தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயில் மிகவும் சிறப்புப் பெற்ற ஸ்தலமாகும். மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டை யிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் விராலிமலை முருகன் கோவில் உள்ளது. சோலைகள், மயில்கள் மற்றும் சுனைகளையும் கொண்ட இந்த மலைத்தலத்தில் முனிவர்களும், தேவர்களும் மரங்களாக விரவி முருகனை வழிப்பட்டதால், விரவி மலை என்று அழைக்கப்பட்டு, பின்பு அதுவே மருவி, விராலி மலையாயிற்று.
விராலிமலை, ஊரின் நடுவே இருப்பதால், மலையின் பெயரையே நகருக்கும் சூட்டப் பட்டுள்ளது. இது சுமார் 1500 வருடப் பழைமை வாய்ந்த கோயில். இங்கு முருகன் ஆறுமுகங்களுடன் பத்து அடி உயரத்தில் அசுர மயிலில் அமர்ந்தபடி, அற்புதமாகக் காட்சி தருகிறார்.
மலையின் உச்சியில் மயில்கள் ஏராளமாக உள்ளன மற்றும் இது மயில்களின் சரணாலயமாகவும் உள்ளது.
அருணகிரிநாதர், முருகப் பெருமானிடம் ஞானோபதேசம் பெற்ற ஸ்தலம் என்பதை, அவர் பாடல்களின் மூலம் அறியலாம். விராலிமலை முருகன் கோயில் வசிஷ்ட முனிவர் சாப விமோசனம் பெற்ற திருத்தலம்.
அனைத்து கோயில்களிலும் இல்லாமல் இந்த கோயிலில் தனிச் சிறப்பு என்னவென்றால் இங்கு உள்ள முருகப் பெருமானுக்குச் சுருட்டு நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இந்த கோயிலில் வீற்றிருக்கும் முருக பெருமானை வழிபட்டால் குழந்தை மற்றும் திருமண பாக்கியங்கள், மன அமைதி உள்ளிட்டவை கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஸ்தல புராணம்:
ஒருகாலத்தில் குரா எனும் ஒரு வகை மரங்கள் அடர்ந்த காடாக, மலை சூழ்ந்த இடமாக இருந்த இந்தப் பகுதியில், வேடன் ஒருவன் வேட்டையாட வந்தபோது, வேங்கை ஒன்று அவன் கண்ணில் பட்டது, அதனை வேட்டையாட விரட்டும் போது, அது வேகமாக ஓட ஆரம்பித்தது. அந்த வேங்கையை எப்படியும் பிடித்துவிடுவது என வேடனும் பின்னாலேயே ஓடிவந்தான். அப்போது குரா மரத்துக்கு அருகில் வந்ததும் வேங்கை காணாமல் மறைந்தது. இதனைக் கண்ட வேடன் ஆச்சரியப்பட்டுப் பார்க்கும் நேரத்தில் அங்கே திடீரென்று தோன்றிய மயிலும் விபூதி வாசனை யும் அங்கே முருகப்பெருமான் சூட்சுமமாக இருப்பதை அறிவிக்கவே.. மகிழ்ந்து போனான். பிறகு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு முருகனின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, வழிபடத் துவங்கினர் என்கிறது ஸ்தல புராணம்.
திருச்சியில் உள்ள வயலூர் ஸ்தலத்துக்கு வந்த அருணகிரி நாதரிடம்... 'விராலிமலைக்கு வா’ என்று முருகப்பெருமான் அழைக்க... அந்த மலையைத் தேடிச் சென்றார். விராலி மலைக்கு வந்த அருணகிரிநாதர் முருகன் இருக்கும் இடம் தெரியாமல்
தவிக்க, அப்போது வேடன் ரூபத்தில் வந்து விராலி மலைக்கு வழி சொல்லி அழைத்துச் சென்று முருகப்பெருமான் அடையாளம் காட்டி அருளினார் என்கிறது ஸ்தல புராணம். அதுமட்டுமின்றி, அஷ்டமாசித்தியை அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் வழங்கியதால் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இன்றளவும் கருதப்படுகிறது.
