தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 26 "கதவு" - மோகன் ஜி

20240810223506156.jpg

வெளியே போனவன் வீடு திரும்பி பத்து நிமிஷமா கதவைத் தட்டுகிறேன். விட்டு விட்டு காலிங் பெல் அடிக்கிறேன்.

கதவு திறந்தா தானே?

செல்லில் ‘இல்லாளை’ அழைக்கிறேன்.

ரிங் டோனொன்று என் பின்னாலேயே ஒலித்தது.

‘’அஞ்சு நிமிஷம் கீழே போய்ட்டு வர்றதுக்குள்ள கதவை உடைச்சுருவீங்க போல இருக்கே?’’என்றாள்.

“போனவன் எப்போ வருவான் என வழிமேல விழிவச்சுப் பார்த்திருந்து, கதவு பக்கத்துலயே காத்திருக்கிறது தமிழர் பண்பாடு. தெரிஞ்சுக்க!”

“உக்கும்… இதுக்கொண்ணும் குறைச்சலில்லே… என்ன …. காதை நீவிக்கிறீங்க? ஏதும் பாட்டு கீட்டு சொல்லப் போறீங்களா?”

“கரெக்ட்டு! கேளு! கலிங்கத்துப் பரணியில் ஒரு சிறப்பான பாடல் இருக்கு.

இந்த சிச்சுவேஷனுக்கேத்த சாங்க்!

சட்டெனப் புரியும் பாடல். சொல்றேன் கேளு”

“உள்ளே போய் இலக்கியம் பேசுவோமா?” என்றபடி சாவியிட்டு கதவைத் திறந்தாள்.

“கலிங்கத்துப் பரணின்னா சொன்னீங்க? போனமுறை ரொம்பக் கசமுசான்னு ஒரு பாட்டையில்லே அதுலேருந்து எடுத்துவிட்டீங்க?”

“சே! சே! இது சைவப் பாட்டுடி!

அப்டி இல்லேன்னா எனக்கு காபி தரவேண்டாம்”

“எப்படியும் காபி தர்றதாயில்லே! பாட்டைச் சொல்லுங்க. வேலையிருக்கு”

“சரி ! புடி பாட்டை! சட்டுனு புரியும் பாட்டு தான்”

வருவார் கொழுநர் எனத் திறந்தும்

வாரார் கொழுநர் என அடைத்தும்

திருகும் குடுமி விடியளவும்

தேயும் கபாடம் திறமினோ!

‘’கொழுநன்னா கணவன்.

கதவைத் திறக்க நாம் திருகும் குமிழ் தான் கதவின் குடுமி.

கலிங்கப்போருக்குப் போன வீரர்கள் ஊருக்குத் திரும்பும் காலம் அது.

அவங்க மனைவிகள்லாம் உன்னை மாதிரி இல்லே. ராத்திரி முழுசும்

அத்தான் வந்துட்டாரான்னு ஆசையா

வாசல் கதவைத் திறந்து பார்க்குறாங்க .

‘சே! வரல்லையே’ன்னு படீர்னு சாத்துறாங்க! திரும்பவும் திறப்பாங்க…

வரல்லையேன்னு மூடுவாங்க!

இப்படிக்கா ராத்திரியெல்லாம் கதவைத் திறந்து மூடி, திறந்து மூடி

கதவோட குமிழே தேஞ்சுப் போயிடுமாம்.

என்னா நயம் பார்த்தியா?!”

‘திறமினோ!’ன்னா என்னங்க?

“அங்க தான் நிக்கிறாரு ஜெயங்கொண்டார். ‘திறங்க!’ன்னு அர்த்தம்.

“திறக்கச் சொல்றது யாருங்க?”

“நிஜமாவே புருஷனுங்கல்லாம் போர்களத்துலேருந்து திரும்பி வந்துட்டாங்க!

அவங்க தான் அவங்கவுங்க மனைவியை கதவைத் திறக்கச் சொல்லி கெஞ்சுறாங்களாமாம்..

‘’ராத்திரியெல்லாம் என்மேல

பிரியத்துனாலே எதிர்பார்த்துக் கதவை திறக்கிறதும் மூடுறதுமா இருந்தே! கதவு குமிழே தேஞ்சு போச்சு. ஆனா, இப்போ நான் வந்தது தெரிஞ்சுகிட்டு, ஊடிக்கிட்டு இருக்கிறியே… கதவத் தொற புள்ள!”ன்னு சொல்றதா புரிஞ்சிக்கணும்.

“எனக்கென்னவோ வீராதி வீரன்லாம் இப்படிக் கெஞ்சுவான்னு தோணல்லீங்க”

“நான் சரியா அர்த்தம் சொல்லலேங்கிறியா?”

“ உங்களைச் சொல்வேனா? நீங்க கிண்டனாச்சே! அந்த ஜெயங்கொண்டார் தான் ஊர் சுத்திட்டு லேட்டா வீட்டுக்கு வந்திருப்பாரு. வீட்டுக்காரம்மா கதவைத் திறக்காம வாசல்ல காவலுக்குன்னு நிக்க விட்டுருப்பாங்க! அதையே வீரர்கள் மேலே ஏத்திப் பாடியிருப்பாரு”

“தாட்சாயணீ!”ன்னு உக்ர சிவாஜியா

விழிகளை சிவக்க விட்டேன். “காபி குடும்மா!”

“ஒரே நிமிஷம் இருங்க. தறேன்”

ஒருவேளை இவள் சொல்றதுபோல ஜெயங்கொண்டார் தான் வீட்டுக்கு வெளிய நின்னிருப்பாரோ?

சே! கவிஞனா பொறக்கக் கூடாது.

பொறந்தாலும் புருஷனா இருக்கக் கூடாது.

“காபி நல்லாருக்கு செல்லம்!”