சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48-ம் ஆண்டு புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சி வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணிவரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களைவிட இம்முறை வார நாட்களிலும் மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. எல்லோருமே இருசக்கர, கார் உள்பட பல்வேறு வாகனங்களில் வருவதால் பார்க்கிங்குக்கு இடமின்றி பலரும் பரிதவித்தனர். இக்கண்காட்சியில் நுழைவு கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
900 அரங்குகளில் 10 சதவிகித சிறப்பு தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாள் மாலையில் நடைபெறும் சிந்தனை அரங்கில், தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் உரைகள் நடைபெறுகின்றன. குழந்தைகளின் சிறுகதைகள் முதல் பெரியவர்களின் வரலாற்று புத்தகங்கள் வரை அனைத்து அரங்குகளிலும் இடம்பிடித்துள்ளன. மேலும் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களின் விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது. கண்களுக்கு புத்தகங்களும், செவிக்கு அறிஞர்களின் உரையும், நாவுக்கு ருசியாக சிற்றுண்டி உணவகங்கள் உள்ளன.
பேனா நண்பர்களின் சார்பில், மூத்த பத்திரிகையாளர் என்.சி.மோகன்தாஸ் அழைப்பின் பேரில் எனது மகளுடன் புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். நுழைவு வாயிலேயே தமிழ் ஆன்றோர்களின் சிலைகள் வரவேற்றன. நான் செல்வதற்குள், அவர்களின் புத்தக கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. சரியென ஒவ்வொரு அரங்காக சுற்றி பார்த்தோம். பெரும்பாலான அரங்குகளில் நமக்கு தெரிந்த முகங்களே அதிகளவில் இருந்தன. அனைவரின் உபசரிப்பில் மகிழ்ந்தோம். எனது மகள் தேவையான ஒருசில புத்தகங்களை வாங்கிக் கொண்டாள். இடையிடையே புத்தக கண்காட்சி குறித்து ஒருசிலரிடம் பேச்சு கொடுத்தோம்.
சரி… வாகன நெரிசலுக்கு இடையே புத்தக கண்காட்சியை விட்டு, மக்களின் கூட்டத்துக்கு இடையே நானும் மகளும் முண்டியடித்து வெளியே வந்தோம். நடைபாதை வழியாக கடந்து செல்லலாம் என நினைத்தபோது, ஒய்எம்சிஏவில் இருந்து தீயணைப்பு நிலையம் வரை நடைபாதையில் வரிசையாக ஏராளமான பழைய புத்தக வியாபாரிகள் கடை பரப்பியிருந்தனர். ஆனால், அங்கு மக்கள் நடமாட்டமே இல்லை. ஒவ்வொரு கடையாக மகள் ஆராய்ந்தபடி வந்தபோது, திடீரென உற்சாக குரலெழுப்பினாள் - “கண்காட்சியில் கிடைக்காத புத்தகம் இங்கு இருக்கு. விலையும் குறைச்சல்தான்!” என்று எனது ‘பட்ஜெட் பத்மநாப’ எண்ணத்துக்கும் கொட்டு வைத்தாள்.
நடைபாதையில் பழைய புத்தக கடை வைத்திருந்த தம்பதி உள்பட சிலரிடம் பேச்சு கொடுத்தோம். அவர்கள் கூறுகையில், “முன்பெல்லாம் நாங்க மயிலாப்பூர், தி.நகர், திருவல்லிக்கேணி, மேற்கு மாம்பலத்தில் நடைபாதையில் பழைய புத்தக கடை நடத்தினாலும் ராஜாவாக இருந்தோம். எங்களிடம் புத்தகம் இல்லை என்றாலும், தேடி கண்டுபிடித்து குறைந்த விலைக்கு வாங்கி தருவதால் மக்களிடையே மதிப்பு இருந்தது. தற்போது எங்களின் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. இங்கு நடைபாதையில் கடை போட்டு 10 நாளாச்சு… இதுவரை 100 புத்தகம் விக்கறதே பெரிய விஷயமா இருக்கு.
இதே நிலை நீடித்தால், நாங்க அனைவரும் பொங்கல் உள்பட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடுறதை நினைச்சு பார்க்கறதே கஷ்டம்தான். எங்களுக்கு மானிய விலையில் நிரந்தர ஆடைகளுடன் நிரந்தர வருவாயை ஏற்படுத்தி தருவதற்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு தனியார் தன்னார்வ, சமூகநல அமைப்புகள் முன்வந்து உதவ வேண்டும்!’ என்று வேதனையுடன் வலியுறுத்துகின்றனர்.
Leave a comment
Upload