கிரிக்கெட் பிரியர்களின் மனதுக்கு நெருக்கமான ஒரு வகை - ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி அல்லது ரெட் பால் கிரிக்கெட். இந்தியா எப்பொழுதுமே இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருந்தது.
2019 மற்றும் 2023 இல் நடைபெற்ற இரு வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் போட்டிகளிலும் இந்தியா பங்கு பெற்றது இதற்கு சான்று. இப்படிப்பட்ட வலுவான இந்திய அணியை நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோற்கடித்து ஒரு சாதனை நிகழ்த்தி உள்ளது .
அதிலும், தனது சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றது சரித்திரத்தில் இது வரை நிகழ்ந்திராத ஒரு நிகழ்வு. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்தது முதல், இறுதி டெஸ்ட் போட்டியில் 147 ரன்கள் தேவை என்கிற இலக்கை எடுக்க இயலாமல் தோல்வியுற்றது வரை அனைத்து நிகழ்வுகளும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ராகுல் டிராவிட்டை தொடர்ந்து பயிற்சியாளராக தற்பொழுது பதவி ஏற்றுள்ள கவுதம் கம்பீருக்கு இந்த டெஸ்ட் சீரிஸ் மிகப் பெரிய ஏமாற்றமே!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒரு சவாலான அணியா என்றால் அது கேள்விக்குறியே!
கேன் வில்லியம்சன் இல்லாமல் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ள அணி, இந்தியாவுக்கு முன்பு ஸ்ரீலங்காவிற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியுற்று 2-0 என்ற அளவில் அந்த டெஸ்ட் சீரிஸ்ஸை தோற்ற அணி, ஸபின்னிங் போட்டால் திணறும் பேட்ஸ்மேன் நிறைந்த அணி.
இப்படி இவர்களின் குறைபாடுகளை நாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம். இதற்கு மாறாக இந்திய அணியை எடுத்துக் கொண்டால் , பேட்டிங்கிலும் சரி, பௌலிங்கிலும் சரி உலக சாதனை படைத்த வீரர்களை கொண்ட ஒரு வலுவான அணி. வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்த இந்திய அணியின் தோல்வி என்பது யாரும் எதிர்பாராத நிகழ்வு.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ராகுல், ஜடேஜா என யாருக்குமே இந்த டெஸ்ட் போட்டி சாதகமாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா தனது பேட்டியில், தான் இந்த டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை, அணி தலைவராகவும் தான் சிறப்பாக செயல்படவில்லை என்றும் வெளிப்படையாக கூறியது அவரின் பெருந்தன்மையை காட்டிற்று.
நியூசிலாந்து அணியை எடுத்துக் கொண்டால், ரசின் ரவீந்திரனின் பேட்டிங் திறமையை வெளிக்கொணர இந்த டெஸ்ட் போட்டி உதவியது, முதல் டெஸ்ட் போட்டியில் இவர் அடித்த 134 ரன்கள், நியூசிலாந்து அணி 402 என்கிற இலக்கை நிர்ணயிக்க உதவியது. இவரைப் போன்றே, சோதி, அஜாஸ் படேல், வில் யங் போன்றோர் ஒவ்வொரு போட்டியிலும் தனக்கென முத்திரை பதித்து விளையாடினர். கேப்டன் டாம் லாதம் மிகவும் சிறப்பாக தனது அணியை வழிநடத்திச் சென்று இந்த வெற்றிக்கு வித்திட்டார்.
இந்திய அணியின் ரிஷப் பந்த், எப்பொழுதும் போல் இந்த டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி உள்ளார். இவரது விக்கெட் கீப்பிங் திறமையும் குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் சுந்தர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக தன்னை நிரூபித்துள்ளார். ஷுபம் கில்லின் ஆட்டமும் ஓரளவு இந்திய அணிக்கு வலுவூட்டியது என்றே கூறலாம்.
அஸ்வினுக்கு இந்த போட்டி குறிப்பிடத்தகுந்த வகையில் அமையவில்லை என்றே கூற வேண்டும்.
இந்த டெஸ்ட் தொடர் நமது இந்திய அணிக்கு தன்னை சுய மதிப்பீடு செய்வதற்கு உந்தும் விதத்தில் அமைந்துள்ளது. அடுத்த தலைமுறைக்கு வழி விட, மூத்த விளையாட்டு வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு சான்றும் கூட. ஆனால், வெற்றியை திருவிழா போல கொண்டாடும் நாம் விளையாட்டில் தோற்றால் தரக்குறைவாக பேசுதல் சரியான செயல் அல்ல.
விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது நிகழும் என்பதை உணர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி இதிலிருந்து மீள்வார்கள் என்று நம்புவோம். அடுத்து நடக்க விருக்கும் முக்கியமான ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல வேண்டும் என்ற வாழ்த்தோடு அதில் வென்றால் மட்டுமே வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட வாய்ப்பு உள்ளது என்பதையும் நினைவில் கொண்டு செயல்படுவார்கள் என்றும் நம்புவோம் !
Leave a comment
Upload