இந்தத் தலத்து முருகக்கடவுளைத் திருப்புகழில் 18 தடவை மனமுருகிப் பாடியுள்ளார் அருணகிரியார் என்பது குறிப்பிடத்தக்கது. சொர்ண விராலியங்கிரி என்று புராணங்கள் குறிப்பிடும் இந்தத் தலத்துக்கு வந்து ஆறுமுகனாரை வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
ஸ்தல வரலாறு:
சுமார் 1500 ஆண்டுகள் பழைமையான இந்த கோயிலின் மூலக் கோயிலை அழகிய மணவாளன் என்ற மன்னர் அமைத்தார் என இங்கு உள்ள திருப்பணிக் கல்வெட்டு பாடல் ஒன்று தெரிவிக்கிறது. பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில்
9ஆம் நூற்றாண்டில் ஆதித்த சோழன் என்ற மன்னரால் திருப்பணி செய்யப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகிறது. இவர்களுக்குப் பிறகு ஆலயத்தின் மற்ற பிரகாரங்கள் மண்டபங்கள் நாயக்கர்கள் மற்றும் மருங்காபுரியார் வம்சத்தவர்களால் கட்டப்பட்டுள்ளது. பின்னர் புதுக்கோட்டை மன்னர்களால் மணிமண்டபமும், நவராத்திரி மண்டபமும் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசின் வாரிசான இரண்டாம் தேவராயர் (கி.பி. 1422-1446) காலத்துக் கல்வெட்டு இங்குக் காணப்படுகிறது.
ஸ்தல அமைப்பு:
மலை அடிவாரத்தில், சிறிது தொலைவில் படிக்கட்டுகளுடன் நீராழி மண்டபம்; நடுமண்டபம் இவற்றுடன் சரவணப்பொய்கை உள்ளது. கிழக்குப் பகுதியில் மைக்கண்ணுடையாள் அம்மன் சந்நிதி உள்ளது. மலை ஏறும் முன் இந்த அம்மனை வழிபடுவது வழக்கம்.
பக்தர்கள் மலை ஏறுவதற்கு வசதியாக 207 படிகள் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நேரடியாக மலை உச்சிக்குச் செல்ல தார்ச் சாலையும் அமைக்கப்பட்டுள்ளன. படியில் செல்லும் வழியில் இளைப்பாற மண்டபங்களும் உள்ளன. மலை உச்சிக்குச் செல்லும் வழியில் இடும்பன் சந்நிதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ஒரு சிறிய குகை சன்னதியும், படிக்கட்டுகளின் முடிவில் மலைமீது சந்தான கோட்ட மண்டபம்; நவராத்திரி மண்டபம்; சண்முக மூர்த்தி மண்டபம் உள்ளன. மலையில் உச்சியில் அடர்ந்த பழத்தோட்டங்களில் முருகனின் வாகனமான மயில்கள் அதிகம் உள்ளன.
நவராத்திரி மண்டபம் எதிரில், தெற்கில் ஐந்து நிலை இராஜகோபுரம் உள்ளது. இக்கோயிலின் சண்முக மூர்த்தி மண்டபத்தில் ஒரே பிரகாரத்துடன் உற்சவமூர்த்தி தேவர்களுடன் தரிசனம் தருகிறார். பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகஸ்தியர், அருணகிரிநாதர் சந்நிதிகளும், வடக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னதிகளும் உள்ளன.
கருவறைக்கு எதிரில் மகா மண்டபம் செல்லும் வழியில் நவகிரக சந்நிதி அமைந்துள்ளது . மகா மண்டபத்தில் நடராஜர், சிவகாமி, மாணிக்க விநாயகர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமான் சந்நிதியும், பல உற்சவ திருமேனிகளும் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் வெளிப்புறச் சுவர்களில் கல்வெட்டுகளையும் காணலாம்.
