தொடர்கள்
தொடர்கள்
மனசே! டேக் டைவர்ஷன் 12- மோகன் ஜி

20250308222228837.jpg

ஒரு சிற்றூரில் இளம் தம்பதியினர் தன் எட்டு வயது மகனுடன் வாழ்ந்து வந்தார்கள். அந்த பிள்ளையின் பெயர் அருண்.

படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்து இருந்தாலும், அருணுக்கு அளவுக்கதிகமான கோபமும் இருந்தது. தொட்டதற்கெல்லாம் கோபப்பட்டு, அதனால் அவன்மேல் நிறைய புகார்களும் அந்த தம்பதிகளை வந்து அடைந்தது.

வீட்டில்கூட அருண் தன் அன்னையிடம் கோபப்படுவதும் கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கி எறிவதும் வழக்கம்தான். அவனுக்குத் தன் தந்தையிடம் மட்டும் பயம் இருந்தது.

அருண் மேல் புகார்கள் அதிகமாக, அவனுடைய தந்தை அவனையழைத்துப் பேசலானார். சிறு தவறுகளிலும் முரண்பாடுகளிலும்கூட தனக்குத் தாங்க முடியாத கோபம் வந்துவிடுவதாக ஒப்புக் கொண்டான்.

அருணின் தந்தை அவனிடம் ஆணிகள் நிரம்பிய மரப்பெட்டி ஒன்றையும் கூடவே ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

‘’நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ, அப்போதெல்லாம் நம் வீட்டைச் சுற்றி போடப்பட்டிருக்கும் மரவேலியில், ஒரு ஆணியை சுத்தியல் கொண்டு அடித்து நிறுத்த வேண்டும் சரியா?” என்றார்.

அருணும் அன்று முதல் கோபப்படும்போதெல்லாம் வேலியில் ஆணி அடித்து வந்தான். சின்னப் பிள்ளையாதலால், ஆணிகளை மரக்கட்டையில் அடித்துச் செலுத்துவது சற்றுக் கடினமாகவே இருந்தது. ஓரிருமுறை தன் விரல்களையும் சுத்தியலால் நசுக்கிக் கொண்டான்.

அதன்பிறகு, கோபப்படும் போதெல்லாம் ‘ஆணியடிக்க வேண்டுமே’ என்ற நினைவுவர, கோபித்துக் கொள்ளுதலை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டான். நாட்கள் செல்ல, மர வேலியில் செலுத்தப்பட்ட ஆணிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது.

ஒரு நாள், ஒரு ஆணி கூட அடிக்கப்படவில்லை. அருண் தன் தந்தையிடம் ஓடிச் சென்று, “அப்பா இன்று ஒரு ஆணியைக் கூட நான் அடிக்கவில்லை. இன்று நான் கோபப்படவே இல்லை” என்றான் உற்சாகத்துடன்.

“மிக்க மகிழ்ச்சி அருண்! இன்று முதல், எந்த நாளிலெல்லாம் கோபப்படாமல் இருக்கிறாயோ அன்று ஒவ்வொரு ஆணியாக வேலியில் இருந்து பிடுங்கி விடு” என்றார்.

நாட்கள் கடந்தன. அருண் முன்புபோல் கோபப்படுவதே இல்லை. தன் தந்தையிடம் சென்று, “அப்பா! இப்போது வேலியில் ஒரு ஆணி கூட இல்லை! “என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

அவர் அருணை அழைத்துக்கொண்டு அந்த மரவேலியை நோக்கிப் போனார்.

“ஆணிகளெல்லாம் பிடுங்கப்பட்டதற்கு சந்தோஷம். ஆனாலும் இப்போது அந்த வேலியில் என்ன தெரிகிறது?” என்று கேட்டார்.

“அப்பா! முன்பு தானே வேலியில் ஆணிகள் நிறைந்து இருந்தன? இப்போது தான் எதுவும் இல்லையே?” என்றான்.

ஆணிகள் பிடுங்கப்பட்ட அந்த மரச்சலாகைகளை அருணின் தந்தை கை காட்டினார். அவற்றில் ஆணிகள் அடித்ததால் உண்டான துளைகள் இருந்தன.

