தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 86 - பரணீதரன்

கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 86 - பரணீதரன்

20240813130903400.jpeg

பித்தன் வெங்கட்ராஜ் ஐயா அவர்கள் கேட்ட கேள்விக்கான பதிலை இந்த வாரம் பார்ப்போம். அவருடைய கேள்வி “வெண்பாக்கள் ஏன் சித்திரக் கவிகளாக்கப்பட்டன ?” என்பதாகும். இதற்கான பதில்

பொதுவாக செய்யுள், பா, மந்திரம் போன்றவை சிந்தனையில் உதித்து வாயினால் வெளி வருவது ஆகும். இவற்றை இப்பொழுது உள்ள ஒரு பொருளில் கூற வேண்டும் என்றால் ஒரு மென்பொருள் (சாப்ட்வேர்) போல என்று கூறலாம். இவைகளை இயக்குவதற்கு நாம் நிறைய கட்டுப்பாடுகளையும், சில வகையான நியமங்களையும் கைக் கொள்ள வேண்டும். இவற்றை கணிதத்தில் 2டி என்று கூறுவார்கள். 2டி என்பது 2 டைமென்ஷன் அதாவது இரு பரிமாணம் ஆகும். இரு பரிமாணம் உள்ள பொருட்கள் பொதுவாக நமது உலகத்தில் மற்ற பொருள்களுக்கு மூலமாக இருக்கின்றன. அதனால் இவைகளை மூலப்பொருட்கள் என்று கூறுவோம். வடமொழியில் பீஜமென்று கூறுவார்கள். இவை உயிர் பொருள் என்று அழைக்கப்படும்.

நாம் பார்த்த பல வகையான பந்தங்கள் யாவுமே தர்மத்தையோ, கடவுளையோ பற்றியே உள்ளது என்று முன்பு பார்ப்போம். அந்த பாக்களின் கடைசியில் பார்த்தோம் என்றால் முக்தியையோ, நோயை தீர்க்க வேண்டியோ, பொருள் வேண்டியோ, குழந்தை செல்வம் வேண்டியோ அல்லது வேறு ஏதேனும் ஒரு விஷயத்தை கேட்டு தான் முடிக்கப்பட்டு இருக்கும். இது செய்யுளை வடித்தவருக்கும், அந்தச் செய்யுளை பின்னால் படிப்பவர்களுக்கும், பாராயணம் செய்பவர்களுக்கும் கிடைக்க வேண்டிய விஷயங்களை அந்த கடைசி பத்தியில் அவர்கள் எழுதுவார்கள். இப்பொழுது இந்த எழுத்துக்களை நாம் மந்திர எழுத்துக்கள் என்று கூறுவோம். இந்த மந்திர எழுத்துக்கள் இரு பரிமாணத்தில் இருப்பதால் இவைகள் செயல்படுவதற்கு சில மாதங்களில் இருந்து பல வருடங்கள் ஆகலாம்.

நாம் சில வாரங்களாக பார்த்துக் கொண்டிருக்கும் சித்திரக் கவிகளில் சில சொற்கள் பொருள் இல்லாதவை போல எழுதப்பட்டிருக்கும். இவைகள் தான் அந்த மொத்த செய்யுளுக்கும் சக்தியை அளித்து அதனுடைய செயல்பாடை மிகைப்படுத்தும். எடுத்துக்காட்டாக ‘வாமா’, ‘தாதா’, ‘மோதா’, ‘நாமா’ போன்று சொற்கள் பொருள் இல்லாததை போல் இருந்தாலும் அவைகளுக்கும் பொருள் உண்டு. ஆனால் இந்த சொற்கட்டுகள் சிலவகையான அதிர்வுகளை உருவாக்கும். நாம் கேட்கும் பொருளுக்கு ஏற்ப இந்த சொற்கள் மாறுபடும்.

இவற்றினுடைய சக்தியை வேகப்படுத்துவதற்காக இப்படிப்பட்ட இரு பரிமாண எழுத்துக்களை முப்பரிமாண வடிவங்களாக மாற்றுவார்கள். முப்பரிமாண வடிவங்கள் நமது உலகத்திற்கு பொதுவானதாகவும் அதே நேரத்தில் இரு பரிமாண வடிவத்தை விடவும் முன்னேறிய வடிவங்களாக இருக்கும் என்பதால் இவ்வாறு பந்தங்களாக வடிவமைத்திருக்கிறார்கள்.

