பின்னங்கழுத்தில் வெள்ளை மற்றும் மஞ்சள், கூறிய மூக்கின் இருபுறமும் மை இட்டதுபோன்ற கருப்பு நிறத்தில் அழகிய கண்கள், நீண்ட வால் போன்ற சிறகுகள், நரம்பு போன்ற மெல்லிய பாதங்கள் நீரில் உள்ள இலைகளின் மேல் நடப்பதற்கு வசதியாக. இதுதான் தாமரை கோழி.
கௌதாரி இனத்தை சேர்ந்த இந்த பறவை தண்ணீரில் மிதக்கும் அல்லிமலர் உள்ள நீர்நிலைகளில் காணலாம். கொடிகள் நிறைந்த நீர்நிலைகளிலும் இந்த பரவகைளை அதிக அளவில் காணலாம். பருவ காலங்கள் அற்ற நேரத்தில் 50 முதல் 100 பறவைகள் வரை கூட்டமாக காணப்படும். வானில் பறக்கும் பொழுது வெள்ளை கொடி பறப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
காய் வகைகள், நீரில் உள்ள பூச்சிகள், மற்றும் மெல்லுடலிகள் இவற்றின் பிரதான உணவாகும். தென் மேற்கு பருவ மழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களே இந்த பறவையின் இனப்பெருக்க காலம். இனப்பெருக்க காலத்தில் இந்த பறவை அதிகமாக சத்தமிடும் என்கின்றனர் பறவையின ஆராய்ச்சியாளர்கள். சில சமயங்களில் நீரில் மிதக்கும் தாவரங்களின் மீதே தன் முட்டையை இடும் குணம் கொண்டது இந்த பறவை.
இந்த பறவையினத்தில் உள்ள பெண் பறவைகள் மிகவும் வித்தியாசமானவை. பொதுவாக ஆண் பறவைகள் பல பெண் பறவைகளுடன் உறவு கொள்ளும். ஆனால், தாமரை கோழி இனத்தில் உள்ள பெண் பறவைகள் ஒரே நேரத்தில் பல ஆண் பறவைகளுடன் உறவுகொள்ளும் பழக்கம் கொண்டது, என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். களைகள் மற்றும் தண்டுகளை கொண்டு கூடு கட்டும் இந்த பறவை, ஒரு சமயத்தில் நான்கு முட்டைகளை ஈனும். காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசங்களில் இரண்டாயிரம் அடி உயரத்தில் கூட இந்த பறவைகளை காணலாம் என்கிறார் இந்தியாவின் பறவையின ஆராய்ச்சியின் தந்தை சலீம் அலி.
பட உதவி: கே வி ஆர் கே திருநாரணன்
தொடர்கள்
தொடர்கள்
Leave a comment
Upload