அவற்றைக் காட்டி அவர் சொன்னார். “மகனே! கோபத்திலிருந்து விடுபட்டு நீ மாறித்தான் இருக்கிறாய். ஆனாலும், இந்த வேலி என்றுமே முன்புபோல புதிதாக இருக்க போவதில்லை. ஆணிகள் அடிக்கப்பட்ட வடுக்களை சுமந்து கொண்டுதான் இனி அவை இருக்கும். கோபத்தினால் பிறரை ஏசியும் கூச்சலிட்டும் நாம் கொடுக்கும் மனக்கஷ்டம் இந்த துளைகளை போல் அவர்கள் நெஞ்சில் நீங்காமல் தங்கிவிடும். வா உள்ளே போகலாம்!”

20250308222315244.jpg

சிறுவன் அருணுக்கு கிடைத்த அந்த வாழ்நாள் படிப்பினை நமக்கெல்லாம் கூட பாடமாகும்.

நீங்கள் கோபப்படுவீர்களா? எப்போதேனுமா? அல்லது எப்போதுமா?

நமது உணர்வு நிலைகளிலேயே மிக அழுத்தமானதும் ஆபத்தானதும் கோபம் எனும் சின உணர்வு தான். கோபம் என்றால் என்ன?

நாம் நினைத்தபடி பிறர் நடந்து கொள்வதில்லை என்பதும்; தனக்கு விருப்பமில்லாதவற்றை பிறர் செய்வதும்; தான் கொண்ட எதிர்பார்ப்புகள் ஈடேறுவதில்லை போன்ற காரணங்களும் உருவாக்குவது கோபம் எனும் சூறாவளியை!

நமக்கு ஒவ்வாத, நாம் ஏற்றுக்கொள்ள முடியாத தருணங்களில் தோன்றும் உணர்ச்சியே கோபம்.

நாம் மறுதலிக்கப்படும்போதும், அவமானப் படும் போதும், ஏமாற்றத்துக்கு உள்ளாகும் போதும், நம் நம்பிக்கை குலையும் போதும் கோபம் ஒரு எதிர் வினையாக உருவாகிறது. நாள்தோறும் நிகழும் இவ்வாறான சம்பவங்களே நம்மைக் கோபக்காரனாக ஆக்கி விடுகின்றன.

20250308222401344.jpg

நமக்குப் பிடிக்காமல் போய்விட்ட மனிதர்களுடன் நாம் இருக்க நேரும்போதும், நாம் வெறுக்கும் சூழ்நிலைகளில் தவிர்க்க முடியாமல் சிக்கும்போதும் கோபம் உருவாகிறது.

புராணங்கள் மற்றும் சரித்திரங்கள் முதல், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் வரை, கோபத்தினால் மதியிழந்து பெரும் பாதிப்புக்குள்ளானவர்களைப் பார்க்கத்தானே செய்கிறோம்?

சின்ன விஷயங்களிலும் நாம் கொள்ளும் எரிச்சல், நாட்பட கோபம் எனும் உணர்வாக உருவாகிவிடும். கோபம் நம்மை முழுவதுமாக ஆட்கொண்டு விடும். கோபம் வந்தநேரம் அறிவின் இயக்கம் முடங்கிவிடும்.

கோபம் கொள்கையில், நம்மில் பல ரசாயன மாற்றங்கள் உண்டாகின்றன. பல்வகை அமிலங்களின் சுரப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், படபடப்பு கூடுகிறது.

கோபம் நம்மை நாமே வதைத்துக்கொள்ள எடுக்கப்படும் சாட்டை.

சினம் சேர்ந்தாரைக் கொல்லி என்பார் வள்ளுவர்பிரான்.

சில ஆராய்ச்சியாளர்கள் கோபத்தின் வெளிப்பாட்டால் புற்றுநோய்க்கான சாத்தியங்களும் உள்ளன என்கின்றனர். பிறர் சாக நாம் விஷமருந்துவதற்கு ஒப்பானது கோபப்படுதல்.

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்.

எனும் முத்தான குறள் சினத்தின் பாதிப்பைப் பற்றித் தெளிவாகக் கூறும்.

வெறுப்புணர்ச்சியும் கோபமும் இரட்டைப் பிறவிகள். இவற்றை மனதில் ஏற்றுக் கொண்டு விட்டோமானால், அவை வேகமாக கனம்கூடிப் பெருத்து நமக்கு மனப்பாரமாக மாறிவிடும். நம் வாழ்க்கையின் தரத்தையே மாற்றி விடும்.

மனிதர்கள் யாவரும் கோவக்கார பறவைகளாகவே (ANGRY BIRD) திரிகிறார்கள்.

