சென்ற வாரம் ஊட்டியில் நடந்த வாகன சோதனையில் 21 வயது வாலிபரிடமிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் என்று தெரிய வந்தது. அந்த மாணவருக்கு கஞ்சா உட்பட எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அவர் கை செலவுக்கு தேவையானதை அவருக்கு பெற்றோர்கள் கொடுத்து விடுகிறார்கள்.
ஆனால், அவருக்கு ஒரு காதலி உண்டு. அந்தப் பெண்ணுக்கு செலவழிக்க அவருக்கு கூடுதல் பணம் தேவைப்பட்டது. அப்போது அவரது கல்லூரி மாணவர்கள் தந்த யோசனையில் தான் கூரியரில் கஞ்சாவை வரவைத்து அதை சின்ன சின்ன பொட்டலம் ஆக்கி மாணவர்களிடம் விற்பனை செய்து வந்தேன் என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்.
பள்ளிக் கல்லூரியில் மாணவர்களிடையே போதைப் பழக்கமும் போதைப் புழக்கமும் அதிகரித்துவிட்டது. இதை காவல்துறை கண்காணித்து ஆயிரக்கணக்கில் வழக்குகள் ஏராளமானோர் கைது என்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் கஞ்சா பழக்கமும் தொடர்கிறது. பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பாதிக்கப்பட்டவர்களை வைத்து வகுப்புகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இது போன்ற வகுப்புகள் ஓரளவு இந்த பழக்கத்தையும் கட்டுப்படுத்த நமக்கு உதவும். அதேசமயம் பெற்றோர்களுக்கும் இதை கட்டுப்படுத்துவதில் பொறுப்பும் கடமையும் உண்டு. மாணவர்களுக்கு புத்தகம் வாங்கி தந்து விட்டோம். கல்விக் கட்டணம் செலுத்தி விட்டோம் அத்தோடு நமது கடமை முடிந்தது என்று இல்லாமல் மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி அவர்களிடம் மனம் திறந்து பேச வேண்டும் வெளிப்படையான நடவடிக்கை தான் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்பதை நாம் இங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
Leave a comment
Upload