தொடர்கள்
விகடகவியார்
சிக்கலில் சீமான் - விகடகவியார்

20250128221901923.jpg

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பரபரப்பு செய்திகளை வாரி வழங்கியவர்.

மீம்ஸ் சிந்தனையாளர்களுக்கும் பிடித்த தலைவர் சீமான்.

எல்லா கட்சிகளையும் விமர்சனம் செய்து அடுத்து நான் தான் ஆட்சி என்று அடித்து விடுவார் இப்படிப்பட்ட வாய் சவடால் வீரருக்கு தற்சமயம் சோதனை மேல் சோதனை.

கட்சியிலிருந்து ஒவ்வொருவராக விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.

சமீபத்திய விலகல்நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள். கடந்த சில மாதங்களாகவே காளியம்மாள் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் தலை காட்ட வில்லை.

அவர் கட்சியில் இருந்து விலகப் போகிறார், வேறு கட்சியில் இணைய போகிறார் என்று சில மாதங்களாக காளியம்மாள் பேசும் பொருளாக இருந்தார்.

இவற்றிற்கெல்லாம் எந்த விளக்கமும் தராமல் இருந்த காளியம்மாள் நேற்று நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி கருத்துக்கள் சொல்லத் தொடங்கியதில் இருந்து பல நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள் அந்த வரிசையில் இப்போது காளியம்மாளும் வெளியேறிவிட்டார்.

காளியம்மாளை 'பிசுறு' என்று சீமான் விமர்சித்த ஒரு ஆடியோ முதலில் வெளியாகி பரபரப்பானது. அதற்கு அடுத்ததாக ஒழுங்கா இருந்துக்கணும் என்று காளியம்மாளை கண்டிக்கும் ஒரு ஆடியோ வெளியானது. இப்போது காளியம்மாள் விலகிவிட்டார். அவர் விரைவில் திமுகவில் இணைய இருக்கிறார்.இப்படி தொடர்ந்து கட்சியிலிருந்து வெளியேறுவதை பற்றி சீமானிடம் கேட்டபோது நாம் தமிழர் கட்சிக்கு "இப்போது களையுதிர் காலம் "என்றார்.

இவை எல்லாவற்றையும் விட சீமானுக்கு மிகப்பெரிய சிக்கலையும் பின்னடைவையும் ஏற்படுத்தி இருக்கிறது நடிகை விஜயலட்சுமி புகார்.

நடிகை விஜயலட்சுமி பலாத்காரம் செய்யப்பட்டார் சீமானால் கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டது உள்ளிட்ட புகார் தற்சமயம் தீவிர விசாரணைக்கு வரத் தொடங்கி இருக்கிறது.

பெங்களூரில் இருக்கும் விஜயலட்சுமியிடம் தமிழக போலீஸ் ஐந்து மணி நேரம் விசாரணை செய்திருக்கிறது.

விஜயலட்சுமி பலமுறை கரு கலைப்பு செய்த போது கணவர் என்று சீமான் கையெழுத்து போட்ட ஆதாரங்கள் விஜயலட்சுமி காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

போலீஸ் தற்சமயம் அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. காவல்துறை இதுவரை 15 சாட்சிகளை விசாரித்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே சீமானுக்கு எதிராக வாக்குமூலம் தந்திருக்கிறார்கள்.

அடுத்ததாக காவல்துறை சீமானிடம் ஆண்மை பரிசோதனை குரல் பரிசோதனை செய்ய இருக்கிறது.

இந்த சோதனைகளில் விஜயலட்சுமி சொன்ன குற்றச்சாட்டுகள் உறுதியென நிரூபிக்கப்பட்டால் சீமான் கைது செய்யப்படுவார்.

சீமான் பாலியல் குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதிப்பட நிரூபித்து விட்டால் அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

தற்போதைய சூழ்நிலையில் காவல்துறை சேகரித்து வைத்திருக்கும் ஆதாரங்கள் எல்லாமே சீமானுக்கு எதிராகவே இருக்கின்றன என்பதையும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சீமான் மீதான புகாரை பணத்தை வாங்கிக்கொண்டு விஜயலட்சுமி வாபஸ் பெற்றால் கூட அவர் தண்டனையில் தப்பிக்க முடியாது என்பதையும் சுட்டி காட்டுகிறார்கள்.

சீமான் மீதான வழக்கில் போலீஸ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்அவர் மீதான புகார் தீவிரமானது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளம்திரையன் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

சீமான் கைது செய்யப்பட்டால் நாம் தமிழர் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற பேச்சும் இப்போது வரத் தொடங்கி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் 10 ஆண்டுகளாக சீமானுடன் இணைந்து பணியாற்றிய பல முன்னணி நிர்வாகிகள் இப்போது கட்சியில் இல்லை. மொத்தத்தில் இப்போதைக்கு நாம் தமிழர் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

தனியார் சேனல்களுக்கு பரபரப்பு செய்திகளை வாரி வழங்கிய சீமான் இல்லாமல் சேனல்களும் மீம்ஸ் கிரியேட்டர்கள் நிலைமையை யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

இதில் என்ன ஜோக் என்றால்...இதுவரை உறவே இல்லை என்று மறுத்த சீமான் போலீசில் வாக்குமூலம் கொடுத்த பிறகு நிருபர்களிடம் பேட்டி தரும்போது விரும்பி வைத்துக்கொண்ட உறவு எப்படி கற்பழிப்பு ஆகும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

திமுகவும் தேவையற்ற பரபரப்பை விரும்பவில்லை. கைது செய்து சீமானை பெரிய ஆளாக்கும் ஐடியா திமுகவுக்கு இல்லை. நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கவே தமிழக அரசும் விரும்புகிறது.