தொடர்கள்
தொடர்கள்
இந்த வார பறவை பிராமினி வாத்து - 18 (Ruddy shelduck) - ப ஒப்பிலி 

20250311070529117.jpeg

ஆரஞ்சுடன் பழுப்பு கலந்த நிறத்தில் இருக்கும் இந்த வாத்து, அளவில் பெரியதாக இருக்கும். வெள்ளை, கருப்பு மற்றும் சிறிய அளவில் மினுக்கும் பச்சை நிறங்கள் அடர்ந்த சிறகுகள். இவையே இந்த வாத்தின் அடையாளம், என்கிறார் பறவைகள் இன ஆராய்ச்சியாளர்களின் தந்தை சலீம் அலி.
இந்த வாத்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு பதிமூன்று வருடங்களுக்கு பிறகு இம்முறை வலசை வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகளும், பறவையின வல்லுனர்களும் தெரிவிக்கின்றனர்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வரும் பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் கே வி ஆர் கே திருநாரணன் கூறுகையில் கடந்த மாதம் நடந்த பறவைகள் கணக்கெடுப்பின்போது ஒரு ஜோடி பிராமினி வாத்துக்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பதிவு செய்தோம்.
இந்த வகை வாத்துக்கள் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பறந்து பள்ளிக்கரணை போன்ற பகுதிகளுக்கு வலசை வருவதாக கூறுகிறார் சலீம் அலி. அயல்நாடுகளில் இந்த வாத்து இனத்தை சுடுவதில்லை என்கிறார் அவர். வாத்து இனங்களிலே மிகவும் எச்சரிக்கையுடனும் மிகவும் விழிப்புடனும் காணப்படும் ஒரு வாத்து இது என்கிறார் சலீம் அலி.
ஜோடியாகவோ அல்லது கூட்டமாகவோ காணப்படும் இந்த வாத்துக்கள் லடாக், நேபால், மற்றும் திபெத் ஆகிய குளிர் பிரதேசங்களில் மட்டுமே முட்டைகளிட்டு இனப்பெருக்கம் செய்யும் ஒரு பறவையாகும்.

தாவரங்கள், மெல்லுடலிகள், ஒட்டுமீன்கள், நீர்நிலைகளில் காணப்படும் பூச்சிகள், மீன்கள், மற்றும் ஊர்வனங்கள் இந்த வாத்துகளின் முக்கிய உணவாகும். அரிதாக பாருகழுகளுடன் சேர்ந்து இறந்த மாடு போன்றவற்றின் மாமிசத்தை உண்ணும் பழக்கம் கொண்டவை இவை, என பதிவு செய்துள்ளார் சலீம் அலி.