“இந்த சாமானெல்லாம் கொண்டுபோய் நம்ம புது வீட்டில் பத்திரமாகச் சேர்க்கனும், இன்னும் இரண்டு ஆளை உன் கூட வைத்துக்கொள் என மாலி என்கிற மகாலிங்கத்திடம் உத்திரவிட்டுக் கொண்டிருந்தார் சிவசாமி. பிள்ளைகளின் படிப்பிற்காகவும் தன் தொழில் வளர்ச்சிக்காகவும், கிராமத்தில் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வந்த பாரம்பரியமிக்க பழைய வீட்டைவிட்டு, நகர்புறத்தில் புதிதாக ஒரு பங்களா கட்டி குடியேற உள்ளார் சிவசாமி.
“எந்த பழைய சாமனெல்லாம் வண்டியிலே ஏற்றாதே, நான் அம்மாகிட்டே சொல்லிட்டேன், அவசியமில்லாததையெல்லாம்
புது வீட்டிற்கு கொண்டே போகவேண்டாம் என்று, நீயும் கொண்டு போகாதே தேவையற்றதை ஒரு இடத்தில் அடுக்கி வைத்திடு.
இறுதியாக நான் வந்து பார்த்த பின்பு தேவையில்லாததை நீயோ, அல்லது யாருக்கு எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என வேலைகளை மாலியிடம் ஒப்படைத்து விட்டு தன் வேலை நிமித்தமாக போய்விட்டார்.
மாலி உள்ளிட்ட வேலையாட்கள் சமான்கள் அனைத்தையும் புது வீட்டில் கொண்டு சேர்த்துவிட்டு, தேவையற்றவை என சிவசாமியின் மனைவி சொன்னவற்றை வாசலில் அடுக்கி்வைத்திருந்தனர்.அதில் தேவையில்லை எனக்கருதப்பட்ட பழைய கட்டில்,கடிகாரம், தாத்தா குச்சி, உப்பு ஜாடிகள், பானைகள், அம்மி,குழவி,கல் உரல், உலக்கை என பல பழைய பொருள்கள் எல்லாம் இருந்தன.
மாலி தன் குடிசை வீட்டில் இவற்றை எல்லாம் வைக்க இடம் ஏது? ஆகையால்,அம்மா உடம்பிற்கு முடியாமல் கிடக்கே அதற்கு இந்த தாத்தா குச்சியைக் கொடுத்தால் அதை ஊனி எழுந்து நடந்தாலும் நடக்கும் என தாய் மீது உள்ள அன்பு மேலிட அதை மட்டும் எடுத்துக் கொண்டான். மற்றவையெல்லாம் அவரவர் எடுத்துக்கொண்டனர்.
மாலி எடுத்துக் கொண்ட தாத்தா குச்சியைப் பார்த்ததும் இது என் தாத்தா பயன்படுத்தியது, பிறகு அது அலங்ரகாரப் பொருளாக மாடத்தில் அப்பா அதனை மாட்டி வைத்திருந்தார். நான் அதை தொட்டது கூட இல்லை. பரண் மேலேயே கிடந்தததை எடுத்த மனைவி தான் துவைத்த துணிகள் உணர்த்த,தோட்டத்தில் முருங்கை இலை,கறிவேப்பிலை பறிக்கவென உபயோகிப்பாள். இப்போ புது வீட்டில் அதற்கு எந்தத் தேவையும் இல்லை, நீ எடுத்துக்கொள் என்றார் சிவசாமி.
தாத்தா குச்சியுடன் வீட்டிற்குப் போன மாலி அதனை அம்மாவின் கையில் கொடுத்தான் அவள் அதனை வாங்கி தடவிப் பார்த்தவள், ரொம்ப நல்லா இருக்குடா, என்றவள் அதை ஊன்றி எழ முயற்சித்தாள் மெல்ல எழுந்து நடந்தாள் நடந்ததும் தனக்கு புதுத்தெம்பு வந்தது போல் இருந்தது அவளுக்கு.
புது வீட்டிற்கு குடிபோன சிவசாமிக்கு ஆறு மாதத்தில் செய்த தொழில் நட்டமடைய கடன்பெருகி மனைவிக்கு நோய் வந்துசேர, வெளிநாட்டிலிருந்த மூத்தமகன் மருமகள் அவர்கள் வேலையிழந்து தன் பிள்ளைகளுடன் ஊருக்கே வந்துவிட திண்டாடிப்போனார் சிவசாமி.
அந்த குச்சியின் துணை இல்லாமலே இப்போது நடக்க ஆரம்பித்து இருந்தாள் மாலியின் அம்மா. அம்மா குணமானதில் சந்தோஷமாக இருந்தது மாலிக்கு.
