தொடர்கள்
அரசியல்
சவாலே சமாளி ஜோசப் விஜய் -விகடகவியார்

20250128222720753.jpg

இப்போதுதான் கட்சி ஆரம்பித்தார் போல் இருக்கிறது அதற்குள் தமிழக வெற்றி கழகம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

இப்போது அவரது நம்பிக்கை நாயகர்கள் இரண்டு பேர் தான்.அவர்கள் ஆதவ் அர்ஜுன் மற்றும் பிரசாந்த் கிஷோர். இந்த வியூக நிபுணர்கள் கட்சியை வழி நடத்துவார்கள் என்ற நம்பிக்கை விஜய்க்கு இருக்கிறது. கட்சிக்கு ஆலோசனை சொல்ல பிரசாந்த் கிஷோர் 500 கோடி கேட்டு இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு விஜய் சம்மதித்து விட்டதாகவும் பேச்சு வர தொடங்கி இருக்கிறது. பிரசாந்த் கிஷோரை பொருத்தவரை அவர் ஒரு அரசியல் வியாபாரி.

அவரது அரசியல் வியூகம் எல்லோருக்கும் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்பதும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அவர் சொன்ன ஆலோசனை தான் ஆளுங்கட்சியானது.

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்திக்கு பாதயாத்திரை போக சொன்ன ஐடியாவும் அதற்கு வியூகம் அமைத்து தந்ததும் பிரசாந்த் கிஷோர் தான்

. சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியில் அமர பிரசாந்த் கிஷோர் ஐடியா தான், இது எல்லாம் அவர் வியாபாரமாக தான் செய்து வருகிறார்.

தனிக்கட்சி தொடங்கி இருக்கிற பிரசாந்த் கிஷோரின் கட்சி பீகாரில் இன்று வரை போணியாகவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

விஜய் நேற்று மும்மொழிக் கொள்கை எதிர்த்து வைக்கப்பட்டுள்ள பேனரில் கையெழுத்து போட்டார். பிரசாந்த் கிஷோரை கையெழுத்து போட சொன்ன போது அவர் மறுத்துவிட்டார். காரணம் அவர் பீகாரில் அரசியல் செய்ய வேண்டும் இதுதான் எதார்த்தம். விஜயை பொறுத்தவரை திமுகவை பலமாக எதிர்க்க வேண்டும் பாஜகவை கொஞ்சம் லேசாக விமர்சனம் செய்ய வேண்டும் என்பதுதான் அவர் போக்கு கொள்கையாக இதுவரை இருக்கிறது. மும்மொழி திட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகமும் பாஜகவும் எல்கேஜி, யுகேஜி பசங்க மாதிரி சண்டை போட்டுகிறாங்க இது ஏதோ செட்டிங் மாதிரி தெரியுது என்று பேசியிருக்கிறார் ஜோசப் விஜய்.

பாஜக ,திமுக இரண்டையும் ஃ பாசிசமும் பாயசமும் என்று வர்ணிக்கும் அவர் நமது கொள்கை எதிரியும் அரசியல் எதிரியும் என்று இந்த இரண்டு கட்சிகளையும் குறிப்பிடுகிறார். தமிழக வெற்றி கழகம் இளைஞர்கள் கட்சி நமது கட்சி பண்ணையார் கட்சி அல்ல. பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதுதான் நமது முதல் வேலை.அண்ணா எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது அவர்கள் பின்னால் இளைஞர்கள் தான் நின்றார்கள் என்றெல்லாம் பேசி இருக்கிறார் விஜய்.

நாம் விசாரித்த வரையில் பிரசாந்த் கிஷோர் வலுவான கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை நடத்துவது தான் சரியாக இருக்கும் இல்லையென்றால் தேமுதிக போல் உங்கள் கட்சியும் காணாமல் போய்விடும் என்று எச்சரிக்கையும் செய்து இருக்கிறார்.

வாங்குகிற காசுக்கு உண்மையாக யோசனை சொல்லி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர். ஆதவ் அர்ஜுனா அந்தக் கூட்டத்தில் பேசும்போது 40 சீட்டு 45 சீட்டுக்கெல்லாம் நாங்கள் இல்லை 2026-இல் நாங்கள் தான் ஆளுங்கட்சி என்று சொல்லி இருக்கிறார் அது என்ன கணக்கு என்று தெரியவில்லை.

ஜோசப் விஜய்யை பொருத்தவரை அவரை சுற்றி பலமான ஒரு சுவர் அவரே எழுப்பிக் கொண்டிருக்கிறார். ஒரு சிலர் சொல்வது மட்டும் தான் அவர் காதுக்கு போகிறது யாரையும் சந்திக்க மறுக்கிறார். அவர் கட்சியில் இணைய சில பிரபலங்கள் நேரம் கேட்டபோது கூட விஜய் அவர்களை தவிர்த்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் விஜய் கட்சி தொடங்கியதும் பல கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகி விஜய் கட்சியில் சேர்வார்கள் என்று சொன்னார்கள்.

இப்போது வரை அப்படி எதுவும் நடக்கவில்லை தேர்தல் நெருங்க நெருங்க ஏதாவது நடக்குமோ என்னவோ.

விஜய் இப்போதைக்கு திமுகவுக்கு பூச்சாண்டி காட்டுகிறார் என்பது மட்டும் உண்மை.

திமுகவும் கொஞ்சம் பயந்து போய் விஜய்க்கு பதில் சொல்ல தொடங்கி இருக்கிறது விஜய்க்கு களத்தில் சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய நிறைய நிறைய.

இங்கு திரைக்கதைப் படி எதுவும் நடப்பதில்லை. எதிர்பாராத விரும்பத்தகாத திருப்பங்கள் தான் நிதர்சனம்.