ஏழாம் படைவீடு
வள்ளி மணவாளரை வரவேற்க
வாசலில் கோலமிட்டேன்.
வண்ணத் தூளும் அரிசிமாவும்
வாகாய் வளைத்து இட்டேன்.
வரைஞ்ச அழகுதீபம் ஒளிருதய்யா
வந்ததுவும் வேலவரெனத் தெரியுதய்யா
வள்ளியம்மை தேவானை கூடிவர
வரும்வேளை சூசகமாய்ப் புரியுதய்யா
வாசனைப்பூ மாலைகட்டித் தேர்ந்துவைத்தேன்.
வனப்புமிகு ஆசனமும் அமைத்துவைத்தேன்
விரைவாய் வரவேணும் வேலவரே!
வசதியாக அமர்ந்தருள வேணுமய்யா!
வேண்டியே பாலாலுன் பாதங்களலம்பி
வண்ணச் செம்பஞ்சு நலுங்குமிட்டேன்
விஸ்தார அபிஷேகம் முடித்துவைத்தேன்
வகையான உபசாரம் செய்துவைத்தேன்
விழுதாய்த் தேனும் தினைமாவுமுண்டு
விரவின கற்கண்டொடு பஞ்சாமிர்தம்
வேணவகைப் பதார்த்தமும் பாயசமும்
விருப்பமொடு உண்ணவே வாருமையா!
விரல்துடைக்க பட்டிலொரு வஸ்திரமும்
வாசனையாய் ஏலம்பாக்கும் தாம்பூலமும்
வலதுபக்கம் வேலவரே வைத்திருக்கேன்.
வாய்மணக்க திருப்புகழும் பாடுவனய்யா!
வாசலைத் தாண்டிநீரும் போகவேண்டாம்
வந்தபடி இருந்திடுவீர் மறுக்கவேண்டாம்.
விதவிதமாய் தோத்திரமும் புனைந்துரைப்பேன்
வருகிறேன் என்றுரைத்துச் செல்லவேண்டாம்.
வாதைதீர்க்க வந்தவேலவரே தங்கிடுவீர்!
வீணாக ஊரும்நாடும் அலையவேண்டாம்
வெய்யில் பொசுக்குதயா போகவேண்டாம்
வாட்டும் குளிரடிக்குதய்யா திரியவேண்டாம்
வலுக்குதய்யா பெருமழை நனையவேண்டாம்
வாடைக்காற்று வீசுதய்யா உழலவேண்டாம்
வேதகோஷத்து கதகதப்பில் வீடுமிதய்யா
வேரகத்து சுவாமிநாதரே தங்குமய்யா!
வேறுமொரு சுகவாசம் எங்குமுண்டோ?
வெறும்வீடா எனதுமோகன வேலவரே?
வைத்திருக்கேன் ஏழாம் படைவீடாய்!
விருப்புகொண்டு தங்கியே இருமைய்யா
வகைவகையாய் அலங்காரம் செய்திடுவேன்
வனம்வளர் சந்தணமரைத்துச் சார்த்திடுவேன்
வெந்தநீறும் உம்மையெண்ணிப் பூசிடுவேன்.
வெற்றுச்சொல் பேசாத போதமய்யா.
வேதனையும் வெறுப்புமில்லா நெஞ்சுதந்தாய்
வானம்போல் கருணை விரியத்தந்தாய்
விண்ணகத்து தேவரெல்லாம் வேலவரே
வேண்டிடினும் என்பாக்யம் எய்துவாரோ?
வேணுகான லோலன்தன் மருகனாரே!
வேங்கைமர மானவரே கந்தவேளே!
வணங்குகிறேன் உயிருருக்கி செந்திலாரே!
வாழும்வகை சொல்லவேணும் கந்தசிவமே !
Leave a comment
Upload