சென்னையில் அந்த பிரபல பள்ளியின் முதல்வர் அறைக்குள் என்னுடைய பேரன் தினேஷுடன் நான் நுழைந்தேன். அந்தப் பள்ளியில் அடுத்த வாரம் பத்து நாளைக்கு சம்மர் கேம்ப் நடக்கிறது. அதில் என் பேரன் தினேஷுக்கு கிரிக்கெட் விளையாட்டில் இடம் கேட்பதற்கு வந்திருக்கிறேன்.
வாங்கிய விண்ணப்பத்தை நிரப்பி பள்ளி முதல்வரிடம் கொடுக்க வேண்டும். என் பையன் குமார் அவனுடைய மாமியாருக்கு உடம்பு சரியில்லாததால் மனைவியை அழைத்துக் கொண்டு இன்று காலை திண்டிவனத்துக்கு போய் விட்டான்.
என் மகன் குமார் ’அப்பா, நீங்க தினேஷைக் கூட்டிட்டு பள்ளிக்கு போயி எப்படியாவது அவன் விரும்பும் கிரிக்கெட் குழுவில் இடம் வாங்கி கொடுத்து விடுங்கள்’ என்று சொல்லி விட்டு போய் விட்டான்.
நான் அந்த பள்ளிக்கு வருவது இதுதான் முதல் தடவை. முதல்வர் சீட்டில் கோல்டன் மூக்குக்கண்ணாடி போட்ட சுமார் 68 வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணி அதிகார தோரணையில் உட்கார்ந்து இருந்தாள்.அவளைப்பார்த்த என் மனதில் அதிசயம் கலந்த ஆச்சர்யம்.
எனக்கு ’அவளுடைய பெயர் கீதாவா?’ என்று கேட்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் அந்தப் பள்ளி முதல்வரே முந்திக்கொண்டு ’நீங்கள் கோபால் தானே?’ என்றாளே பார்க்கலாம். என்னை அவளுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னாள்.
’ஆமாம். அதே கீதா தான். நான் மாயவரம் கல்லூரியில் மூன்றாம் வருடம் யூஜி வணிகவியல் படித்த பொழுது அவள் முதல் வருடம் யூஜி வணிகவியல் படித்துக் கொண்டிருந்தாள். என்னை அந்த நாட்களில் வாட்டி வந்த அதே காந்தக் கண்கள். எங்களுக்குள் அப்போது ஒரு ’இது’ இருந்தது. ஆனால் அவளுடைய அப்பாதான் பணக்கார இடம் என்பதால், அவளுடைய மாமா பையனுக்கு அவளை கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டார். அதற்கு பிறகு நானும் சென்னையிலேயே வேலையை பார்த்துவிட்டு இப்பொழுது ஓய்வினையும் பெற்று விட்டேன். ஏறத்தாழ 50 வருடங்களுக்கு பின்னால் இப்பொழுது அவளைப் பார்க்கிறேன்.எப்படித்தான் இது மட்டும் டிமென்ஷியாவின் பாதிப்புக்கு உட்படவில்லை எனத் தெரியவில்லை.எனக்கு மட்டுமல்ல,அவளுக்கும்தான்.
’எனது பேரன் முன்னே என்ன பேசுவது?’ என்றே எனக்கு புரியவில்லை.கண்ணால் பேசிக் கொண்டே அவளுடைய விசிட்டிங் கார்டு பின்னால் எதையோ எழுதி என்கையில் திணித்தாள்.அதை பாதுகாப்பாக என் சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். ஆனால் அவள் இப்பொழுது ஒரு கைம்பெண்ணாக இருப்பது என்னை மிகவும் வாட்டியது. அந்தப் பள்ளியின் செயலரும் முதல்வரும் அவள்தான் என்பதை புரிந்து கொண்டேன்.
’சரி கோபால். வேறு ஒரு நாள் நாம் பேசுவோம்’ என்ற அவள் ’தினேஷ், உங்களுக்கு என்ன வேணும்?’என்றாள்.
நான் மெதுவாக ’இவன் என்னுடைய பேரன்’ என்று சொன்னேன்.
அவனைக் கூப்பிட்டு ’உனக்கு கிரிக்கெட் விளையாட விருப்பமா?’ என்று கேட்டாள் கீதா.
’ஆமாம் மிஸ்’ என்றான் அவன்.
உடனே ’அட்மிட்டேட்’ என்று ஒரு சீலை போட்டு ஆபீஸில் கொடுத்து விடுங்கள். திங்கட்கிழமை காலையில பையனை ஸ்போர்ட்ஸ் யூனிபார்ம் போட்டு அனுப்பி விடுங்க’ என்று சொல்லி அடுத்த பெற்றோரை வரச் சொன்னாள் கீதா. வரும்பொழுது அவள் கொடுத்த அவளுடைய விசிடிங் கார்டை பாதுகாப்பாக என்னுடைய சட்டையின் உள்பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.
அன்று மாலை தினேஷின் நண்பர்கள் எல்லாம் என்னைப் பார்க்க வந்தார்கள். ’தாத்தா, தினேஷுக்கு எப்படி கிரிக்கட் விளையாட இடம் வாங்கினீங்க? எங்களுக்கும் கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்க’ என்று தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்கள்.
நான் கல்லூரியில் படிக்கும்போது பெரிய கிரிக்கெட்வீரர். அதைச் சொல்லித்தான் தினேஷுக்கு கிரிக்கட்ல இடம் வாங்கினேன். உங்க வீட்டில் அப்படி யாராவது கிரிக்கெட்ல பெரிய ஆளாக இருந்தா அதைச் சொல்லி நீங்க இடம் வாங்கிக்கலாம்’ என்று சொல்லி அவர்களை சமாளித்து படுக்கப் போனேன்.
என்னுடைய தலையனையின் கீழே கீதாவின் அந்த விசிட்டிங் கார்டை வைத்தேன். அடிக்கடி அதில் இருந்த கீதாவின் ஃபோட்டோவை பார்த்துக் கொண்டேன்.எதிரில் ஃபோட்டோவில் இருந்த என் கமலம் ’கலக்கீட்டிங்க போங்க’ என்று என்னைப் பார்த்து நமட்டு சிரிப்பினை அள்ளி வீசினாள்.
Leave a comment
Upload