அம்மாவின் ஜாதகம் ஆறுமாதத்திற்கு நல்லா இருக்கு அம்மா சரியாகிடுவாள் என்று எதிர் வீட்டு ஜோசியர் சொன்னது அவன் நினைவிற்கு வந்தது. அம்மாவை சரியாக்கிய அந்த தாத்தா குச்சியை எடுத்து குடிசையில் உட்புறம் சொருகி வைத்தான் பத்திரமாக. அம்மாவின் மருத்துவச் செலவுகள் குறைந்து, மூவரும் சிறு சிறு வேலைக்குச் செல்ல,மாலி கையில் நிறைய காசு பணம் புரள ஆரம்பித்தது. மாமியார் உடல் நிலை சரியானதை மருமகள் ரசிக்க வில்லை, சரியாக்கியது இந்த தாத்தா குச்சிதான் என்று அதன் மேல் கோபம் மட்டும் எப்போதும் இருந்தது மாலிக்கு குழந்தைகள் பிறந்தன, வாழ்க்கை வசதியாகி சொல்லிக்கொள்ளும் படியாக நகர்ந்தது மாலிக்கு.
மாலியின் இரண்டு வயதுடைய மகன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான், மாமியார் மருமகள் சண்டையில் வார்த்தைகள் முற்ற அந்த தாத்தா குச்சி மருமகள் கண்ணில் பட்டதும், இதுதான் எல்லாவற்றுக்கும் காரணமென நினைத்தவள் அதை இரண்டாக முறித்து அடுப்பில் போடுகிறேன் பாரு என்று அதனை முழங்காலில் வைத்து இரண்டாக முறித்தாள். படார்! என்று முறிந்ததில் அதிலிருந்து ஒரு உருண்டை வடிவிலான கோலி போன்ற ஒன்று தெருவிற்கு உருண்டு ஓடியதை கவனிக்க விடவில்லை அவர்களது கோபம்.
விளையாடிக் கொண்டிருந்த மாலியின் மகன் கையில் அது கிடைக்க, அதனை கோலிக்குண்டு என நினைத்து அதை அவன் உருட்டி விளையாடினான். எதிர்வீடான் ஜோசியர் வீட்டில் நின்றுக்கொண்டு இதைப் பார்த்த சிறுவன் ஒருவன் இரண்டு சாக்லெட்களைக் கொடுத்து அதனை வாங்கிக்கொண்டான் முறித்தெறிந்த தாத்தாக்குச்சி அடுப்பில் எரிந்து சாம்பளாகிப்போனது.
“உங்கள் பரம்பரையில் நிறைய தானத் தர்மங்கள் செய்து வந்தார்கள், ஆனால் உங்க தாத்தாவும், உங்கள் அப்பாவும் அந்தளவிற்கு எந்த நல்லக் காரியமும் செய்யவில்லை. அதனால்தான் இந்த அளவிற்கு உங்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டியிருக்கு. ஆனால், இப்போது முதல் நேரம் நல்லாயிருக்கு நீங்கள் பெரிய அளவில் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டு உங்கள் பழைய வீட்டிற்கே குடி போய் விடுங்கள். அந்த வீடு உங்கள் பெயர் புகழை திரும்பக்கொடுக்கும் என வாக்கு கூறினார் ஜோசியர் தனதுப் பெயரனுடன் ஜாதகம் பார்க்க வந்த சிவசாமியிடம்.
மருமகள், மாமியார் சண்டையில் கீழே விழுந்து நடக்க முடியாமல் படுத்தப்படுக்கையானாள் மாலியின் அம்மா, கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குப் போனாள் மாலியின் மனைவி.
நம்பிக்கையுடன் வீடு திரும்பிய சிவசாமி வக்கீலை வரவழைத்து, தான் கட்டிய அந்த வீட்டை ஆதரவற்றோர் இல்லத்திற்கு தானமாக அளித்து விட்டு தன் பழைய பரம்பரை வீட்டிற்கே திரும்பவும் குடி புகுந்தார்.
மறுநாளே மகனுக்கும் மருமகளுக்கும் வேலைக்கான மீண்டும் அழைப்பு வர, அவர்களும் விடை பெறுகின்ற நேரத்தில் தாத்தாவிற்கு பை பை சொல்லு என்று பெயரனிடம் சொல்ல, பை தாத்தா என்றவன் அவர் கன்னத்தில் முத்தமிட்டு இரண்டு சாக்லெட்டிற்கு தான் வாங்கி வைத்திருந்த கோலி குண்டு போல ஒன்றை அவரிடத்தில் கொடுத்து விட்டுச்சென்றான். அதை ஆச்சரியமாகப் பார்த்த சிவசாமி, இது பெரும் மதிப்புடைய வைரமாயிற்றே ! இவனிடம் எப்படி வந்தது என ஆச்சரியத்தில் நடப்பவை என்னவென்று சுதாரிப்பதற்குள் கார் சென்றியிருந்தது.
Leave a comment
Upload