  • வீட்டில் ஒருவர் மீது ஒருவர்….,
  • அண்டை அயலாருடன்…., அலுவலகங்களில்….,
  • வியாபாரத்தில் வாடிக்கையாளர்களோடு, என்று எங்கும் கோபம் கொப்பளித்தபடி இருக்கிறது.

சாதியால், மொழியால், மதத்தால், சமூக ஏற்றத்தாழ்வுகளால், அரசியல் சார்பு நிலைகளால் எங்கும் கோபம் கூத்தாடுகிறது. நாடுகளுக்கிடையேகூட புகையும் கோபம் பெரும் போர்களாக வெடிக்கின்றது.

கோபமும் கசப்புணர்வும், நாளாவட்டத்தில் நமது வழக்கமாகவே ஆகிவிடும். தொட்டதெற்கெல்லாம் எரிச்சலும் கோபமும் கொள்வது நம் சுபாவத்தையே மாற்றிவிடும். சொந்தமும் நட்பும் நம்மிடமிருந்து மெல்ல விலகிச் சென்று விடும். வியாபாரமும் அலுவலக வாழ்க்கையும் கடினமானதாக மாறிவிடும்.

தன்னம்பிக்கை அற்றவர்கள், உறுதியற்ற மனப்போக்குஉள்ளவர்களே எளிதில் சினம் கொள்கிறார்கள் என்று கூறப்படுவதுண்டு.

20250308222614939.jpg

தன் கோபத்தை பெரும்பாலும் தம்மிலும் பலமற்றவர்களிடம் தான் பலர் காட்டுவார்கள். குறிப்பாக, வளரும் குழந்தைகளிடம் காட்டப்படும் சினம் அவர்களின் மனவியலில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும். நம்மிலும் வலிமையுள்ளவர்கள் மீது காட்டப்படும் சினமோ நமக்கு நாமே தீங்கு செய்வதற்கு ஒப்பானது.

கோபம் தவிர்க்க என்ன செய்யலாம்?

-பிறரின் சிறுசிறு தவறுகளையும் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும்.

-கோபப்படுதலுக்கான சந்தர்ப்பங்கள் நேரும்போது, நம் சிந்தையை வேறு ஏதேனும் காரியத்தில் ஈடுபடுத்தல் வேண்டும்.

-சாரமற்ற விஷயங்களில் மனதைச் செலுத்துதலை தவிர்க்க வேண்டும்.

-தவிர்க்கவியலாதவற்றை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

-கடந்த கால வருத்தங்களையும் கசப்புகளையும் புறம் தள்ள வேண்டும்.

-சக மனிதர்களிடையே நேயத்துடன் பழகுவது மேன்மை தரும்.

-நம் முன் முடிவுகளைச் சோதித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

-யார் மேல் கோபம் கொண்டிருக்கிறோமோ, அவர்களின் தரப்பில் நின்று ஆராயவும் வேண்டும்.

-கோபம் வருகையில், அதற்கான நம் எதிர்வினையைத் தள்ளிப் போடலாம்.

-குடி போன்ற தீய பழக்கங்கள் சிந்தையின் ஓட்டத்தை மழுங்க செய்வதால் செய்வதறியாது கோபம் வரும். அந்தப் பழக்கம் வேண்டாமே?!

-நல்ல உறக்கம், தியானம், நடைப்பயிற்சி போன்றவைகளால் நம் சிந்தனை தெளிவாகி சினங்கொள்ளும் மனநிலையை தவிர்க்கும்

-நம் சமயங்கள் எடுத்துரைக்கும் மன வெளிப்படல் கோபத்தை தவிர்ப்பதற்கு அருமருந்து.

-எதிலும் நம் எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக குறைத்துக் கொள்ளும் மனப்பக்குவம் தேவை.

என சிலருடன் ஏற்படும் அனுபவம் நம் கையைச் சுட்டபின், ‘இவர்கள் இப்படித்தான்!’ என்று அவர்களை கைநழுவி போக விடுங்கள்.

‘எனக்குப் போய் எப்படி இந்தவிதம் செய்யத் தோன்றியது? எவ்வளவு நம்பினேன்!’ போன்ற அங்கலாய்ப்புகளை குறைத்துக் கொண்டு, அடுத்த ஆக வேண்டியது பாருங்கள்.

எனவே, சினம் காப்போம் சொந்தங்களே!