தொடர்கள்
கதை
லீனா - இரண்டு வார தொடரின் முதல் வாரம். -கி.ரமணி

20250122064958694.jpg
அது 2010 ஆம் ஆண்டு. ராம்கி எனும் ராமகிருஷ்ணனுக்கு ஓய்வு எடுக்கும் வயது வந்த சமயம்.

அவருடைய பிள்ளையும் பொண்ணும் அமெரிக்காவில் நன்றாக செட்டில் ஆயாச்சு.

அவர் சென்னை புறநகர் போரூர் பகுதியில் வீடு கட்டிக் குடி புகுந்த சமயம்.

மழைக்காலத்தில் வெனிஸாகவும் கோடை காலத்தில் சகாராவாகவும் சுற்றுப்புறம் இருந்தாலும் கூட, ராம்கிக்கும் மனைவி வைதேகிக்கும் வாழ்க்கையில் லேட்டாக கட்டின இந்த, சொந்த, நந்த, வனம் சேர்ந்த முக்கால் கிரவுண்ட் வீடு ரொம்பவும் பிடித்து விட்டது.

பக்கத்தில் போரூர் ஏரி. அதன் புண்ணியத்தில் வீட்டுக்கு பின்பக்கத்தில் கிணறு தோண்டியதில் அபரிமிதமான ஜலம்.

அதனால் வீட்டுக்கு இரண்டு தென்னை, வேலிக்கு போகன் வில்லா, பந்தலில் மல்லிகைக் கொடி, வீட்டுக்கு பின்னால் நிலத்தில் வெண்டை, கத்திரி, சேம்பு,காரட் முள்ளங்கி, என்று பயிரிட்டு பசுமைப் புரட்சி செய்ய எத்தனித்து சந்தோஷப்பட ஆரம்பித்த தருணத்திலே, டயர்ட் ஆனது இந்த பிரச்சனை வந்ததால் தான்.


தள தள ன்னு வந்த செடி எல்லாம் காலையில பார்த்தா பிடுங்கி போடப்பட்டிருந்தது. கடிக்கப்பட்ட முளை வந்த முள்ளங்கி, சேம்பு, காரட் துண்டுகள் எல்லாம் அங்கோலமாகக் கீழே கிடந்தன.

"இது ஏதாவது காத்து கருப்பு வேலையா இருக்குமா? " என்று ராம்கி சொல்லிக் கொண்டே வந்தபோது தேவகி "அதோ பாருங்க!"என்று கையைக் காட்டினாள்.

காட்டின இடத்தில் கம்ப்யூட்டர் மவுஸ் சாயலில் , ஆனால் அதைப்போல நாலு மடங்கு சைஸில்,கருப்பா ஒரு உருவம் விரைந்து குகை போன்ற ஒரு பூமிக் குழிக்குள் நுழைந்து மறைந்தது.
" பெரிய எலி.. இல்லை இல்லை.. பெருச்சாளி. " என்றாள் வைதேகி.

வேலைக்காரி மீனாட்சி பக்கத்தில் வந்து" பெருச்சாளி எலி எல்லாம் இந்த இடத்தில் சகஜம் அம்மா. ஒரு தடவை வந்துட்டுது என்றால் அப்புறம் இங்கே வந்துகினே இருக்கும்." என்று வேறு பயமுறுத்தினாள்.

இதற்கு முன்னால் வாடகைக்கு இருந்த டி.நகர் வீட்டில், பெருச்சாளி, எலி, புலி,ஒன்றும் கிடையாது என்பதால் இந்தத் தொல்லை ராம்கி, வைதேகிக்கு புதிதாக இருந்தது.

வைதேகி கொஞ்சம் பயந்து போய் "மீனாட்சி! இதற்கு என்ன பண்ணலாம்?" என்றாள்.

"பத்தாயம் ஒண்னு வாங்கி வரேன்.
150 ரூபாய் கொடு. அப்படியே தினமும் இரண்டு மசால் வடை வாங்கியாரேன்."

வாங்கியாந்தாள்.

பத்தாயத்தை எலிகளின் வேட்டைக்களமான, செடிகள் உள்ள ஏரியா பக்கத்தில் வீட்டுக்குப் பின்பக்கம், வெளியே சர்வ ஜாக்கிரதையாக ஹுக் மாட்டி, மசால் வடையை குத்தி தொங்க விட்டு வைத்தார் ராம்கி.

