தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் தேவையற்ற காலதாமதம் இடையூறுகள் செய்வதாகவும் ஆளுநரை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்கும் போதே ஆளுநருக்கு எதிரான கருத்துக்களை சொல்லிய நீதிபதிகள் அமைச்சரவைக்கும் சட்டமன்றத்துக்குமே இறுதிச் செய்யும் அதிகாரம் உள்ளது என்று சுட்டிக்காட்டியது.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் வாதிடும்போது மத்திய அரசின் வரம்புக்கு உட்பட்டிருக்கும் ஒரு விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்றினால் அதை ஆளுநர் நிராகரிக்கலாம். \
மாநில பட்டியலில் இருக்கும் ஒரு விஷயத்திற்காக அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றினால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிப்பதே தவிர வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது. சட்டம் அதற்கு அனுமதிக்காது. சட்டம் இயற்றும் இடம் சட்டமன்றம் தான் ஆளுநர் மாளிகை இல்லை. சட்டமன்றத்தில் ஒவ்வொரு மசோதா பற்றி விவாதம் செய்யப்பட்டு அலசி ஆராய்ந்து அதன் பிறகு தான் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. எந்த ஒரு அரசும் மசோதா நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்காது.
ஆளுநர் எந்த விளக்கமும் தராமல் பலமுறை கடிதம் எழுதியும் எந்த பதிலும் சொல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைப்பது சட்டப்படி சரியல்ல. ஆளுநர் முடிவு என்பது அமைச்சரவை அறிவுரை சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு வாதாடியது.
ஆளுநர் தரப்பு இந்த வழக்கில் வாதாடும் போது இந்த அரசு ஆளுநர் பதவியே தேவையில்லை என்ற கொள்கையுடன் ஆளுநர் நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. அரசியல் சாசன பிரிவு 200 மற்றும் 201 ஆகியவை குறிப்பிட்டிருப்பது போல் ஆளுநர் பதவியை அகற்ற முடியாது. இந்தப் பிரிவை நீக்கினால் மட்டுமே அது சாத்தியம்.
அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. ஒரு மசோதாவை நிராகரிக்க திருப்பி அனுப்ப என்ன காரணம் என்பதை தெளிவாக சுட்டிக் காட்ட வேண்டும் என்று அரசியல் சாசனம் குறிப்பிட்டு இருந்தாலும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை என்ற ரீதியில் ஆளுநர் தரப்பு வாதம் இருந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் "மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு மூன்று வழிகள் உள்ளன. முதல் வழி ஒப்புதல் அளிப்பது. இரண்டாவது வழி ஒப்புதலை நிறுத்தி வைப்பது. மூன்றாவது வழி அந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவது. ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைத்த உடன் அவர் அரசியல் சாசனப் பிரிவு 200-இன் முதல் நிபந்தனையில் குறிப்பிட்டுள்ள நடவடிக்கையை அவர் உடனடியாக பின்பற்ற வேண்டும்.
ஆளுநர் அப்படி நடந்து கொள்ளவில்லை. ஆளுநர் மசோதாகளை நிறுத்தி வைப்பதற்கு குறிப்பிட்டு சொல்லும் படி எந்த அதிகாரமும் இல்லை. ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைத்தாலும் மீண்டும் இந்த மசோதாவை ஆளும் அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அவர் ஒப்புதல் தர வேண்டும் என்று தான் சட்டம் வலியுறுத்துகிறது.
அவர் விருப்பம் போல் குடியரசுத் தலைவருக்கு அந்த மசோதாக்களை அனுப்ப முடியாது.
ஏற்கனவே அனுப்பிய மசோதாவுக்கும் இப்போது அனுப்பப்பட்ட மசோதாவுக்கும் ஏதாவது மாற்றம் இருந்தால் மட்டுமே அப்படி செய்யலாம். ஆனால் ஆளுநர் இந்த சட்டப்பிரிவை தவிர்த்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக பத்து மசோதாக்களை அனுப்பியது சட்டவிரோதமானது மற்றும் ரத்து செய்யப்பட வேண்டிய ஒரு நடவடிக்கையாக உச்ச நீதிமன்றம் இதை பார்க்கிறது.
நீதிமன்றமே இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பின்படி பல்கலைக்கழக வேந்தராக இனிமேல் ஆளுநருக்கு பதில் முதல்வர் இருப்பார் என்கிறது ஆளும் தரப்பு.
ஆளுநர் நிறுத்திவைத்த பத்து மசோதாக்களில் பெரும்பான்மை மசோதாக்கள் பல்கலைக்கழகம் தொடர்புடையவை. இந்தத் தீர்ப்பு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மற்றும் ஆளும் அரசுக்கு இடையே நடக்கும் மோதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி என்று எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
மசோதாக்களை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஜனாதிபதி அலுவலகத்தில் அந்த மசோதாக்கள் ஆய்வுக்காக இருக்கும் போது உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது சட்டப்படி சரியா என்ற விவாதமும் தற்சமயம் வருகிறது.
மத்திய அரசும் இதை கௌரவ பிரச்சினையாக பார்த்து ஆளுநர் அதிகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது என்ற நோக்கத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும் என்ற பேச்சும் வருகிறது.
இது எப்படியோ உச்சநீதிமன்றம் அரசின் அதிகாரமா நீதிமன்றமா யார் பெரியவர் என்ற பிரச்சனை எல்லாம் வரும் போது நான் தான் இதில் என்ன சந்தேகம் என்று அதிரடியாக தீர்ப்பு சொல்கிறது அதையும் கவனிக்க வேண்டும்.
Leave a comment
Upload