தொடர்கள்
விகடகவியார்
வலையங்கம் - நீதிக்கு சோதனை

20250303200903921.jpg

நீதிபதிகளும் நீதிமன்றமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள். நம்பிக்கை உள்ள பெரியவர்கள் இருக்கும் இடம் என்று தான் நீதிமன்றத்தை மக்கள் இதுவரை நம்பி நீதிமன்ற வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீதிபதிகள் விருப்பு வெறுப்புக்கு கட்டுப்படாமல் செயல்படும் நியாயவான்கள் என்றுதான் மக்கள் நம்புகிறார்கள்.

அந்த நம்பிக்கைக்கு சோதனை வரும் படி சில நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்த நிகழ்வுகள் தொடர்கதை ஆகுமோ என்ற என்ற அச்சம் நீதிமன்ற வாசலில் நிற்கும் சாமானியனுக்கு வரத் தொடங்கி இருக்கிறது.

உதாரணத்துக்கு டெல்லி உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பிடித்த தீயை அணைக்கச் சென்றபோது அங்கிருந்த கட்டு கட்டான பணம் தீயணைப்பு வீரர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

1992-இல் வழக்கறிஞராக பணி செய்யத் தொடங்கிய யஷ்வந்த் வர்மா 2014-இல் நீதிபதியாக அலகாபாத்திலும் , 2021-இல் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி மாறுதல் பெற்றார். அங்கு கண்டெடுக்கப்பட்ட பணம் அவர் நூறு ஆண்டுகள் பணியில் இருந்தாலும் சம்பாதிக்க முடியாத அளவுக்கு அங்கு கட்டு கட்டாக பணம் இருந்தது என்று தகவல்கள் வருகின்றன.

நீதித்துறையும் நீதிபதிகளும் யோக்கியர்கள் இல்லையோ என்ற சந்தேகம் இப்போது சாமானியனுக்கு வர தொடங்கி இருக்கிறது.

மற்ற துறை போல் நீதித்துறையிலும் ஊழல் முறைகேடுகள் வரத் தொடங்கி விட்டதோ என்ற அச்சம் எல்லோருக்கும் வரத் தொடங்கி இருக்கிறது.

அந்த சந்தேகத்தை அந்த அச்சத்தை உறுதிப்படுத்துவது போல் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை இருக்கின்றது.

சம்பவம் நடந்த 7 நாட்களுக்குப் பிறகு பலத்த கண்டனங்களும் விமர்சனங்களும் வரத் தொடங்கிய பிறகு உச்சநீதிமன்றம் நீதிபதி வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றல் செய்வதாக உத்திரவிடுகிறது.

இதை அலகாபாத் பார் கவுன்சில் கடுமையாக கண்டித்து "அலகாபாத் உயர்நீதிமன்றம் என்ன குப்பைத் தொட்டியா"? என கோபமாக கருத்து தெரிவித்ததும் வர்மா வீட்டில் நடந்ததாக கூறப்படும் வதந்திக்கும் அவரது மாறுதலுக்கும் சம்பந்தமில்லை என்று விளக்கம் சொல்கிறது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் வர்மா வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பண குவியல் விஷயத்தை மூடி மறைக்க பார்க்கிறது என்ற விமர்சனம் வரத் தொடங்கி இருக்கிறது.

அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத உச்ச நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரகசியமாக விசாரிக்கிறார் என்று மட்டும் சொல்லி இருக்கிறது.

நீதிமன்றத்தின் மாண்பு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறை உச்ச நீதிமன்றத்தின் கவனமான நடவடிக்கையில் தெரிந்தாலும் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற பார்வையில் வர்மா விஷயத்தில் சறுக்குகிறதோ என்ற விவாதம் வரத் தொடங்கி இருக்கிறது.

பல குற்ற நடவடிக்கைகளை பல நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து நியாயமான தீர்ப்பை வழங்கி இருக்கும்போது வர்மா விஷயத்தில் மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்பதுதான் எல்லோருடைய கேள்வியாக இருக்கிறது.

தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த சுக்குராம் வீட்டில் சோதனை செய்தபோது 60 லட்சம் ரூபாய் கண்டெடுக்கப்பட்டபோது நீதிமன்றம் காட்டிய அக்கறை வர்மா விஷயத்தில் ஏன் இல்லை என்ற கேள்வி தற்சமயம் எழுகிறது.

நீதித்துறை சுதந்திரம் என்பது நீதிபதிகளின் கடமைக்கான சுதந்திரமா நீதிபதிகளின் செயலுக்கான சுதந்திரமா என்ற கேள்வி இப்போது உரக்க ஒலிக்க தொடங்கி இருக்கிறது .

நீதிபதி வர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் என்று நிறைய பேர் கேட்டுக் கொண்டாலும் உச்சநீதிமன்றம் இதுவரை மௌனம் சாதிக்கிறது.

சில சமயம் மௌனம் ஆபத்தானது என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் தேவை இல்லை.

2018-ல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை எதிர்த்து நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் மீது புகாராகவே சொன்னார்கள்.

அப்போதெல்லாம் அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுத்த நீதிபதிகளின் இன்றைய அமைதி ஆச்சரியமாக இருக்கிறது .

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் கூட ஒரு காலத்தில் சர்ச்சையாக எழுந்து அப்படியே காணாமல் போனது.

அதன் பிறகு அவர் எந்த இடைஞ்சலும் இல்லாமல் பணி ஓய்வு பெற்று ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த கிருஷ்ணய்யர் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் பணி ஓய்வுக்கு பிறகு எந்த அரசு பொறுப்பிலும் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் நியமனம் செய்யக்கூடாது என்ற ஒரு கருத்து வெளியிட்டார் அந்தக் கருத்து நியாயமானது. அந்த கருத்து இப்போது செல்லா காசாகி விட்டது.

ஓய்வு பெறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நீதிபதிகள் தீவிர அரசியலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே அவர்கள் நடவடிக்கை அரசியலை திட்டமிட்டு தான் இருந்ததோ என்ற சந்தேக நிழல் இப்போது எல்லோருக்கும் வரத் தொடங்கி இருக்கிறது.