ஒரு வாரம் எலிவேட்டை மும்முரத்தில் நேரம் நன்கு கழிந்தது. ஆனால் ஒரு எலி கூட பத்தாயத்தில் மாட்டவில்லை.

முதல் மூன்று நாட்களுக்கு பத்தாயத்தில் மாட்டி வைத்த வடை கடி படாமல் முழுசாக இருந்தது.

பின் நாட்களில் வடையின் ஓரம் முழுக்க அழகாக ஒரே சீராக எலிக் கடிபட்டு, வடை தன் விட்டத்தின் அளவில் குறைந்து, கடைசியில் வாழக்காய் சிப்ஸ் போல சிறு வட்டமாக, பத்தாயக் கம்பியில் ஒல்லியாக மஞ்சளாகத் தொங்கியது.

"எலி பிள்ளையார் வாகனமான மூஞ்சூறுக்கு உறவாச்சே! அதுக்கும் ஐக்யூ அதிகமாக தான் இருக்கணும். வடையை இழுக்காமல் கடிச்சிருக்கு! அதனாலதான் மாட்டல." என்றாள் வைதேகி.

எலிக்கு ஒரு வடை போக தினமும் மீதி இருந்த மற்றொரு வடையை ராம்கி சாப்பிட்டதால் வயிற்றின் வழக்கமான அமைதி குறைந்து, புயல் ஏற்பட, நிறைய டைஜின் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட வேண்டி இருந்தது.

இதற்குள் ஒரு வாரத்தில் பாதித் தோட்டம் எலிகளால் உருக்குலைந்து போனது. ராம்கி ரொம்ப கடுப்பானார்.

"நம் எலி ஒழிப்பு ஸ்ட்ராட்டஜியை மாத்தணும். மசால்வடையில் எலிபாஷாணம் தடவலாமா?" என்றார்.
" வேண்டவே வேண்டாம். எலியைத் தவிர இந்த வீட்டில் மசால்வடை திங்கிற ஜென்மம் நீங்க மட்டும் தான். அதனால உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் நான் தான் ஆயுசு முழுக்க எலியோடு தனியா போராடணும்." என்றாள் வைதேகி.

ராம்கி முறைக்க, துடைப்பதால் வீடு பெருக்கிக் கொண்டிருந்த மீனாட்சி, பெருக்குவதை நிறுத்திவிட்டுச் சொன்னாள்.

"பரவால்ல சார்.சிம்பிள் மேட்டரு வீட்ல ஒரு பூனை வளர்த்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்." என்றாள்.

"ஐயோ வேண்டாம்! நாய், பூனை எல்லாம் எனக்கு பிடிக்காது." என்றாள் வைதேகி.

" நாய் மாதிரி பூனையை கட்டி வைச்சு வளர்க்க முடியாதும்மா! அது சுதந்திரப் பிராணி. இந்த பக்கமா சில பூனைங்க அலையுதுங்க. நம்ம வீட்டுக்குப் பின்பக்கமா சிமெண்ட் தரையில தினமும் கொஞ்சம் பால் ஊத்தினீங்கன்னா குடிச்சிட்டு இங்கேயே கிடைக்கும்.
பூனை வீட்டை சுத்தி வந்தாலே எலி எல்லாம் ஓடிப் போகும்மா!"

" பெருச்சாளி பெருசாச்சே! பூனைய பார்த்து பயப்படுமா?"

"அதுவும் ஒரு எலி வர்கம் தானே! பூனையைப் பார்த்து பயப்படாதாஎன்ன?" ஏகப்பட்ட தன்னம்பிக்கையுடன் மீனாட்சி பேசும் போது அதை மறுத்து பேச வைதேகி, ராம்கியால முடியல.

வீட்டின் பின்புறம் காலை மாலை என்று இரு வேளைகளிலும் வாய் அகன்ற பிளாஸ்டிக் கிண்ணத்தில் 100 மில்லி பாலை ஊற்றி வைத்துப் பார்த்தாள் வைதேகி.

முதல் நாள் முழுக்க ஒரு பூனையையும் காணவில்லை. மறுநாள் காலையில் கிண்ணத்தில் புதுசாக வேறுபால் ஊற்றி வைத்தாள் வைதேகி.
மத்தியானம் 12 மணிக்கு வைதேகி ராம்கியை சத்தம் போட்டு கூப்பிட்டாள்.
" கொஞ்சம் இங்க வந்து பாருங்களேன். "

ஒரு சின்ன கருப்புப் பூனை கிண்ண த்தில் இருந்த பாலை சமத்தாக குடித்துக் கொண்டிருந்தது. அதன் நெற்றியில் அரை இன்ச் அகலத்துக்கு வெள்ளையில் ஒரு திட்டு அழகாக இருந்தது.

