சனி என்ற பெயரைக் கேட்டாலே, சிலர் பாகற்காயைப் பச்சையாகச் சாப்பிட்ட மாதிரி முகம் சுளிப்பர். கிரகங்களில் சனி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவர் கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி யாராலும் தடுக்க முடியாது.. சனிப்பெயர்ச்சியின் போது எதற்கும் பயப்படாதவர்கள் கூட தேவையில்லாமல் பயப்பட்டு கவலை அடைவர்.
இதில் அஷ்டமம், அர்த்தாஷ்டமம் , ஏழரை, கண்டம், பாதம் என என்னவாக இருந்தாலும் பயம், பதட்டம் தேவை இல்லை. ஜாதகங்கள், பரிகாரங்கள், கோவில் அலைச்சல்கள் என்ற பரபரப்புகள் கூட வேண்டியதில்லை.
உண்மையில் சனீஸ்வரர் நடுநிலையானவர். கெடுதல் என்று எவருக்கும் செய்ய மாட்டார். நமக்குப் பக்குவம், படிப்பினை, நல்லது கெட்டது அறிதல் என்று அன்புடன் பாடம் நடத்திச் செல்லும் ஒரு ஆசிரியர்.
நம் கடமைகளைச் சரிவரச் செய்தபடி இயல்பாக இருந்தாலே போதும். சனீஸ்வரர் இளகிய, இரக்கக் குணம் கொண்டவர். அவரை மனதில் நினைத்தாலே நமக்கு நன்மையே செய்வார்.
சனீஸ்வரர் அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிப்பார். அதர்மம் செய்பவர்களுக்கு உரியத் தண்டனையும் கொடுப்பார். அதனால், அவரவர் பாவச் செயல்களுக்கு ஏற்ப, துன்பத்தை அனுபவிப்பர். தன் கர்ம வினைகளைக் குறைத்து வாழ்க்கையை நல்லவிதமாக மாற்றிக்கொள்ள விரும்புவோர்
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டைக்கு அருகில் வன்னிவேடு அகஸ்தீஸ்வரர் கோவிலில் அருளும் பாகற்காய் சனீஸ்வரரைத் தரிசித்து வரலாம்.
பாகற்காய் மாலை:
ஒரு முறை, வன்னி மரங்கள் நிறைந்த ஓர் இடத்தில் தங்கிய அகத்தியர் மணலால் லிங்கம் அமைத்து, சிவ பூஜை செய்தார். இதனால், இத்தலத்துச் சிவனுக்கு, அகஸ்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், இவ்விடத்தில் கோவில் கட்டப்பட்டது.
இக்கோயிலின் வன்னி மரத்தின் கீழ் விநாயகர் மற்றும் சனீஸ்வரர் அடுத்தடுத்த சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
வீடு மற்றும் கட்டடம் கட்டும் பணி தடையின்றி நடைபெறவும், நம் கசப்பான அனுபவங்களிலிருந்து விடுபடவும் சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு, 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து, எள் தீபமேற்றி வழிபடுவது விசேஷம். தங்கள் வாழ்க்கையில் செய்த பாவங்களை மன்னிக்க வேண்டியும், இனி இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடாது என்ற இந்த வேண்டுதலையும் வைக்கின்றனர்.
சனீஸ்வரர் காயத்திரி:
காகத் வஜாய வித்மஹி ...
ஹட்க ஹஸ்தாய தீமஹி ...
தந்நோ மந்த்ர பிரசோதயாத் ...
இந்த கோயில் வேலூரிலிருந்து, 30 கி.மீ தூரத்திலுள்ள வாலாஜாபேட்டை சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில், 3 கி.மீ. சென்றால் கோவிலை அடையலாம்.
வன்னிவேடு அகஸ்தீஸ்வரர் கோயிலில் அருளும் பாகற்காய் சனீஸ்வரரைத் தரிசித்து நற்பலன்களைப் பெறுவோம்!!
Leave a comment
Upload