இவற்றை யந்திரங்கள் (இயந்திரங்கள்) என்று பொதுவாக கூறுவார்கள். இயந்திரங்கள் என்பது இப்பொழுது உள்ள ஒரு பொருளில் கூற வேண்டும் என்றால் ஒரு வன்பொருள் (ஹார்டுவேர்) ஆகும். இவை உடல் பொருள் என்று அழைக்கப்படும். எப்படி பாக்கள் மனதில் உதித்து வாயினால் வெளிப்படுகிறதோ, அது போல பந்தங்கள் மனதில் உதித்து கையினால் வெளிப்படுகிறது. நமது உடலின் சக்தியை பயன்படுத்தி, அந்த சக்தியை மனதினால் உருவகப்படுத்தி, அவற்றை பந்தங்களாக எழுதும் பொழுது, அவற்றினுடைய சக்தி அபரிமிதமாக வளர்ச்சி அடைகிறது. இப்படிப்பட்ட பந்தங்களை ஒருவர் வீட்டில் வைத்து வணங்கும் பொழுது, அந்த பாக்களின் சக்தியால், அந்தப் பா எழுதப்பட்ட காரண பொருள் இந்த பந்தத்தை வைத்திருப்பதற்கு உடனடியாக கிடைக்கிறது.

இன்றும் கூட பல பழமையான கோவில்களில், யந்திர பிரதிஷ்டை என்பது மிக சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. தமிழகத்தின் பழம்பெரும் கோயில்களான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன், திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரி அம்மன், தஞ்சை (புன்னைநல்லூர்) மாரியம்மன், சங்கரன்கோவில் கோமதி அம்மன் போன்றவைகளிலும் கர்நாடகத்தில் நிமிஷாம்பாள், சிருங்கேரி சாரதாம்பாள், கொல்லூர் மூகாம்பிகை போன்றவைகளிலும் மகாராஷ்டிரத்தில் கோலாப்பூர் மகாலட்சுமி தேவி போன்றவைகளிலும் மற்றும் பல்வேறு சக்தி பீடங்கள், பாடல் பெற்ற ஸ்தலங்கள், திவ்ய தேசங்கள், படை வீடுகள் ஆகியவற்றிலும் நாம் யந்திரங்களை பார்க்கலாம்.

இந்த பந்த இலக்கணத்தையும், இதற்குரிய சாஸ்திரத்தையும் அதன் பின்னிருக்கும் அறிவியலையும் நாம் இன்று முழுவதுமாக மறந்து விட்டோம். அதனால்தான் இன்று நம்மால் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி கோவிலில் உள்ள நாக பந்தத்தின் கட்டை கூட அவிழ்க்க முடியவில்லை. வெண்பாக்கள் மட்டுமில்லாமல் எந்த பாவிலும் பந்தங்களை உருவாக்க முடியும். உருவாக்குபவரின் சிந்தனை திறனும், செயலாற்றலும், இறையருளும், இறை நம்பிக்கையுமே ஒரு பாவை பந்தம் ஆக்குகிறது. வெண்பாக்கள் பிரபலமாக உருவாக்கப்பட்ட இரண்டாம் சங்க காலத்திலும், மூன்றாம் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், இப்போதைய காலத்திலுமே மிகுதியான பந்தங்கள் உருவாக்கப்பட்டன. அதனால்தான் பொதுவாக பந்தங்கள் வெண்பாவில் உள்ளன.

நாம் முன்பு பார்த்த ரதபந்தங்கள் சீர்காழியிலும், கும்பகோணத்திலும், சுவாமி மலையிலும், மதுரையிலும் உள்ளது போல நாக பந்தங்கள் திருவனந்தபுரத்திலும், நகுலேஷ்வரத்திலும் (இலங்கை), மற்ற பந்தங்கள் சிரபுரத்திலும், கரூரிலும், ஹம்பியிலும் இன்றும் பார்க்கலாம்.

மற்ற சித்திரக் கவிகளை வரும் வாரம் பார்ப்போம் என்று கூறி விடைபெற்றார்.