வைதேகிக்கு ஒரே சந்தோஷம். "நம்ம பூனை ரொம்ப அழகா இருக்கு இல்லீங்களா." என்றாள்.
" அதுக்குள்ள நம்ம பூனையா?" என்றார் ராம்கி.
ஒரு வாரத்தில் பூனை ரொம்ப பழகிப் போய்விட்டது. பால் வைக்காவிட்டால் வைதேகியைப் பார்த்து முறைத்து 'மியாவ்' என்று அதட்டியது. அரிசி போன்ற சைவ உணவுகளை பகிஷ்கரித்தது. காய்கறியை வெறுத்து ஒதுக்கியது.
"இப்போதெல்லாம் அந்த செடியைப் பிடுங்கற எலியை காணவே காணோம். எல்லாம் லீனா மகிமை."என்றாள் வைதேகி.

தெரியாமல் விழித்த ராம்கியிடம் "நம்ம பூனைக்கு லீனா என்று பெயர் வைத்து விட்டேன். பூனைக்கு இது ராசியான பெயர் என்று இன்டர்நெட்ல போட்டிருக்கு."என்றாள் வைதேகி.

அடுத்த வாரம் முதல் தடவையாக லீனா அத்துமீறியது. வைதேகி அடுப்பில் காய்ச்சி வைத்திருந்த அரை லிட்டர் பாலை கவிழ்த்து முடிந்த வரை குடித்து விட்டுப் போய்விட்டது.

வைதேகிக்கு ரொம்ப வருத்தம்.
ஒருவேளை நாம் வைக்கும் பால் அளவு குறைவோ என்று எண்ணி லீனாவின் கிண்ணத்தில் கூடக் கொஞ்சம் பால் ஊற்றினாள்.
லீனா இதை மதிக்காமல், சான்ஸ் கிடைக்கும்போது எல்லாம் சமையல் அறை சென்று பால் பாத்திரத்தை கவிழ்த்துக் கொண்டிருந்தது.
ராம்கி கொஞ்சம் சிரமப்பட்டு வீட்டு வாசல் மற்றும் கொல்லைப்புறக் கதவுகளை இழுத்து மூடி தாழ்ப் பாள் போட்டு லீனாவால் உள்ளே வரமுடியாதபடி செய்தார்.

ரெண்டு நாள் வீட்டுக்குள் லீனாவின் தலைப்பு செய்தியே இல்லை. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்கிற நிலைக்கு லீனா தள்ளப்பட்டது போல் தோன்றியது.

மூன்றாம் நாள் காலையில் வீட்டு வாசல் வெளிவரண்டாவில் ஏதோ ஒரு பறவையைப் பிடித்து பீஸ் பீஸ் ஆக்கி அந்த இடம் முழுக்க வெள்ளை இறகுகள் காற்றில் பறக்க சுவாரஸ்யமாக பிரேக் ஃ பாஸ்ட் உண்டு கொண்டிருந்தது லீனா.

வைதேகி சத்தம் போட, இரையைக் கவ்வி நடக்கும் புலி போல நிதானமாக வீட்டுக்கு பின்புறம் பறவையுடன் சென்றது லீனா.

" பூனை ஒரு அசைவ மிருகம். நீ அதை சைவம் ஆக்கப் பார்த்தால் இப்படித்தான் ஆகும். பேசாம அதை துரத்திடலாம். அதன் வேலை முடிஞ்சது. " என்றார் ராம்கி

வைதேகி வைகுண்டெழுந்தாள்.
" லீனா சின்னப் பூனை. வளர்ந்தா திருந்திடும். இதை துரத்திட்டா அப்புறம் பெருச்சாளி எலி எல்லாம் திரும்பி வரும். நீங்க போய் துரத்துவீங்களா? கரப்பான் பூச்சியை பார்த்தாலே பயந்து நடுங்குவீங்க."

மௌனி ஆனார் ராம்கி.


லீனாவின் அட்டகாசம் தொடர்ந்தது.

(அடுத்த வாரம் முடியும் )