகள்நடக்குமா.. ஆச்சர்யமா இருக்கு..”

“வாழ்க்கையில நாம எதிர்பார்க்காத எவ்வளவோ திருப்பங்கள் ஏற்படலையா.. அந்த மாதிரிதான் இதுவும்..”என்றபடியே சாலையைப் பார்த்தான்.

எதிரே சி.பி.ஆர்ட் சென்டரிலிருந்து மூன்று இளம் பெண்கள் கண்காட்சியில் வாங்கிய ஓவியங்களைச்சுமந்தபடி வெளியே வருவதைக் கவனித்தான். அச்சு எடுத்தாற்போல ஒரே சாயலில் கேரள முண்டு எனப்படும்வெள்ளைப் புடவை அணிந்திருந்த மூவரும் காரில் ஏறிச் சென்றனர்.

*** *** ***

ஃபேமிலி ரூமுக்குள் நுழைந்த நண்பர்கள் தங்களுடைய காதலியைப் பார்த்து ஆனந்தக் கூச்சலிட்டனர்.

“ஹாய் கனிகா.. வாட் எ சர்ப்ரைஸ்..” என்றான் தாருகேஷ்.

“வித்யா.. நீங்க எப்படி இங்கே..” என்றான் கலியன்.

“ஹலோ தாரா.. இப்பதானே எக்ஸிபிஷனுக்கு வந்தீங்க..” என்றான் வினோத்.

அடுத்த கணமே மூன்று பேரும் ஒருவரையொருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டனர்.

ஆஃப்கானி குர்தா பைஜாமாவில் இருந்த அவள் “கனிகா மொஜும்தாரும் நான்தான்.. வித்யா அய்யரும்நான்தான்.. தாரா ரெட்டியும் நான்தான்..” என்றாள்.

அப்போது வத்ஸலாவுடன் உள்ளே வந்த சாரதி, “ஃப்ரெண்ட்ஸ்.. இப்போ உங்கள்ல யாராவது ரெண்டு பேர்தங்களோட காதலைத் தியாகம் பண்ணனும்..” என்றான் புன்னகையுடன்.

“என் ஃப்ளாஷ்பேக்கை கேட்டா மூணு பேருமே விட்டுட்டு ஓடிடுவாங்க..” என்றாள் அவள் விரக்தியாக. “எனக்குகல்யாணம், காதல் இதுல எல்லாம் நம்பிக்கையே இல்ல..”

“என்ன சார் இது.. ஒரே பொண்ணு எப்படி எங்க எல்லாரையும் வெவ்வேற ஊர்ல...” என்று ஆரம்பித்தான்கலியன்.

“ஏன் நடக்கக் கூடாது.. நீங்க மூணு பேரும் ஒரே சமயத்துலயா அந்தந்த எடத்துக்கு போனீங்க.. இல்லியே..”என்றாள் வத்ஸலா.

“தாருகேஷ் கனிகாவை மீட் பண்ணது மே மாசம்.. வினோத் ஆகஸ்ட்ல தாராவை பார்த்திருக்கார்.. கலியன்ஹொகனேக்கல்ல வித்யாவை சந்திச்சது அக்டோபர்னு நினைக்கறேன்..” என்று சொன்னான் சாரதி. “அதுமட்டுமில்ல.. இவங்களோட ஒவ்வொரு அம்சமும் உங்களைத் தனித்தனியா கவர்ந்திருக்கு.. உயரம், அழகு, நிறம்..”

வத்ஸலா “நீங்க மூணு பேரும் ஃப்ரெண்ட்ஸ்ங்கறது மேடத்துக்குத் தெரியாது.. ஒவ்வொருத்தரும் காதலிச்சதுஒரே பெண்ணைங்கறது மத்த ரெண்டு பேருக்கும் தெரியாது..” என்றாள்.

“அது சரி.. எங்க கிட்ட ஏன் வெவ்வேற பேரைச் சொன்னீங்க..” என்றான் தாருகேஷ்.

“உங்க சந்தேகங்கள் எல்லாத்துக்கும் இவங்களோட விளக்கமான பதில் என் செல்போன்ல பதிவாயிருக்கு..உட்காருங்க.. கேட்டுட்டே சாப்பிடலாம்..” என்றான் சாரதி.

“அப்போ.. உங்களோட நிஜமான பேரு என்ன..” என்று அந்த யுவதியிடம் கேட்டான் வினோத்.

“கவிதா” என்றாள் அவள்.

(முற்றும்)

2025031107220055.jpg

கதாசிரியர் சித்ரூபன்.