தொடர்கள்
பொது
பொங்கல் - சில நினைவுகள்- இலாவண்யா மணிமுத்து

20250010125526741.jpg

பொங்கல் என்றாலே கிராமத்தில் ,நம் பால்யத்தில் கொண்டாடிய பொங்கல் விழாவே நினைவுக்கு வருகிறது. அந்நாட்களை இன்று நினைக்கும் போது நெஞ்செல்லாம் இனிக்கிறது

மார்கழி மாதத்திலேயே பொங்கல் குதூகலம் தொடங்கிவிடும்.

அதிகாலையில் எழுந்து குளித்து, வாசலில் கலர்க் கோலம் போட்டு பூசணிப்பூ வைத்து விட்டு, கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு சுடச்சுட பொங்கல் சுண்டல் பிரசாதம் சாப்பிடுவோம். கோவிலில் இருந்து வரும் போது யார் வீட்டு கோலம் பெரிதாய் அழகாய் உள்ளது என்று சென்று பார்ப்பது போட்டியல்ல பேரானந்தம்.

அக்காலத்தில்தான் வீடு முழுவதும் சுத்தம் செய்தல், பரணில் உள்ள சாமானை எடுத்து துடைத்து திருப்பி அடுக்குதல், வேண்டாதவற்றை வெளியேற்றுதல் என்று ஊரே சுத்தப்படும். வெள்ளை அடிப்பவர்கள் பெரும்பாலும் தாங்களாகவே அந்த வேலையும் மிக நேர்த்தியாக செய்து முடிப்பர்.

மார்கழி முடிய தைமகள் பிறக்க, பொங்கல் கொண்டாட்டம் தொடங்கும்

போகி அன்று ஆவாரம் பூ, பூளைப்பூ எல்லாவற்றையும் வேலியோரங்களில் இருந்து பறித்து வந்து நிலை வாசல், வெளிக்கதவு, சைக்கிள், வண்டி, கட்டுத்துறை (மாடு கட்டும் இடம்) என்று எல்லா இடங்களிலும் வைத்து விடுவார்கள்.

20250010125702943.jpg

வீடு முழுவதும் இரவே பச்சரிசி ஊறவைத்து அரைத்து மாக்கோலம் போடுவது அவ்வளவு அம்சமாய் இருக்கும். வாசலில் பொங்கல் ஸ்பெஷல் கலர்க் கோலம் சிறப்பிடம் பிடித்திருக்கும். பொங்கல் பானை, அடுப்பு எல்லாவற்றிலும் மாக்கோலம் இட்டு தயாராக வைத்துவிட்டு தூங்கச் செல்வர். வாசலில் பெரிய வெண்கலப் பானையில்(உருளி) சர்க்கரைப் பொங்கல், சிறிய பானையில் வெண்பொங்கல் வைப்பார்கள்.

2025001012561207.jpg

பால் பொங்கி வரும் போது குலவை இட்டு (சிலர் சங்கு ஊதுவர்) "பொங்கலோ பொங்கல் பால் பொங்கிருச்சு" என்று சத்தமாக கூறிவிட்டு புதுப் பச்சரிசியை பானையில் இடுவர். மஞ்சள் கொத்தை பானையில் கட்டுவர்.

அரிசி வெந்ததும் நுணுக்கிய வெல்லம், தேங்காய்ப்பூ, முந்திரி திராட்சை, நெய் விட்டு, ஏலம் சுக்கு தட்டிப் போட்டுக் கிண்டுவர்.

பொங்கல் பானையை எடுத்துப் போய் சாமியறையில் வைத்து இலை போட்டு பொங்கல், மொச்சை குழம்பு, கரும்பு இவற்றையெல்லாம் வைத்து படைத்து தேங்காய் உடைத்து சாமி கும்பிடும்போது "பட்டிப் பெருக பால் பானை பொங்க பொங்க" என்று எல்லோரும் சாமி கும்பிடுவோம்.

பிறகு என்ன? பொங்கல் சாப்பிட்டுவிட்டு அடுத்து கரும்பு வேட்டைக்கு தயாராவோம்.கரும்பை வெட்டி எல்லோரும் வட்டமாய் உட்கார்ந்து கொண்டு கதை பேசி சிரித்து சாப்பிடும் சுவை அலாதியானது.

20250010125840717.jpg

அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் வீட்டில் உள்ள மாடுகள் அனைத்தையும் குளிப்பாட்டி மாலை அணிந்து, புதுக் கயிறு போட்டு, பொட்டு வைத்து விடுவர். மஞ்சுவிரட்டிற்கு காளைகளை எல்லாம் தயார் செய்து கொம்பிற்கு வர்ணம் பூசி நெத்திப்பறை, மாட்டுமணி எல்லாம் பூட்டி அழகுபடுத்துவர்.

சில ஊர்களில் அவர்களுடைய பூசைக்களத்தில் பொங்கல் வைத்து வழிபடுவர். பின்னர் கோவில் மாட்டை முதலில் அவிழ்த்து விடுவர். அதன்பின் ஒவ்வொரு மாடாக அவிழ்க்கப்படும். பாட்டும், மாடு விரட்டும் பார்க்க பார்க்க அலுக்காது.

விவசாயத்திற்கு மாபெரும் உதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக மாடுகளுக்கு பொங்கல் படையலிட்டு வணங்குவர்.

காணும் பொங்கல் அன்று ஊரில் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். லெமன் ஸ்பூன், ஓட்டப்பந்தயம், சாக்கு போட்டி, சைக்கிள் போட்டி,மியூசிக்கல் சேர், அனைத்தும் நடைபெறும். நிறைவாக இளைஞர்களுக்காக பானை உடைக்கும் போட்டி வெகு சிறப்பாக நடைபெறும். ஊரே ஒன்றாக மந்தையில் கூடி ஆரவாரம் செய்து கைதட்டி எல்லோரையும் உற்சாகப்படுத்தி நடக்கும் அந்த விழா பரிசு கொடுப்பதோடு இனிதே நிறைவுறும்.

நகரம் நோக்கி நாம் வந்த பிறகு அந்த நாட்கள் எல்லாமே நினைவுகளுக்குள் சென்று விட்டது. பரபரப்பாக இருக்கும் இந்த வாழ்க்கையில் குக்கரில் பொங்கல் வைத்து, ஸ்டிக்கரில் கோலம் போட்டு, டிவி நிகழ்ச்சிகளில் நிறைவைத் தேடுகிறோம். கிடைக்கிறதா என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.

அந்த கிராமத்து பொங்கல் விழாவில் கிடைத்த ஆனந்தம் இன்றைய அவசர யுகத்தில் இனி வருமா, சொல்லுங்கள் ! கிராமம் நோக்கிச் செல்வோம்,பழைய உற்சாகத்துடன் பொங்கலை கொண்டாடுவோம்.

கரும்பின் சுவையோடு,

மஞ்சளின் மணத்தோடு

இஞ்சியின் குணத்தோடு,

பக்குவமாய் செய்யப்பட்ட அமுதாம் பொங்கலோடு

மக்களின் வாழ்வும் அமிர்தம் போல் இனிக்கட்டும்.

அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்.