நகர்புறத்தை ஒட்டியுள்ள வளர்ந்துவரும் பெரும்பள்ளம் என்ற கிராமத்தில் வசிப்பவன் பல்லவன். அவன் தன் அலுவலகத்துக்கு தினமும் மிதிவண்டியில் செல்வது வழக்கம்.
ஒருநாள் தாமதமாகக்கிளம்பியதால், ஒரு குறுக்கு வழிப்பாதையை தேர்ந்தெடுத்து, நேரத்துக்கு அலுவலகத்துக்கு போய்விடலாம் என்று மிதிவண்டியில் மிதிக்கத் துவங்கினான். கொஞ்சதூரத்தில், சைக்கிளுடன் தடால் என்று குப்புற விழுந்தான்.
மின்வாரியத்தவர், முந்தின நாள் வாரிப்போட்ட மண்ணை ,நிரப்பாமல் சென்றதால், ஏற்பட்ட பெரும்பள்ளம் கவனிக்கப்படவில்லை. சுதாரித்து எழுந்து நின்றான். சில அடி கூட நடக்க முடியவில்லை. பின்னங்காலில் பாறாங்கல் கட்டியது போன்ற உணர்வு. மிதிவண்டியை தள்ளிக்கொண்டு, தன்னையும் மெல்ல தள்ளிக்கொண்டு வீட்டுக்கு ஒருவழியாக வந்தடைந்தான்.
லீவு சொல்லிவிட்டு ஒரு பஸ்ஸில் நின்றவாறே நகர்ப்புற எல்லையில் உள்ள மூட்டு மருத்துவமனையை அடைந்தான். (பஸ்ஸில் நிறைய இருக்கைகள் காலி. ஆனாலும் பல்லவனால் உட்கார முடியவில்லை.சிரமப்பட்டு உட்கார்ந்தாலும் எழுந்திருப்பது பிரம்மபிரயத்தனம் என்பதை வீட்டிலேயே ஒத்திகை பார்த்துவிட்டான்).
மருத்துவமனை ரிசப்ஷனில் பெயர் கொடுத்ததும் ஒரு டோக்கன் கொடுத்து உட்காரச்சொன்னார்கள். இருக்கட்டும் பரவாயில்லை என்று பெருந்தன்மையாக சொன்னான்.
சில நொடிகளில், ஒரு நர்ஸ் அருகே வந்து , ''ஆறாவது டோக்கன் தானே சார் உங்களுக்கு ; அரைமணி நேரம் ஆகும்; உட்காருங்க சார் ''என்றாள்.
"ஆறாது தொடரும் வலியில், ஆறா வது டோக்கனுக்கு நின்றால் பரவாயில்லை ; சிரமப்பட்டு உட்கார்ந்துவிட்டு ஆராவது (யாராவது) தூக்கி எழுப்பவேண்டியிருக்குமே அம்மா" என்று பதிலளித்தான்.
சில நிமிடங்களில், ஒரு அட்டெண்டர், "சார், உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது.? உட்காருங்க சார். யாராவது நின்னா, டாக்டர் எங்களைத்திட்டுவார்"னு கடுப்பாக சொன்னான்.
பல்லவன், எத்தனை பேருக்குத்தான் தன்னால் உட்காரமுடியவில்லை என்று சொல்வது என்று நொந்து கொண்டான். ஸ்ட்ரெச்சரில் படுங்க. டாக்டர் வந்து பார்ப்பார் என்று ஏற்கனவே ஒரு staff சொல்லிப்பார்த்தார். நின்றுகொண்டிருந்தால் மட்டுமே தனக்கு comfort என்று பல்லவன் தீர்மானித்து விட்டதால் இந்த சிரமங்கள் பொருத்துக் கொண்டான்.
இவன் முறை வந்தது. டாக்டர் வந்தார். ஒரு இன்ஸ்டன்ட் எக்ஸ்ரே என்றார். கருப்புத் தாளை லைட் போட்ட பெட்டியில் சொருகிப் பார்த்தவர்,
“உங்களுக்கு ஸ்லிப் டிஸ்க்( SLIP Disc) ஆகியிருக்கிறது. வட்டு விலகல் என்று தமிழில் சொல்வார்கள். முதுகுத்தண்டு வடத்தின் கீழே மூட்டு சற்று விலகல். ஒரு SURGERY செய்து குணமாக்கி விடலாம்.