கருவறையில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கரங்களுடனும் கிழக்கு நோக்கி பத்து அடி உயரத்தில் மயில் மீதமர்ந்து, வலது கரத்தில் சூலமும் இடது கரத்தில் வஜ்ராயுதமும் ஏந்தி அருள்பாலிக்கிறார். தீபாராதனை காட்டும் பொழுது மூன்று முகங்கள் பக்தர்களுக்குத் தெரிகிறது. பின்புறம் உள்ள கண்ணாடியில் மூன்று முகங்களையும் தரிசிக்க முடிகிறது.
ஸ்தல தீர்த்தம்: சரவணப் பொய்கையின் தெற்குப் பகுதியில் ஸ்தல தீர்த்தம் அமைந்துள்ளது. இது நாக தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. (தீர்த்தம் நடுவே நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது)
ஸ்தல விருட்சம்: காசி வில்வம்.
ஸ்தல சிறப்புகள்:
வசிஷ்டரும் அவருடைய மனைவி அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தனர்.
நாரதர் சிவநிந்தனையால் ஏற்பட்ட சாபம் நீங்க, இங்குள்ள முருகனை வணங்கி அருள்பெற்றார்.
அருணகிரிநாதர் பதினாறு திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.
இத்தலத்தின் மீது, விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார்.
திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தர்கள் தவம் செய்த மலை.
திருவாரூர் தட்சிணா மூர்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த ஸ்தலம்.
ஜெனகர், செனந்தர், செனாதனர், செனக்குமாரர் நால்வருக்கும் தியானம் செய்த போது முருகனே தோன்றி அருள் தந்த திருத்தலம்.
இங்கு வள்ளி திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
மூலவர் முருகப்பெருமான் பத்து அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.
முருகனுக்குச் சுருட்டு நிவேதனம்:
எந்த ஒரு முருகன் கோயிலிலும் அல்லாத ஒரு விசித்திர வழக்கம், சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் ஒன்று இக்கோயிலில் உண்டு. இக்கோயிலில் ஒரு காலத்தில் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து என்ற பக்தர் ஈடுபட்டார். ஒருநாள் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருகில் இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க முடியவில்லை. முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றைப் பற்றவைத்தார். அருகில் மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றைக் கொடுத்தார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். பின்னர் அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, அதிர்ந்தார். கருப்பமுத்து நடந்ததைக்கூற அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்குச் சுருட்டு நைவேத்யமாகப் படைக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.
இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்குத் தடை விதித்தார். முருகப்பெருமான் ஒரு நாள் அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான் எனவும், புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல எனவும் கூறியதாகவும், மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாகவும் கூறுவர். அதன்பிறகு இன்றுவரை இப்பழக்கம் இருக்கிறது. இந்த சுருட்டை பிரசாதமாகப் பெற்று, வீட்டில் கொண்டு வைக்கின்றனர். இறைவனுக்கு என்ன படைக்கிறோம் என்பது முக்கியமல்ல; பக்தியும் அன்புமே முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
திருவிழாக்கள்:
இங்கு ஆண்டு தோறும் சித்திரா பௌர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்), கார்த்திகை தீபம், நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அருணகிரிநாதர் இசை விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடக்கிறது. இதைத்தவிர முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் இத்தலம் பக்தர்களின் வருகையால் நிரம்பி வழியும்
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
இத்தலத்தில் முருகனை வழிபடுவோர்க்கு மன அமைதி, குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தை பிறந்ததும், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுள் விருத்திக்காக, இங்கே முருகப்பெருமானுக்குக் குழந்தையைத் தத்துக் கொடுப்பதும், தவிட்டுக்குக் குழந்தையைத் தாய்மாமன் பெற்றுக் கொள்வதும் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளன. விராலிமலை முருகனை வேண்டிக் கொண்டால், ஆயுள் பலம், கல்வி ஞானம், பூமி யோகம் எனச் சகலமும் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.
நேர்த்திக்கடனாக முடி இறக்கி காது குத்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் , திருப்பணிக்குப் பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் செய்கின்றனர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் கோவில் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
விராலிமலை மதுரைக்கும் திருச்சிக்கும் இடையே பேருந்து வழித்தடத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் உள்ளன.
வம்ச விருத்தி அருளும் விராலிமலை முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
Leave a comment
Upload