பல்லவன்: “எவ்வளவு ஆகும் சார்?”
டாக்டர்: “இங்கு concession இருப்பதால், ஒரு ரூபாயில் முடிக்கலாம்”.
பல்லவன்: “என்ன சார், இவ்வளவு குறைந்த கட்டணமா? Consultation பார்க்கவே ரூபாய் இருநூறு கொடுத்தேனே?”
டாக்டர்: “இது பெரிய ஒரு ரூபாய்...ஐ மீன் ஒரு லட்சம்”.
பல்லவன் வீட்டுக்குப்போய் பணம் ஏற்பாடு பண்ணிட்டு அட்மிட் ஆகிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
வீடு திரும்ப பஸ்ஸுக்கு நின்றான். பஸ் வரவே இல்லை. ஒரு ஷேர் ஆட்டோ வந்தது. முதலில் ஏற யோசித்தான். பிறகு, சிரமப்பட்டு உட்கார்ந்து விடுவோம். இறங்கும் இடம் வரும்போது, யாராவது பிடித்து இறக்கி விடுவார்கள் என்ற யோசனையில் ஏறிவிட்டான் . வழியில் ஒவ்வொருவராக இறங்க, கடைசி ஆள் இவன் மட்டும் தான் ஷேர் ஆட்டோவில். கவலை தொற்றிக்கொண்டது.. தன்னால் சுயமாக இறங்க முடியப்போவது இல்லை. ஸ்டாப் வரும்போது என்ன பாடு படப்போகிறோமோ?, ஆழ்ந்த சிந்தனையில் பல்லவன். வீட்டை நெருங்கும் தருணம். திடீரென்று மலை போல் ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் !. ஷேர் ஆட்டோ ஒரு லாங் ஜம்ப் செய்து நிலைக்கு வந்தது.
டிரைவர் , "இறங்குங்க சார்...உங்க இடம் வந்தாச்சு"
உலகில் இருக்கும் தெய்வத்தை எல்லாம் வணங்கினான். மெல்ல எழுந்திருக்க எத்தனித்தான். என்ன ஆச்சர்யம்? இலகுவாக எழுந்தான். இறங்கி நடக்க தொடங்கினான். நார்மலாக நடக்க முடிந்தது. பீடு நடை போட்டு வீட்டுக்கு வந்தான். அவனுக்கு நம்பவே முடியவில்லை.
நின்றான்.
ந ட ந் தா ன்.
அமர்ந்தான்.
கிடந்தான்.
எந்த அசைவிலும் பிரச்சினை இல்லை. தான் பார்த்த டாக்டர்
முதல் மூன்று நாட்களுக்கு திரும்பவும் fees வாங்கமாட்டார் என்பதை தெரிந்து வைத்திருந்தான்.
மீண்டும் அன்று மாலையே டாக்டரைப்பார்த்து, எனக்கு வலி இருந்த இடமே தெரியவில்லை, என்றான். மீண்டும் ஒரு எக்ஸ்ரே.
டாக்டர்: மெடிக்கல் ஹிஸ்டரியிலேயே ஆச்சர்யமா இருக்கே? ஸ்லிப் டிஸ்க் இருந்தே இடமே தெரியலையே ? எப்படி?
பல்லவன் நடந்ததைக்கூறினான்.
அந்த ஸ்பீட் பிரேக்கர் விலகியிருந்த டிஸ்கை அதனிடத்தில் சரியாகப்பொருத்திவிட்டது என்பது தான் உண்மை.
வீடு திரும்பிய அவன், அந்த SPEED BRAKER க்கு ஒரு ரூபாய்க்கு சூடம் கொளுத்திவிட்டு திரும்பினான். உண்மையான ஒரு ரூபாய் செலவில் ஓர் அற்புதம்!
Leave a comment
Upload